ஞாயிறு, 19 ஜூலை, 2015

கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!

கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - 8

- மதிமன்னன்
உடலின் பல பாகங்களுக்கும் குருதி ஓட்டம் சீராக நடைபெறும் பணியை இதயம் செய்கிறது. இதன் பணியில் சீர்குலைவு ஏற்பட்டாலோ, பாதிப்பு பெருமளவு உடலுக்கு ஏற்படுகிறது. இதய அடைப்பு ஏற்படுகிறது. உயிரை இழக்கவும் நேரிடுகிறது. அதனைச் சீர் செய்திட அறுவை மூலம் மருத்துவம் பார்க்க நேரிடுகிறது. இதயத்தைத் திறந்து சீர் செய்ய வேண்டிய நிலையில் குருதி ஓட்டம் தடையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழுதான இதயம் மூலம் அன்றி வேறொரு இதயம் மூலம் செய்திட வேண்டும்.
செயற்கை இதயம் தேவைப்படுகிறதே! செயற்கை இதயத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துத் தந்துவிட்டனர்! அமெரிக்காவில் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த பால் விஞ்ச்செல் மற்றும் டாக்டர் ஹென்றி ஹெல்மிச் ஆகிய இருவரும் இணைந்தனர். டாக்டர் ஹெல்மிச் இதய அறுவை சிகிச்சை செய்யும்போது பால்விஞ்செல் உடனிருந்து கவனித்தார். குருதி ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்கான கருவியை வடிவமைத்தார். 1956இல் இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.
1963இல் காப்புரிமை கிடைத்தது. இந்த உரிமையை அவர் உடா (UTAH)பல்கலைக்கழகத்திற்கு அளித்துவிட்டார். ராபர்ட் ஜார்விக் உட்பட 7 பேர் ஆய்வாளர்கள் இந்தக் கருவியை மேம்படுத்திப் புதிய செயற்கை இதயத்தை மேம்படுத்திப் புதிய செயற்கை இதயத்தை வடிவமைத்தனர். உடலில் பொருத்துமளவில் உருவாக்கினர். 1982ஆம் ஆண்டில் டிசம்பர் 2ஆம் நாளில் பார்னி கிளார்க் எனும் பல் மருத்துவர் ஒருவருக்கு டாக்டர் வில்லியம் டி வீனாஸ் செயற்கை இதயத்தைப் பொருத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தார். என்றாலும் 112 நாள்களுக்குப் பிறகு செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்துபோனார். முழுவதுமாக இதயம் பழுதுபட்டவர்கள் மாற்று இதயம் கிடைத்து பொருத்தப்படும் வரை, உயிருடன் இருப்பதற்கு இத்தகையச் செயற்கை இதயம் பெருமளவில் உதவுகிறது. குருதி ஓட்டம் தடைபடாமல் நடைபெற உதவுகிறது. குருதியை பம்ப் செய்யும் பணியை நிறுத்தாமல் செய்கிறது. மருத்துவ அறிவியல் உலகில் செயற்கை இதயம் மாபெரும் சாதனை அல்லவாம்!
செயற்கை ஈரல்தான் மிகப்பெரும் சாதனை என்கிறார்கள். ஏனென்றால், ஈரல் பலப்பல பணிகளைச் செய்கிறது. உண்ணும் உணவைச் சத்தாக மாற்றுகிறது. உணவில் உள்ள தீங்கான வேதிப் பொருள்களின் நச்சுத் தன்மையைப் போக்குகிறது. கலப்படம் இல்லாத பொருளே இல்லை, உணவே இல்லை என்பது இந்திய நிலைமை. பற்பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பொருள்களையெல்லாம் கொள்ளையே குறியாகக் கொண்ட வியாபாரிகள் இங்கே கொண்டுவரும்போது முந்தி விரித்து வாங்கிச் சந்தைப்படுத்துகிறவர்கள் இந்தியர்கள்.
அத்தகைய பொருள்களின் நச்சுத் தன்மையை நீக்கும் ஈரல் எத்தகைய மனிதநேயப் பணியைச் செய்யும் உறுப்பு! சத்துப் பொருளாக மாற்றிய உணவைத் தேக்கி இருப்பு வைக்கிறது ஈரல். வெட்டுக் காயங்களினால் இரத்தம் வெளியேறி உயிருக்கு ஊறு விளைவிப்பதைத் தடுத்து பித்தநீர்(Bile) சுரந்து புரதத்தில் சேர்க்கும் தடுப்பு நடவடிக்கையை ஈரல் செய்கிறது. இப்படிப் பலவற்றையும் செய்யும் ஈரலைக் குலைக்காமல் மனிதன் இருக்கிறானா? ஈரலைக் கெடுக்கும் ஆல்கஹாலை அருந்தாமல் இருக்கிறானா-? மது குடித்து ஈரலைப் பாழாக்குகிறார்களே! பாழாக்கப்பட்ட ஈரலைப் பழுது பார்க்க எத்தனையோ வழிகளில் முயன்றும் முடியவில்லை என்ற நிலையில் 2001இல் டாக்டர் கென்னத் மட்சுமுரா என்பவர் செயற்கை ஈரலை உருவாக்க முனைந்தார்.
ஈரலின் செல்களை எடுத்து, அதன் மூலம் செயற்கை ஈரலை உருவாக்கிட ஆராய்ச்சி செய்தார். வெற்றி கண்டார். புதிதாக ஈரல் கிடைத்து, ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரை, செயற்கை ஈரல் மூலம் வாழலாம் என்கிற வகையில் இது பெரிய அறிவியல் கொடை. பிரிட்டனின் மருத்துவ அறிவியலாளர்கள், செயற்கையாகவே ஈரல் செல்களை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர். தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் முழுவதும் செயற்கை செல்களால் ஆன செயற்கை ஈரலைக் கண்டுபிடித்து மனித குலத்தைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவர். அறிவியல் முடிவில்லாதது, தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும். ஒன்றை விஞ்சும் ஆய்வு ஒன்றினை ஆய்வாளர்கள் நடத்துவர். வெற்றி பெறுவர். அதுவரை ஆய்வுகள் நடக்கும். குழந்தையைப் பெற்றெடுப்பது எப்பேர்ப்பட்ட துன்பம் என்பதைப் பிரசவ வைராக்கியம் எனும் சொல்லே எடுத்துக்காட்டும். அந்த நோவு பொறுக்க முடியாமல் இருப்பதால்தான், தாய்மார்கள் இனி, குழந்தைக்காகக் கணவனுடன் கூடுவதே கூடாது என்று உறுதி எடுத்துக் கொள்வார்களாம், பின்னரும் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதுவேறு சங்கதி! முந்தைய காலங்களில் பிள்ளைப் பேற்றின்போது இறந்து போகும் தாய்மார்கள் அதிகம். நிறைப் பிள்ளைத் தாய்ச்சியைத் தலையில் சாவை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்றும், பெற்றுப் பிழைத்து வந்தாள் என்றும் கூறுவதுண்டு.
இத்தகையச் சாவுகளுக்குக் காரணம் பிள்ளைப் பேற்றின்போது குருதிப்போக்கு நிறைய இருந்ததுதான். இதனைத் தடுத்துத் தாயின் உயிரைக் காக்க வேண்டும் என்றால் குருதி இழப்பை ஈடுசெய்யும் வகையில் இரத்தம் அவளின் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். எப்படி உள் செலுத்துவது? பூனை, நாய் போன்றவற்றிடம் ஆய்வுகள் நடத்தினர். பின்னர் மனிதனிடம் வந்தனர். முதன்முதலில் ரத்தம் உள் செலுத்தப்பட்டது ஓர் ஆணுக்குத்தான். வயிற்றில் புற்றுநோய்ப் பாதிப்புக்கு உள்ளான ஆண் ஒருவருக்குத்தான் ரத்தம் செலுத்தப்பட்டது. 22.12.1818இல் செலுத்தப்பட்டது. மொத்தம் 14 அவுன்சு ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக சிரிஞ்சு (ஊசி மருந்து செலுத்தும் கருவி) மூலம் செலுத்தப்பட்டது. 56 மணி நேரம் கழித்து அவர் இறந்துவிட்டார். ரத்தம் அளிப்பவரிடமிருந்து தேவைப்படுபவருக்குச் செலுத்த ஒரு வகைக் கருவியை ஜேம்ஸ் பிளன்டல் எனும் மகப்பேறு மருத்துவர் வடிவமைத்திருந்தார். அதன் மூலம் 1818 முதல் 1829 வரை பத்துப் பேருக்கு ரத்தம் செலுத்தினார்.
அவற்றுள் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். ரத்தம் உள்ளே செலுத்தப்பட்டோர் கருப்பு நிறச் சிறுநீரை வெளியேற்றியதாக பிளன்டல் எழுதினார். இதற்கான காரணம் 1900இல்தான் தெளிவாகியது. சிலரின் ரத்தம் சிலர்க்கு ஒத்துவராத நிலையில் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் இறந்து போகின்றன என்பதுதான் காரணி என்பதைக் கண்டறிந்தார் கார்ல் லான்ட்ஸ்டீனர் எனும் வியன்னா மருத்துவர். அவர்தாம் ரத்தத்தில் மூன்று வகைகள் உள்ளன எனக் கண்டறிந்தார். அவற்றை A, B, C என்று வகைப்படுத்தினார். பின்னர் இவை A, B, O எனப் பெயரிடப்பட்டன. நான்காவதாக ஒரு ரத்தவகை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அது AB எனப்பட்டது. ஆரியச் சநாதன மதமான இந்து மதத்தின் கேடுகெட்ட மனிதப் பிரிவுகளான நால்வருணங்களை இந்த ரத்த வகைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார் காஞ்சிபுரம் மடத்தலைவர் சாமிநாத சங்கராச்சாரி. ரத்தம் உள்செலுத்தும்போது ரத்த வகைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என லான்ட்ஸ்டீனர் கூறியதை மருத்துவ உலகு பத்தாண்டுகளாகக் கண்டுகொள்ளவேயில்லை. தற்போது மிகவும் கவனமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இக்காலத்தில் இயங்கிவரும் இரத்த வங்கியைத் தொடங்கியவர் சார்லஸ் ட்ரூ என்பவர். 46 வயதிலேயே இறந்துபோன இவர் ரத்தத்தின் பிளாஸ்மாவிலிருந்து சிவப்பு அணுக்களைப் பிரித்தெடுப்பதைக் கண்டுபிடித்தார். அதனைப் பாதுகாத்து, உள் செலுத்துவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தார்.
1941இல் இவர் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்க ரத்த வங்கியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆயிரக்கணக்கான யூனிட் ரத்தத்திலிருந்து காயவைக்கப்பட்டுப் பவுடராக்கப்பட்ட பிளாஸ்மாவைச் சேமித்து வைத்தார்.
பின்னர் காய்ச்சி வடிகட்டிய நீருடன் கலந்து திரவ பிளாஸ்மாவாக ஆக்கப்பட்டுத் தேவைப்படுவோர்க்குச் செலுத்தப்பட்டது. உலக யுத்தத்தின்போது ரத்தம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட மக்கள், போர்வீரர்களல்லாதவருக்கும் ரத்தம் செலுத்தி உயிர்பிழைக்க வைக்க வேண்டும் என விரும்பினர். 1950 வரை கண்ணாடிப் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட ரத்தம் தற்போது பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த முறையைக் கண்டுபிடித்தவரான ட்ரூ (ஞிக்ஷீமீஷ்) கடுமையான கார் விபத்தில் சிக்கி, நிறைய ரத்தம் வீணாகிப் போனதால் ரத்தம் உள் செலுத்தப்பட்டு உயிர் பிழைத்தார். சேமித்து வைத்திட குருதிக்கொடை வழங்குபவர்கள் குறைவு. மேலும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்த் தொற்று இருப்போர் தரும் ரத்தத்தை மற்றொருவருக்குச் செலுத்துவதனால் ஏற்படும் அபாயம் ஒரு பக்கம். எனவே, செயற்கை ரத்தத்தைக் கண்டுபிடித்திடும் தேவை ஏற்பட்டது.
பல்கலைக்கழக மாணவரான தாமஸ் ஷான் என்பவர் 1956இல் செயற்கை ரத்தச் செல்களை உருவாக்கினார். அப்போது அவருக்கு 23 வயதுதான்.
இந்தச் செயற்கை ரத்தத்தைத் தம் உடலில் செலுத்திக்கொள்ளப் பலரும் முன்வரவில்லையாம். ரத்தத் தூய்மை எனும் மினுக்கித்தனம் மனித மனதில் ஆழ்ந்து பதிந்துள்ளதே! ரத்தத்தில் சேரும் கழிவுகளைப் பிரித்துச் சிறுநீர்க் குழாய் வழியே வெளியே அனுப்பும் பணியைச் சிறுநீரகம் செய்கிறது.
சிறுநீரகம் பழுதுபட்டுவிட்டால் கழிவுப் பொருள்கள் ரத்தத்திலேயே தேங்கி விடுகின்றன. அதனால் மனிதர் இறக்க நேரிடும். எனவே, சிறுநீரகத்தின் பணியைச் செய்திடும் கருவியைக் கண்டுபிடித்திடும் அவசியம், ஆராய்ச்சிகள் தொடங்கின. வில்லியம் கோல்ஃப் எனும் மருத்துவர் தொடங்கினார். இரண்டாம் உலகப் போர் நடந்ததால் அத்தியாவசியமான பொருள்கள் கிடைக்கவில்லை. எனினும் கிடைத்தவற்றைக் கொண்டு செயற்கைச் சிறுநீரகம் உருவாக்கினார். 1943இல் ஒரு நோயாளிக்குச் சிகிச்சையும் செய்தார்.
போர் முடிந்தபிறகு கோல்ஃப் அமெரிக்கா திரும்பினார். செயற்கைச் சிறுநீரகத்தை சிறப்பாக வடிவமைக்க உழைத்தார். 1956இல் உருவாக்கி விற்பனையும் செய்தார்.
1960 முதல் டையலாசிஸ் எனப்படும் செயற்கைச் சிறுநீரகம் பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தேவையே கண்டுபிடிப்புகளின் தாய். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது சாக்குருவி வேதாந்தம். உருப்படாத தத்துவம். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
- (தொடரும்)
-உண்மை,16.7.15

கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - 7


- மதிமன்னன்
பிறக்கும்போதே காது கேட்காமல், செவிடாகச் சிலர் பிறக்கிறார்கள். சிலர் பேச இயலாத ஊமையாகப் பிறக்கிறார்கள். காது கேளாதவர்களுக்குப் பேச்சு வராது. ஒலிகளையும் உச்சரிப்புகளையும் கேட்டு அவை மூளையில் பதிவானால்தான் அதே ஒலிகளையும் உச்சரிப்புகளையும் குழந்தையால் திருப்பிக் கூற முடியும். பேச முடியும். கேட்கும் திறனே இல்லையென்றால் பேசவும் இயலாது. செவிட்டு ஊமை என்ற பெயர் கிடைக்கும். (Deaf and Dumb) என்கிறார்கள். இக்குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவியை எந்நேரமும் வைத்துக்கொள்ளச் செய்வதன்மூலம் கேட்கும் ஆற்றல் வரும்! நாளடைவில் பேசும் ஆற்றலும் வரும். முழுவதும் செவித்திறன் இழந்தவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் காதுக்குள் அறுவை செய்து காது கேட்கச் செய்ய முடியும். செவிப்பறை அதிர்ந்து, அவை நரம்புகளின் மூலம் மூளைக்குச் செல்லும் இயற்கை முறைக்கு மாற்றாக, மின் அதிர்வுகளை ஏற்படுத்தி அவை நரம்புகள் மூலம் மூளைக்குச் செல்லும் வகையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. காக்ளியர் இம்ப்ளான்ட் (Cochlear Implant) எனப்படும் முறையை வில்லியம் ஹவுஸ் எனும் அமெரிக்கர் கண்டுபிடித்தார். 1961இல் மூன்று செவிடர்களுக்கு இத்தகைய கருவியைப் பொருத்தி சிறிதளவு முன்னேற்றம் கண்டார். 1969இல் தொடர்ந்த ஆய்வுகளின் மூலம் இதனைச் சரியான இடத்தில் பொருத்துவதில் வெற்றி கண்டார். காதுக்குள் அணிந்துகொள்ளும் கருவியைக் கண்டுபிடித்து வெற்றி கண்டார்.
ஆனாலும் செயற்கைமுறைத் தூண்டல் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்கிற கருத்து பரப்பப்பட்டது. மீண்டும் ஆய்வுகள் தொடர்ந்தன. 1984ஆம் ஆண்டில் இக்கருவிகளுக்கான அங்கீகாரம் அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறையால் அளிக்கப்பட்டு வாதப் பிரதிவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது இருக்கும் இம்ப்ளான்ட் கருவி மேம்படுத்தப்பட்டு 2005இல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
குருடர்கள் பார்ப்பதும், செவிடர்கள் கேட்பதும், ஊமையர் பேசுவதும், முடவர்கள் நடப்பதும் கடவுளால் அல்ல! மனிதர்களால், அறிவியலாளர்களால்!
இந்துமத வேதம் எனப்படும் ரிக் பாடல்களில் ஒரு கதை. விஷ்பிளா எனும் ராணி போரிடும்போது ஒரு காலை இழக்கிறாள். தேவலோக மருத்துவனான அஸ்வின் இரும்புக்கால் ஒன்றைப் பொருத்திவிட்டானாம். அரசி மீண்டும் சண்டை போட்டாளாம்.
கிரேக்கத் தொன்மங்களில் ஹெகசிஸ்ட் ராடஸ் எனும் பாரசீகப் போர்வீரன் ஸ்பார்டன் அரசால் கைது செய்யப்படுகிறான். தப்பித்துப் போகாமல் இருப்பதற்காக அவனது கால் வெட்டப்படுகிறது. இருந்தாலும் அவன் மரக்கால் ஒன்றைச் செய்து அணிந்து கொண்டு 30 மைல்கள் நடந்து டிரெக்யா எனும் நகருக்குப் போய்விடுகிறான். ஜாக்கின்தியசால் அங்கே சிறைபிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறான்.
பழங்கால வரலாற்று ஆசிரியரான பிளினி (Pliny) ஒரு சம்பவத்தை மார்கஸ் செர்ஜியஸ் எனும் ரோமப் பேரரசன் வரலாற்றை எழுதும்போது படைத்தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த அவன் 23 காயங்களைப் பெற்றதனால் அவனது வலது கையை வெட்டி எடுக்க வேண்டி நேரிட்டதையும் இரும்புக்கரம் ஒன்றைச் செய்து பொருத்திக் கொண்டு போருக்குத் திரும்பியதையும் அதன் பின்னர் நான்கு போர்களில் சமர் செய்ததையும் விவரித்திருக்கிறார்.
1858இல் இத்தாலி நாட்டில் உள்ள கபுவா (Capua) எனும் இடத்தில் ஒரு சமாதி கண்டுபிடிக்கப்பட்டது. சாம்னைட் போரின்போது ஈடுபட்டவர்களின் புதைகுழி.  அதில் மரம், செம்பு ஆகியவற்றால் செய்யப்பட் செயற்கைக்கால் அதில் கிடைத்தது.
தொழிற்சாலைகளில் பணியின்போது கை, கால்களை இழக்கும் தொழிலாளர்களின் பயன்பாட்டுக்காக மின்சக்தியால் இயங்கும் செயற்கைக் கைகள் 1949இல் வடிவமைக்கப்பட்டது. மூனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்துவந்த ரீன்ஹோல்ட் ரீய்டர் என்பார் கண்டுபிடித்தார். அதனை எளிமைப்படுத்தித் தயாரிக்கும் முயற்சியில் இருந்தபோது ஜெர்மனியின் பொருளாதார சீர்கேட்டால் நிதி கிடைக்காமல் ஆய்வு நிறுத்தப்பட்டது. 1958இல் கி.ணி.கோப்ரின்ஸ்கி என்பாரின் தலைமையிலான ரஷியக் குழு 1958இல் செயற்கைக் கரம் ஒன்றை உருவாக்கியது. 1968, 1974 ஆகிய ஆண்டுகளில் மாசசூசட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நார்பர்ட் வெய்னர், மெல்வின் கிளிம்சர், அமர்போஸ், ராபர்ட் மாண் ஆகியோர் மற்றும் சிலருடன் சேர்ந்து உருவாக்கிய செயற்கைக் கரம் சிறப்பாகச் செயல்பட்டது. பாஸ்டன் எல்போ என இதற்குப் பெயரிட்டார்கள். தசைச் சுருக்கத்தால் ஏற்படும் மின்சக்தியை உணர்ந்து செயல்படும் உணர்விகள் (Sensors) பொருத்தப்பட்டு இவை செயல்படுகின்றன.
படைத்தானே, படைத்தானே! மனிதனை ஆண்டவன் படைத்தானே! என்று சாக்குருவி வேதாந்தம்/சித்தாந்தம் பாடிக் கொண்டிருக்கும் திண்ணைத் தூங்கிகளைப் போல் இல்லாமல் மேலை நாட்டவர்கள் பலரும் அறிவியல் மனப்பான்மையுடன் ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர். மனித குலத்திற்கு நன்மை பயக்கும் புதிய, புதிய கண்டுபிடிப்புகளைச் செய்கின்றனர். கடவுளால் செய்யப்பட்ட கோளாறுகளைச் சரி செய்கின்றனர்.
அந்த வகையில் செயற்கைத் தோலை உருவாக்கியுள்ளனர். மனித உடலில் உள்ள தோல் அற்புதமான பொறியியல் சாதனை. மிகவும் வன்மையானது. விரிந்து கொடுக்கக் கூடியது. நெகிழக்கூடியது. கடும் வெப்பம், மழை, நோய்த்தொற்று போன்றவற்றில் இருந்து காப்பாற்றக்கூடியது. அதற்கு மாற்றுப் பொருள் ஒன்றைச் செய்திட இயலாது. அத்தகைய தனித்தன்மை வாய்ந்தது.
தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருத்துவதற்குத் தோல் அவசியமாகத் தேவைப்படுகிறது. உடலின் எல்லா இடங்களிலும் தோல் உள்ளது. என்றாலும் பாதி உடம்புக்குமேல் தீப்புண் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குத் தோலை பிற பகுதிகளிலிருந்து எடுத்துப் பொருத்த இயலாது. என்ன செய்வது? என்று ஆய்வு செய்தனர் ஜான்பர்க் எனும் அறுவை மருத்துவரும், பயன்னாஸ் எனும் வேதியியல் பேராசிரியரும்! விலங்குகளின் தசைகளை எலும்புடன் பிணைக்கும் தசை நாண்களில் மிகுந்திருக்கும் புரோட்டீன்களைப் பற்றிய ஆய்வில் இருந்தவர். இருவரும் இணைந்து மாட்டின் தோலில் உள்ள புரோட்டீனைப் பிரித்தெடுத்து பாலிமர் சவ்வு தயாரித்தனர். இதனை உலரவைத்து விஸ்கோஸ் பிளாஸ்டிக் உடன் இணைத்தனர். இவை இரண்டும் காகிதம் அளவு கனமாக இருந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதனைக் கொண்டு மூடினால், தோலைப் போலவே நோய்த்தொற்று ஏற்படாமல் காக்கின்றன. நீர்ச்சத்து இல்லாமல் வறண்டு போகாமல் பாதுகாக்கின்றன. புதிய தோல் உருவாகிச் செல்கள் வளர உதவுகின்றன. புதிய தோல் செல்கள் வளர்ந்து முழுமை அடைந்ததும் இது சிறிது சிறிதாக உடைந்து வெளியேறுகின்றன. கையினால் உரித்து எடுத்து விடவும் முடிகின்றன. புதிய தோல் முந்தைய இயற்கைத் தோலைப் போலவே இருக்கிறது. வியர்வைச் சுரப்பிகள், மயிர்க்கால்கள் அமைவதில்லை. 50 முதல் 90 விழுக்காடு வரை தீக்காயங்கள் பட்டவர்களுக்கான சிகிச்சையில் செயற்கைத் தோல் மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது.
தோலை உரித்துவிடுவேன் என்று எவராவது மிரட்டினாலும் இனிமேல் கவலையில்லை. செயற்கையாகப் புதிய தோலை வளர்த்துக் கொள்ளலாம்!
கொடுமை செய்பவனைப் பார்த்து உனக்கு இதயமே இல்லையா? என்று கேட்பார்கள். தமிழ்த் திரைப்படங்களில் இதனை பார்க்கலாம். ஈவு, இரக்கம், அன்பு, கோபம், கொடூரம், துரோகம், வஞ்சம் போன்ற பலவகைக் கெட்ட குணங்களும் மனிதர்களிடம் இருப்பதற்கு இதயம்தான் காரணி என்கிற (மூட) நம்பிக்கை! இதனாலேதான் மேலை நாடுகளில் இதயத்தின் பகுதியில் கை வைத்துக் கொண்டு உறுதிமொழி கூறுகிற மடத்தனம் உள்ளது. குணங்களுக்கும் இதயத்திற்கும் தொடர்பில்லை என்று சிக்மண்ட் ஃபிராய்டு எழுதி எண்பித்த பிறகும்கூட, பழக்கத்தை விடவில்லை என்றால் வேறு எப்படித்தான் அழைப்பது?
நம் ஊரில்கூட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இப்பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அதனைப் பார்த்தோ என்னவோ, வணக்கம் சொல்லும்போது கையை இதயத்தின் மேல் வைப்பதுபோலச் சைகை செய்கிற பழக்கம் பரவி வருகிறது. ஆன்மீக வேடம் போடும் போலிகளின் மத்தியில் பரவலாகப் பார்க்கலாம்.
-உண்மை,1.7.15

