புதன், 11 ஜனவரி, 2023

கொசுக்கள் ஒரு சிலரை மட்டுமே கடிக்கும் - அது ஏன்?

 

கொசுக்களும் அவை பரப்பும் நோய் களும் வரலாற்றில் நடந்த அனைத்துப் போர் களையும் விட அதிக மக்களைக் கொன்று உள்ளன. உண்மையில், புள்ளிவிவரங்களின் படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம்.

2018இல் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இறப்புகளுக்கு இந்த கொசுக்கள் காரணமாக இருந்தன. அதே ஆண்டில், மனிதர்களின் இறப்புக்கு காரணமான உயி ரினங்கள் பட்டியலில் மனிதர்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் 4 லட்சத்து 37 ஆயிரம் மனிதர்களின் இறப்புக்கு காரண மாகியுள்ளனர்.

அதன் பிறகு, பாம்புகள், நாய்கள், விஷத் தன்மை கொண்ட நத்தைகள், முதலைகள், நீர்யானைகள், யானைகள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் சுறாக்களின் கூட்டுத் தாக்குதல் அதற்கு அடுத்த எண்ணிக்கையில் மனித மரணங்களுக்கு காரணமாகியுள்ளது.

இதனால்தான் உலக நோய்பரப்பிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கையை (Global Vector Control Response (GVCR)  2017-2030) 2017ஆம் ஆண்டு தொடங்க ஒப்புதல் அளித்தது உலக சுகாதார நிறுவனம்.

நோய்ப் பரப்பிகளை, குறிப்பாக இந்த பட்டியலில் முக்கியமாகத் தனித்து நிற்கும் கொசுக்களை கட்டுப்படுத்தும் முயற்சிக ளுக்கு வலு சேர்க்கவே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

வெஸ்ட் நைல் காய்ச்சல், ஜிகா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா, செயின்ட் லூயிஸ் மூளை அழற்சி போன்ற பல்வேறு நோய்களைப் பரப்பக்கூடியவை கொசுக்கள். மலேரியா நோயால், கடந்த 2020இல் மட்டும் 62 ஆயிரத்து 700 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், கொசுக்கள் எல்லோரையும் ஒன்று போலவே கடிப்பதில்லை. சிலரை அதிகமாக கடிக்கும் கொசுக்கள், வேறு சிலரை கடிப்ப தில்லை. இதற்குக் காரணம் என்ன?

கரியமில வாயுவும் உடல் வாடையும்

ஆண், பெண் கொசுக்கள் மற்ற விலங்குகளை கடிக்காமல் வாழ முடியும். ஆனால் இனப்பெருக்க சுழற்சியை முடிக்க, பெண் கொசுவுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, கரியமில வாயு  (CO₂) கொசுக்களை ஈர்க்கும் வாயுவாக அடையாளம் காணப்பட்டது. முட்டைகளை உருவாக்குவதற்குத் தேவை யான ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்காக பெண் கொசுக்களுக்கு ரத்தம் தேவைப்படு கிறது.

ஆனால், சிலரை அதிகமாக கடிக்கவும், சிலரை கடிக்காமல் விடுவதற்கும் குறிப்பிட்ட நபர்களின் கரியமில வாயு உமிழ்வு அளவே காரணம் என்று கூறுவது சரியான விளக்க மாக இருக்காது. வேறு என்ன காரணம் இருக்கக்கூடும்? குறிப்பிட்ட நபர்களை ஒரு கொசு கடிக்க தீர்மானிப்பதற்குக் காரண மாகும், பிற உடலியல் மற்றும் வேதியியல் சமிக்ஞைகள் உள்ளன.

குறிப்பாக, வெப்பம், ஈரப்பதம், அதற்கு தென்படும் விஷயங்கள் மற்றும், மிக முக்கியமாக, தோலில் இருந்து வெளிப்படும் ஒருவித வாடை ஆகியவையே கொசுக்கள் யாரை அதிகம் கடிப்பது என்பதைத் தீர் மானிக்கின்றன. நம் உடலில் இருந்து வரும் எந்த வாடை, கொசுக்களை அதிகம் ஈர்க் கிறது என்பது இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், பல ஆய்வுகள் இண்டோல், நோனானோல், ஆக்டெனோல் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவையே இப்படி ஈர்ப்பதாக சுட்டிக் காட்டுகின்றன.

அமெரிக்காவின் புளோரிடா இன்டர் நேஷனல் யுனிவர்சிட்டியின் மேத்யூ டிஜென்னாரோ தலைமையிலான ஆராய்ச் சியாளர்கள் குழு, அயனோட்ரோபிக் ரிசெப்டர் 8ஏ (Ionotropic receptor - IR8a)  எனப்படும் தனித்துவமான வாசனை ஏற்பியை அடையாளம் கண்டுள்ளது. இது டெங்கு சிக்கன் குனியாவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் லாக்டிக் அமிலத் தைக் கண்டறிய வழி செய்கிறது. ஜிகா வைரசையும் இவையே பரப்புகின்றன.

விஞ்ஞானிகள் பூச்சி ஆன்டெனாவில் காணப்படும் IR8a  ஏற்பியை மாற்றிய மைத்தபோது, ​​​​கொசுக்களால் லாக்டிக் அமிலம் மற்றும் மனிதர்கள் வெளியிடும் பிற அமில வாசனைகளை கண்டறிய முடிய வில்லை என்பதைக் கண்டறிந்தனர்.

கொசுக்களை ஈர்க்கும் வாசனை

பொதுவாக, மனிதர்கள் மற்றும் எலி களின் தோல் நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்ட் டைடுகள் உருவாக்குகிறது. இது பாக்டீரியாக் களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது. ஆனால், டெங்கு அல்லது ஜிகாவால் பாதிக் கப்பட்ட எலிகளில், அசிட்டோபீனோனின் உற்பத்தியைத் தூண்டுகிறது. மனிதர்களில் இதேபோன்ற ஒன்று நடக்கிறது: டெங்கு நோயாளிகளின் அக்குள்களில் இருந்து சேக ரிக்கப்பட்ட வாடையில், ஆரோக்கியமான நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வாடையை விட அதிகம் அசிட்டோபீனோன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன வென்றால், இந்த வேறுபாட்டை சரி செய்ய முடியும். டெங்குவால் பாதிக்கப்பட்ட சில எலிகளுக்கு அய்சோட்ரெட்டினோயின் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது அசிட்டோபெனோன் வெளியேற்றத்தை குறைக்க வழிவகுத்தது, இதனால் கொசுக்க ளுக்கு ஈர்ப்பு குறைந்தது. வாசனையை மாற்றும் நுண்ணுயிரிகள் ஒரு நுண்ணுயிரி கொசுக்களையும், மனித உடலையும் பல்வேறு வகையிலும் பாதிக்கின்றது.

எடுத்துக்காட்டாக, மலேரியாவை உண் டாக்கும் ஒட்டுண்ணியான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம். இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள், ஆரோக்கியமான நபர்களை விட, நோயை பரப்பும் அனோபிலிஸ் காம் பியா என்ற ஒரு வகை கொசுக்களுக்கு மிக வும் ஈர்க்கக்கூடியவார்களாக மாறுகின்றனர் இதற்கான காரணம் தெரியவில்லை என்றா லும், இது  (E)-4-hydroxy-3-methyl-but2-enyl pyrophosphate (HMBPP) எனப் படும் அய்சோபிரனாய்டு உருவாக்கும் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இது கொசு ரத்தத்தை உறிஞ்சும் வழக்கத்தை பாதிக் கிறது. அத்துடன் நோய்த்தொற்றுக்கு உள் ளாகும் தன்மையும் உள்ளது.

குறிப்பாக, எச்.எம்.பி.பி.பி என்பது மனித ரத்த சிவப்பணுக்களை தூண்டி கரியமில வாயுவையும், ஆல்டிஹைடுகள் மற்றும் மோனோடெர்பீன்களின் உமிழ்வையும் அதிகரிக்கச் செய்கிறது . இவை ஒன்றாக சேர்ந்து கொசுவை மிகவும் வலுவாக ஈர்த்து 'நம் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு' வழிவக்கு கிறது. மேலும், ரத்த மாதிரிகளில் எச்.எம்.பி. பி.பியைச் சேர்ப்பதன் காரணமாக அனோ பிலிஸ் கொலுஸி, அனோபிலிஸ் அராபி யென்சிஸ், ஏடிஸ் எஜிப்டி மற்றும் குலெக்ஸ் பைபியன்ஸ்/குலெக்ஸ் டோரன்டியம் காம்ப் ளக்ஸ்  போன்ற பிற கொசு இனங்களுக்கு கணிசமான அளவில் ஈர்ப்பு அதிகரிக்கிறது.

கொசுக்கள் சிலரை மட்டும் அதிகம் கடிப்பதற்கும், சிலரை தவிர்ப்பதற்கும் என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள் வது, கொசுக்கள் தொற்று நோய்களைப் பரப்பும் அபாயத்தைக் கண்டறியவும் குறைக்கவும் உதவும். ரவுல் ரிவாஸ் கோன்சாலஸ் ஸ்பெயின் நாட்டில் உள்ள சலாமன்கா பல்கலைக்கழகத்தில் நுண்ணு யிரியல் பேராசிரியராக உள்ளார்.

திங்கள், 9 ஜனவரி, 2023

டாஸ்மேனிய புலியின் எச்சங்கள் கண்டுபிடிப்பு: 85 ஆண்டுகால முடிச்சு விலகியது

 

உலகில் கடைசியாக வாழ்ந்ததாக அறியப்பட்ட டாஸ்மேனியன் புலியின் எச்சங்கள், 85 ஆண்டுகளா கக் காணாமல் போனதாகக் கருதப்பட்டது. அதன் எச்சங்கள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் அலமாரியிலேயே வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தைலசைன்  (Thylacine)  என்று டாஸ்மேனிய புலி அறியப்படுகிறது. தற்போது எச்சமாகக் கண்டுபிடிக் கப்பட்ட புலி 1936ஆம் ஆண்டில் ஹோபார்ட் காப்பிடத்தில் உயிரிழந்தது. அதன் உடல் உள்ளூர் அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், அதன் எலும்புகளும் தோலும் என்ன ஆனது என்ற கேள்வி தொடர்ந்து கமுக்கமாகவே நீடித்து வந்தது.

டாஸ்மேனிய அருங்காட்சியகம் மற்றும் கலைக் கூடம், அந்த எச்சங்களை இழந்தன. அதுமட்டுமின்றி, அவை தூக்கி எறியப்பட்டதாக நம்பப்பட்டது.

ஆனால் சமீபத்திய ஆய்வு மூலம், அவையனைத் தும் அருங்காட்சியகத்திலேயே இருந்ததும் சரியாக ஆவணப்படுத்தப்படாமல் போனதால் இருந்ததே தெரியவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

“பல அருங்காட்சியக கண்காணிப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் பல ஆண்டுகளாக அதன் எச்சங்களைத் தேடினர். ஆனால், அவர்களுக்கு அதில் வெற்றி கிட்டவில்லை. ஏனெனில், 1936ஆம் ஆண்டிலிருந்து தைலசின் தொடர்பான எந்தப் பொருட்களும் ஆவணங்களில் பதிவு செய்யப்படவே இல்லை. அதன் உடல் அப்புறப் படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டது” என்று 2000ஆம் ஆண்டில் உயிரினங்களின் அழிவு குறித்து ஒரு நூலை வெளியிட்ட ராபர்ட் பேடில் கூறினார்.

ஆனால், அவரும் அருங்காட்சியகத்தின் கண் காணிப்பாளர்களில் ஒருவரும் வெளியிடப்படாத டாக்சிடெர்மிஸ்டின் (இறந்த உயிரினங்களின் தோலை பதப்படுத்தி, அதில் மற்ற பொருட்களை நிரப்பி உயிரோடு இருப்பதைப் போல் செய் பவர்) அறிக்கையைக் கண்டறிந்தனர். இது அருங் காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்த பொருட்களை மதிப்பாய்வு செய்யத் தூண்டியது.

அருங்காட்சியகத்தின் கல்வித் துறையிலுள்ள அலமாரியில் காணாமல்  போன உயிரிழந்த பெண் டாஸ்மேனிய புலியின் மாதிரியை அவர் கள் கண்டுபிடித்தனர். அதை ஒரு பயணக் கண்காட்சிக்காக ஆஸ்திரேலியா முழுக்க எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், அதுதான் கடைசி டாஸ்மேனிய புலி என்பது ஊழியர்களுக்குத் தெரியவில்லை என்று கண்காணிப்பாளர் கேத்ரின் மெட்லாக் ஆஸ்தி ரேலிய ஒளிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“சேகரித்து வைக்கப்பட்டிருந்தவற்றில் இது சிறந்த தோல் என்பதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவை இன்னும் ஊர்ப்புறப் பகுதிகளில் வாழ்வதாக அவர்கள் நினைத்தார்கள்,” என்று அவர் கூறினார். 

தோலும் எலும்புகளும் இப்போது ஹோபார்ட் டில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளன. முன்னர் ஆஸ்திரேலியா முழுவதும் சுற்றித் திரிந்ததாக நம்பப்பட்ட டாஸ்மேனிய புலிகளின் எண்ணிக்கை மனிதர்கள் மற்றும் டிங்கோக்களின் (ஆஸ்திரேலியாவில் வாழக்கூடிய நாய் இனம்) தாக்கத்தால் அருகியது. இறுதியாக, டாஸ்மேனியா தீவில் மட்டுமே காணப்பட்டது. பிறகு அங்கும் வேட்டையாடப்பட்டதால் முற்றிலுமாக அழிந்து போனது.