அறிவியல் அறிவோம்

உண்மை அறிவியலை அனைவருக்கும் விளக்கவும், தெளிவுபடுத்தவும் பயன்படும் பகுதி

பக்கங்கள்

  • முகப்பு
  • மருத்துவ உலகு
  • தமிழ் மருத்துவம்
  • மூலிகை உலகு
  • மூலிகை மன்னன்
  • வேளாண்மை(மருதம்) அறிவோம்
  • வாழ்வியல் சிந்தனைகள்

ஞாயிறு, 19 மார்ச், 2023

சுமார் 3 கோடி ஆண்டுகள் கடந்து வந்த ஒரு மரபணுத் தொடரின் முடிவிற்கு முடிவு?


 March 09, 2023 • Viduthalai

55 மில்லியன் ஆண்டுகள் உயிர் பிழைத்த வடக்கு வெள்ளை காண்டாமிருகம் பனி யுகங்கள், பூகம்பங்கள், விண்கல் தாக்குதல்களைக் கண்டது மற்றும் கோள்களில் எண்ணற்ற வரலாற்று மாற்றங்களுக்கு சான்றாக இருந்தது,  இப்போது செயல்பாட்டில் அழிந்து விட்டது.

கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டா மிருகம் இறந்துவிட்டதால், இப்போது இரண்டு பெண் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் உயிருடன் உள்ளன. செயற்கை இனப்பெருக்கத்தில் சிறந்த முயற்சிகள் இருந்தும், எந்த வெற்றியும் அடையப்படவில்லை. இந்த துணை இனம் மறதிக்குள் மறைந்து போவது காலத்தின் விடயம். பூமியின் மேற்பரப்பில் இருந்து மேலும் ஒரு உயிரினத்தை மனிதர்கள் அகற்றியுள்ளனர் என்பது மிகவும் வருந்தத்தக்கது, 

மேலும் ஒரு அழகான படைப்பு அழிக்கப் பட்டது. இந்த அழிவுகளுக்குக் காரணம் "மனித குலம்" அல்ல - "மனிதகுலம்" முடிவுகளை எடுப்ப தில்லை. முதலாளித்துவ வர்க்கம் பலரின் நலன்களை விட ஒரு சிலரின் லாபத்தை முன்னிறுத்தி முடிவுகளை எடுக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு முதலாளித்துவமே காரணம்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 10:05 கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: வெள்ளை காண்டாமிருகம்

மனித இன தோற்றமும் பரிணாமமும் பரவலும்


 தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? ஆய்வுகள் கூறும் உண்மைகள்

  January 21, 2023 • Viduthalai

உலகில் அனைத்து உயிரினங்களும் பரிணமிக்கின்றன. சமகாலத்திய உயிர்கள் அனைத்தும் பரிணாம கிளைகளின் தொடர் சங்கிலியின் தற்போதைய கண்ணி. பரிணாம தொடர்ச்சியில் தற்போதைய உயிரினங்களில் மனிதனுக்கு நெருக்கமானது சிம்பன்சி. சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கான பரிணமித்த பாதையும் சிம்பன்சி பயணித்த பாதையும் பிரிந்தன. இருந்தும், ஒப்பீட்டளவில் 98.8% மரபணு தொகுப்பு ஒன்று போல் இருக்கும்.

அறிவியல் ரீதியாக மனிதனை புரிந்து கொள்ள, சிற்றினம், பேரினம், குடும்பம் போன்ற சில அடிப்படை அறிவியல் வழங்கு வார்த்தகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக Pantheraஎனும் ஒரே பேரினத்தை சேர்ந்தவைதான் சிங்கம் (leo), புலி (tigris), சிறுத்தை  (pardus). இவை மூன்றும் பூனை (Felidae) குடும்பத்தை சார்ந்தவை.

ஆக, புலியின் அறிவியல் பெயர் pandarus tigris,  சுருக்கமாக P. tigris எனவும் தொடர்ந்து குறிக்கலாம். சிங்கம் - P. leo, சிறுத்தை  P. pardus.

மனிதனின் அறிவியல் பெயர் Homo sapiens. Homo பேரினம்,  sapiens சிற்றினம். தற்போது உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் H. sapiens தான். இந்த  H. sapiens எப்போது எங்கே எப்படி உருவானாது, எப்போது, எப்படி பரவியது? Sahelanthropus tchadensis என்னும் மனிதக் குரங்குதான்(Primate)என்று கூறுவர், முதனி என தமிழ்படுத்துகின்றனர்) தற்கால மனிதனுக்கும், சிம்பன்சிக்குமான பொதுவான மூதாதையின் நெருங்கிய உறவாக கருதப்படுகிறது. ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் சுமார் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கிறது. இது எப்போதும் அல்லாமல், அவ்வப்போது மட்டும் நிமிர்ந்து நடந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

அதாவது மனிதன் எனும் உயிரினம் உருவாவதற்கான முதல் படிநிலை இந்த உயிரினத்தினிடமிருந்து தொல்லியல் ஆதாரத்தில் அறியப்படுகிறது.

பின் மனித பரிணாமத்தில் பாதையில் முக்கிய திருப்புமுனையில் இருந்த உயிரினம் Orrorin tugenensis எனும் கிழக்கு ஆப்ரிக்காவில் வாழ்ந்த பிரைமேட். அது கிட்டத்தட்ட முழுவதுமாக நிமிர்ந்த நடை கொண்டிருந்தது. இந்த O. tugenensis  மனிதனின் மூதாதை வழியில் அல்லாமல், ஆனால் மூதாதை விலங்கின் நெருங்கிய பரிணாம தொடர்பு கொண்ட உயிரியாக இருக்கலாம் என்றும் கருத்துகள் உண்டு. அதன் தொடர்ச்சியாக, 55 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்ரிக்காவில் Ardipithecus kadabba  எனும் விலங்கு இரு கால்களைக் கொண்டு நிமிர்ந்து நடக்கும்படியான ஆற்றல் பெற்றிருந்ததை அதன் தொல் எலும்பு படிமங்கள் மூலம் அறியப்படுகிறது(Gobbons 2009).

இதன் நெருங்கிய உயிரினமாக 44 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த Ardipithecus ramidus  எனும் விலங்கும் நேர் நிமிர்ந்து நடத்துள்ளது.

ஆனாலும், இந்த  Ardipithecus பேரின விலங்குகள், மரத்தினை பற்றும் படியான உள்ளங்கை உள்ளங்கால்களை கொண்டிருந்தன. இவைகளின் மூளை அளவும் 300 - 350cc (1ccஎன்பது ஒரு கன செண்டிமீட்டர்) அளவிலேயே இருந்தன.

இந்த Ardipithecus பேரினத்திலிருந்து தான் Australopithecus பேரினம் பரிணமிக்கிறது. இந்த நிகழ்வுமனித பரிணாமத்தில் முக்கிய மைல்கல்.

சுமார் 40 லட்சம் ஆண்டு காலம் முன் வாழ்ந்த Australopithecis anamensis எனும் விலங்கின் தொல் படிமத்தால் அறியப்படும் முக்கிய நிகழ்வு, அதன் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மரத்தில் ஏறும்படியாக இல்லாது இருந்தது, பரிணாமத்தில் முக்கிய நிகழ்வு (Leakey et al.1995).

பின் 35 லட்ச ஆண்டுகளுக்கு முன் பலப்பல Australopithecus பேரினத்தின் சிற்றினங்கள்,A. afarensis, A. bahrelghazali தோன்றி, மிக முக்கியமாக 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன், தெற்கு ஆப்ரிக்காவில் தோன்றிய A. africanus மிக முக்கிய திருப்புமுனை உயிரியாக கருதப்படுகிறது.

