வெள்ளி, 27 ஜூலை, 2018

இனி ரத்த நாளத்தையும் ‘அச்சடிக்கலாம்!’ 

மாற்று உறுப்புக்காக காத்திருப் போரின் பட்டியல் நீண்டு வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் உடலிலிருந்தே திசுக்களை எடுத்து, வளர்த்து புதிய உறுப்பை பொருத்த, ஆய்வுகள் நடக்கின்றன.

இதற்கு ‘3டி பயோ பிரின்டர்’ எனப்படும் உயிரி முப்பரிமாண அச்சு இயந்திரம் பயன்படும்.

ஆனால், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள், ஆய்வகத்தில் வளர்த்தெடுத்து, மருத்துவமனைக்கு வரும் வரை ‘உயிருடன்’ இருக்க வேண்டுமல்லவா? அதற்கு, அந்த உறுப்புக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உயிர்ச் சத்துக்களை, ரத்தத்தின் வழியே தருவதற்கு ரத்த நாளங்கள் தேவை.

‘பெரிலிஸ் பயோலாஜிக்ஸ்’ என்ற நிறுவனம், நுண் ரத்தக் குழாய் களுடன் கூடிய உறுப்பை, உயிரி முப்பரிமாண அச்சில் உருவாக்க முயல்கிறது.

லேசர் மூலம், ஹைட்ரோஜெல் என்ற பொருளை, ரத்த நாளங்களுக்கு சாரம் போல அச்சிட முடியும் என்றும், ஒரு முழு சிறுநீரகத்தை, ரத்தநாளங்களுடன், 12 மணி நேரத்திற்குள் அச்சிட்டு எடுக்கும் தொழில் நுட்பத்தை பரிசோதித்து வருவதாக பெரிலிஸ் பயோலாஜிக்ஸ் அறிவித்துள்ளது.

-  விடுதலை நாளேடு, 26.7.18

செவ்வாய், 24 ஜூலை, 2018

பூமியை நெருங்கும் செவ்வாய்: விண்ணில் ஓர் அரிய நிகழ்வு 


சென்னை, ஜூலை 22  பூமியின் வெளிப்புற கோள்களில் ஒன்றான, செவ்வாய் கோள், 15 ஆண்டு களுக்கு பின், பூமிக்கு மிக அருகே வருகிறது. இதை பார்க்க, பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய் யத்தின் பொறுப்பு செயல் இயக் குனர், சவுந்தரராஜ பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பூமியின் ஆறு வெளிப்புற கோள்களில் ஒன்றான செவ் வாயை, 26 மாதங்களுக்கு ஒரு முறை, பூமி கடந்து செல்லும்.அப்போது, செவ்வாய்க்கு நேரே உள்ள நீள்வட்ட பாதையில், பூமி இருக்கும்.

பூமியை விட, நீண்ட வட்ட பாதையில், செவ்வாய் சுழலும் என்பதால், இரண்டு கோள் களுக்கும் இடையிலான துரம், ஒவ்வொரு நேரமும் மாறுபடும்.இதன்படி, வரும், 27இல், செவ் வாய் மற்றும் பூமிக்கு இடையே, எதிர் அமைவு ஏற்படுகிறது.

இதில், வரும், 31இல், பூமி யின் அருகே, செவ்வாய் நெருங்கி வரும்.அப்போது, இரண்டு கோள்களுக்கும் இடையிலான துரம், 5.76 கோடி கிலோ மீட்டராக இருக்கும்.

வழக்கமாக, செவ்வாய் கோளுக்கும், பூமிக்கும் இடையிலான துரம், 38 கோடி கிலோ மீட்டராக இருக்கும்.

ஆனால், எப்போதாவது தான், மிகவும் அரிதாக. 5.5 கோடி கி.மீ., வரை செவ்வாய் நெருங் கும். இதற்கு முன், 2003, ஆகஸ்டு மாதம் 27இல், 5.5 கோடி கி.மீ., தூரத்தில், பூமியை செவ்வாய் நெருங்கி வந்தது. தற்போது, வரும், 31இல் வரவுள்ளது.

