வெள்ளி, 6 மார்ச், 2020

சூழலியல் : இமயமலையில் தாவரங்களின் வளர்ச்சி விரிவடைந்துள்ளது - புதிய ஆராய்ச்சி


எவரெஸ்ட் மலைப்பகுதி உட்பட இமயமலையின் பல பகுதிகளில் தாவரங் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய ஆராய்ச்சி ஒன்று சுட்டிக் காட்டுகிறது.முன்பு தாவரங்கள் வளராத பகுதிகளில் கூட தற்போது செடிகள் நன்கு வளர்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செயற்கைக்கோள் தரவுகளை பயன்படுத்தி 1993இல் இருந்து 2018 வரை, தாவரங்களின் வளர்ச்சி பசுமையான பகுதிகளிலும் பனி படர்ந்த பகுதிகளிலும் எவ்வாறு இருக்கிறது என்பதை ஓர் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.இந்த ஆராய்ச்சி முடிவுகள் "குளோபல் சேஞ்ச் பயாலஜி" என்ற இதழில் வெளி யிடப்பட்டுள்ளன.நாசாவின் லேண்ட் சாட் செயற்கைக்கோள் புகைப்படங்களை வைத்து, நிலப்பகுதியின் பசுமை தன்மையை மதிப்பிட்டனர்.

இது குறித்து இமயமலையின் பனிப்பாறைகள் மற்றும் நீர் அமைப்புகள் தொடர்பாக பணிபுரியும் பிற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் தாவரங்களின் விரிவாக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

''வெப்பமான மற்றும் ஈரமான பருவ நிலையில் என்ன நடக்குமோ அவ்வாறே இந்த ஆராய்ச்சியின் முடிவுகளும் உள்ளன. இயற்கையாக நிகழும் பருவநிலை மாற்றங்களும் ஆராய்ச்சி முடிவுகளும் பொருந்துகின்றன'' என இந்த ஆராய்ச்சி யில் ஈடுபடாத நெதர்லாந்தை சேர்ந்த பேராசிரியர் வால்டர் இம்மர்சீல் கூறுகிறார்.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் பனிப் பொழிவு இல்லாத மாதங்களில் தாவரங்கள் வளர நல்ல சூழல் அமைகிறது. மேலும் பனிபொழிவு ஏற்படும் மிக முக்கியமான உயரத்தில் தாவரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த மாற்றத்திற்கான காரணங்கள் ஆராய்ச்சியில் கண்டறியப்படவில்லை. இமய மலையின் சுற்றுசூழல் அமைப்பை பொறுத்தவரை பருவநிலை மாற்றத்தால் அங்கு தாவரங்கள் பாதிக்கப்படும் என வேறு ஆராய்ச்சிகள் சில கூறுகின்றன.'' வெப்பநிலை அதிகரிக்கும் போது நேபாளம் மற்றும் சீனாவின் நிலப்பகுதிகளில் மரங்கள் வளர்ச்சி விரிவடைவதைக் காணமுடியும்'' என நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணை பேராசிரியர் அச்யூத் திவாரி கூறுகிறார்.

குறைந்த உயரத்தில் உள்ள மரங்களுக்கு என்ன நடக்கிறதோ, அதேதான் வெப்பநிலை அதிகரிக்கும்போது உயரத்தில் உள்ள மரங்களுக்கும் நிகழும்.இமய மலையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வேறு சில விஞ்ஞானிகளும் தாவரங்களின் பரவல் விரிவடைந்திருப்பதைக் காட்டும் இந்த புகைப்படத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இமயமலையில் ஒரு காலத்தில் பனிப்பாறைகள் நிறைந்த இடங்களில் கூட தற்போது பசுமையாக செடிகள் வளர்ந்துள்ளன என தாவர சூழலியலாளர் எலிசபெத் பெயர் தெரிவித்துள்ளார்.பல ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த பனிப் பாறைகள் இருந்த சில இடங்களில், இப்போது குப்பைகள் மூடப்பட்ட நிலையில் கற்பாறைகள் உள்ளன, அவற்றில் பாசிகள் மற்றும் பூக்கள் கூட காணப்படு கின்றன.இந்த ஆராய்ச்சியின் மூலம் , பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகுவது தாமதமாகுமா அல்லது பனிப்பாறைகள் மிக விரைவாக உருகுமா என்ற முக்கியமான கேள்வி எழுந்துள்ளது? " என்று ஆண்டர்சன் கூறுகிறார்.ஆனால் எட்டு நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் ஹிந்து குஷ் இமயமலையை, 140 கோடி மக்கள் தண்ணீர் தேவைக்காக சார்ந்து வாழ்கின்றனர்.