கண்டுபிடித்தது.... கடவுள் அல்ல! - 6

- மதிமன்னன்
வயது ஆக ஆக, புத்தகங்களைக் கைக்கு எட்டிய தூரத்தில் பிடித்துக் கொண்டால்தான் படிக்க முடியும் என்கிற குறைபாடு (Presbyopia) ஏற்படுகிறது. கிட்டத்தில் இருக்கும் பொருள்களை அப்படிப் பார்த்தால்தான் மிகத் தெளிவாகக் காணமுடியும். ஒவ்வொரு கண்ணுக்கும் ஒவ்வொரு கண்ணாடி என்கிற வகையில் கிட்டப்பார்வைக்கு ஒன்றும், தூரப் பார்வைக்கு ஒன்றும் பயன்படுத்திய நிலை. இதை மாற்றி ஒரே கண்கண்ணாடியில் கிட்டப் பார்வைக்குப் பாதிக் கண்ணாடியும் தூரப் பார்வைக்குப் பாதிக் கண்ணாடியுமாக   இரு கண்களுக்குமாக ஒரே கண் கண்ணாடியை வடிவமைத்தவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த அறிவியலாளரும் பகுத்தறிவாளருமான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அவர்களாவார். (படிக்க: உலகப் பகுத்தறிவாளர்கள் எனும் நூல்) Bifosals எனப்படும் கண்ணாடி இரண்டு துண்டுகளால் ஆனது. இந்தப் பெயரைச் சூட்டியவர் ஜான் அய்சக் ஹாகின்ஸ் என்பவர். இவரே மூன்று துண்டுகளால் ஆன Trifocals எனும் கண்ணாடியையும் வடிவமைத்தார். நடுத்தரமான தூரத்தில் உள்ளவற்றைப் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டதால் இது பிரபலம் அடையவில்லை.
1950க்குப் பிறகு Varifocals எனப்படும் ஆடிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கட்டுரையாளர்கூட அம்மாதிரி மூக்குக் கண்ணாடியைத்தான் அணிந்திருக்கிறார்.
கண்ணாடி அணிவதை விரும்பாதோர் உள்ளனர். பார்வைக் குறைபாடுகளை அறுவை மருத்துவம் மூலம் சரி செய்து கொண்டு பார்க்கின்றனர். 1950இல் ஸ்பெயின் நாட்டவரான ஜோஸ் பாராகுவர் என்பவர் விழித்திரையைச் சீர்செய்யும் மருத்துவ முறையைக் கண்டார். ரஷிய கண் மருத்துவர் ஸ்வையடோஸ்லாவ் ஃபயோடொராவ் என்பவர் பாதிக்கப்பட்ட கண் காயத்திற்கு மருத்துவம் பார்த்தபோது பார்வைக் குறைபாடு முற்றிலும் சீர் செய்யப்பட்டதைக் கண்டார். 1973இல் இம்மருத்துவ முறையை உலகுக்கு அறிவித்தார். இதற்கான காப்புரிமையையும் பெற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரங்கசாமி சீனுவாசன் எனும் இந்திய இயற்பியலாளர் அல்ட்ராவயலட் லேசர் மூலம் பாதிப்பே இல்லாதவகையில் குறைபாட்டைச் சீராக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். இவ்வாறான கண்டுபிடிப்புகளையெல்லாம் கொண்டு, 1990இல் இத்தாலி நாட்டு லூகியோ புராட்டோ, மற்றும் கிரேக்க நாட்டு லோயான்னிஸ் பல்லிகாரிஸ் என்பவரும் சேர்ந்து கண்டுபிடித்துள்ள மருத்துவ லாசிக் (Lasik) அறுவை முறை இப்போது கடைப்பிடிக்கப்படுகிறது. காலவிரயமின்றி  கண்பார்வை சீராக்கப்படுகிறது.
நம் ஊரில் சானேஸ்திரம் எனக் கூறப்படும் காட்டராக்ட் கோளாறு (Cataract)என்பதைக் கண்ணில் உள்ள லென்சின்மேல் புகைபடர்ந்த மாதிரியான ஒருவகைப் பொருள் உருவாகிப் பார்வையை மழுங்கச் செய்யும் கோளாறு. இதனைச் சீர்செய்திட, பழுதான லென்சை கரைத்திட (எமல்சிபிகேஷன்) முறையைப் பயன்படுத்தி உடைந்த நுண்ணிய துகள்களை அப்புறப்படுத்தினார்கள். தற்போது லேசர் மூலம் காட்டராக்டை அப்புறப்படுத்தலாம் எனக் கண்டுபிடித்தவர் பாட்ரிகா பாத் எனும் பெண் மருத்துவர். 1988இல் இதற்கான காப்புரிமையை அவர் பெற்றுள்ளார். அந்த முறையில் காட்டராக்டை அப்புறப்படுத்த முடியாது என்று தொடக்கத்தில் கூறப்பட்டது. அவர் மனந்தளராமல் முயன்று வெற்றி பெற்றுள்ளார்.
பிறப்பிலேயே பார்வைக்குறை, பார்வை தரும் உறுப்புகளே இல்லாத நிலை போன்ற பார்வை அற்றவர்களுக்குப் புதிய செயற்கை கண் பொருத்திடும் ஆய்வுகள் நடைபெற்று  வருகின்றன. இல்லாத கடவுளும் கபோதிக் கடவுளாக இருப்பதால், வைக்காமல் போன உறுப்பை வைத்திட மனிதன் முயன்று வருகிறான். விரைவில் வெற்றி பெறுவான். அதுவரை, இடைக்கால ஏற்பாடாக, Bionic கண் பொருத்திடும் பணி நடைபெறுகிறது. இத்தகைய பயோனிக் கண்கள் அர்கஸ் II  எனப்படுகின்றன. இவை 2007ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டன. கண் கண்ணாடிகளில் பொருத்தப்படும் நுண்ணிய கேமரா, உருவத்தையும் அசைவையும் அணிந்திருப்பவரின் மூளைக்குத் தெரியப்படுத்துகின்றன. 1950இல் பயன்படுத்தப்பட்ட பயோனிக் கண்கள், கிரியோலிட் எனப்படும் ஒருவகை அக்ரிலிக்கால் செய்யப்பட்ட வளைவான தாள் பழுதுபட்ட கண்ணுக்குமேல் ஒட்டப்படும். இடையில் பார்வையை இழந்தவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே இவ்வுறுப்பு இல்லாத குறை உள்ளவர்களும் பார்வை பெறும் காலம் விரைந்து வருகிறது. மனித மூளையின் ஆற்றலை அந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாக அறிவியலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பார்வையைப் பெறவே முடியாதவர்கள் எப்படிப் படிப்பது? வேலன்டின் ஹாய் என்பவர் பாரிஸ் நகரில் பள்ளி ஒன்றைத் தொடங்கி கல்வி கற்பித்தார். அரிச்சுவடி மரப்பலகையில் செய்யப்பட்டது. இதனைத் தடவிப் பார்த்து வடிவத்தைப் புரிந்து மாணவர்கள் படித்தனர். அப்படி அந்தப் பள்ளியில் படித்த சிறுவன் லூயி பிரெய்லி தனது 10 வயதில் பார்வையை இழந்தவன்.
1809ஆம் ஆண்டில் பிறந்த இச்சிறுவன் தனது 15ஆம் வயதில் பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கினார். தனது 12ஆம் வயதில் பள்ளிக்கு வந்த ராணுவ காப்டன் ஒருவர், கோகெள், புள்ளிகள் போன்ற குறியீடுகளால் உச்சரிக்க பாட்டுப்பாடப் பயிற்றுவித்ததைக் கொண்டு எழுத்து முறையை வடிவமைக்க உந்துதலைப் பெற்றார். உருவாக்கினார். புள்ளிகளைக் கொண்டு படிக்கவும் எழுதவும் இசையைக் கற்கவும் வழிமுறைகளைக் கூறும் அரிய நூலை எழுதி 1829இல் வெளியிட்டார். பலரும் படிப்பதற்கான வாய்ப்புக் கதவைத் திறந்துவைத்தார்.
கண்பார்வைக் குறைவாக இருந்தால் அதனைச் சரி செய்யக் கண்கண்ணாடிகள் அணிகிறார்கள். மூக்குத் தண்டின்மேல் அமர்ந்து இருப்பதால் அதனை மூக்குக் கண்ணாடி எனத் தமிழில் கூறுகிறோம். அதற்கும் மூக்குக்கும் தொடர்பில்லை.
கண்ணாடி வெளியே தெரியும்படி அணிவதால் யாரும் கூச்சப்படுவதில்லை. வெளியே தெரியாமல் கண்ணில் பொருத்திப் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யும் கான்டாக்ட் லென்சுகளை அணிவதில் பெரும்பான்மையோர் ஆர்வம் காட்டுவது இல்லை, தோற்றத்தில் அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் கண்ணாடியை விரும்புவது இல்லை, பெரும்பாலும் மேட்டுக்குடிப் பெண்கள் நடிகைகள்.
ஆனால் கேட்கும் திறன் குறைவாக இருப்பவர்கள் அப்படி அல்ல. காது கேட்கும் கருவியை மறைத்துப் பொருத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். ஆனால் காது கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டபோது அது மறைத்துவைக்க முடியாததாக இருந்தது. விலங்குகளின் காது மடல்கள் போலத் தோற்றம் அளித்த இக்கருவிகள் 1598இல் கண்டுபிடிக்கப்பட்டபோது மரத்தினால் செய்யப்பட்டன. விலங்குகளுக்குக் காது மிகவும் துல்லியமாகக் கேட்கும் என்பதால்அவற்றின் காதைப்போல் வடிவமைத்தார்களாம்! 1700இல் வடிவமைக்கப்பட்டவை ஒலி அலைகளை உள்வாங்கி, செவிக் குழாயின் உள்ளே செலுத்துகிற வகையில் பல்வேறு உருவங்களில் செய்யப்பட்டனவாம்.
போர்த்துகீசிய மன்னர் கோவா என்பவர் காது கேளாதவர். அவருக்காக 1819இல் வடிவமைக்கப்பட்ட காதுக்கருவி அவரது தலையில் மறைவாகப் பொருத்தப்படும் வகையில் இருந்தது. 1890இல் மின்சக்தியைச் சேகரித்து வைக்கும் பாட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைக் கொண்டு காதுக் கருவிகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளை அறிவியலாளர்கள் செய்தனர். 1898இல் அகுலேலியன் (Akoulalion) கருவியை டாக்டர் மில்லர் ரீஸ் ஹட்சிசன் என்பார் கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமையைப் பெற்றார். இதனை மேசைமேல் வைத்துதான் பயன்படுத்த முடியும். மிகவும் விலை கூடுதலானது. இருந்தாலும் 1902இல் இம்மாதிரி கருவியை எடுத்துக்கொண்டு லண்டன் போனார். கன்சார்ட் அலெக்ஸாண்ட்ரா எனும் இங்கிலாந்து அரசிக்குச் செவித்திறன் குறைந்துகொண்டு வந்ததால் அவருக்கு ஒரு கருவியைப் பரிசளித்தார். பின்னர் 1903இல் கையடக்கமான அகுலேலியனை அவரே உருவாக்கினார்.
அதன் பெயர் அகுஸ்டிகான் (Acousticon) என்று வைத்தார். அரசிக்கும் பிரச்சினை தீர்ந்தது. மக்களுக்கும் காது கேட்கும் கருவி கிடைத்தது டாக்டர் ஹட்சிசனால்!
(தொடரும்)
-உண்மை,16.6.15
கண்டுபிடித்தது....  கடவுள் அல்ல! - 5
பல்லுக்குத் தோல்நோயில் பங்குண்டு
- மதிமன்னன்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி! ஆலங்குச்சி விழுதிலிருந்து எடுத்தும் வேலங்குச்சி கருவேலமரத்தில் வெட்டி எடுத்தும் பல் துலக்கிக் கொண்டிருந்த மக்கள் இவை இல்லாத இடத்தில் பூவரசு, வேம்பு, ஆவாரம், சவுக்கை போன்ற பல குச்சிகளைப் பயன்படுத்திப் பல் அழுக்கைப் போக்கினர்.