இதன் மூளை அளவு420 - 510cc ஆக அதிகரிக்கிறது. இதன் பின் கால சுழற்சியில் பரிணாமத்தில் Australopithecus  பேரினம் பல வேறுபட்ட சிற்றினங்கள் என, (உதாரணம் A. garhi) பரிணமிக்கிறது. இதன் கிளையாக paranthropus aethiopicus எனும் உயிரினமும் வாழ்ந்தது அறியப்படுகிறது. இதே காலகட்டத்தில்தான் (25-27 லட்சம் ஆண்டுகளுக்கு முன்) கற்களை கருவிகளாக இந்த விலங்குகள் பயன்படுத்தி இருக்கின்றன என உறுதிபட கூற முடியாவிட்டாலும், அதற்கான சமிக்ஞைகள் பரிணமித்திருக்கும் என கருதப்படுகிறது.இதன் அந்திம காலத்திலேயே (23 லட்சம் ஆண்டுகளுக்கு முன்) Homo habilis  எனும் Homo  பேரினத்தை சார்ந்த விலங்கும் தோன்றுகிறது. மனிதனான Homo sapiens sapiensசும், H. habilis-சும் ஒரே பேரினத்தை சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி, அது இது என அஃறிணையில் குறிக்காமல் உயர்திணையிலேயே குறிப்போம்.  H. habilis கற்களை குச்சிகளை கருவிகளாக மாற்றி, அதை உபயோகப்படுத்தியதும் கண்கூடாக, தொல் எச்சங்கள் மூலம் அறியப்படுகிறது (இந்த கருவிககளை இதற்கு முன்னும், இதே காலகட்டத்திலும் வாழ்ந்த Australopithecus garhi, paranthropus aethiopicus விலங்குகள் செய்திருக்கலாம் எனும் வாதமும் உண்டு). Homoபேரினத்தில் வெளிப்புறத் தோற்றம் தாண்டி, மூளை/அறிவு சார்ந்த பரிணாமமும் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. இவரை முதல் மனிதன் என்றே சொல்லும் அளவுக்கு மனிதனுக்கான பண்புகள் உருவாகிவிட்டிருந்தன. இவர் சுமார் 23 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகி, 16.5 லட்சம் ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளான். இவரை‘HANDY MAN’  என்று அழைக்கலாம். காரணம் ஆயுதங்களை செய்யக் கற்றுக்கொண்டார்.அதனை பத்திரப்படுத்தி மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தினார் (இதற்கு முந்தைய விலங்குகள், தற்போதும் சில குரங்குகள் கற்ளை குச்சிகளை கருவிகளாக பயன்படுத்தினாலும், பத்திரப்படுத்தி மீண்டும் மீண்டும் உபயோகித்ததில்லை). அதாவது, எதிர்காலத்தில் தேவை உண்டு எனும் சிந்தனை மேலோங்கத் தொடங்கிய காலம். குறிப்பிடத்தகுந்த மாற்றமாக, இவரது மூளையின் அளவு 500 - 900cc வரை விரிவடைந்திருந்தது. இது மூளை/அறிவு சார்ந்த பரிணாமத்தின் மிகப் பெரிய லாங்ஜம்ப் என்றே சொல்லலாம். இந்த  H. habilis,பிற Homo சிற்றினங்களுக்கும், முந்தைய Australopithecus பேரினத்திற்குகான இடைப்பட்ட குணாதிசியங்களுடனே இருந்தார்  (Tobias 2006). வெளித்தோற்றமும் சற்றே குரங்கு ஜாடை இருந்தது.  (Tobias 2006). என்றால் நிமிர்ந்த என்று பொருள். இவரை ‘UPRIGHT MAN’’ என்றும் குறிப்பிடுவதுண்டு.  Homo erectus சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்ரிக்காவில் தோன்றியது. உடல்ரீதியாக மனிதனாகவே தெரிந்தார். H. habilisக்கு இருந்தது போல அல்லாமல், குரங்கு முகஜாடை பெருமளவு மறைந்து மனித முகஜாடை கொண்டிருந்தார். இவரது மூளை அளவு 546 - 1,251cc வரை விரிவடைந்திருந்தது. இவர் பயன்பாடு சார்ந்த பலதரப்பட்ட விதவிதமான கல் ஆயுதங்களை செய்தார்.

அதாவது, இன்ன வேலைக்கு இன்ன ஆயுதங்கள் என பிரித்தறியும் அறிவு பெற்றிருந்தார். மிக முக்கியமாக, நெருப்பை உண்டாக்க கற்றுக்கொண்டாரா என்பதில் அய்யப்பாடு இருந்தாலும், நெருப்பை பயன்படுத்த கற்றுக்கொண்டார். இயற்கையாக தோன்றிய நெருப்பை, தொடர்ந்து எரிய விட்டு பயன்படுத்தியிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. ஹோமோ எரக்டஸ் மனிதர்கள் அறிவு சார்ந்த ஆதிக்கம் செலுத்தி ஆப்ரிக்கா முழுவதும் பரவினர்.

இவர்களே முதல் முறையாக ஆப்பிரிக்காவை விட்டும் வெளியேறினர். மத்திய கிழக்கில் இரண்டாக பிரிந்து, அய்ரோப்பாவிலும் ஆசியாவிலும் நுழைந்தனர். மேற்கு அய்ரோப்பா வரையிலும், ஆசியாவில் இந்திய நிலப்பரப்பை தாண்டி, இந்தோனீசியா தீவுகள் வரையிலும் பரவினர். இவர்கள் மிதவைகளை பயன்படுத்திய முதல் கடலோடியாக இருக்கவும் வாய்ப்புண்டு என்றும் நம்பப்படுகிறது. பின், சென்ற இடங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து பல்வேறு புதிய  Homo சிற்றினங்களாக பரிணமித்தனர். தெற்கு ஆப்ரிக்காவில் பரவிய  H.erectus, கால சூழ்நிலைக்கேற்ப மாற்றமடைந்து H. ergaster - ராக பரிணமித்தது. இந்தH. ergaster சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தே போகிறது. ஆயினும்H.erectus மற்றும் H.ergaster அவ்வப்போது கலந்து இணை சேர்கின்றன.மேற்கு அய்ரோப்பாவை வந்தடைந்த H. erectus,அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு H. antecessor ராக பரிணமித்தது. இந்த இனம் 12 லட்சம் ஆண்டுகள் முன் தோன்றி, 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் முற்றாக அழிந்தது.

சமகாலத்தில் ஆப்பிரிக்காவிலிந்து கிழக்கே நகர்ந்து சீனா மற்றும் இந்தியா வரை வந்தடைகின்றது H. erectus. இந்தியா வந்தடைந்த H.erectus, இந்தியா முழுவதும் பரவி, தரைவழியாக கிழக்கு ஆசியா வரை பரவி, பின் கடல் மார்கமாக இந்தோனீசியா தீவுகள் வரை பரவியது.

தென் இந்தியாவில் சென்னைக்கு அருகில் அதிரம்பாக்கத்தில், கற்கருவிகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் காலம் 3,85,000 ஆண்டுகளுக்கு முன் வரை இருக்கலாம் என தெரிகிறது. இதனை உருவாக்கி பயன்படுத்தியதுH.erectus என்றே ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.இந்த கற்கருவிகளுக்கும், அங்கே தற்போது வாழும் தமிழர்களுக்கும், ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எந்தவித வரலாற்றுத் தொடர்பும் இல்லை.

இந்தோனீசியா வரை சென்றH.erectus, அங்கே ஃப்ளாரன்ஸ் தீவில், உருவமாற்றம் பெற்று, H. florensisஎனும் குட்டையான மனிதனாக உருவெடுத்தது. தீவின் சூழல் இவனை மூன்றடிக்கு வளரும் இனமாக மாற்றிவிடுகிறது. அங்குள்ள, குள்ள யானைகளை கூட வேட்டையாடியது.

H. florensis-ä ‘HOBBIT MAN’, ‘FLORES MAN’என்றும் அழைக்கின்றனர்.  H. florensis இனம் சுமார் 1,90,000 ஆண்டுகளில் தொடங்கி, மிக சமீபமாக 12,000 ஆண்டுகளுக்கு முன் வரை அந்த தீவுகளில் வாழ்ந்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த H.erectus,மெல்ல மெல்ல மாற்றமடைந்து, H.ergester சில சந்தர்ப்பங்களில் கலந்து, H. heidelbergensis உருவெடுத்தது. இந்த இனமே தற்கால மனித இனமான பி.  H. sapiens-ன் நேரடி மூதாதை. இந்த H. heidelbergensis மீண்டும் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, அய்ரோப்பா, ஆசியாவில் சீனா, இந்தியா, இந்தோனீசியா வரை பரவியது. இந்த இனம் வாழ்ந்தது 6 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரை.

நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன், நெருப்பை பயன்படுத்துவது இந்த இனத்துக்கு கைவந்த கலையாக மாறிவிட்டிருந்தது. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் பண்பு இந்த  H. heidelberginsis காலத்தில் தான் தொடங்குகிறது. சீனா மற்றும் கிழக்காசியா வரை பரவிய இவன், அங்கே H. denisova எனும் புதிய மனித இனமாக பரிணமித்தது. Denisovans  என அழைக்கப்பட்ட இந்த மனித இனம் வாழ்ந்தது இரண்டு லட்சம் தொடங்கி 50,000 ஆண்டுகள் வரை. அய்ரோப்பவை வந்தடைந்த H. heidelbergensis, அங்கே குளிருக்கு ஏற்றபடி H. neanderthalensis, ‘NEANDERTHAL MAN’  என்றும் அழைக்கப்படும் நியாண்டர்தால் மனிதனாக மனித இனமாகப் பரிணமித்தது. வெள்ளை தோலுடன், செம்பட்டை முடியுடன், பருத்த உடலுடன், வாழ்ந்த இந்த இனத்துக்கு என்று மொழிகள் இருந்திருக்கும் என நம்பப்படுகிறது. புறத்தோற்றத்தில் சகமனிதனாகவே நாம் கருதும் அளவுக்கு தற்கால மனித இனத்தை இந்த இனம் ஒத்திருந்தது.

H. neanderthalensis வாழ்ந்த காலம் சுமார் நான்கு லட்சம் முதல் 1,30,000 ஆண்டுகள் முன் உச்சம் பெற்று, சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன், மனிதன்(H. sapiens)  வரவை தொடர்ந்து முற்றாக அழிந்தது. H. neanderthalensis மனித இனம்  H.sapiens இனப்பெருக்கம் செய்துள்ளது வரலாற்றில் முக்கிய நிகழ்வு. நியாண்டர்தால்களிடம் கலை பண்பாடு இருந்ததும் பரிணாமத்தின் முக்கிய மைல்கள்.வடக்கு பகுதி ஆப்ரிக்காவில் தங்கிய H. heidelbergensis,  மெல்ல மெல்ல பரிணமித்து, மூன்று முதல் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் H. sapiensஎனும் புதிய மனிதனாக பரிணமித்தது, அதாவது நாம் தான். H. sapiens இனத்தை ‘MODERN HUMAN’ என்றே அழைத்தனர்.  H. sapiens- இடம் கட்டமைந்த மொழி இருந்தது.

உலகத்தை கைப்பற்றுதல்

இந்த  H. sapiens,2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மீண்டும் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி, மத்திய கிழக்காசியாவிலும், அய்ரோப்பாவிலும் நியாண்டெர்தல்களுடன் கலந்தது. நியாண்டர்தால்கள் புதிய மனிதனுடன் இரண்டற கலந்து சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன் முற்றாக வரலாற்றிலிருந்து காணாமல் போகிறது.

H. sapiens -ன் ஆசிய வரவால், இங்கே இந்தியாவில் வாழ்ந்து வந்த H. erectus,  போட்டியிட முடியாமல் வாழமுடியாமல் மெல்ல மெல்ல அழிகிறது. அவ்வப்போது, இரண்டு இனங்களும் இணை சேர்ந்த நிகழ்வும் நடந்ததாக கருதுகோள் உண்டு, ஆயினும் போதிய தரவுகள் இல்லை.

கிழக்காசியாவை அடைந்த H. sapiens, அங்கிருந்த டெனிசோவியன்ஸிடம் கலந்தது. காலப்போக்கில் டெனிசோவியன்ஸும் மறைகின்றனர். சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவையும் கடல் வழியாக இந்த புதிய மனித இனம் அடைந்தது. கிழக்கு ரஷ்யா வழியாக, நிலவழியாக அலாஸ்காவை 20000 ஆண்டுகளுக்கு முன் அடைந்து, வட அமெரிக்கா தாண்டி, 12000 ஆண்டுகளுக்கு முன் தென் அமேரிக்காவிலும் அடைந்து, அண்டார்டிகா தவிர்த்து, மொத்த உலகத்திலுமான ஒரே மனித இனமாக பரவி வாழத்தொடங்குகியது.

தமிழன் தனித்துவமானவனா?

மரபணு ரீதியில் தமிழன் தனித்துவமானவனா என்றால் இல்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கும். ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய மொத்த மனித கூட்டம் அதிகபட்சமாக 10,000 இணைகள் மட்டுமே என நம்பப்படுகிறது.

அதாவது, ஆப்பிரிக்காவுக்கு வெளியே வாழும் அனைத்து மக்களின் மூதாதையர்கள் இந்த பத்தாயிரம் பேர்களே என நம்பப்படுகிறது. ஆப்ரிக்காவில் வாழும் மனிதர்கள் ஒன்று போல நமக்கு தோன்றினாலும், மரபணு ரீதியாக அதிக வேறுபாடுகளை கொண்டவர்கள். அதாவது, ஒரு வெள்ளை அய்ரோப்பியரும், பழுப்பு இந்தியரும், மஞ்சள் சீனரும், கருப்பு ஆஸ்திரேலியரும் வேறுபாடுகளாக நம் கண்களுக்கு தெரிந்தாலும், அனைவரும் மரபணு நெருக்கம் கொண்டவர்கள். காரணம், மரபணு வேறுபாடு அடைய பல லட்சம் ஆண்டுகள் பிடிக்கும்.

நாம் தோன்றியதே சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான். வெறும் பத்தாயிரம் இணைகள் மூலமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, அதிகபட்சம் இரண்டு லட்சம் ஆண்டுகள்தான் பரிணாமப் பாதையில் நடந்துள்ளோம். தனித்த மரபணு தொகுப்பு உருவாக, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு, பல லட்சம் ஆண்டுகளாவது ஆகும்.

சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம்மை பிரிந்த சிம்பன்சிக்கும் நமக்குமான மரபணு தொகுப்பு வேறுபாடே 1.2% தான் எனும் போது, வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படாத நாம், எப்படி மரபணு தொகுப்பில் அதிகப்படியான வேறுபாட்டை கொண்டிருக்கமுடியும்? அதற்கான வாய்ப்போ, காலமோ நமக்கு அமையவில்லை என்பதே நிதர்சனம்.

தமிழன் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த இனக்குழுவிற்கும் தனித்த மொழி, கலாசார அடையாளங்கள் இருக்குமே தவிர, தனித்த மரபணு தொகுப்பு அமைப்பு, அறிவியல் ரீதியாக இல்லவே இல்லை.

(தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுரையாளர் ராம்குமார், சுமார் 15 ஆண்டுகளாக மரபணு சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர்பட்ட ஆய்வாளராகவும், திருச்சி அரசுக் கல்லூரியின் வருகைதரு ஆசிரியராகவும் இருக்கிறார்.)

இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 2:21 கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பரவல் , மனித இனம்

வியாழன், 9 மார்ச், 2023

மரபணு ஆராய்ச்சிக்காக சவாண்டே பேபோவுக்குக் கிடைத்த நோபல் பரிசு! (மனித இன தோற்றம்)

 

  October 08, 2022 • Viduthalai

 நிர்மல் ராஜா

உயிரியலாளர்

மைக்கேல் க்ரைடன் எழுதிய ‘ஜுராசிக் பார்க்’ நாவலில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த டைனோசர்களை, அதன் மரபுத் தொகுதி யைக் கொண்டு குளோனிங் செய்து மீட்டுட்ருவாக்கம் செய்வார்கள். குளோ னிங், மரபணு ஆய்வு போன்றவை மக்களிடையே மிகவும் புதிய சொற்களாக இருந்தன. ‘பல்லாயிரம் ஆண்டுகளுக் குள் முன்னர் அழிந்து போன உயிரி னத்தின் எச்சத்தில் இருந்து மரபணுவைப் பிரித்து எடுக்க முடியுமா?’ என்ற கேள்வி எழுந்தது. ‘முடியும்’ என வெகு சிலரே சொன்னார்கள்; அதுவும் பெருத்த சந்தேகங்களிடையே!

பொதுவாக ஓர் உயிரினத்தின் அனைத்துத் தகவல்களும் அதன் மரபணுத் தொகுதியில் இருக்கும். சமையல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து அதிலுள் ளதைப் போல சமைத்தால் அந்த உணவை நாம் உருவாக்கலாம் என்பது போல, மரபணுத் தொகுதி என்பது பல்லாயிரம் மரபணுக்கள் சேர்ந்தது. மரபணுக்கள் ஓர் உயிரினத்தின் இயல்புகளைப் பற்றிய தகவல்களைச் சந்ததிகளூடே கடத்தவல்லது. 