- விடுதலை ஞாயிறு மலர் 22 2 20

வியாழன், 5 மார்ச், 2020

மனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு

பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான எதிர்காலத்தில் மனிதர்கள் வாழக்கூடிய விண்வெளியை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை பற்றி விரிவாக பார்ப்போம்.

பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 2-18  என்றழைக்கபடும் எக்சோபிளானட் கிரகமானது பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடையே உள்ளது.

இது பூமியை விட கணிசத்தில் பெரியதாகவும் நெப்டியூனை விட சிறியதாவும் காணப்படுகிறது. இதன் ஆரம் 2.6 மடங்கு மற்றும் பூமியின் நிறை 8.6 மடங்கு ஆகும். 2-18 கிரகமானது 2-18 என்ற சிவப்பு விண்மீனை சுற்றி வரும் நிலையில் மனித வாழ்விடத்திற்கு சரியான தூரத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வளிமண்டலத்தின் அளவும், அதன் அடிப்பகுதி நிலை களும் தெரியாத நிலையில் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நிறைந்த நீர் நீராவி இருப்பதாகவும் வானியலாளர்கள் கண் டறிந்துள்ளனர்.

எக்சோபிளானட் கிரகத்தில் ஹைட்ரஜன் உறைகளின் தடிமன் மற்றும் ஆழத்தினை கண்டறிந்ததில் அதன் அதிகபட்ச அளவு 6 சதவீதமாகும் என்று உறுதி செய்துள்ளனர். வளிமண்டலத்தில் கணிசமான அளவு  நீராவியுடன் ஹைட்ரஜன் அதிகம் இருப்பதால் அம்மோனியா,மீத்தேன் போன்ற வேதிப்பொருட்களின் அளவு குறைவாகவே இருக்கும்.

இதற்கு உயிரியல் செயல்பாடுகளே காரணமாக இருக்க முடியும் என்பதை ஆராய்ந்து வருகின்றனர். வளிமண்டலத்தின் கலவை மற்றும் கட்டமைப்பை விரிவுபடுத்தி கட்டுப்படுத்து வதற்கு வளிமண்டல கலவை, அளவு மற்றும் நிறையை அவதானித்து வந்துள்ளனர்.

எண் மாடலிங் மற்றும் புள்ளிவிவர முறைகளை பயன்படுத்தி வளிமண்டலத்தின் உள் அமைப்பு மற்றும் வெப்ப இயக்கவியலை கட்டுபடுத்தினர்.

எக்சோபிளானட் 2-18 கிரகமானது மனிதர்கள் வாழும் நிலைகளை கொண்டிருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் எதிர்கால அவதானிப்புபடி ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் தங்களது கண்டுபிடிப்பு பற்றி மேற்கொண்டு தெரிவிக்கிறோம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு 5 .3.20

பூச்சிகளை உட்கொள்ளும் தாவரம்!

பூச்சியுண்ணும் தாவரங்கள் ஊனுண்ணித் தாவரங்கள்  என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சிறு விலங்குகள், பூச்சிகள் அல்லது புரோட்டோசோவாக்களையோ உட்கொள் வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுகின்றன. இத்தா வரங்கள் பெரும்பாலும்  பூச்சிகளையும் கணுக் காலிகளையுமே குறிவைக்கின்றன. பூச்சிகளைப் பிடிப்பதற்கு ஏற்றபடி இத்தாவரங்கள் சிறப் பான வடிவங்கள் மற்றும் பாகங்களைப் பெற்றுள்ளன.

இத்தாவரங்களின் இலைகள் அல்லது இலைகளின் பகுதிகள் இந்த சிறப்பு அமைப்பு களைப் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து ஒரு வகையான செரிப்பு நீர் சுரந்து பூச்சிகளைச் செரித்துவிடுகிறது.