இன்னும் சில இடங்களில் மணல், செங்கல் பொடி, உப்பும் கரியும் என்றெல்லாம் போட்டுப் பல்லைத் துலக்கியதோடு பல்லையும் தேயச் செய்தனர். கி.மு.5000 ஆண்டுகளிலேயே எகிப்தியர்கள் பல் துலக்க ஒருவகைப் பொடி தயாரித்துப் பயன்படுத்தினர்.  மாட்டுக் குளம்பைச் சுட்டு அதன் பொடி, முட்டை ஓடுகள், கிளிஞ்சல் போன்ற பல பொருள்களைப் பொடி செய்து கைவிரலினால் பற்களின்மேல் தேய்த்துத் துலக்கினர்.
கடந்த 18ஆம் நூற்றாண்டில்தான், அய்ரோப்பிய நாடுகளில் பல்பொடியைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்தப் பொடி பல்லைத் துலக்கியதோடு, பல்லின் பாதுகாப்புக்காக இருக்கும் எனாமலையும் தேய்த்து அழித்துவிட்டது. 1850இல் (கரும்பலகையில் எழுத உதவும்) சாக் கலந்து பல்பொடி தயாரிக்கப்பட்டது. 1873இல் கோல்கேட் நிறுவனம் ஜாடிகளில் பற்பசை  தயாரித்து விற்றது.
1498ஆம் ஆண்டில் சீனர்களால் பயன்படுத்தப்பட்ட பல்துலக்கும் பிரஷ் பற்றிய குறிப்பு சீனமொழிக் கலைக் களஞ்சியத்தில் காணக் கிடைக்கிறது. விலங்கு எலும்பில் கோக்கப்பட்ட சைபீரிய காட்டு எருதின் மயிர்கள் (இன்றைய) பிரஷ் போலப் பொருத்தப்பட்டுச் செய்யப்பட்ட பிரஷ் அது. அய்ரோப்பியர்களின் ஈறு மென்மைக்கு ஏற்றாற்போல் குதிரையின் மயிர்கள் பொருத்தப்பட்ட பிரஷ் தயாரிக்கப்பட்டு சீனர்களால் அய்ரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டன.
இவற்றிற்கு முன்னதாகவே 5000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு மாதிரியான பிரஷ் எகிப்தில் பயன்பாட்டில் இருந்ததாக அகழ்வுகள் எண்பிக்கின்றன. தற்கால பிரஷ் 1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் எனும் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. 1840இல் மேம்படுத்தப்பட்ட பிரஷ் வந்தது. 1938இல் நைலான் பிரஷ் உருவாக்கியவர் டுபான்ட் தெ நெமோர் என்பவர். மின்சார பிரஷ் கூட 1939இல் உருவாக்கப்பட்டுவிட்டது.
இவ்வளவு பாதுகாப்பாகத் துலக்கியும் பற்கள் கெட்டுப்போவது, விழுவது, சொத்தை உண்டாவது போன்றவை ஏற்பட்டன. இவை விழுந்துவிட்ட இடங்களில் பொய்ப் பற்கள் பொருத்தப்படுவது அவசியமாகிவிட்டது. பற்கள் கட்டுவது 1791இல் தொடங்கிவிட்டது. நிகோலஸ் துபா தெ ஷெமான் என்பவர் 1791இல் பல்செட்டுக்கான காப்புரிமை பெற்றுள்ளார். மனிதப் பற்கள், விலங்குப் பற்கள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்செட் கி.மு.700ஆம் ஆண்டிலேயே இருந்துள்ளது. தந்தத்தாலும் பல்செட் தயாரிக்கப்பட்டு, இருக்கும் பற்களோடு கம்பிகளால் பிணைக்கப்பட்டுப் பயன்படுத்தியுள்ளனர். பீங்கானில் தயாரிக்கப்படும் பல்செட் கண்டுபிடித்தவர் நிகோலஸ் துபா தெ ஷெமான் அவர்களே! இவர் இதற்கான காப்புரிமையை 1791இல் இங்கிலாந்து நாட்டில் பெற்றிருக்கிறார்.
பல் துலக்குவது பற்களின் மேல்பகுதி, அடிப்பகுதி ஆகியவற்றைச் சுத்தப்படுத்தும். பற்களின் இடுக்கில் மாட்டிக்கொள்ளும் உணவுத் துணுக்குகளை அப்புறப்படுத்துவது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அமெரிக்கப் பல் மருத்துவர் லெவி ஸ்பியர் பார்ம்லி என்பவர் கண்டுபிடித்ததுதான் பல்லிடுக்கில் மெல்லிய நூலைக்கொண்டு சுத்தப்படுத்தும் முறை.
பல்நோய் பலவித தோல் நோய்களுக்கும்  காரணி. அருவருப்பான தோல் நோயால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் பிரபல தோல் நோய் மருத்துவர் காலஞ்சென்ற தம்பையா அவர்களைப் பார்த்தார். சோதித்த பின் மருத்துவர் தம்பையா, அவரைப் பல் மருத்துவரைப் பார்க்கச் சொன்னார். அந்தப் பல் மருத்துவர் வாயில் மேல் வரிசையில் இரண்டு பற்களைப் பிடுங்கி எடுத்துவிட்டார். சில நாள்களில் தோல் பழையபடியே மாறி, தோல் நோயின் சின்னமே இல்லாமல் சீராகிவிட்டது. பற்களின் பாதுகாப்பு எவ்வளவு அவசியம் என்பதை இதன்மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
தமிழ் சினிமா உலகில் பெரும் புரட்சியையும் அதன் போக்கில் தலைகீழ் மாற்றத்தையும் உண்டாக்கிய சினிமா வேலைக்காரி. சி.என்.அண்ணாதுரை, எம்.ஏ., என்றிருந்த காலத்தில் அறிஞர் அண்ணாவால் கதை, வசனம் எழுதப்பட்ட படம். அதன் ஒரு காட்சியில் கடவுள் பொம்மைக்கு முன்பு நின்றிருக்கும் ஒருவர் கையைக் கூப்பி வணங்குவதற்குப் பதிலாகக் காலைத் தூக்கி படையல் பட்சணங்களை எட்டி உதைத்த காட்சி இடம் பெற்று அதிர்ச்சியை, ஆவேசத்தை, கண்டனத்தை ஏற்படுத்தியது. அந்தக் காட்சி பலரின் மனதில் மகிழ்ச்சியை, அறிவை ஏற்படுத்திய விளைவும் ஏற்பட்டது உண்டு. அதே காட்சிக்கு முன்னதாக படத்தின் நாயகன் காளியைக் கும்பிட்டுக் காசு பணம் செலவழித்தும் பலன் ஏதும் ஏற்படாதது கண்டு கோபம் கொப்புளிக்கப் பாடுவான், கண்ணில்லையோ? உன் காதென்ன செவிடோ? என்று கடவுளிடம் கண்டனக் குரல் கொடுப்பான். கதாநாயகன் அந்தப் பாடலைத் தன் சொந்தக் குரலிலேயே பாடி, முடிவில் பட்சணங்கள் இருந்த பாத்திரங்களை எட்டி உதைத்து அந்தக் கடவுளால் எந்தப் பயனும் ஏற்படாது என்பதை எண்பித்துக் காட்டுவார். அந்தப் புரட்சி நடிகர்தான் நடிப்பிசைப் புலவர் என்று அழைக்கப்பட்ட கே.ஆர்.இராமசாமி அவர்கள். நாத்திகம் எது? ஆத்திகம் எது? என்பதை விளக்கிடும் வகையில் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மறுவாழ்வுக்காக அண்ணா எழுதிய சொர்க்க வாசல் படத்தில் நடிக்க பாகவதர் மறுத்தபோது, அப்படத்தில் நடித்து அண்ணாவின் ஆசையை நிறைவேற்றிய நடிகர்!
கஷ்டப்படும் பக்தனைக் கைதூக்கி விடாத கடவுளை, கண்ணில்லாத கடவுள் என்று திட்டுவது மக்களின் பழக்கம். பார்வை இல்லாதவர்களைக் குருடன், கபோதி என்று வசைபாடுவதும் வழக்கம். அப்படித் திட்டித் தீர்க்குமாறான நிலையில் பார்வை இழந்தவர்களும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் துன்பத்திற்கு ஆளானதும் உண்டு. பார்வை இன்மையையும், குறை-பாட்டையும் கொண்ட மனிதர்களைப் படைத்த கடவுள் எப்படி தயாபரன்? கருணை உள்ளம் கொண்டவன்? அன்பே குணமாகக் கொண்டவன்? அது நிற்க.
பார்வையைத் தருவதற்கும் குறையைச் சரி செய்யவும் எல்லாம் வல்ல கடவுள் கையாலாகாத நிலையில் இருப்பதை நினைத்து வருந்திய மனிதர்கள் முயன்று வெற்றி பெற்றதைப் பார்ப்போமா? கண் பார்வைக் குறை எந்த அளவில் உள்ளது என்பதை அளவிடுவதற்கான CHART ஒன்றினை (விளக்க அட்டை) வடிவமைத்தவர் ஹெர்மன் ஸ்நெல்லன் எனும் டச்சு நாட்டுக் கண் மருத்துவர். 1862இல் இவரால் வடிவமைக்கப்-பட்ட அட்டைதான் இன்றளவும் பயன்-பாட்டில் உள்ளது. இங்கிலீஷ் எழுத்துகளான C,D,E,F,L,N,O,P,T மற்றும் Z என்கிற பத்து எழுத்துகள் மட்டுமே இந்த அட்டையில் அச்சிடப்பட்டு இருக்கும். முதல் வரிசையில் இருக்கும் எழுத்துகளை (8.75 மி.மீ.) 20 அடி தூரத்தில் அமர்ந்து படித்தால் குறைபாடற்ற நார்மல் (20/20) பார்வை என்கிறார்கள். அதற்கடுத்த வரிசையில் உள்ள இருமடங்குப் பெரிதான எழுத்துகளை (17.5 மி.மீ.) படித்தால் பார்வை அளவு 20/40. இத்தகைய பார்வை அளவு  20/200 என்று இருக்குமேயானால் சட்டப்படி, குருடு என்பதாகக் கொள்கிறார்கள்.
வரலாற்றுப் பதிவின்படி கி.பி.1284ஆம் ஆண்டில் இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த சால்வினோ டிஅர்மேட் என்பாரும் அலஸ்சான்டரோ டஸ்பினா என்பவரும்தான் மூக்குக் கண்ணாடி என்று அழைக்கப்படும் கண்ணாடிகளைக் கண்டுபிடித்தனர். ஆனால், உலகப் பயணி மார்கோபோலோ 1270ஆம் ஆண்டில் சீனர் ஒருவர் கண்ணாடி அணிந்து படித்ததைக் கண்டதாகப் பதிவு செய்துள்ளார். அரேபியர்கள் அதனைக் கண்டுபிடித்ததாக அந்தச் சீனர் சொன்னாராம். தூரப் பார்வைக் குறைபாடுக்கும் கிட்டப் பார்வைக் குறை-பாடுக்கும் தனித்தனி லென்சுகள் பொருத்தப்-பட்டன. கி.பி.1730ஆம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த கண்ணாடி வணிகர் எட்வர்ட் ஸ்கார்லட் என்பவர் தற்போதுள்ள கண்ணாடியை வடிவமைத்தார்.
(தொடரும்)
-உண்மை,1.6.15
கண்டுபிடித்தது...கடவுள் அல்ல! 4
அறிவு தந்ததல்லவா ஆடியும் கண்ணாடியும்?
-மதிமன்னன்
விழிகள் பார்வைக்கும் படிப்பதற்கும் உதவுவன. பார்வைக் கோளாறுகள் சிலருக்குச் சிறுவயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. மனிதனைப் படைத்தது என்று கூறப்படும் கடவுளின் தயாரிப்புக் கோளாறு இது. சிலருக்குச் சாதாரணமாக 40_50 வயதுக்குமேல் பார்வைத்திறன் குறைகிறது.
இதனைச் சரி செய்திட கண்ணாடிகள் அணிகிறோம். இவற்றை மூக்குக் கண்ணாடி என்கிறோம். மூக்கின் மேல் பொருத்தி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் மூக்குக் கண்ணாடி எனப்படுகிறது.
முன்பு ஒரு கண்ணில் மட்டும் பொருத்திப் படிக்கும் பழக்கம் இருந்தது. இதனை ஒற்றைக் கண்ணாடி (Monocle) என்றனர்.