அப்போது, செவ்வாயின் தோற்ற அளவு, 24.3 கோண வினாடிகளாக இருக்கும். அத் துடன், செவ்வாய் சற்று பெரி தாகவும், ஒளியுடனும் காணப் படும். இந்த நிகழ்வு மீண்டும், 2035 செப்டம்பர் 15இல் தான் ஏற்படும். அதேபோல், பூமிக்கு நேரே, செவ்வாய் எதிரமைவது 2016, மே, 22இல் நிகழ்ந்தது. அப்போது, செவ்வாய், 7.6 கோடி கி.மீ., துரத்தில் இருந்தது. இந்த எதிரமைவு அடுத்து, 2020 அக்டோபர் 13இல் தான் நிகழும்.

எனவே, இந்த அரிய நிகழ்வை, சென்னை, பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யத்தில், வரும், 25ஆம் தேதி முதல், 31ஆம் தேதி வரை, மாலை 7 மணி  முதல், இரவு 9 மணி வரை, பொது மக்கள் பார்க்க, தொலை நோக்கியுடன் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

- விடுதலை நாளேடு, 22.7.18

செவ்வாய், 3 ஜூலை, 2018

பூமி சுற்றும் வேகம் குறைகிறதா?இன்று ஒரு நாளின் கால அளவு, 24 மணி நேரம். ஆனால், பல ஆயிரம் உயிர்கள் பல்கிப் பெருகாத ஆதி காலத்தில் அப்படி இல்லை என்கின்றனர், ஸ்டீபன் மேயர்ஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு.  இந்தக் குழுவினர், ‘புரசீடிங்ஸ் ஆப் தி நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்’ இதழில் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின்படி, 140 கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில் ஒரு நாளின் கால அளவு வெறும், 18 மணி, 41 நிமிடங்களாகத்தான் இருந்தது.

பிறகு, ஒவ்வொரு ஆண்டும், ஒரு நாளின் நீளம் என்பது, ஒரு நொடியில், 74 பகுதி அளவுக்கு கூடிக்கொண்டே வந்துள்ளது. அப்படியே கூடிக்கொண்டும் இருக்கிறது. ஏனெனில் பூமி சுழலும் வேகம், மெதுவாக, ஆனால் உறுதியாக குறைந்து வருகிறது.

விண்ணியலில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கருத்துகள் மற்றும் புவி வேதியியல் முறைகளைப் பயன்படுத்தி இந்த கணக்கைப் போட்டிருக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வில் குறிப்பிடப் பட்டுள்ள இன்னொரு ஆச்சரியம் நிலாவைப் பற்றியது.

பூமியைச் சுற்றிவரும் ஒரே துணைக்கோளான சந்திரன், கடந்த, 140 கோடி ஆண்டுகளில், பூமியிலிருந்து, 44 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கு விலகிப் போயிருக்கிறது. இந்த விலகல், மேலும் தொடர்வதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 28.6.18

வயிறுக்கும் மூளைக்கும் நேரடித் தொடர்பு!வயிறு என்பது இரண் டாவது மூளை என்பர். பசி, போதிய அளவு உண்டுவிட்ட திருப்தி, போன்ற உணர்வுகளை, வயிற்றிலிருந்து நேரடியாக மூளைக்கு கொண்டு செல்லும் நரப்பு அமைப்பு இருப்பதை, விஞ்ஞானிகள் பல காலமாக அறிவர். இருந்தாலும், புதிய வற்றை கற்றுக்கொள்வது, நினைவாற்றல் போன்றவற்றுக்கும், வயிற் றுக்கும், மூளைக்கும் உள்ள தகவல் தொடர்புக்கும் ஏதேனும் உறவு உண்டா என, அமெரிக்காவின் தென் கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

எலிகளின் வயிற்றிலிருந்து மூளைக்கு தகவல் அனுப்பும் நரம்புகளில், 80 சதவீதத்தை தடுத்து நிறுத்தி சோதித்தனர் விஞ்ஞானிகள். இதனால், எலிகளால் உணவு எங்கே கிடைக்கிறது, என்பது போன்ற இடம் சார்ந்த தகவல்களை, நினைவில் கொள்ள முடியாமல் போனது பரிசோதனையில் தெரியவந்தது. ஆதி மனிதர்கள் உணவு தேடி அலைந்தபோது, எங்கே நல்ல உணவு கிடைத்தது என்பதை நினைவில் கொள்ளவும், மீண்டும் அந்த இடத்தை தேடி அறியவும், ‘வயிறு-மூளை’ நேரடி தொடர்பு உதவியிருக்கலாம் என, ஆய்வின் முடிவில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

-  விடுதலை நாளேடு, 28.6.18