ஜாடிச் செடிகளில் ஒரு வகையான திரவம், தண்ணீர் உள்ளது. இதில் விழும் பூச்சிகளைத் தாவரம் சீரணித்துக்கொள்கிறது. பொதுவாக ஊட்டச்சத்துகள் (குறிப்பாக நைட்ரஜன்) இல்லாத பகுதிகளிலேயே (சதுப்பு நிலங்களில்) இத்தாவரங்கள் வளர்கின்றன.

எனவே, பூச்சிகளின் உடலிலுள்ள புரதத்திலிருந்து நைட்ரஜனை  பெறுகின்றன.

ஹூக்கர் என்ற தாவரவியல்  அறிஞர் பூச்சிகளைச் செரிப்பது என்பது  விலங்குகளைப் போல தாவரங்களிலும் நடக்கிறது.

மனிதனில் வயிற்றில் சுரக்கும் நொதிகள் போல தாவரங் களிலும் சுரக்கிறது என்றார்.

பூச்சி உண்ணும் தாவரங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இவ்வகைத் தாவரங்கள் ஆறு குடும்பங்களை உள்ளடக்கி 16 பேரினத் துடன் சுமார் 450 வகைச் செடிகளையும், 30-க்கு மேற்பட்ட கலப்பினச் செடிகளையும் கொண் டுள்ளது.

இந்தியாவில் மூன்று குடும்பங்களும், நான்கு பேரினங்களும் 39 வகைச் செடிகளும் உள்ளன. இத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கப் பின்பற்றும் முறைகள் மிகவும் வியப்பானவை.

செரிக்க வைக்கும் நொதி அல்லது பாக்டீரியா ஆகியவற்றைக்கொண்ட உருண்டை இலைகள் மூலம் பிடித்தல்; பசை போன்ற நீர்மத்தை இலையில் கொண்டிருப்பதன் மூலம் இலையின் மீது அமரும் உயிரைப் பிடித்தல்; இலைகளை வேகமாக அசைத்துப் பிடித்தல்; வெற்றிடத்தை ஏற்படுத்தி இரையை உறிஞ்சிப் பிடித்தல்; செரிமான உறுப்புக்கு இரையைச் செலுத்தும் வண்ணம் உள்

நோக்கிய முட்களைப் பயன்படுத்திப் பிடித்தல் போன்ற வகைகளில் பூச்சிகளை உண்ணுகின்றன.

- விடுதலை நாளேடு 5.3.20

செவ்வாய், 3 மார்ச், 2020

விண்வெளியில் புதியகோள் கண்டுபிடிப்பு

வாசிங்டன்,மார்ச் 2, பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான புதிய கோளை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  பூமியிலிருந்து 124 ஆண்டுகள் தொலைவில் உள்ள ரி2-18தீ  என்றழைக்கப்படும் எக்ஸோபிளானட் கோளானது பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடையே உள்ளது. இது பூமியை விட  பெரியதாகவும் நெப்டியூனை விட சிறியதாவும் காணப்படுகிறது.

இந்த கோளானது ரி2-18 என்ற சிவப்பு நடசத்திரத்தை சுற்றி வரும் நிலையில் மனித வாழ்விடத்திற்கு சரியான தூரத்தில் இருப்பதாகவும் வளிமண்டலத்தின் அளவும், அதன் அடிபகுதி நிலைகளும் தெரியாத நிலையில் வளிமண்டலத்தில் அய்ட்ரஜன் நிறைந்த நீர் நீராவி இருப்பதாகவும் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். எக்ஸோபிளானட் ரி2-18தீ கோளானது மனிதர்கள் வாழும் நிலைகளை கொண்டிருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் எதிர்கால அவதானிப்புபடி ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் தங்களது கண்டுபிடிப்பு பற்றி மேற்கொண்டு தெரிவிக்கிறோம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

- விடுதலை நாளேடு, 2.3. 20

ஞாயிறு, 1 மார்ச், 2020

பருவநிலை மாற்றம் என்றால் என்ன?

புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறு கின்றனர்.

மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன.

பருவநிலை மாற்றம் என்றால் என்ன?

பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ்.ஆனால் அது கடந்த காலங்களில் குறைவாகவும், அதிகமாகவும் இருந்து வந் துள்ளது.

பருவநிலையில் இயற்கையாகவே மாற் றங்கள் இருந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை முன் னெப்போதுமில்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர்.

சூரியனின் ஆற்றலில் குறிப்பிட்ட பங்கை பூமியின் வளிமண்டலம் எவ்வாறு உட்கிர கித்து கொள்கிறது என்பதை விளக்கும் பசுமை இல்ல விளைவுடன் இது இணைத்து பார்க்கப்படுகிறது.

பூமியின் நிலப்பரப்பிலிருந்து மீண்டும் விண்வெளிக்கு திரும்ப அனுப்பப்படும் சூரிய னின் ஆற்றல், பூமியின் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களால் உறிஞ்சப்பட்டு அனைத்து திசைகளிலும் மீண்டும் உமிழப்படுகிறது.

இதன் காரணமாக, பூமியின் வளிமண்ட லத்தை ஒட்டிய பகுதிகள் மட்டுமின்றி, பூமியிலுள்ள நிலப்பரப்பின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. இந்த செயல்முறை மட்டும் தொடர்ந்து நடைபெறவில்லை என்றால், பூமியின் வெப்பநிலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு மனிதர்கள் உள்ளிட்ட உயிரி னங்கள் எதுவும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இயற்கையாக சூரிய ஆற்றலை கொண்டு பூமியின் வளிமண்டலத்தில் நடக்கும் செயல் முறையோடு, பூமியின் நிலப்பரப்பில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்தின் மூலம் வெளியிடப்படும் வாயுக்களும் கூடுதலாக இணைந்து அதிகளவிலான ஆற் றல், பசுமை இல்ல விளைவின்போது சிதறடிக்கப்படுவதால் பூமியின் வெப்பநிலை உயருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பருவநிலை மாற்றத்திற்கான

ஆதாரம் என்ன?

தொழிற்புரட்சி பரவலாவதற்கு முன்ன தாக இருந்ததை விட தற்போது பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதி கரித்துள்ளதாக உலக வானிலை மய்யம் கூறுகிறது.

பூமியின் மிகவும் வெப்பம் மிக்க ஆண்டு களின் பட்டியலில் முதல் 20 இடங்களை, கடந்த 22 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளே ஆக்கிரமித்துள்ளன. 2015 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுகளும் அதில் அடக்கம்.

2005 முதல் 2015 வரையிலான பத்தாண்டு காலத்தில் உலகம் முழுவதும் கடல் நீரின் மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 3.6 மில்லி மீட்டர் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது.

நீரின் வெப்பநிலை அதிகரிக்க, அதிகரிக்க அதன் பரும அளவு அதிகரிப்பதே இது போன்ற மாற்றங்களுக்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது.

இருப்பினும், பனிப்பாறைகள் உருகுவதே கடல்நீர் மட்ட உயர்வுக்கு முக்கிய காரணமாக தற்போது பார்க்கப்படுகிறது. துருவ பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலுள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகி வருகின்றன.

1979 முதல் இதுவரையிலான கால கட்டத்தில் துருவ பகுதியில் உள்ள கடலில் உள்ள பனிப்பாறைகளின் இருப்பில் கடுமையான வீழ்ச்சி காணப்படுகிறது.

மேற்கு அண்டார்டிக்காவில் பனிக் கட்டிகள் உருகி வருவதையும் செயற்கைக் கோள் தரவு காட்டுகிறது. சமீபத்திய ஆய்வில் கிழக்கு அண்டார்டிகாவும் தனது பனிப்பாறைகளை இழக்கத் தொடங்கியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

மாறிவரும் காலநிலை ஏற்படுத்தும் தாக் கங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளிலும் காணப்படுகின்றன. தாவரங்கள் முன்ன தாகவே பூ விடுவது மற்றும் பழம் விளையும் பருவம்/ காலம் மற்றும் விலங்குகளின் வாழிடங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

- விடுதலை நாளேடு 20 2 20