இந்த ஆடிகள் ஸ்நெல்ஸ் விதி (Snell’s Law)யில் அமைக்கப்பட்டவை. இப்ன் சாஹி எனும் ஈராக் நாட்டுக் கணித அறிஞர் இதற்கான கோட்பாட்டை 984ஆம் ஆண்டில் உருவாக்கினார். கண்ணாடி நூல் (Book of Optics) என்பதை எழுதிய மற்றொரு ஈராக்கிய அறிஞர் இப்ல் அல்ஹாதம் என்பவரின் கோட்பாட்டின்படி தற்கால கண் ஆடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒளி நேராகச் செல்கிறது என்றும், கண்ணில் உள்ள ரெடினா பகுதியில் ஆடி (லென்ஸ்) உருவங்களைப் பதிவு செய்யும் வகையையும் அவர் எண்பித்துக் காட்டினார்.
13ஆம் நூற்றாண்டில்தான் தூரப் பார்வைக்குக் குவி ஆடிகளும் கிட்டப் பார்வைக்குக்  குழி ஆடிகளும் பயன்-படுத்தப்பட்டு மூக்குக் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆடிகள் (Glass) கி.மு.2500க்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்ததாகத் தெரிகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில், குறிப்பாக எகிப்தில் இது பயன்பாட்டில் இருந்துள்ளது அகழ்வு ஆராய்ச்சியில் தெரிய வருகிறது. இந்தக் காலக்கட்டத்தில் ஆடி மணிகள் அணியப்பட்டிருந்தன.
சிலிகா மணல், கால்ஷியம் ஆக்சைடு, மக்னீசியம் சோடா ஆகிய நான்கின் கலவை 1500 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் உருக்கப்பட்டு செய்யப்படுகிறது. இது ஆடம்பரப் பொருளாகக் கருதப்பட்ட காலம் இருந்தது.
ஆனால் 15ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு சாதாரண மக்களும் வாங்கும் வகையில் மலினமாகிவிட்டது. 1950இல் சர் அலஸ்டய்ர் பிகிங்டன் என்பார் கண்டுபிடித்த புதிய தயாரிப்பு முறையில் உற்பத்தி எளிதாக்கப்பட்டது.
நுண்ணிய பொருள்களையும் உருப்பெருக்கிக் காட்டக்கூடிய மைக்ராஸ்கோப் கருவி, லென்ஸ் எனப்படும் ஆடிகளை ஒன்றுக்குமேல் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. முதலில் தயாரிக்கப்பட்ட மைக்ராஸ்கோப் ஒரு ஆடியை மட்டும் பயன்படுத்தி ஒரு பொருளை ஆறு அல்லது பத்து மடங்கு வரைப் பெரிதாக்கிக் காட்டும் அளவில்தான் தயாரிக்கப்பட்டன.
இதில் உற்றுநோக்கும் கருவி ஒன்றினை வடிவமைத்தவர் இத்தாலியரான கலிலியோ கலிலி. இவர்தான் சூரியன் நிலையாக இருக்கிறது, பூமிதான் அதனைச் சுற்றிவருகிறது என்பதைக் கண்டு, அறிவித்து, கிறித்துவ மதப் பீடத்தால் தண்டிக்கப்பட்டு, பின் கண்டிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் என்பதை நாம் அறிவோம்.
சிறிய துளை உள்ள மயிரிழை போன்ற இரத்தக் குழாய்களில் குருதி ஓட்டத்தை இந்தக் கருவியின் மூலம் கண்டு அறிந்தவர் இத்தாலி நாட்டவரான மார்செலோ மால்பிக் என்பவர். நெய்யப்பட்ட துணியில் எத்தனை நூல் இழைகள் உள்ளன என்பதைக் கணக்கிட்டுச் சொன்னவர் அந்தோனி வான் லீவன்ஹோக் எனும் டச்சு நாட்டவர்.
ஒரு கண்ணாடியை மட்டுமே பயன்படுத்தி இவர் வடிவமைத்த மைக்ராஸ்கோப் ஒரு பொருளை 270 மடங்கு பெரிதாக்கிக் காட்டியது. அவர் 17ஆம் நூற்றாண்டில் தயாரித்த 500 கருவிகளில் இன்றளவும் 10க்கும் மேற்பட்டவை பயன்பாட்டில் உள்ளன. தற்போதைய உருப்பெருக்கி ஆடிகள் பலவகைச் சிறப்புகளுடன் இருந்தாலும் 1590இல் கண்டுபிடிக்கப்பட்ட உருப்பெருக்கி ஆடிதான் முன்னோடி.
மூக்குக் கண்ணாடிக் கடைக்காரரின் இரண்டு மகன்கள் விளையாட்டாக இரு லென்சுகளைச் சேர்த்து வைத்துப் பார்த்தபோது, உள்ளூர் தேவாலயத்தின் உச்சி மிக அருகில் தென்பட்டதாம். அதைக் கொண்டு தொலைநோக்கு ஆடி(டெலஸ்கோப்) உருவாக்கப்பட்டது என்பார்கள். மூக்குக் கண்ணாடிக் கடைக்காரர் ஆன லிப்பர்ஷெ தான் டெலஸ்கோப் கண்டுபிடித்தவர் எனலாம்.
ஆனாலும் இன்னும் சிலபேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். என்றாலும் லிப்பர்ஷெ கண்டுபிடித்த கருவியின் அடிப்படையில் அய்ரோப்பிய நாடுகளில் எல்லாம் டெலஸ்கோப்கள் உருவாக்கப்பட்டன. அவை டச்சு டிரங்க் என்றழைக்கப்பட்டன. ஹாலந்து, நெதர்லாண்ட்ஸ் என்றெல்லாம் கூறப்படும் டச்சு நாடு கடல் மட்டத்திற்குக் கீழே உள்ள நாடு என்பது நமக்குத் தெரியும்.
ஆனால், டச்சு தைரியம் (DUTCH COURAGE) என்பது பற்றிச் சிலருக்குத் தெரிந்திருக்கும். பியர் (BEER) குடித்த டச்சுக்காரர்கள், குடிவெறியில், தங்களுக்கு அசுர பலம் வந்துவிட்டதாகக் கருதிக்கொண்டு அடுத்தவர்களிடம் சண்டைக்குப் போவார்களாம்.
குடிகாரனை சும்மா தட்டுத் தட்டினாலே விழுந்துவிடுவான். எனவே, சும்மனாங்காட்டியும் உதார் விட்டுப் பேசுவதை டச்சு தைரியம் என்பார்கள்.
1609 மே மாதத்தில் வெனிஸ் நகரத்தில் இருந்த கலிலியோ அதுமாதிரி தொலைநோக்கு ஆடி ஒன்றைத் தயாரித்தார். அதன்வழியே சூரியனைப் பார்த்தார். அதில் கரும்புள்ளிகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். ஜூபிடர் கோளுக்கு 4 துணைக்கோள்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
சந்திரனில் மலைகள் இருப்பதையும் வீனஸ்கோளில் மடிப்புகள் இருப்பதையும் கண்டறிந்தார். இவைபற்றி 1610ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் வந்த (சைட்ரியல் மெசஞ்சர்) SIDERIUS NUNCIUS எனும் ஏட்டில் எழுதினார். இங்கே இந்து மதத்தில் சூரியன் ஒற்றைச் சக்கரத் தேரில் ஏழு குதிரைகள் இழுக்கும் தேரில் பவனி வருகிறது என்கிறார்கள்.
சந்திரனுக்கு 27 மனைவி என்கிறார்கள். குருவின் மனைவியை முறைதவறிப் புணர்ந்ததாகவும் அதனால் தரப்பட்ட சாபத்தால் 15 நாள்கள் தேய்வதாகவும் பின் 15 நாள்கள் வளர்வதாகவும் கதை. நம்பிக்கை, வழிபாடு, எல்லா இழவும்!
இரண்டு குவி ஆடிகளையும் கொண்டு ஜெகன்னஸ் கெப்ளர் வடிவமைத்த தொலைநோக்காடி, அய்சக் நியுட்டன் வடிவமைத்த பிரதிபலிக்கும் டெலஸ்கோப்  என மேம்பாடுகளை அடைந்துகொண்டே உள்ளது.
அதைப்போலவேதான் மூக்குக் கண்ணாடிகளும். சாதாரண ஆடிகளைக் கண்டுபிடித்தவர்கள், உருவைப் பெருக்கிக் காட்டும் ஆடிகளை (லென்ஸ்) உண்டாக்கினார்கள். வெனிஸ் நகரில் இத்தொழில் வளர்ந்தது. கண்பார்வை குறைந்தவர்கள் இரண்டு கண்களுக்கும் இரு ஆடிகளை மரச்சட்டத்தில் வைத்துக்கொண்டு படித்தனர்.
செல்வினோ டிஅர்மேட் (1218_1312) மற்றும் அலசான்ட்ரோ டாஸ்பினா (1313இல் பிறப்பு) என்பவர்கள் இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தவர்கள் என்கிறார்கள். ஆனால் மார்கோபோலோவின் பயணக் குறிப்பு (1270ஆம் ஆண்டு)களில் வயதான சீனர்கள் இம்மாதிரி கண்ணாடி அணிந்திருந்ததைக் கண்டதையும் அவர்கள் 11ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் கண்டுபிடித்தது எனக் கூறியதையும் பதிவு செய்துள்ளார்.
இன்றைய மூக்குக் கண்ணாடியை 1730இல் லண்டனைச் சேர்ந்த எட்வர்டு ஸ்கார்லெட் வடிவமைத்தார் என்பது மட்டும் போதும்.
தூரப் பார்வையும் கிட்டப் பார்வையும் கோளாறாகிப் போனவர்களின் பயன்பாட்டுக்காக இரண்டு லென்சுகளும் மேலே பாதி, கீழே பாதி என்றமைக்கப்பட்ட பைஃபோகல் லென்சுகள் வந்துள்ளன. பலநூறு கண்டுபிடிப்புகளைச் செய்த பெஞ்சமின் ஃபிராங்க்ளின் இதையும் கண்டுபிடித்தார்.
அவர் அமெரிக்க அதிபராக இருந்தது அனைவரும் அறிந்ததே!
இரண்டு லென்சுகளும் இரு துண்டுகளாக இல்லாமல் ஒன்றிலேயே இணைந்து செய்யப்படும் வெரிஃபோகல் (VARIFOCAL) லென்சுகள் 1950 முதல் செய்யப்படுகின்றன. கடவுள் படைத்த கண் கோளாறைச் சீர்செய்ய மனிதன் எத்தனை கண்டுபிடித்திருக்கிறான் எனும்போது மனித ஆற்றலை என்னென்பது?
நான்கு கால்களால் நடந்து கொண்டிருந்த மனிதன், நேராக நிமிர்ந்து இரண்டு கால்களால் நடக்கத் தொடங்கியதிலிருந்து கண் பார்வைக் கோளாறு தொடங்கிவிட்டதாம். மனிதன் இன்றைய உருவை, படிநிலை வளர்ச்சியால் (பரிணாமம்) தானே பெற்றான்!
அந்த வகையில் இன்றைய மனிதனை (ஹோமே சேப்பியன்) கடவுள் படைக்கவில்லை என்பதும் உறுதியாகிறது. கண் பார்வையைச் சீராக்கிட லென்சு வைத்த கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் 1880இல் டாக்டர்கள் அடால்ப் ஃபிக் மற்றும் ஈஜின் கால்ட் ஆகிய இருவரும் கான்டாக்ட் லென்ஸ் கண்டுபிடித்தனர்.
விழியோடு ஒட்டி இருக்கும் இவை வலி, வீக்கம் போன்ற கூடுதல் கோளாறுகளை ஏற்படுத்தின என்றாலும் அமெரிக்காவில் 1935 முதல் 1939 வரை 10  ஆயிரம் ஜோடி விற்பனை ஆயின. பிளாஸ்டிக் கான்டாக்ட் லென்ஸ் 1949இல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதன் விற்பனை 2 லட்சம் ஜோடி என்று உயர்ந்தது.
PMMA எனும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட லென்சும் கார்னியாவில் கோளாறு ஏற்படுத்தியதால் HEMA எனும் பிளாஸ்டிக் கொண்டு லென்சு தயாரிக்கப்பட்டது. இதனை பாலிஷ் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. சாப்லென்ஸ் என்பதை பாஷ்  மற்றும் லாம்ப் நிறுவனம் 1971இல் தயாரித்துள்ளனர். இன்றைய நிலையில் கான்டாக்ட் லென்ஸ் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கு மேலே!
(தொடரும்)
உண்மை,16.5.15

கருணையே உருவானோர் யார்? - 3


கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!

கருணையே உருவானோர் யார்?
யார் வலிமை உள்ளவர்?
வெறிநாய்க்கடிபட்ட 9 வயது சிறுவனுக்கு லூயிபாஸ்டர் தன் கண்டுபிடிப்பான மருந்தை 14 நாள்களுக்குச் செலுத்தினார். பையன் பிழைத்துக் கொண்டான். இது நடந்தது 1885இல்.
10 ஆண்டுகளில் தொடர் ஆராய்ச்சி நடத்தி, கண்டுபிடித்த மருந்தினை 6 ஆயிரம் பேருக்குச் செலுத்தி மருத்துவம் பார்த்தார். மொத்தத்தில் 6 பேர் மட்டுமே இறந்தனர். மருந்து வெற்றி பெற்றது. இது நடந்தது 1915இல்.
ஆந்தராக்ஸ் என்பது விலங்குகளில் பற்றி மனிதர்களுக்கும் பரவும் கொடிய நோய். இந்தக் கிருமிகளை அஞ்சலில் அனுப்புவதும் அதனை வாங்கிப் பிரித்துப் பார்ப்பவர்கள் நோய்த் தாக்குதலுக்கு ஆளாவதும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கையாளப்பட்ட கொடூரப் பழி தீர்க்கும் முறை. குப்பை பொறுக்குபவரின் வியாதி என்றுகூட அழைக்கப்பட்டது உண்டு. லூயி பாஸ்டர் கண்டுபிடித்த மருந்து பலன் தந்தது என்றாலும் அதனை இருப்பு வைத்துப் பயன்படுத்திட முடியவில்லை. அப்படிப் பயன்படுத்தும்போது மருந்தின் வீர்யம் குறைகிறது என்பது குறைபாடு. எனவே, ஆஸ்திரேலிய அறிவியலாளர் ஜான் மெக் கார்வி ஸ்மித் மற்றும் ஜான் குண் ஆகிய இருவரும் ஆய்வு செய்து புதிய, பாதுகாப்பான மருந்தைக் கண்டுபிடித்தனர். என்றாலும், கூட்டாகக் கண்டுபிடித்தோம் என்று கூறத் தயாராக இல்லாத பொறாமை நிலை அவர்களுக்குள்! 1910இல் ஜான் குண் இறந்தார். ஸ்மித் மருந்து தயாரிப்பு முறையைக் கூறாமலே உற்பத்தி செய்து விற்கத் தொடங்கினார். ஆஸ்திரேலிய அரசு அவரை மிரட்டியது. 1918இல் ஒருவாறாக மருந்து தயாரிப்பு முறையை வெளிப்படுத்தினார். மக்கள் பலனடைகின்றனர்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இல்லாத ஒரு நோய் ஆப்கானிஸ்தான், இந்தியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில் மட்டும் பாதிக்கும் கொடிய நோய் போலியோ! இளம்பிள்ளை வாதம் என்றும் கூறுகிறார்கள். இதனைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கத் தொடங்கியவர் ஜொனாஸ் சால்க்.
பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் 1947இல் தொடங்கி இன்புளுயன்சா நோய்க்கான மருந்து கண்டுபிடித்து, போலியோ நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். 1952இல் அவர் கண்டுபிடித்த மருந்தை குரங்குகளுக்குச் செலுத்திப் பின்னர் ஊனமுற்ற குழந்தைகளுக்குச் செலுத்தினார். பலன் ஏற்பட்டது கண்டு ஊக்கம் பெற்றவர், தனக்கும் தன் குடும்பத்தவர், தம் நண்பர்கள் முதலியோர்க்கும் செலுத்தினார். 1952இல் 57,628 பேர்களுக்கு போலியோ நோய் அமெரிக்காவில் இருந்ததாகப் புள்ளி விவரம். அவர்களுக்கு மருந்து கொடுத்ததில் இரண்டு ஆண்டுகளில் 90 சதவீதம் பேர்களுக்கு நோய்த் தன்மை அற்றுப் போய்விட்டது. 1961இல் ஊசிமூலம் மருந்து செலுத்துவதற்குப் பதில் இனிப்பான சொட்டுமருந்து வாய்மூலம் தருவது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தட்டம்மை சாதாரண நோய். 1814இல் இந்நோயை ஜெர்மன் தட்டம்மை என்றார்கள். கருவுற்ற பெண்களை இந்நோய் தாக்கினால் கருப்பையிலிருக்கும் குழந்தைக்குக் காதுகோட்-காமை, மனநிலை பாதிப்பு, கண்புரை, இதயக் குறைபாடு, ஈரல் நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டு. 1963, 1964இல் அமெரிக்காவில் இந்நோய் பரவலாகப் பற்றியதன் விளைவாக 30 ஆயிரம் குழந்தைகள் நிரந்தரக் குறைபாடுகளுடன் பிறந்த கொடுமை நிகழ்ந்தது. ஹாரி மார்டின் மெயர் மற்றும் பால் பார்க்மன் என்ற இரு குழந்தை நல மருத்துவர்கள் ஆய்வு செய்து மருந்து கண்டுபிடித்தனர். ஆப்ரிக்க பச்சைக் குரங்குகளின் திசுக்களில் தயாரிக்கப்பட்ட மருந்தினை ரீசஸ் குரங்குகளுக்குச் செலுத்திப் பார்த்தனர். பின்னர் பெண்கள், குழந்தைகளுக்குக் கொடுத்துச் சோதனை செய்தனர். MMR எனும் தடுப்பு மருந்து தற்போது சின்னம்மை(Measles),, கழுத்து வீங்கி, (Mumps) தட்டம்மை போன்றவற்றிற்குத் தரப்படுகிறது.
அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்ட கொடிய நோய் - ஹெபடைடிஸ் பி _ 1960இல் கண்டறிந்தவர் பரூஷ் புளும்பெர்க் என்னும் அமெரிக்க விஞ்ஞானி. பூர்வகுடியினரின் ரத்தத்தை ஆய்வு செய்தபோது தனித்துவமான புரதம் ஒன்றைக் கண்டனர். அதனை ஆஸ்திரேலியன் ஆன்டிஜன் எனக் குறித்தனர். இது அமெரிக்கர்களின் குருதியில் இல்லை. ஆசிய, ஆப்ரிக்க, சில அய்ரோப்பியர்களின் குருதியில் உள்ளது. ரத்தப் புற்றுநோய் கண்டவர்களின் குருதியிலும் இது உள்ளது. இது ஹெபடைடிஸ் பி நோய்க்குக் காரணி. இந்நோய் ஈரலைத் தாக்கி ஈரல் புற்று நோய் ஏற்படச் செய்துவிடும். சில வகைகளில் ஈரலின் செயல்பாட்டையே நிறுத்தி இறப்புக்கு வழி செய்துவிடும். இந்நோய்ப் பாதிப்பு உள்ளவர்களின் குருதியில் உள்ள வைரஸின் வெளித்தோலைப் பிரித்தெடுத்து அதிலிருந்து தடுப்பு மருந்து கண்டு-பிடித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு 1976இல் வழங்கப்-பட்டது.
இவ்வளவு கொடிய நோய்களை மனித-குலத்திற்குக் கொடுத்து கொடுமைக்கு ஆளாக்குவது எப்படிக் கருணை உள்ள கடவுள்?
அன்பே கடவுள் என்பதை எப்படி ஏற்றுக்-கொள்ள முடியும்? என்று கேட்டார், பெரியார்! கடவுளால் தரப்படும் நோய்களைக் குணப்-படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடித்துத் தந்த மருத்துவர்கள், அறிவியலாளர்கள்தானே நியாயப்படி கருணையே உருவானவர்கள்? அன்பே உருவான மனிதநேயர்கள்?
தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துக் கடவுளுக்கே சவால்விட்ட இவர்கள்தானே பாராட்டுக்கு உரியவர்கள்! ஆண்களின் முகத்தில் தாடியும் மீசையும் முளைக்கிறது. பெரியார், மார்க்ஸ் போன்றவர்களின் முகத்தில் மண்டியிருந்த தாடி, மீசை எத்தனை அழகு? சிலருக்கோ மழமழவென மழித்தால்தான் முகப் பொலிவு! தாடியையும் மீசையையும் மழிப்பதுவே கடவுளுக்கு எதிரான செயல்தானே! பாதுகாப்பாக முகம் மழிக்க ரேசர் கண்டு-பிடித்தவர்கள் நன்றிக்குரியவர்கள் என்றாலும் கடவுளுக்கு எதிரானவர்கள்தானே!
போலியோ நோய்க்குச் சிகிச்சை அளிக்கும்-போது நோயர்கள் மூச்சுவிடச் சிரமப்படும் நிலை. மார்புத் தசைகள் இறுகிப் போவதால் நுரையீரல் சுருங்கி விரிய தசைகள் இடம் தருவதில்லை. சிகிச்சை முடியும்வரை நோயர் இலகுவாக மூச்சுவிடச் செய்ய வேண்டிய அவசியம் முன்பு ஏற்பட்டது. 1927இல் ஃபிலிப் டிரின்கர் என்பவரும் லூயி அகாசிஸ் ஷா என்பவரும் கண்டுபிடித்த ஒரு கருவியில் நோயரின் தலை காற்றடங்கிய பெட்டியின் ஒரு முனையில் வைக்கப்படும்.  பெட்டியிலிருந்து காற்று அழுத்தத்தால் வெளியேற்றப்பட்டு மார்பு விரிவதும் சுருங்குவதும் கட்டுப்படுத்தப்பட்டது. போலியோ பாதிப்புக்கு ஆளான 8 வயதுப் பெண் நோயரிடம்தான் இக்கருவி முதன்முதலில் பொருத்தப்பட்டது. ஒரே நிமிட சிகிச்சைக்குப் பின் சிறுமி அய்ஸ்கிரீம் கேட்கும் அளவுக்குக் குணம் தெரிந்தது. இக்கருவி ஜான் ஹேவன் எமர்சன் என்பாரின் முயற்சியால் மேம்பாடு செய்யப்பட்டு 1940 முதல் 1950 வரை ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சிகிச்சை தரப்பட்டது. அமெரிக்காவில் 1959இல் 1200 பேருக்கு இந்தக் கருவிமூலம் சிகிச்சை தரப்பட்டது. போலியோ சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டபின் இக்கருவியின் பயன்பாடு குறைந்துவிட்டது.
ஒரு நோயின் காரணமாக ஓர் உடல் உறுப்பு செயல்பாடு குறைவாகியபோது செயற்கை உறுப்பு அதனை ஈடுகட்டுகிறது என்றால், கடவுளின் படைப்பு பழுதாகிறது; அதை மனிதனின் கண்டுபிடிப்பு ஈடுகட்டுகிறது என்றால், கடவுளுக்குச் சமமாக அல்லது அதற்கும் மேலாகவே மனிதனின் செயல் அமைகிறதே! யார் வலிமை உள்ளவர்?
இயற்கை நுரையீரல் செயலிழக்கும்போது செயற்கையான இரும்பு நுரையீரல் (Iron Lung - இரும்பு நுரையீரல்) இழப்பை ஈடுசெய்து உயிர் காக்கிறதே!
மேம்படுத்தப்பட்ட இரும்பு நுரையீரலைச் செய்த ஜான் எமர்சன் அடுத்ததாக செயற்கை சுவாசக் கருவியை வடிவமைத்தார். நோயரின் நுரையீரல் சுவாசிக்கத் திணறும்போது இக்கருவி  (வென்டிலேட்டர் ---- Ventilator) சுவாசத்தைச் சீராக்குகிறது. சுலபமாக மூச்சை இழுத்து வெளியே விடச் செய்கிறது. போலியோ பாதிக்கப்பட்டவர்களின் இறுகிப்போன தசையை இளகச் செய்யத் தரப்படும் மருந்துகள் மூச்சு இழுத்து விடுதலைத் தடைசெய்து விடுகின்றன. அந்நிலையில் வென்டிலேட்டர் நுரையீரலின் செயலைச் செய்கிறது. 1949இல் இது கண்டுபிடிக்கப்பட்டது. பறவை (Bird)  வென்டிலேட்டர் என்ற ஒன்று 1950இல் உருவாக்கப்பட்டது.
வேறுவகை பக்க விளைவுகள் இதனால் ஏற்பட்டன. 1952இல் மேன்லி வென்டிலேட்டர் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. 1980 முதல் புதிய மிகவும் மேம்படுத்தப்பட்ட வென்டிலேட்டர் உருவாக்கப்பட்டு மிகவும் பயனுள்ள வகையில் செயல்படுத்தப்படுகிறது.
1930இல் ஒரு பெண் நோயர் இரத்தக் குழாயில் கெட்டிப்பட்டுப் போன ரத்த உறைவால் (கிளாட்) மூச்சுவிடுவதற்குக் கஷ்டப்பட்டார். இம்மாதிரி நோயர்களுக்கு அமெரிக்காவில் செய்யப்பட்ட அறுவை வெற்றி தரவில்லை. ஜெர்மனியில் செய்யப்பட்ட அறுவை 100க்கு 6 மட்டுமே வெற்றியாக முடிந்தது. எனவே இந்த நோயருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவருக்குப் பயம். இந்த நிலை சுமார் 17 மணி நேரம் நீடித்தது. நோயர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் செய்து பார்ப்போமே என்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே நோயர் இறந்து போனார். ஆனால், அறுவை சிகிச்சை வெற்றி.
இதய நோய்க்கு மருத்துவம் செய்யும்போது, இதயம் இயங்காதபோதுகூட, உயிர்க் காற்றுடன் கூடிய ரத்தத்தைச் செலுத்தக்கூடிய கருவி கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்கிற ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1935இல் சோதனை செய்யப்பட்ட பூனை ஒன்று 26 மணித்துளிகள் மட்டுமே உயிருடன் இருந்தது. 1951இல் குருதிக் குழாயில் அறுவை மருத்துவம் செய்யப்பட்ட நோயர் இறந்துபோனார். 1953 மே மாதம் 6ஆம் தேதி அறுவை மருத்துவம் செய்யப்பட்ட 18 வயதுப் பெண், 48 வயது வரை உயிருடன் வாழ்ந்தார். அறுவை சிகிச்சையின்போது அவளின் இதயம் நிறுத்தப்பட்டு கிப்பன் கண்டுபிடித்த இயந்திரம் இதயத்தின் பணியைச் செய்ய, அறுவை நிகழ்த்தப்பட்டது. டாக்டர் ஜான் ஹேஷாம் கிப்பன் என்பாரும், அவரின் துணைவியார் மேரியும் ஆராய்ச்சி செய்து இக்கருவியைக் கண்டுபிடித்தனர். டாக்டர் கிப்பனுக்குப் பின்னால் மேரி இருந்திருக்க-வில்லை. கிப்பனுக்குப் பக்கத்தில் இருந்தே கண்டுபிடிப்புக்கும் உதவினார்; வெற்றிக்கும் உதவினார். எனவே, வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் உண்டு என்பது சரியல்ல. வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்குப் பக்கத்திலும் ஒரு பெண் உண்டு!
டாக்டர் கிப்பன் தம் 73ஆம் வயதில் இதய நோயால், மாரடைப்பால் காலமானார் என்பது நகைமுரண்!
- மதிமன்னன்
- (தொடரும்...)

உண்மை,1.5.15

நோய்த்தடுப்பு முறைகளைக் கண்டுபிடித்தது யார்?


கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - 2

- மதிமன்னன்

நோய்த்தடுப்பு முறைகளைக் கண்டுபிடித்தது யார்?
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒலித்த ஒரு திரைப்படப் பாடல் - கோடானுகோடி மக்களுக்கு ஒரு தந்தை என்றாலே, சில கூன், குருடு, நொண்டி, முடம் பிறப்பது எதாலே? இதற்கான விடை என்ன? அமெரிக்காவில் இருக்கும் சில கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளின் படைப்பு என்பதை அறிவார்ந்த படைப்பு எனும் பொருள்பட Intelligent Design என்கிறார்கள்.
அவர்கள் இந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறமுடியும்? இப்படிக் குறைபாடான பிறவிகளைச் சரி செய்திட மனிதன்தான் பலவற்றைக் கண்டுபிடித்துள்ளான். கடவுளிடம் ஸ்பேர் உறுப்புகள் உற்பத்தி கிடையாதே! அதனால் மனிதன்தான் அவற்றைக் கண்டுபிடித்துச் செய்து பொருத்திச் சீர் செய்கிறான்!
அறுவைச் சிகிச்சை செய்கிறான். மருந்து கண்டுபிடித்து நோய் போக்குகிறான். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கிறான். கண் பார்வைக் குறையைச் சரி செய்கிறான். பற்களில் ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து மருத்துவம் செய்கிறான். ஒழுங்கற்ற, உடைந்த பற்களுக்குப் பதில் மனிதன் கண்டுபிடித்த பற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கால், கை போன்ற உறுப்புகளை மனிதனே செய்து பொருத்தி ஊனம் தெரியாமல் மறைக்கிறான். இப்படியே வளர்ந்து முழு உயிர்களையே உற்பத்தி செய்யக் கண்டுபிடித்துவிட்டான். ஆட்டில் ஆரம்பித்துப் பல விலங்குகளைப் படைத்துவிட்டான். மனிதனையும் படைக்கத் தயார் என்றான்! பரமண்டலங்களில் இருக்கும் பரமபிதாவும் அல்லாவும் பிரம்மாவும் வேலை இழக்கும் அபாயத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றிட போப் முதல் கடைசி அழுக்கு மூட்டை (Dirt Bag) வரை குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டன. உலக வல்லரசு நாடுகள் ஒருமித்த குரலில் தடை போட்டுவிட்டன. மனிதனை மனிதனே உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் (Technology) தயார்! உற்பத்திதான் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது!
முதல் மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவனாக எல்லா மதங்களும் கூறுகின்றன. மேலைநாட்டு மதங்களாகக் கருதப்படும் யூத, கிறித்துவ, முகமதிய மதங்களின் நூல்கள் அவ்வாறே கூறுகின்றன. ஆணைப் படைத்த கடவுளால் பெண்ணையும் அதே பாணியில் படைக்க இயலவில்லை போலும்! முதல் மனிதன் ஆதம் என்பவன் தூங்கும்போது அவனது விலா எலும்பை எடுத்துச் சதையால் மூடிவிட்டதாம் கடவுள். அந்த விலா எலும்பைக் கொண்டு பெண்ணைப் படைத்ததாம் கடவுள். அப்படித்தான் கிறித்துவ பைபிள் கூறுகிறது. (ஆதி 2_21). கத்தியின்றி ரத்தமின்றி மட்டுமல்லாமல் வலியுமின்றியும் விலா எலும்பு எடுக்கப்பட்டு பெண் படைக்கப்-பட்டிருக்கிறாள். இது முடியுமா? யூத மதகுரு ரப்பி, கிறித்துவ மதகுரு போப், முசுலிம் மதகுரு இமாம் போன்றோரின் விலா எலும்பை இப்படி எடுத்துப் பார்க்கலாமா? எடுத்தால் வலியால் துடிப்பார்கள். அதிகமான ரத்தப் போக்கினால் செத்துப் போவார்கள் அல்லவா? ஆனாலும் கடவுள் செய்ததாக நம்புகிறார்கள். நம்பச் சொல்கிறார்கள்.
மனிதன் இதற்கு மாற்று கண்டுபிடித்து விட்டானே! இதயமாற்று சிகிச்சை, பழுதுபட்ட மூட்டு மாற்று சிகிச்சை, குருதிக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கிப் புதுக்குழாய் மூலம் ரத்த ஓட்டம் நடைபெறச் செய்தல் போன்ற நிறைய சிக்கலான அறுவைகளை வலியின்றிச் செய்திடும் மயக்க முறையைக் கண்டுபிடித்துவிட்டான் மனிதன். எகிப்திய, அசிரிய மருத்துவர்கள், தலைக்கு ரத்தம் கொண்டு செல்லும் பெரிய (ஆர்டரி) குழாய்களை இறுக்கி ரத்த ஓட்டத்தைத் தடுத்து மயக்க நிலைக்கு நோயாளியை ஆக்கினர். வலி நீக்கியாக அபின் இருக்கும் என்பதை எகிப்தியர்கள் அறிந்திருந்ததால் அதனையும் பயன்படுத்தினர். அசிரியர்கள் மயக்கம் தரும் பல்வேறு மூலிகைகளையும் வேர்களையும் பயன்படுத்தினர்.
18ஆம் நூற்றாண்டில் ஜோசப் பிரீஸ்ட்லி என்பவர் நைட்ரஸ் ஆக்ஸைடைப் பிரித்தெடுத்தார். அமெரிக்கப் பல் மருத்துவர் ஒருவர் வலியில்லாமல் பல்லைப் பிடுங்கப் பயன்படுத்தினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு டைஎதில் ஈதர் பல் மருத்துவத்திலும் மற்ற அறுவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. குளோரபார்ம் எனும் மயக்க மருந்தும் பயன்படுத்தப்பட்டது. என்றாலும் இது பக்க விளைவுகளைத் தந்தது.
சர் ஹம்ப்ரி டேவி என்பார், நைட்ரஸ் ஆக்சைடு என்பது சிரிக்க வைக்கும் வாயு என்பதையும் கண்டறிந்தார். ஆகவே சுமார் 40 ஆண்டுகளுக்கு இது அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படவில்லை. அமெரிக்கப் பல் மருத்துவர் ஹொராஸ் வெல்ஸ் என்பவர் நைட்ரஸ் ஆக்சைடை சுவாசித்துக் கொண்டே ஒரு பல்லைப் பிடுங்கிக் கொண்டார், வலியில்லாமல்! 1845இல் ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் இதனைப் பயன்படுத்துவதுபற்றிச் செயல் விளக்கம் தந்தார். வில்லியம் மார்டன் என்பவர் கழுத்துக் கட்டியை அகற்ற நைட்ரஸ் ஆக்சைடைப் பயன்படுத்திக் காட்டினார். பின்னர் இம்முறை லண்டனுக்கும் பாரிசுக்கும் பரவியது.
1842இல் கிராஃபோர்டு லாங் எனும் மருத்துவர் நைட்ரஸ் ஆக்சைடுக்குப் பதில் ஈதர் (Ether) என்பதைக் கண்டுபிடித்தார். இவரைப் போலவே மருத்துவர்கள் வில்லியம் மார்டன், ஹொராஸ் வெல்ஸ், சார்லஸ் ஜாக்சன் என்பவர்களும் ஈதர் பயன்படுத்தி அறுவை செய்துள்ளனர். 1879இல் கிராஃபோர்டு இந்த மயக்கமுறையின் தந்தை என அங்கீகரிக்கப்பட்டார்.
குழந்தைப் பேறின்போது குளோரபாரம் எனும் மயக்கமுறையை முதன்முதலில் ஜேம்ஸ் சிம்ப்சன் எனும் மகப்பேறு இயல் பேராசிரியர் பயன்படுத்தினார். 1847இல் ஈதருக்கு மாற்றாக இதனை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். பிரசவத்திற்கு வந்த 30 பெண்களுக்குப் பயன்படுத்தி வலியின்றி பிள்ளை பெறச் செய்தார். வந்தது சிக்கல்! மதவாதிகளும் சர்ச்களும் கூக்குரல் எழுப்பினர். பெண்களுக்குக் கடவுள் தந்த சாபம் என்னவென்றால், வலியுடன்தான் பிள்ளை பெற வேண்டும் என்பதாம். அதனை எதிர்க்கும் வகையில் மருத்துவர் செய்யலாமா? கடவுளுக்கு எதிர்ப்பாகச் செயல்படலாமா? எனவே அது பரவலாகக் கையாளப்படவில்லை.
1853இல் இங்கிலாந்து ராணி விக்டோரியா தனது கடைசிப் பிள்ளையைப் பெற்றெடுத்தபோது குளோரபாரம் தரப்பட்டது. வலியின்றி எல்லாம் நடந்தது. அரசியே கையாண்டார் என்றதும் உலகெங்கும் பரவியது. கடைசியில் குளோரபாரம் பலர் விசயத்தில் இருதய அடைப்புக்குக் காரணமாகி உயிர் இழப்பும் நடந்ததால் குளோரபாரம் தற்போது தரப்படுவது கிடையாது.
நோய்கள் கடவுளால் மனிதர்க்குத் தரப்படும் தண்டனை என்று ஒரு மத நம்பிக்கை உண்டு. இந்தக் காரணத்தினால் நோய்க்கு மருத்துவம் செய்துகொள்வது தடை செய்யப்பட்ட மதப்பிரிவுகள் கிறித்துவத்தில் உண்டு. பாம்பு கடித்தால்கூட மருத்துவம் செய்து கொள்ளாமல் இறந்துபோன மடத்தனங்களும் மத நம்பிக்கையாளர்களிடம் உண்டு. மருத்துவம் பார்த்துக் கொள்வது கடவுளுக்கு எதிராக மனிதன் செயல்படுகிறான் எனப் பொருள்-படுமாம். இன்னொரு வகையில் -_ நோய் தீர்க்கும் மருத்துவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் ஆகிவிடுகிறார்கள். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் உரையாற்றும்போது தந்தை பெரியார் அவர்கள், என் அன்பார்ந்த கடவுளின் எதிரிகளே! என்றுதான் விளித்துப் பேசினார்.
அப்படிப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி-யாளர்கள் கடவுளின் தண்டனைக்கு (முன் ஜாமீன் வாங்கி விடுவதைப்போல) தடுப்பு நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். நோய் வராமல் தடுக்கும் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆம், நோய்த் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்துவிட்டார்கள். பெரியம்மை என்பது குளிர் நாடுகளில் பெரும் அளவில் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நோயாக இருந்தது. இங்கிலீஷில் இந்த நோயை Small Pox என்பார்கள். மாரியாத்தாள் எனும் கடவுளச்சியின் கோபத்தால் ஏற்படுவது அம்மை நோய் என்றொரு மூடநம்பிக்கை. ஆத்தாளுக்குக் கரண்டி எண்ணெய் கொடுத்துவிட்டால் ஆத்தா குளிர்ச்சி பெற்று இறங்கிப் போய்விடும், அம்மை குணமாகிவிடும் என்று சொல்லியே ஆயிரக்கணக்கானவர்கள் சாக வழிவிடப்-பட்டது முன்நாள்களில். அம்மை நோயால் இறந்தவர்களை இறந்துவிட்டனர் என்றுகூடச் சொல்லாமல், ஆத்தா குளிர்ந்து போய்விட்டாள் என்று சொல்லி, மாரியாத்தாளைக் காப்பாற்றிக் கொண்டு இருந்தனர்.
அத்தகைய கொடிய கொள்ளை நோயைத் தடுப்பூசி போட்டு பாதிக்காமல் தற்காத்துக் கொள்ளும் முறையையும்கூட மனிதன்தான் கண்டுபிடித்தான். எட்வர்ட் ஜென்னர் என்பவர் இங்கிலாந்து நாட்டு மருத்துவர். அம்மை நோய்க்கும் பசு அம்மை நோய்க்கும் (Cow Pox) தொடர்பு உண்டு என்ற கருத்து அவருக்கு உண்டு. சாரா நெல்ம்ஸ் எனும் பால்காரிக்கு பசு அம்மை நோய்ப் பாதிப்பு. ஜென்னரிடம் மருத்துவம் செய்து கொள்ள வந்தபோது, அவளின் கையில் கொப்புளங்கள் இருந்தன. கொப்புளங்களிலிருந்து சீழ் எடுத்து வேறொரு சிறுவனின் கைகளில் தடவிவிட்டார். அவனுக்குச் சில நாள்களில் பசு அம்மை நோய் தாக்கியது. பசு அம்மை தொற்றக்கூடியது என்பதைக் கண்டுபிடித்தார். அம்மை நோய்க்குத் தரப்படும் மருந்தை அவனுக்குக் கொடுத்தார். அவனும் நோயிலிருந்து குணமாகிவிட்டான்.
பெரியம்மை நோய் பொதுக்கணக்காண்டுக்கு 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது. பொது ஆண்டுக்கு 1157ஆம் ஆண்டில் (கி.மு.1157) ராம்சேஸ் V எனும் மன்னன் இந்நோயால் இறந்துபட்டிருக்கிறான் என நம்பிட அவனது மம்மியில் அடையாளங்கள் காணப்படுகின்றன.
லண்டன் நகரில் அம்மைத் தடுப்பு மருந்து 1700ஆம் ஆண்டுவாக்கில் பரவத் தொடங்கியது. அம்மை நோய்ப் பாதிப்பு உள்ளவர்களின் உடலில் உள்ள அம்மைக் கொப்புளங்களின் காய்ந்த பொருக்குகளைக்  (Scab) கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து ஊசிமூலம் உடலுக்குள் செலுத்தப்பட்டது. பின்னர் பெரியம்மை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலைக்கு அவர்கள் ஆளான-போதும் நோய் தொற்றவில்லை. கடும் குற்றம் புரிந்து மரண தண்டனை எதிர்நோக்கி இருந்த நான்கு கைதிகளுக்கு இம்மருந்து செலுத்தப்-பட்டது. அவர்கள் பெரியம்மை நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. வேல்ஸ்     இளவரசி ஒர்ட்லி மான்டேகு என்பாரின் ஆணைப்படி இச்சோதனை நடத்தப்பட்டது. மருந்துமுறை வெற்றி எனக் கண்டறியப்பட்டது.
ஆனாலும் பிரான்சு நாட்டு அறிஞர் வால்டேர் இம்மருத்துவ முறையைப் பரிகசித்தார். பெரியம்மை நோயைத் தடுத்திட அதையே அவர்களின் குழந்தைகளுக்குத் தருகிறார்கள். பிரிட்டிஷார் முட்டாள்கள் என்றார் அவர். யார் முட்டாள்கள் என்பதை உலகம் 280 ஆண்டுகளாகக் கண்டு வருகிறது.
அதைப்போலவே காலரா நோய். குடிநீரின் அசுத்தத்தால் பரவும் கொடிய கொள்ளை நோய். இதனைக் குணப்படுத்த பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞர் லூயி பாய்ச்சர் முயற்சி செய்தார். வெற்றி பெற்றார். பெரியம்மைக்கு மருந்து கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் பற்றி இவர் தெரிந்து வைத்திருந்தார். கோழிகளுக்கு வயிற்றுப் போக்கு (காலரா) நோய் வருவது பற்றி ஆய்ந்து கொண்டிருந்தவர். காலராவுக்குக் காரணமான பாக்டீரியாக்களைக் கோழிகளுக்குள் செலுத்துமாறு தன் உதவியாளரிடம் கூறியிருந்தார். அவர் மறந்துவிட்டார்.
ஒரு மாதம் கழித்து அதே பாக்டீரியாக்களைப் பறவைகளுக்குச் செலுத்தினார். பறவைகளுக்கு உடல்நலம் குன்றியதே தவிர, அவை சாகவில்லை. இதனால் துணிவுபெற்ற அவர், புதிய பாக்டீரியாக்களைப் புதிய கோழிகளுக்குள் செலுத்தினார். அவை இறந்துவிட்டன. எட்வர்ட் ஜென்னரைப் போலவே, லூயி பாய்ச்சரும் பலவீனமான பாக்டீரியா நோய்த் தடுப்புச் சக்தி பெற்றிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். ஒரே ஒரு வேறுபாடு இருவருக்கும் - ஜென்னர் பயன்படுத்தியது இயற்கை பாக்டீரியா. பாய்ச்சர் பயன்படுத்தியது செயற்கை பாக்டீரியா. அதிக அளவில் பாக்டீரியாக்களை உபயோகித்தால் நிச்சயமாக பலன் கிடைக்கிறது. எனவே, காலராவைப் போலவே, அந்த்ராக்ஸ் நோய், வெறிநாய்க்கடி (ரேபிஸ்) நோய் போன்ற-வற்றுக்கும் மருந்துகளைக் கண்டுபிடித்தார்.
தொடரும்...

உண்மை,16.4.15


கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!- மதிமன்னன்
சகலமானவற்றையும் படைத்தது கடவுள் எனும் நம்பிக்கை பலரிடத்தில் இருக்கிறது. உலகின் பலநாட்டு மக்களிடமும் இருக்கிறது. உலகின் பெரிய மதங்கள் எனப்படும் ஆறு மதத்தைச் சேர்ந்த மக்களிடமும் இந்த நம்பிக்கை இருக்கிறது.
நம்புங்கள் என்பதுதான் எல்லா மதங்களின் ஆரம்ப வாக்கியம். எதையும் நம்பி ஒருவன் தொடங்கினால் இறுதியில் அவனுக்குச் சந்தேகங்களே மிஞ்சும்; ஆனால் சந்தேகங்களுடன் தொடங்கினால், இறுதியில் உறுதியான கருத்து கிடைக்கும்.
இந்தக் கருத்தைத்தான் சாக்ரடீஸ், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற அறிஞர் பெருமக்களின் வாழ்வும், செயலும், தத்துவக் கருத்துகளும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.


எதையும் சந்தேகி என்ற மார்க்சின் சொற்களும், எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள் என்ற மேற்கத்திய சாக்ரடீசும் கிழக்கத்திய பெரியாரும் சொன்ன சொற்களும் எண்பித்துக் கொண்டிருக்கின்றன.
வள்ளுவரும் புத்தரும் இதையேதான் உலகுக்கு அறிவித்தனர். ஆனால், குள்ள மனிதர்கள் நம்பு எனக் கூறி மக்களை மாக்களாகவே வைத்துவிட்டனர். எல்லாம் கடவுள் செயலாலே என அறிவித்து, மனிதனால் ஆவது எதுவுமே இல்லை என்ற எண்ணத்தை விதைத்துவிட்டனர்.
ஆனால், எல்லா மனிதர்களும் இதை ஏற்கவில்லை. ஆதாமும் ஏவாளும் அம்மணமாகத் திரிந்தது போல பின்னிட்ட சந்ததியினர் இருக்கவில்லை. வேட்டையாடிக் கொன்று தின்ற விலங்குகளின் தோலைக் கொண்டு ஆடை என்ற பெயரில் எதையோ அணிந்தனர்.
சாக்ரடீஸ்
மானத்தை மறைப்பது என்ற எண்ணம் இல்லாத நிலையில், குளிரில் இருந்து தம்மைக் காத்துக் கொண்டனர். தோலைத் தைப்பதற்கு எலும்பு ஊசிகளையும் ஆக்கினர். இத்தகைய கண்டுபிடிப்பு எண்ணம் எப்படி ஏற்பட்டது? மதப் போதனைகளைப் போலவே வாழ்ந்திருந்தால் இது முடிந்திருக்குமா?
தந்தை பெரியார்
அந்தக் காலத்தில் கடவுளும் இல்லை, அதைக் கட்டிக் காப்பாற்றிக் காசு பார்க்கும் மதங்களும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இவை இரண்டும் பிற்காலப் பித்தலாட்டங்கள்!
இவை இல்லாத காலத்தில் கல் கருவிகள், தோல் ஆடைகள், நெருப்பில் வதக்கி உண்ணுதல் போன்றவை-யெல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டவை; கடவுளால் அல்ல, இதற்கான தூண்டுதல் மனித மூளையின் செயல்பாடுகளால் விளைந்தவை.
கார்ல் மார்க்ஸ்
இத்தகைய தூண்டுதலை முதலில் புரிந்து செயல்பட்டவன் பாராட்டுக்குரிய மனிதன். இவனுக்கு வழிகாட்ட மோசே வரவில்லை. யேசு வரவில்லை. முகம்மது வரவில்லை. முப்பத்துமுக்-கோடி தேவன்களும் வரவில்லை.
தாமஸ் ஆல்வா எடிசன்
பின் எது வந்தது? மனிதனின் தேவை வந்தது. தேவைதான் கண்டுபிடிப்பின் தாய். குளிரிலிருந்தும் பனிப் பொழிவிலிருந்தும் காத்துக் கொள்ள வேண்டிய தேவை, தோலாடையைக் கண்டுபிடித்தது.
வேட்டைச் சமூகத்தின் வயிற்றுப் பசி, பசி ஆற்ற வேண்டிய தேவை விலங்குகளைக் கொல்லும் கல் கருவிகள், ஆயுதங்களைக் கண்டுபிடித்தது. தற்செயலாக ஏற்பட்ட காட்டுத் தீயில் வெந்த இறைச்சியின் சுவையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதுவே நெருப்பைக் கடைந்து ஏற்படுத்தும் சக்கிமுக்கிக் கல்லைப் பயன்படுத்தும் நுட்பத்தைக் கண்டுபிடிக்க உதவியது.
இப்படிக் கூறிக்-கொண்டே போகலாம். போதும் என்ற மனமே, பொன்செய்யும் மருந்து எனப்படுவதுபோலவே எல்லா மனிதர்களும் இருந்திருந்தால் கண்டுபிடிப்புகளே வந்திருக்காது.
எனவே, தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், தந்தை வேண்டுமே! மதிநுட்பம் தந்தை எனலாம். மதி அனைவருக்கும் உண்டுதான். மதிநுட்பம் சிலர்க்கு மட்டுமே இருக்கிறது. இவர்கள் மதியைப் பயன்-படுத்துகிறார்கள். நுட்பம் சேர்கிறது. விதியை நம்பாததால், மதிநுட்பம் வளர்கிறது.
மதிநுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டவை, கருவிகளாகவோ பொருட்களாகவோ இருக்க வேண்டியது இல்லை. புதிய எண்ணம், புதிய கொள்கை, பாட்டு, நாட்டியம், இசை என்றும் இருக்கலாம்.
சமதர்மம், பொது உடைமை போன்ற புதிய எண்ணங்கள், மக்களாட்சி போலும் புதிய அரசமைப்புக் கொள்கைகள் கூட கண்டுபிடிப்புகளே எனலாம். தொல் பழங்காலக் கண்டுபிடிப்புகளான ஆடை, நெருப்பு, கூரிய கருவிகள், ஈட்டி போன்றவையும் ஆதிகாலக் கண்டுபிடிப்புகளே!
ஏழு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலைபெற்று இருந்த மெசபடோமிய நாகரிகத்தில், சக்கரம், அச்சு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. சக்கரம், அச்சு போன்றவற்றைக் கண்டுபிடித்தவன்தான் முதல் விஞ்ஞானி! அவனது கண்டுபிடிப்புகளால்-தான் மனிதன் இடம் பெயரவும் புதிய இடத்தில் வாழவும் தொடங்கினான்.
முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எனச் சக்கரத்தைக் கொண்டாடும் நோக்கம் இதுதான்! அய்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலைபெற்றிருந்த சிந்துவெளி நாகரிகம் நீர்ப்பாசன முறைகளைக் கண்டுபிடித்தது.
இதுவே எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் சீன நாட்டின் மஞ்சள் ஆற்றின் கரையில் பரவிப் பெருமை பெற்றது. கட்டற்று ஓடும் காட்டாற்று நீரைக் கட்டுப்படுத்திப் பாசனம் செய்து வேளாண்மை செய்யும் கண்டுபிடிப்பு இன்றைய மானுட குலத்துக்குச் சிறப்பான கொடை.
2500 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளில், குறிப்பாக கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் தோன்றிய கணிதம், தத்துவம், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.
ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்த மிதவைத் தத்துவம் நீர்வழிப் பயணத்திற்கு உதவும் கப்பல், படகுகள் போன்றவை கண்டுபிடிப்பதற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. சிந்துவெளிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை வெளி-உலகுக்குத் தெரியாமலே இருக்கின்றன.
ஆனால், சீன நாட்டின் முக்கிய நான்கு கண்டுபிடிப்புகள் அனைவர்க்கும் பயன்படுகின்றன; வெடிமருந்து, காகிதம், காம்பஸ் எனப்படும் திசைகாட்டும் கருவி, அச்சுத் தொழில்முறை ஆகிய நான்கும் மிகப் பெரிய கண்டுபிடிப்புகள் எனலாம்.
அய்ரோப்பிய நாடுகளில் 14ஆம் நூற்றாண்டுக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ஆடி (மைக்ராஸ்கோப்) தொலைநோக்காடி (டெலஸ்கோப்) ஆகியவை மனிதர்களின் அறிவியல் ஆய்வுகளுக்குப் பல வகையிலும் ஆற்றிய பங்கு அளவிட்டுக் கூறமுடியாதது.
16ஆம் நூற்றாண்டு பகுத்தறிவின் காலம் என வருணிக்கப்பட்டாலும், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் வானவியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றின் வளர்ச்சி சிறப்பான வகையில் அமைந்தது.
பலப்பல கருவிகள் -_ தெர்மா மீட்டர், ஹைட்ரோ மீட்டர் போன்றவை கண்டுபிடிக்கப்-பட்டதன் விளைவாக இயற்பியலில் பல சாதனைகளை மனிதன் செய்தான். மின்சாரம், காந்தசக்தி ஆகிய இரு முக்கிய சக்திகளை மனிதன் கண்டுபிடித்ததும் இந்தக் காலத்தில்-தான்.
நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்பை உருக்கி எடுக்கவும் புதிய பொறிகளை உருவாக்கவும் மனிதன் கற்றான். தொழில் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்த தொழில்நுட்பம் இதுதான். இதனால் பெரும்பலன் அடைந்தது இங்கிலாந்து நாடு.
தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காக ஏராளமான மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து குடியேறியதும் இத்தகைய கண்டுபிடிப்புகளால்தான்.
பெரும்பாலான கண்டுபிடிப்புகளைச் செய்து சாதித்த மனிதர்கள் நிறைந்த நாடாக அமெரிக்கா விளங்குகிறது. பல நாடுகளி-லிருந்தும் வந்து குடியேறிய மக்கள் நிறைந்த நாடு அது.
அந்நாட்டின் தாமஸ் ஆல்வா எடிசன் என்பார் 1000 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். இது எப்படி? யேவா கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களினத்தைச் சேர்ந்தவரா அவர்? அல்லவே! மனித அறிவை, ஆற்றலைப் பயன்படுத்திடக் கற்றவர், பயன்படுத்தியவர்! அவ்வளவே!
இப்படி எண்ணற்றவை! ஆற்றல்மிக்க இந்த மனிதர்கள் தம் அறிவைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துத் தந்த கண்டுபிடிப்புகளால் மனித குலம் முழுவதும் பயன்படுகிறது.
மனித குலத்துக்கு இத்தகைய மனிதர்களால் விளைந்த பயன்களில் ஒரு சிலவற்றையாவது நாம் அறிவது நலம்.
அதை விட்டுவிட்டு இந்தியத் தலைமை அமைச்சர் மோடி கூறுவதைப் போல பிளாஸ்டிக் சர்ஜரி பாரதத்தில் இருந்தது என்பதற்கு அடையாளம் விநாயகன் பொம்மை என்று பேசிக் கொண்டிருந்தால் மிஞ்சுவது என்ன?
மூடப் பைத்தியம் எனும் பட்டம்தான்! குந்தி குழந்தை பெற்றது, சோதனைக் குழாய்க் குழந்தை முறை இந்தியாவில் இருந்ததற்கான அடையாளம் என்று மோடி கூறியுள்ளதைத் திருப்பிக் கூறினால் சிரிப்பு பின்பக்கத் துளை வழியேதான் வருமே தவிர, புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கம் வரவே வராது!
குளோரஃபார்ம், அனஸ்தீசியா (மயக்க மருந்துகள்) கண்டுபிடிப்பதற்கு முன்னமேயே மயக்க மருந்து கொடுக்காமலே, ஆணின் விலா எலும்பை எடுத்து அதைக் கொண்டு ஏவா எனும் பெண்ணைப் படைத்தது எங்கள் கர்த்தர் என்றானாம் கிறித்தவன்.
ஒருவன், போடா போ! எங்கள் சிவன், தன் மகன் தலை காணாமல் போய்விட்ட நிலையில் யானைத் தலையை மனிதக் கழுத்தில் ஒட்டவைத்து மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையே செய்தது என்று சவடால் அடித்தானாம் இந்து ஒருவன்!
இவர்கள் இருவர் பேச்சைக் கேட்கும் ஒருவருக்கு என்ன நினைக்கத் தோன்றும்? இந்த இரண்டும் எந்தப் பைத்தியக்கார விடுதியிலிருந்து தப்பித்து வந்தன? என்ற அய்யம்தானே ஏற்படும்!
அதைப்போல பாரதப் பிரதமர் பேச்சைக் கேட்டுக் குழப்பிக் கொண்டிருக்காமல் நடைமுறை உலகுக்கு வருவோம்! நமக்குப் பலவற்றையும் கண்டுபிடித்துக் கொடையளித்த அறிவியல் அறிஞர்களை அறிந்து கொள்வோம்.
பல இலட்சக்கணக்கான அறிவியல் பட்டதாரிகள் இருக்கும் இந்தியாவில், அறிவியல் மனப்பான்மை கொண்ட, அறிவியல் வாழ்க்கை வாழும் மனிதர்களைக் காணோம்! அவர்களை உருவாக்க உதவிடும் சில செய்திகளை அடுத்த இதழில் பார்ப்போம்.

உண்மை,16.3.15

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக