சனி, 30 மார்ச், 2019

உலகின் மிக நீள உப்புப் படிம குகை: இஸ்ரேலில் கண்டுபிடிப்பு



டெல்அவில், மார்ச் 30 உலகின் மிக நீளமானதாக கணக்கிடப்பட்டுள்ள உப்புப் படிம குகை, இஸ்ரேலில் கண்டறியப் பட்டுள்ளது. மால்ஹாம் என பெயிரிடப் பட்டுள்ள அந்த குகை, 10 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட தாகும்.

இதற்கு முன்பாக, ஈரானின் தெற்குப் பகுதியில் காசெம் தீவில் உள்ள 3என் என்ற குகையே உலகின் மிக நீளமான உப்புப் படிம குகையாக அறியப்பட்டிருந்தது. மொத்தம் 6 கி.மீ. நீளம் கொண்ட அந்த குகையின் சாதனையை தற்போது மால்காம் குகை முறியடித்துள்ளது.

இஸ்ரேலின் மிகப் பெரிய மலையான மவுண்ட் சோடோமில் உள்ள இந்த மால்ஹாம் குகையை முதன் முதலாக, ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் குகைகள் ஆராய்ச்சி மய்யத்துக்கான நிறுவனர் மற்றும் இயக் குநரான அமோஸ் ஃப்ரம்கின் 1980-களில் கண்டறிந்தார். அப்போது இந்தக் குகையை அவர் சுமார் 5 கி.மீ. அளவுக்கு அளந்திருந்தார்.

இதனிடையே, 2006-ஆம் ஆண்டில் ஈரானில் 6 கி.மீ. நீளம் கொண்ட 3என் குகை கண்டறியப்பட்டதை அடுத்து, அதுவே உலகின் மிக நீளமான உப்புப் படிம குகை யாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமோஸ் ஃப்ரம்கின் தொடங்கிய மால்ஹாம் குகையை அளவிடும் பணியை மீண்டும் தொடர்வதென இஸ் ரேலைச் சேர்ந்த குகைகள் ஆராய்ச்சியாளர் யாவ் நெகேவ் இரு ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தார்.

மற்றொரு குகை ஆராய்ச்சியாளரான போஸ் லேங்ஃபோர்டு, பல்கேரிய குகை ஆராய்ச்சியாளர்கள் சிலர், உள்ளூர் மக்கள் ஆகியோரின் பங்களிப்புடன் மால்காம் குகை ஆராய்ச்சியை நெகேவ் தொடங்கினார்.

முதல் கட்டமாக கடந்த ஆண்டில் 10 நாள்களும், இரண்டாவது கட்டமாக இந்த ஆண்டில் 10 நாள்களும் குகையை அளவிடும் பணிகளை அவர்கள் மேற்கொண்டனர்.

லேசர் தொழில்நுட்பத்துடன் மால்காம் குகையை அளவிட்ட அந்தக் குழுவினர், அதன் நீளம் 10 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 30.3.19

வெள்ளி, 29 மார்ச், 2019

52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிப்பு

பீஜிங், மார்ச் 27- சீனாவின் கூபே மாகாணத்தில் உள்ள டான்சூய் ஆற்றங்கரை அருகே புதைபடிம ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட புதைபடிமங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிமங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதைபடிமமான பல உயிரினங்களின் தோல், கண்கள் மற்றும் உள் உறுப்புகள் மிகவும் நேர்த்தியாக புதைபடிமமாகி பதனமாகி இருப்பதாலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை இதற்கு முன்னர் கண்டறியப்படாதவை என்பதாலும் இதை பிரமிக்கத்தக்க கண்டுபிடிப்பு என்று புதை படிமவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

-  விடுதலை நாளேடு, 27.3.19

அரிதான நிகழ்வு இரட்டைக் கருப்பைகள் மூலம் இரு குழந்தை பெற்ற பெண்



டாக்கா, மார்ச் 29- வங்காளதேசம் நாட்டின் தென்மேற்கில் அமைந் துள்ளது ஜெசோர் பகுதி. இங் குள்ள ஷர்ஷா கிராமத்தை சேர்ந் தவர் அரிபா சுல்தானா இதி. இவர் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து தொடர்ந்து மருத்துவ பரிசோத னைகள் செய்யப்பட்டன. அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது அரிபாவுக்கு இரட்டை கருப்பைகள் அமைந்துள்ளது தெரிய வந்தது.

இதற்கிடையே, பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி அரிபா ஒரு கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன் பின்னர், ஒரு மாதத்துக்கு பிறகு மற்றொரு கருப்பை மூலம் மார்ச் 22இ-ல் அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என டாக் டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மருத்துவ துறை யில் இது ஓர் அரிதான நிகழ்வு. இதுபோன்ற சம்பவத்தை நான் முதன்முதலாக பார்க்கிறேன். இதற்கு முன்னால் இதுபோன்ற சம்பவத்தை நான் கேட்டதே இல்லை என தெரிவித்தார்.

 -  விடுதலை நாளேடு, 29.3.19

வியாழன், 7 மார்ச், 2019

வளி மண்டலத்தில் எல்லை எது?

பூமி மீது போர்த்தியுள்ள காற்று மண்டலம் எதுவரை எட்டுகிறது?

அண்மைக்காலம் வரை, 100 கி.மீ., தூரத்திற்கு வளி மண்டலம் இருப்ப தாகவும், அதற்குப் அப்பால் வெற் றிடம் ஆரம்பமாவதாகவும், விஞ்ஞானிகள் கணித்து வந்தனர்.

ஆனால், 1990களில் ஏவப்பட்ட, ‘சோகோ’ என்ற அமெரிக்க - அய் ரோப்பிய செயற்கைக்கோள், அப் போது அனுப்பிய தகவல்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள், பூமியின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட காற்று மண்டலத்தின் வீச்சு, 63 ஆயிரம் கி.மீ., தூரம் வரை காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 7.3.19

செவ்வாய், 5 மார்ச், 2019

செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

புதுடில்லி, மார்ச் 5 செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் ஏரியாக இருந்தவை காலப் போக்கில் நிலத்தடி நீராக மாறியுள்ளதாகவும், அவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான கனிமங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் மிகப்பெரிய ஏரி இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்ய ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு தெரிவித்தனர்.

நெதர்லாந்தில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, செவ்வாய் கிரகம் வறண்ட தன்மை கொண்டது. எனினும் நீர் ஆதாரங்கள் இருந்ததற்கான தடங்கள் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், இப்போது வெளியாகியுள்ள புதிய ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக நெதர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில்  ஏரி, குளம் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் இருந்திருக்கின்றன. அந்த கிரகத்தின் காலநிலை மாற்றத்தால் அவை நிலத்தடி நீராக மாறியுள்ளன. எங்களது ஆய்வில், நிலத்தடி நீர் இருப்பதற்கான தடயம் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. அதன் அளவு மற்றும் தன்மை குறித்து இப்போது கூற இயலாது. எனினும் செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளது என்றார்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து  4000- - 4500 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் நீர் இருப்பதற்கான அறிகுறி கிடைத்துள்ளது. அதில் கார்பனேட்ஸ், சிலிக்கேட்ஸ் உள்ளிட்ட கனிம வளங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகை யில், செவ்வாய் கிரகத்தின் வரலாறு இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. அங்கு மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதா? என இதுவரை புரிந்துகொள்ள முடியவில்லை.  3-4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பெருங்கடல் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த பெருங்கடல் கிரகம் முழுவதும் உள்ள ஏரிகளுடன் இணைந்திருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பயனுள்ளவை. இவை செவ்வாய் கிரகம் குறித்து மேலும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்றனர்.

- விடுதலை நாளேடு, 5.3.19

பூமிக்கு அடியிலும் மலைத் தொடர்கள் உண்டு!



கடலுக்குள் பெரிய மலைத் தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான். ஆனால், பூமியின் மேற்பரப்பிலிருந்து பல நுறு கிலோமீட்டர் கீழேயும் பெரிய மலைத்தொடர்கள் இருப்பது, அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

சீனாவிலுள்ள புவி அமைப்பு மற்றும் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இதுவரை பூமியின் ஆழப் பகுதியில் நிகழ்ந்த பெரும் நில அதிர்வுகளின் பதிவுகளை வைத்து, பல மலைத்தொடர்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

பூமியின் கடினமான மேல் ஓட்டுப் பகுதியிலிருந்து ஆழத்திற்குப் போகப் போக, கடினம் குறைந்து, பூமியின் உள் மய்யப் பகுதி, இன்னும் தீக்குழம்பாகவே இருக்கிறது. எனவே, பூமியின் ஆழப் பகுதியில் பூகம்பம் ஏற்படும்போது, அதன் அதிர்வலைகள், பூமியின் மய்யம் வரை பயணித்து, மறுபக்கம் வரை சென்று, மீண்டும் திரும்பும்.

ஆனால், சில பகுதிகளில் அதிர்வலைகள் பட்டுத் திரும்பாமல் இருப்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

உதாரணமாக, 1994இல் பொலிவியாவில் ரிக்டர் அளவுகோலில், 8.2 அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. அப்போது செய்த பதிவுகளின்படி பூமியின் மேல் பகுதிக்கும், மய்யப் பகுதிக்கும் இடையே சில பகுதிகளில் அதிர்வலைகளின் பதிவு வேறுபட்டு இருந்தது.

இதை வைத்து, பூமிக்கடியிலும் கடினமான மலைப் பகுதிகள் இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 28.2.19