சொல்லப்போனால் நமது மரபணுக் கள் நமது முன்னோர்களின் உடலின் மூலம் அவர்களின் முன்னோர்களிடம் இருந்து வந்தவையே. இறந்தாலும் இறவா வரம் பெற்றவை மரபணுக்கள். இதை ரிச்சர்ட் டாக்கின்ஸ் ‘இறவாச் சுருள்’ என்கிறார். இறவாச் சுருள் என்றாலும், இவற்றால் ஓர் உடலினுள் மட்டுமே இறவாமல் இருந்து, அவ் வுடலில் இருந்து இன்னோர் உடலுக்கு (இனப்பெருக்கம் மூலம்) தாவிச் செல்ல முடியும். ஓர் உயிரினம் இறந்து விட்டால் அதன் உடலில் வெகு சில காலமே டிஎன்.ஏ. இருக்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகும். டி.என்.ஏ.வின் அரை வாழ் காலம் வெறும் 521 ஆண்டுகளே! அதாவது 521 ஆண்டுகளில் அதனுள் இருக்கும் கடடமைப்புகள் உடைந்து போகும். இன்னொரு 521 ஆண்டுகளில் ஒன்றும் இல்லாமல் போய் விடும். இறந்த உடல் அழுகி உருத்தெரியாமல் போவது போல!

ஆனால் சில சூழ்நிலைகளில் அவ்வு டல்கள் பல காலத்துக்கு கெடாது இருக்கும். எகிப்து மம்மிகள் போல காரத்துக்காகவும், ஆல்ப்ஸ் மலையில் சுமார் அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து பனிப் பாறைகளில் இயற்கையாகப் பதப்படுத்த மனித உடல் போலவும், சில சூழ்நிலைகளில் டிஎன்ஏ பல நூற்றாண்டுகளுக்குக் கெடாது இருக்கும். அதாவது மைனஸ் அய்ந்து டிகிரி செல்சியஸ் தட்பவெப்பத்தில் டிஎன்ஏ சுமார் அறுபது லட்சம் ஆண்டு கள் வரை சிதையாமல் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். 

‘டைனோசரகள் மரபணுக்கள் கிடைப்பது சாத்தியமில்லை. ஆனால் அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்களை எடுக்கலாமே?’,  ‘ஆராய்ந்தால் நமக்கும் அவர்களுக்கு மிடையே இருக்கும் தொடர்பு நமது பரிணாம வரலாற்றை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுமே?’ போன்ற கேள்விகள் சுவீடனைச் சேர்ந்த மரபியலாளர் ஸ்வாண்டே பேபோவுக்கு எழுந்தன. 

1986-இல் சுவீடனின் உப்சாலா பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், பின்னர் பல நாடுகளில் ஆராய்ச்சியை தொடர்ந்து வந்தார் 1990களில் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாக் நிறுவனத்தில் பரிணாம மானிடவியல் துறையைத் தொடங்க முக்கிய காரணமாக இருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மிக்களில் இருந்து மரபணுக்களை பிரித்தெடுக்க முயன்றார். பல தோல்விகள். மரபணுக்கள் மம்மிக்களிடம் இருந்து வந்தாலும் கூடவே அவற்றைக் கையாண் டவர்கள், சோதனைக் கூடங்களில் இருந்தவர்களின் மரபணுக்களும் சேர்ந்தே வந்தன. பின்னர் பல ஆராய்ச்சிகளின் முடிவில் தொன்மை யான மரபணுக்களைப் பிரித்து எடுப்பது எப்படி என ஒரு முறையான நெறி முறையை வகுத்தார். 

1997-இல் பேபோ சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து போன நியாண்டர்தால் மனிதர்களின் எலும்பு களில் இருந்து டி.என்.ஏ.வைப் பிரித்து எடுக்க முடியும் என நிரூபித்தார், 2010-இல் சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நியாண்டர்தால் மனிதரின் எலும்பில் இருந்து முழு மரபணுத் தொகுதியையும் பிரித்தெடுத்து வெளியிட்டார். அது வரை  எலும்புகளும், கற்கருவிகளும் அகழ்வாராய்ச்சியில் தூசு படிந்து இருந்த தொல் மானுடவியல் ஆராய்ச்சியை முதன் முதலாக பரிசோ தனைக் கூடத்துக்குக் கொண்டு வந்தார் பேபோ. தொன்மையான மரபணுக்களை, இன்று உயிரோடு இருக்கும் நமது மரபணுக்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தபொழுது பல உண்மைகள் வெளிவந்தன. 

அதாவது அதுவரை புதிராக இருந்த நியண்டர்தால்களின் ஆரம்பம் தெளிவா னது. சுமார் ஏழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொது மூதாதையரில் இருந்து நியாண்டர்தால்களும் மனிதர் களும் பரிணமித்தனர். இன்றைய அய்ரோப்பாவில் அவர்கள் பரிணமித் தாலும், பின்னர் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. சந்திப்புகள் ஒரு கட்டத்தில் அன்பாகவும் மாறியது. மனிதர்களும் நியாண்டர்தால்களும் கலந்து பிள்ளை கள் பெற்றுக்கொண்டனர். அதாவது இன்று ஆப்பிரிக்கர்கள் அல்லாத மனிதர் களின் மரபணுக்களில் சுமார் 1 முதல் 2% வரை நியண்டர்தால்களின் மரபணுக்கள் இருப்பதை காணலாம். நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தனித்த மனித இனமே, மற்றொரு மனித இனத்துள் கலந்து முற்றிலும் அழிந்து போனது. 

பேபோவின் கண்டுபிடிப்புகள் மனிதப் பரிணாமம் பற்றிய புரிதலைப் புரட்டிப் போட்டது. அகழ்வாராய்ச்சியில் கிடைக்காத ஆதாரங்களை, நமது மரபணுக்களில் தேடலாம் என உலகுக்கு அறிவித்தார். பேலியோ ஜீனோமிக்ஸ் - தொல் மரபியல் என்ற புதிய துறையைத் தோற்றுவித்தார்.  

முதன் முதலாக மரபணுக்கள் மூலம் இன்னொரு மனித இனத்தை பேபோ கண்டுபிடித்தார். 2010-இல் சைபீரியாவின் அல்டாய் மலைத் தொடரில் இருக்கும் டெனோசோவா குகையில் 40,000 ஆண்டுகள் பழமையான ஒரு விரல் எலும்புத்துண்டு கிடைத்தது. முதலில் யாருடையது என தெரியவில்லை ஒரு வேளை ஒரு நியாண்டர்தாலுடையதாக இருக்கலாம் என கருதினர் ஆராய்ச்சி யாளர்கள். பின்னர் பேபோ மற்றும் அவரது குழுவினர் அவ்வெலும்பில் இருந்து மரபணுத் தொகுதியைப் பிரித் தெடுத்து ஆராய்ந்தபோது, அது நியாண்டர்தாலுடனோ, ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் மரபணுக் களுடனோ பொருந்திப் போகவில்லை. 

சுமார் அய்ந்து லட்சம் முதல் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவில் வாழ்ந்து அழிந்த மற்றொரு மனித இனம் என்பதைக் கண்டுபிடித்தார். மேலும் மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கும் இன்றைய மனிதர்களில் சுமார் 5% வரை அந்த டெனிசோவன்களின் மரபணுக்கள் இருப்பது தெரிந்தது. கற்காலத்தில் மனிதர்கள், நியாண்டர் தால்களுடன் மட்டுமல்லாமல் டெனிசோ வன்களுடனும் கலந்தனர் என்பது தெரியவந்தது. 

இவரின் ஆராய்ச்சியின் விளைவால் மனிதப் பரிணாம வரலாறு ஓர் உயர் வரையறு தொலைக்காட்சியில் (High Definition TV) தெரிந்தாலும், மிகவும் சிக்கலான ஒரு கதையைக் கொண்டது என நமக்கு புரிந்தது.

நியாண்டர்தால் மனிதர்களில் இருந்து நமக்குக் கடத்தப்பட்ட மரபணுக்கள் இன்று கோவிட் தொற்றில் இருந்து இக்கால அய்ரோப்பியர்களைக் காப்பாற் றியது என தனது ஆராய்ச்சியை இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த 68 வயது இளைஞர்.  

இன்று ஆதிச்சநல்லூரிலும், கீழடி யிலும், சிந்து சமவெளியிலும் நடக்க விருக்கும் அடுத்த கட்ட ஆராய்ச்சி தொல் மரபியல் ஆராய்ச்சியே என்றால், அறிவியலுக்கான பேபோவின் பங்க ளிப்பும் அதன் முக்கியத்துவமும் நமக்கு புரிந்து இருக்கும்.

சவாண்டே பேபோவுக்கே இந்த ஆண்டின் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டு உள்ளது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 5:35 கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மரபணு ஆராய்ச்சி , மனித இனம்

புதன், 11 ஜனவரி, 2023

கொசுக்கள் ஒரு சிலரை மட்டுமே கடிக்கும் - அது ஏன்?

 

  August 25, 2022 • Viduthalai

கொசுக்களும் அவை பரப்பும் நோய் களும் வரலாற்றில் நடந்த அனைத்துப் போர் களையும் விட அதிக மக்களைக் கொன்று உள்ளன. உண்மையில், புள்ளிவிவரங்களின் படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம்.

2018இல் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இறப்புகளுக்கு இந்த கொசுக்கள் காரணமாக இருந்தன. அதே ஆண்டில், மனிதர்களின் இறப்புக்கு காரணமான உயி ரினங்கள் பட்டியலில் மனிதர்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் 4 லட்சத்து 37 ஆயிரம் மனிதர்களின் இறப்புக்கு காரண மாகியுள்ளனர்.

அதன் பிறகு, பாம்புகள், நாய்கள், விஷத் தன்மை கொண்ட நத்தைகள், முதலைகள், நீர்யானைகள், யானைகள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் சுறாக்களின் கூட்டுத் தாக்குதல் அதற்கு அடுத்த எண்ணிக்கையில் மனித மரணங்களுக்கு காரணமாகியுள்ளது.

இதனால்தான் உலக நோய்பரப்பிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கையை (Global Vector Control Response (GVCR)  2017-2030) 2017ஆம் ஆண்டு தொடங்க ஒப்புதல் அளித்தது உலக சுகாதார நிறுவனம்.

நோய்ப் பரப்பிகளை, குறிப்பாக இந்த பட்டியலில் முக்கியமாகத் தனித்து நிற்கும் கொசுக்களை கட்டுப்படுத்தும் முயற்சிக ளுக்கு வலு சேர்க்கவே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

வெஸ்ட் நைல் காய்ச்சல், ஜிகா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா, செயின்ட் லூயிஸ் மூளை அழற்சி போன்ற பல்வேறு நோய்களைப் பரப்பக்கூடியவை கொசுக்கள். மலேரியா நோயால், கடந்த 2020இல் மட்டும் 62 ஆயிரத்து 700 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், கொசுக்கள் எல்லோரையும் ஒன்று போலவே கடிப்பதில்லை. சிலரை அதிகமாக கடிக்கும் கொசுக்கள், வேறு சிலரை கடிப்ப தில்லை. இதற்குக் காரணம் என்ன?

கரியமில வாயுவும் உடல் வாடையும்

ஆண், பெண் கொசுக்கள் மற்ற விலங்குகளை கடிக்காமல் வாழ முடியும். ஆனால் இனப்பெருக்க சுழற்சியை முடிக்க, பெண் கொசுவுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, கரியமில வாயு  (CO₂) கொசுக்களை ஈர்க்கும் வாயுவாக அடையாளம் காணப்பட்டது. முட்டைகளை உருவாக்குவதற்குத் தேவை யான ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்காக பெண் கொசுக்களுக்கு ரத்தம் தேவைப்படு கிறது.

ஆனால், சிலரை அதிகமாக கடிக்கவும், சிலரை கடிக்காமல் விடுவதற்கும் குறிப்பிட்ட நபர்களின் கரியமில வாயு உமிழ்வு அளவே காரணம் என்று கூறுவது சரியான விளக்க மாக இருக்காது. வேறு என்ன காரணம் இருக்கக்கூடும்? குறிப்பிட்ட நபர்களை ஒரு கொசு கடிக்க தீர்மானிப்பதற்குக் காரண மாகும், பிற உடலியல் மற்றும் வேதியியல் சமிக்ஞைகள் உள்ளன.

குறிப்பாக, வெப்பம், ஈரப்பதம், அதற்கு தென்படும் விஷயங்கள் மற்றும், மிக முக்கியமாக, தோலில் இருந்து வெளிப்படும் ஒருவித வாடை ஆகியவையே கொசுக்கள் யாரை அதிகம் கடிப்பது என்பதைத் தீர் மானிக்கின்றன. நம் உடலில் இருந்து வரும் எந்த வாடை, கொசுக்களை அதிகம் ஈர்க் கிறது என்பது இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், பல ஆய்வுகள் இண்டோல், நோனானோல், ஆக்டெனோல் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவையே இப்படி ஈர்ப்பதாக சுட்டிக் காட்டுகின்றன.

அமெரிக்காவின் புளோரிடா இன்டர் நேஷனல் யுனிவர்சிட்டியின் மேத்யூ டிஜென்னாரோ தலைமையிலான ஆராய்ச் சியாளர்கள் குழு, அயனோட்ரோபிக் ரிசெப்டர் 8ஏ (Ionotropic receptor - IR8a)  எனப்படும் தனித்துவமான வாசனை ஏற்பியை அடையாளம் கண்டுள்ளது. இது டெங்கு சிக்கன் குனியாவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் லாக்டிக் அமிலத் தைக் கண்டறிய வழி செய்கிறது. ஜிகா வைரசையும் இவையே பரப்புகின்றன.

விஞ்ஞானிகள் பூச்சி ஆன்டெனாவில் காணப்படும் IR8a  ஏற்பியை மாற்றிய மைத்தபோது, ​​​​கொசுக்களால் லாக்டிக் அமிலம் மற்றும் மனிதர்கள் வெளியிடும் பிற அமில வாசனைகளை கண்டறிய முடிய வில்லை என்பதைக் கண்டறிந்தனர்.

கொசுக்களை ஈர்க்கும் வாசனை

பொதுவாக, மனிதர்கள் மற்றும் எலி களின் தோல் நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்ட் டைடுகள் உருவாக்குகிறது. இது பாக்டீரியாக் களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது. ஆனால், டெங்கு அல்லது ஜிகாவால் பாதிக் கப்பட்ட எலிகளில், அசிட்டோபீனோனின் உற்பத்தியைத் தூண்டுகிறது. மனிதர்களில் இதேபோன்ற ஒன்று நடக்கிறது: டெங்கு நோயாளிகளின் அக்குள்களில் இருந்து சேக ரிக்கப்பட்ட வாடையில், ஆரோக்கியமான நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வாடையை விட அதிகம் அசிட்டோபீனோன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன வென்றால், இந்த வேறுபாட்டை சரி செய்ய முடியும். டெங்குவால் பாதிக்கப்பட்ட சில எலிகளுக்கு அய்சோட்ரெட்டினோயின் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது அசிட்டோபெனோன் வெளியேற்றத்தை குறைக்க வழிவகுத்தது, இதனால் கொசுக்க ளுக்கு ஈர்ப்பு குறைந்தது. வாசனையை மாற்றும் நுண்ணுயிரிகள் ஒரு நுண்ணுயிரி கொசுக்களையும், மனித உடலையும் பல்வேறு வகையிலும் பாதிக்கின்றது.

எடுத்துக்காட்டாக, மலேரியாவை உண் டாக்கும் ஒட்டுண்ணியான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம். இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள், ஆரோக்கியமான நபர்களை விட, நோயை பரப்பும் அனோபிலிஸ் காம் பியா என்ற ஒரு வகை கொசுக்களுக்கு மிக வும் ஈர்க்கக்கூடியவார்களாக மாறுகின்றனர் இதற்கான காரணம் தெரியவில்லை என்றா லும், இது  (E)-4-hydroxy-3-methyl-but2-enyl pyrophosphate (HMBPP) எனப் படும் அய்சோபிரனாய்டு உருவாக்கும் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இது கொசு ரத்தத்தை உறிஞ்சும் வழக்கத்தை பாதிக் கிறது. அத்துடன் நோய்த்தொற்றுக்கு உள் ளாகும் தன்மையும் உள்ளது.

குறிப்பாக, எச்.எம்.பி.பி.பி என்பது மனித ரத்த சிவப்பணுக்களை தூண்டி கரியமில வாயுவையும், ஆல்டிஹைடுகள் மற்றும் மோனோடெர்பீன்களின் உமிழ்வையும் அதிகரிக்கச் செய்கிறது . இவை ஒன்றாக சேர்ந்து கொசுவை மிகவும் வலுவாக ஈர்த்து 'நம் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு' வழிவக்கு கிறது. மேலும், ரத்த மாதிரிகளில் எச்.எம்.பி. பி.பியைச் சேர்ப்பதன் காரணமாக அனோ பிலிஸ் கொலுஸி, அனோபிலிஸ் அராபி யென்சிஸ், ஏடிஸ் எஜிப்டி மற்றும் குலெக்ஸ் பைபியன்ஸ்/குலெக்ஸ் டோரன்டியம் காம்ப் ளக்ஸ்  போன்ற பிற கொசு இனங்களுக்கு கணிசமான அளவில் ஈர்ப்பு அதிகரிக்கிறது.

கொசுக்கள் சிலரை மட்டும் அதிகம் கடிப்பதற்கும், சிலரை தவிர்ப்பதற்கும் என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள் வது, கொசுக்கள் தொற்று நோய்களைப் பரப்பும் அபாயத்தைக் கண்டறியவும் குறைக்கவும் உதவும். ரவுல் ரிவாஸ் கோன்சாலஸ் ஸ்பெயின் நாட்டில் உள்ள சலாமன்கா பல்கலைக்கழகத்தில் நுண்ணு யிரியல் பேராசிரியராக உள்ளார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 7:40 கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கொசு

திங்கள், 9 ஜனவரி, 2023

டாஸ்மேனிய புலியின் எச்சங்கள் கண்டுபிடிப்பு: 85 ஆண்டுகால முடிச்சு விலகியது

 

  December 15, 2022 • Viduthalai

உலகில் கடைசியாக வாழ்ந்ததாக அறியப்பட்ட டாஸ்மேனியன் புலியின் எச்சங்கள், 85 ஆண்டுகளா கக் காணாமல் போனதாகக் கருதப்பட்டது. அதன் எச்சங்கள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் அலமாரியிலேயே வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தைலசைன்  (Thylacine)  என்று டாஸ்மேனிய புலி அறியப்படுகிறது. தற்போது எச்சமாகக் கண்டுபிடிக் கப்பட்ட புலி 1936ஆம் ஆண்டில் ஹோபார்ட் காப்பிடத்தில் உயிரிழந்தது. அதன் உடல் உள்ளூர் அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், அதன் எலும்புகளும் தோலும் என்ன ஆனது என்ற கேள்வி தொடர்ந்து கமுக்கமாகவே நீடித்து வந்தது.

டாஸ்மேனிய அருங்காட்சியகம் மற்றும் கலைக் கூடம், அந்த எச்சங்களை இழந்தன. அதுமட்டுமின்றி, அவை தூக்கி எறியப்பட்டதாக நம்பப்பட்டது.

ஆனால் சமீபத்திய ஆய்வு மூலம், அவையனைத் தும் அருங்காட்சியகத்திலேயே இருந்ததும் சரியாக ஆவணப்படுத்தப்படாமல் போனதால் இருந்ததே தெரியவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

“பல அருங்காட்சியக கண்காணிப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் பல ஆண்டுகளாக அதன் எச்சங்களைத் தேடினர். ஆனால், அவர்களுக்கு அதில் வெற்றி கிட்டவில்லை. ஏனெனில், 1936ஆம் ஆண்டிலிருந்து தைலசின் தொடர்பான எந்தப் பொருட்களும் ஆவணங்களில் பதிவு செய்யப்படவே இல்லை. அதன் உடல் அப்புறப் படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டது” என்று 2000ஆம் ஆண்டில் உயிரினங்களின் அழிவு குறித்து ஒரு நூலை வெளியிட்ட ராபர்ட் பேடில் கூறினார்.

ஆனால், அவரும் அருங்காட்சியகத்தின் கண் காணிப்பாளர்களில் ஒருவரும் வெளியிடப்படாத டாக்சிடெர்மிஸ்டின் (இறந்த உயிரினங்களின் தோலை பதப்படுத்தி, அதில் மற்ற பொருட்களை நிரப்பி உயிரோடு இருப்பதைப் போல் செய் பவர்) அறிக்கையைக் கண்டறிந்தனர். இது அருங் காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்த பொருட்களை மதிப்பாய்வு செய்யத் தூண்டியது.

அருங்காட்சியகத்தின் கல்வித் துறையிலுள்ள அலமாரியில் காணாமல்  போன உயிரிழந்த பெண் டாஸ்மேனிய புலியின் மாதிரியை அவர் கள் கண்டுபிடித்தனர். அதை ஒரு பயணக் கண்காட்சிக்காக ஆஸ்திரேலியா முழுக்க எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், அதுதான் கடைசி டாஸ்மேனிய புலி என்பது ஊழியர்களுக்குத் தெரியவில்லை என்று கண்காணிப்பாளர் கேத்ரின் மெட்லாக் ஆஸ்தி ரேலிய ஒளிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“சேகரித்து வைக்கப்பட்டிருந்தவற்றில் இது சிறந்த தோல் என்பதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவை இன்னும் ஊர்ப்புறப் பகுதிகளில் வாழ்வதாக அவர்கள் நினைத்தார்கள்,” என்று அவர் கூறினார். 

தோலும் எலும்புகளும் இப்போது ஹோபார்ட் டில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளன. முன்னர் ஆஸ்திரேலியா முழுவதும் சுற்றித் திரிந்ததாக நம்பப்பட்ட டாஸ்மேனிய புலிகளின் எண்ணிக்கை மனிதர்கள் மற்றும் டிங்கோக்களின் (ஆஸ்திரேலியாவில் வாழக்கூடிய நாய் இனம்) தாக்கத்தால் அருகியது. இறுதியாக, டாஸ்மேனியா தீவில் மட்டுமே காணப்பட்டது. பிறகு அங்கும் வேட்டையாடப்பட்டதால் முற்றிலுமாக அழிந்து போனது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 6:39 கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: டாஸ்மேனிய புலி , தைலசைன் , Thylacine

வியாழன், 22 டிசம்பர், 2022

செயற்கைக் கருப்பை அறிவியலின் அடுத்த அடி


  December 22, 2022 • Viduthalai

இயந்திரங்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் மனித வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு முன்பே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது. எதிர்காலத்தில் இயந்திரங்கள் மூலம் என்ன என்ன நடக்கும் என்று கணிப்பது கடினம்.  அந்த வகையில் இப்போது செயற்கைக் கருப்பை மூலம் குழந்தைகளை பிறக்க வைக்க முடியும் என்று எக்டோ லைப்  என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. எக்டோலைப் நிறுவனம் பெர்லினை தலைமையகமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம். இந்த நிறுவனம் தான் உலகின் முதல் செயற்கைக் கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது.   வருங்காலத்தில் தாய் கர்ப்பமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை போன்ற வலிகளில் இருந்து பெண்கள் விடுதலை அடைவார்கள்

எக்டோலைஃப், 'உலகின் முதல் செயற்கைக் கருவூட்டல் வசதி' என்பது குழந்தைகளை பெற்றெடுக்க பெற்றோர் களுக்கு இது ஒரு வசதியாக வழிமுறையை வழங்குகிறது.  பெண்களின் கருப்பை போலவே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள கருப்பை  அமைப்புகள் மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்று எக்டோலைப் நிறுவனம் கூறுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு செயற்கைக் கருப்பைகளிலும் குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், வெப்பநிலை, சுவாசம் உள்ளிட்ட முக்கிய உயிர்காக்கும் அம்சங்களை கண்காணிக்கும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது தொடர்பான காணொலிக் காட்சிப் பதிவை எக்டோலைப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களின் ஐம்பது ஆண்டுகால 'முன்னோடியில்லாத அறிவியல் ஆராய்ச்சி'யின் அடிப்படையில் கூறிள்ளது,  ஒரு ஆய்வகத்தில் ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை வளர்க்க முடியும். மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இது பெரிதும் உதவும் என்றும், உடல் நல பாதிப்புகள் மற்றும் கருப்பை பாதிப்புகளால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் பெண்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் எனவும் கூறப்படுகிறது. இது முழுவதும் மாசற்ற மின்சார சக்தியில் இயங்கும் இதன் கீழ் 75 ஆய்வகங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஆய்வகத்தில் 400 செயற்கைக் கருப்பை இருக்கும்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 8:49 கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: செயற்கைக் கருப்பை

வியாழன், 22 செப்டம்பர், 2022

ஆதிமனிதன் வரலாறு: 31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்த குகை மனிதன்



    September 22, 2022 • Viduthalai

31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலை ஆராய்ச்சியாளர் கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இளைஞரின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்ட தற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச் சையின் தோற்றம் ஏற்கெனவே கருதி யிருந்ததைவிட 24 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தையது என்பதை நமக்கு தெரிவிப்பதாகவும் ஆராய்ச்சியாளர் கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிக்கலான அறுவை சிகிச் சைக்கு பின்னர் அந்த இளைஞர், பல ஆண்டுகள் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் உடலை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர் மெலண்ட்ரி வோல்க், மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் போர்னியோ வின் கிழக்கு கலிமந்தனில் உள்ள லியாங் டெபோ உள்ள குகையில் இந்த கல்லறை தோண்டப்பட்டுள்ளது. இந்த குகையில் உலகின் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.

ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூன்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான, ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல் கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் டிம் மலோனி பழங்கால எலும்புகளை ஆராய்ச்சி செய்வது உற்சாகத்தையும் அச்சத்தையும் ஒரே நேரத்தில் தருவ தாகக் கூறினார்.

பழங்கால இளைஞரின் உடல் பற்றி நேச்சர் இதழ் வெளியிட்டுள்ள விரி வான ஆய்வுக் கட்டுரையில், இந்த அறுவை சிகிச்சை - இளைஞர் குழந் தையாக இருந்தபோது நடந்ததாக தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக் குப் பின் ஆறு முதல் ஒன்பது ஆண் டுகள் வரை அந்த இளைஞர் உயிரு டன் இருந்திருக்கலாம் என்றும், பின் னர் பதின்ம அல்லது இருபது வயதில் அவர் இறந்து இருக்கலாம் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

"நாங்கள் மிகவும் கவனமாக இந்த படிமங்களை ஆராய்ச்சி செய்தோம். அப்போது இளைஞரின் இடது கால் எலும்புகள் காணாமல் பொய் இருப் பதை காண முடிந்தது. மீதமுள்ள எலும்புகளின் எச்சங்களை ஆராய்ச்சி செய்தோம். அவை அனைத்தும் மிக வும் அசாதாரணமானவை" என்று பிபிசி செய்தியாளரிடம் டாக்டர் டிம் மலோனி தெரிவித்தார். அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத் துவ முறைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ஆராய்ச்சி ஏற்படுத்திய உற்சாகத்தில் நாங்கள் உள்ளோம்.

சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் வோல்க்-கிடம், இந்த பகுதியிலுள்ள எலும்புகளின் எச்சங் களை ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டது.

இதுகுறித்துப் பேசிய அவர் "இது மகிழ்ச்சியும், சோகமும் நிறைந்தது. ஏனென்றால், இது ஒரு மனிதருக்கு நேர்ந்திருக்கிறது." என்றார்.

"31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந் தைய எலும்புகள் இவை. இளைஞர் குழந்தையாக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப் போது அந்த இளைஞர் எவ்வளவு வேதனையை அனுபவித்து இருப்பார் என்பதை உணர முடிகிறது"

இது மதச் சடங்கு அல்லது பலி கொடுப்பது ஆகியவையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறிய டாக்டர் மலோனி, இது ஒரு அறுவைச் சிகிச்சை என்று தொல்லியல் ஆய்வாளர் நம்புவ தாகத் தெரிவித்தார். "காயத்தில் இருந்து மீட்கப்பட்ட மனிதன் வாழ்நாள் முழுவதும் அக்கறையுடன் பராமரிக்கப் பட்டதை பார்க்க முடிகிறது" என்றார் அவர்.

டர்காம் பல்கலைக்கழக தொல் பொருள் ஆய்வாளர் பேராசிரியர் சார் லோட் ராபர்ட்சன் எலும்புகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், மருத்துவமும், அறுவை சிகிச் சையும் மிக தாமதமாக வந்தது என்ற கருத்துக்கு இந்தக் கண்டுபிடிப்பு சவால் விடுவதாகத் தெரிவித்தார்.

நமது முன்னோர்களை நாம் குறை வாக மதிப்பிட முடியாது என்று கூறிய சார்லோட் ராபர்ட்சன், உடல் உறுப்பு களை வெட்டி அறுவை சிகிச்சை செய்ய மனித உடற்கூறியல், அறுவை சிகிச்சை, போதிய தொழில்நுட்பம் மற்றும் விரிவான அறிவு, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை மிக வும் அவசியம் என்று தெரிவித்தார். "தற்போது உறுப்பு நீக்கும் அறுவைச் சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது. அறுவை சிகிச்சை செய்யும்போது மயக்க மருந்து தரப்படுகிறது, கிருமி நீக்கப்பட்ட சூழல் இருக்கிறது. ரத்தப் போக்கையும், வலியையும் கட்டுப் படுத்தும் வசதி இருக்கிறது. ஆனால் 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எந்த வசதியும் இல்லாமல் இந்த சிக்க லான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று பேராசிரியர் சார்லோட் ராபர்ட்சன் குறிப்பிட்டார்.

இந்த அறுவைச் சிகிச்சைக்கு எந்த வகையான கற்கருவிகள் பயன்படுத்தப் பட்டன என்பது பற்றி மலோனியும் அவரது சகாக்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 7:19 கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அறுவை சிகிச்சை , குகை மனிதன்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )

வளர்ச்சி

வளர்ச்சி
மனிதன்

அறிவியல்

உலகை ஆள்வது அறிவியலே!
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2023 ( 5 )
    • ▼  மார்ச் ( 3 )
      • சுமார் 3 கோடி ஆண்டுகள் கடந்து வந்த ஒரு மரபணுத் தொட...
      • மனித இன தோற்றமும் பரிணாமமும் பரவலும்
      • மரபணு ஆராய்ச்சிக்காக சவாண்டே பேபோவுக்குக் கிடைத்த ...
    • ►  ஜனவரி ( 2 )
  • ►  2022 ( 17 )
    • ►  டிசம்பர் ( 1 )
    • ►  செப்டம்பர் ( 1 )
    • ►  ஜூலை ( 7 )
    • ►  மே ( 4 )
    • ►  பிப்ரவரி ( 3 )
    • ►  ஜனவரி ( 1 )
  • ►  2021 ( 17 )
    • ►  நவம்பர் ( 1 )
    • ►  ஆகஸ்ட் ( 4 )
    • ►  ஜூலை ( 2 )
    • ►  ஜூன் ( 1 )
    • ►  ஏப்ரல் ( 3 )
    • ►  மார்ச் ( 5 )
    • ►  பிப்ரவரி ( 1 )
  • ►  2020 ( 13 )
    • ►  ஜூலை ( 1 )
    • ►  மே ( 1 )
    • ►  மார்ச் ( 5 )
    • ►  பிப்ரவரி ( 4 )
    • ►  ஜனவரி ( 2 )
  • ►  2019 ( 75 )
    • ►  டிசம்பர் ( 4 )
    • ►  நவம்பர் ( 2 )
    • ►  அக்டோபர் ( 6 )
    • ►  செப்டம்பர் ( 9 )
    • ►  ஆகஸ்ட் ( 18 )
    • ►  ஜூலை ( 2 )
    • ►  ஜூன் ( 5 )
    • ►  மே ( 8 )
    • ►  ஏப்ரல் ( 5 )
    • ►  மார்ச் ( 6 )
    • ►  பிப்ரவரி ( 5 )
    • ►  ஜனவரி ( 5 )
  • ►  2018 ( 24 )
    • ►  நவம்பர் ( 4 )
    • ►  அக்டோபர் ( 4 )
    • ►  செப்டம்பர் ( 2 )
    • ►  ஜூலை ( 4 )
    • ►  ஜூன் ( 2 )
    • ►  மே ( 2 )
    • ►  மார்ச் ( 3 )
    • ►  பிப்ரவரி ( 2 )
    • ►  ஜனவரி ( 1 )
  • ►  2017 ( 56 )
    • ►  டிசம்பர் ( 3 )
    • ►  அக்டோபர் ( 3 )
    • ►  செப்டம்பர் ( 1 )
    • ►  ஆகஸ்ட் ( 6 )
    • ►  ஜூலை ( 2 )
    • ►  ஜூன் ( 2 )
    • ►  மே ( 2 )
    • ►  ஏப்ரல் ( 4 )
    • ►  பிப்ரவரி ( 14 )
    • ►  ஜனவரி ( 19 )
  • ►  2016 ( 49 )
    • ►  டிசம்பர் ( 8 )
    • ►  நவம்பர் ( 5 )
    • ►  அக்டோபர் ( 12 )
    • ►  செப்டம்பர் ( 4 )
    • ►  ஜூன் ( 9 )
    • ►  மே ( 10 )
    • ►  மார்ச் ( 1 )
  • ►  2015 ( 42 )
    • ►  டிசம்பர் ( 12 )
    • ►  நவம்பர் ( 7 )
    • ►  அக்டோபர் ( 1 )
    • ►  செப்டம்பர் ( 6 )
    • ►  ஆகஸ்ட் ( 1 )
    • ►  ஜூலை ( 8 )
    • ►  ஜூன் ( 1 )
    • ►  மே ( 2 )
    • ►  ஜனவரி ( 4 )
  • ►  2014 ( 11 )
    • ►  டிசம்பர் ( 1 )
    • ►  நவம்பர் ( 9 )
    • ►  அக்டோபர் ( 1 )

மொத்தப் பக்கக்காட்சிகள்

Sparkline

பிரபலமான இடுகைகள்

  • கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!
    கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - மதிமன்னன் 1862ஆம் ஆண்டில் ரிச்சர்ட் காட்லிங் என்பவர் மெஷின் கன் எனப்படும் இயந்திரத் துப்பாக...
  • கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!
    கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - மதிமன்னன் சகலமானவற்றையும் படைத்தது கடவுள் எனும் நம்பிக்கை பலரிடத்தில் இருக்கிறது. உலகின் பலநா...
  • பால்வெளி மண்டலம்
    பிரபஞ்ச ரகசியத் தொடரில் அவ்வப்போது பால்வெளி மண்டலம் என்ற பெயரை பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் பால்வெளி மண்டலம் பற்றி தமிழில் அவ்வளவ...
  • 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததற்கான ஆதாரங்கள்
    குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டு களுக்கு முன்பு, பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்த தற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் ...
  • ஸ்டெம்செல் மூலம் குழந்தை பிறக்கச் செய்யலாம்!
    இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவ தாகக்  ...
  • 500 ஆண்டாக மெருகு குலையாமல் இருக்கும் பெண் மம்மி
    500 ஆண்டிற்கு முந் தைய பெண் மம்மி அர் ஜென்டினாவின் லூலை லிகோ என்ற எரிமலை பகுதியில் ஒரு குகையில் கண்டுபிடிக்கபட்டு உள் ளது. இந்த் பெண்...
  • பார்வையற்றவர்களுக்கு உதவும் பயோனிக் கண்!
    பார்வை என்பது நம் கண்களுக்கு இயற்கை கொடுத்திருக்கும் ஓர் அற்புத வரம். வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்குப் பார்வை முக்கியம். இருட்டில் இருந்த...
  • அறிவியல் துளிகள்
    இணையத்தில் அடையாளத் திருட்டும், அதன் மூலம் ஏற்படும் இழப்பும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் புதி...
  • கண்டுபிடிப்புக்கு உதவும் கருவிகள்
    மின்சக்தியை சேமித்து , பின்னர் பயன்படுத்த உதவும் கருவி எது ? அக்யுமுலேட்டர் கதிரியக்க பொருட்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்க உதவும் கருவி...
  • காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?
    வங்கக் கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ கத்தின் கரையோர மாவட்டங் களில் பரவலாக மழை இருக்க லாம் என்று டி...

லேபிள்கள்

  • "ஒளிரும்" பயிர்கள்
  • அட்டை
  • அண்டவியல்
  • அணுக்கள்
  • அய்ன்ஸ்டீன்
  • அழிவு
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிவியல் நாள்
  • அறுவை சிகிச்சை
  • ஆக்சிஜன்
  • ஆசிரியர்
  • ஆராய்ச்சி
  • ஆற்றல்
  • இதயம்
  • இந்தியா
  • இமயமலை
  • இரட்டை கருப்பை
  • இலை
  • இறங்கியவர்
  • இறைச்சி
  • உணவு
  • உயிர்
  • உயிர் தோற்றம்
  • உயிர்கள்
  • உயிரினம்
  • உறுப்பு
  • எறும்பு
  • ஒளி ஆற்றல்
  • ஒளிப்படம்
  • ஒளிப்படவியல்
  • கடல்
  • கரிம மூலக்கூறு
  • கரிமம்
  • கரு முட்டை
  • கருந்துளை
  • கருவி
  • கருவிகள்
  • கரோனா
  • கல்லீரல்
  • கனி
  • காந்த துருவம்
  • காந்தபுலம்
  • காற்று
  • கிரகணம்
  • குகை
  • குகை மனிதன்
  • குழந்தை
  • குளோனிங்
  • கெசு
  • கொசு
  • கொழுப்பு
  • கோழி
  • கோள்
  • கோள்கள்
  • சந்திராயன்
  • சமிக்ஞை
  • சயனைடு
  • சனி
  • சனிக்கோள்
  • சாதனை
  • செ.ர.பார்த்தசாரதி
  • செயற்கை
  • செயற்கைக் கருப்பை
  • செயற்கைகோள்
  • செல்பேசி
  • செவ்வாய்
  • செவ்வாய் கிரகம்
  • டார்வின் முன்னோடி
  • டாஸ்மேனிய புலி
  • டைட்டன்
  • டைட்டன் நிலா
  • டைனோசர்
  • டைனோசர் காலம்
  • தங்கம்
  • தயாரிப்பு
  • தாவரங்கள்
  • தாவரம்
  • திசு
  • திமிங்கலம்
  • தீவு
  • தைலசைன்
  • தோற்றம்
  • நாசா
  • நாற்றம் உணர் காட்சி
  • நிலவு
  • நிழலில்லா நாள்
  • நிறம்
  • நீர்
  • நீர் மூலக்கூறு
  • நுண்ணுயிர்
  • நெப்டியூன்
  • நோபல்
  • நோபல
  • படி மலர்ச்சி
  • படிம வளர்ச்சி
  • படிமா வளர்ச்சி
  • பரவல்
  • பரிணாமம்
  • பருவநிலை
  • பழம்
  • பழம்பொருள்
  • பழைய உயிரினம்
  • பள்ளி
  • பனிக்கரடி
  • பனியுகம்
  • பாக்டீரியா
  • பாறை
  • புகைப்படம்
  • புதிய கோள்
  • புதியபடம்
  • புதை படிமம்
  • புரோட்டீன்
  • புவி
  • பூச்சி
  • பூமி
  • பெண்
  • பெரிய
  • பெருவெளி
  • பேரடை
  • மகப்பேறு
  • மண்
  • மம்மூத்
  • மயில்
  • மரபணு ஆராய்ச்சி
  • மரபணு மாற்றம்
  • மரம்
  • மருத்துவ கருவி
  • மறைவு
  • மனித இனங்கள்
  • மனித இனம்
  • மின் அஞ்சல்
  • மின் கடத்தி
  • மீன்
  • முத்து
  • முதலை
  • மூளை
  • மோதல்
  • யானை
  • யுரேனஸ்
  • ரோபோ
  • வயிறு
  • வளி மண்டலம்
  • விண்கல்
  • விண்கலம்
  • விண்மீன்
  • விண்மீன் கூட்டம்
  • விண்வெளி
  • வீட்டு திரைப்படம்
  • வெள்ளி
  • வெள்ளை காண்டாமிருகம்
  • வேற்றுகிரகம்
  • வைரசு
  • Thylacine
Blogger இயக்குவது.