திங்கள், 30 ஜனவரி, 2017

பாலைவனத்தில் கற்கள் நகரும் காரணம் என்ன?




அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் ஓரிடத்தில் பாறைகள் தாமாக இடம் பெயர்ந்து செல்கின்றன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது பெரும் புதிராக இருந்து வந்துள்ளது. அவை இடம் பெயரும் காரணத்துக்கு இப்போது விடை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பாறைகள் இவ்விதம் இடம் பெயரும் இடத்தின் பெயர் ரேஸ்டிராக் பிளாயா என்பதாகும். இது மரணப் பள்ளத்தாக்கு எனப்படும் பாலைவனத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பெயர் தான் ரேஸ்டிராக்கே தவிர இங்கு ரேஸ் எதுவும் நடப்பதில்லை.  அதை ஒரு பாலைவனம் என்றும் சொல்லலாம். ஆனால் மணல் கிடையாது. என்றோ வற்றிப்போன ஏரியின் படுகை என்றும் வருணிக்கலாம்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை செடி கொடி கிடையாது. புல் பூண்டு கிடையாது. விலங்குகளும் இல்லை. மனித நடமாட்டமும் கிடையாது.

ஆனால் இங்குமங்குமாக சிறிய பாறைகள் கிடக்கின்றன. வெடிப்பு விட்ட  தரையில் அந்தப் பாறைகள் சட்டென்று கண்ணில் புலப்படும். பல பாறைகளின் எடை சுமார் 13 கிலோ. 300 கிலோ எடை கொண்ட பாறைகளும் உண்டு. ஓரிடத்தில் கிடக்கின்ற பாறை பின்னர் பார்த்தால் இடம் மாறியிருக்கும். அந்தப் பாறை நகர்ந்து சென்ற தடம் தெரியும்.

இவை கால் முளைத்த பாறைகள்.ஒன்றல்ல பல  பாறைகள் நகர்ந்து சென்ற தடம் தெளிவாகத் தெரிகிறது. தடத்தை வைத்துச் சொல்வதானால் சில பாறைகள் 1500 அடி அளவுக்கு நகர்ந்துள்ளன. அந்தப் பாறைகளை யார் நகர்த்தியிருப் பார்கள்? காற்றில் உருண்டு சென்றிருந்தால் இப்போது தெரிகின்ற தடம் ஏற்பட வாய்ப்பில்லை. யாராவது கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்றால் மட்டுமே பாறை நகர்ந்து சென்ற தடம் ஏற்பட முடியும்.

அப்படி யாரேனும் இழுத்துச் சென்றிருந்தால் அவரது காலடித் தடமும் மண்ணில் பதிவாகியிருக்கும். ஆகவே பாறைகள் தானாகத் தான் நகர்ந்து சென்றிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒன்று அவற்றை நகரச் செய்திருக்க வேண்டும்.

1900 ஆம் ஆண்டிலிருந்தே இந்த காரணம் குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வந்துள்ளன. எதிலும் காரணத்தைக் காண விரும்புகிறவர்களோ இது வேற்றுலக வாசியின் வேலையாக இருக்கலாம் என்று கூறினர். ஆனால் இந்தப் பாறைகள் நகருவதை கடந்த காலத்தில் யாருமே நேரில் கண்டதில்லை. கேமராவிலும் இது பதிவாகியது இல்லை. இந்த நிலையில் தான் நிபுணர் ஜேம்ஸ் நாரிஸ்  அங்கு தானியங்கி காமிராவைப் பொருத்தி விட்டு வந்தார். அது விட்டு விட்டு அவ்வப்போது படம் எடுக்கின்ற கேமிராவாகும்.

அந்த காமிரா சரியாக செயல்படுகிறதா என்று சோதிக்க அண்மையில் அவர் ரேஸ்டிராக் பிளாயாவுக்குச் சென்றார். அவருடன் ரிச்சர்ட்  நாரிஸும் சென்றார்.

அங்கு அவர்கள் ஒன்றல்ல சுமார் 60 பாறைகள் தாமாக நகர்வதைக் கண்ணால் கண்டனர். அவை நகர்ந்த போது லேசான சத்தமும் கேட்டது. பாறைகளை நகர்த்தியது வேறு எதுவுமல்ல. நீரில் மிதக்கின்ற பனிக்கட்டி வில்லைகள்தான். தண்ணீர் எங்கிருந்து வந்தது?

பாறைகள் எப்படி நகருகின்றன என்பதை பின்னர் ஜேம்ஸ் நாரிஸ் விவரித்தார். பாறைகள் நகருவதில் பெரிய காரணம் எதுவுமில்லை.

அந்த இடத்தில் மழை என்பது அபூர்வம். ஒரு ஆண்டில் இரண்டு அங்குலம் மழை பெய்தால் உண்டு. குளிர் காலத்தில் இப்படி மழை பெய்தால் களிமண் பூமி என்பதால் இரண்டு மூன்று செண்டிமீட்டர் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்கும்.

அது கடும் குளிர் வீசுகின்ற பகுதியாகும். ஆகவே தேங்கும் தண்ணீரின் மேற்புறம் உறைந்து போகும். உறைந்த பனிக்கட்டி சில்லு சில்லுகளாக நீரில் மிதக்கும்.  தேங்கும் தண்ணீர் குறைவு என்பதால் பாறைகளின் மேற்புறம் தண்ணீருக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

அந்தப் பகுதியில் குளிர்காலத்தில் தென்மேற்கிலிருந்து வட கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசும். இதன் விளைவாக மிதக்கும் பனிக்கட்டி சில்லுகள் பாறைகள் மீது மோதும். இவை மெல்லியவை தான். ஆனால் கெட்டியானவை.

தேங்கும் தண்ணீர் காரணமாக நீருக்கடியில் உள்ள களிமண் தரை சறுக்கிச் செல்வதற்கு உகந்த அளவில் இருக்கும்.  கடும் காற்று பனிக்கட்டி சில்லுகளைத் தாக்கும் போது அவை பாறை மீது மோத பாறைகள் சறுக்கியபடி நகருகின்றன. காற்று விட்டுவிட்டு அடிக்கும் போது ஒவ்வொரு தடவையும் பனிக்கட்டி சில்லுகள் மோதும் போது பாறை சில மில்லி மீட்டர் நகரலாம்.

பின்னர் வெயில் காரணமாக தண்ணீர் ஆவியாகி விடும். பாறைகள் நகர்ந்த இடம் காய்ந்து தெளிவான தடமாகத் தெரியும். குளிர்காலமாக இருக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். மிதக்கும் பனிக்கட்டி சில்லுகள் இருக்கவேண்டும்.கடும் காற்று வீச வேண்டும். இப்படியாக பல நிலைமைகளும் ஒன்று சேரும் போது தான் பாறைகள் நகருகின்றன.

இந்தப் பகுதியானது  சிறிது கூட மேடுபள்ளம் இன்றி நூல் பிடித்தது போல சமதரையாக இருப்பதும் பாறைகள் நகருவதற்குக் காரணமாக உள்ளது. பாறைகள் நகரும் சூழ்நிலைகள் உண்டானாலும் அந்தத் தடவை மிகச் சிறிது தூரமே நகரலாம். வேறு சில சமயங்களில் அதிக தூரம் நகரலாம்.

அல்லது  தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாறைகள் அதே இடத்தில் காணப்படலாம். ஆகவே பாறைகள் இடம் பெயருவது என்றோ எப்போதோ நடைபெறுவதாக இருக்கிறது.. ஆகவேதான் இது யார் கண்ணிலும் படாமல் இதுவரை அய்யமாகவே இருந்து வந்துள்ளது.

-விடுதலை,25.9.14

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக