சனி, 29 பிப்ரவரி, 2020

"காற்றில் இருந்து தயாரிக்கப்படும்" புரோட்டீன் உணவு

காற்றில் இருந்து புரோட்டீன் தயாரிக்கும் உத்தியை ஃபின்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பத்தே ஆண்டுகளில் சோயாவுக்கு (புரதச்சத்து நிறைந்த உணவு) போட்டியாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நீரில் இருந்து மின்சாரம் மூலம் பிரிக்கப்படும் ஹைட்ரஜனுடன், மண் பாக்டீரியாவை சேர்ப்பதன் மூலம் இந்தப் புரோட்டீன் உருவாக்கப்படுகிறது.

இதற்கான மின்சாரம் சூரியசக்தி அல்லது காற்றாலை மூலம் கிடைக்கும் என்றால், பசுமைக்குடில் வாயு (Greenhouse gas) உற்பத்தி எதுவும் இல்லாமல் உருவாக்கப்படும் உணவாக இது இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கனவு நனவாகும் போது, விவசாயம் தொடர்பான பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உலகிற்கு உதவக் கூடியதாக இது இருக்கும்.

கடந்த ஆண்டு ஹெல்சின்கியின் புறநகர் பகுதியில் உள்ள சூரியசக்தி உணவு தயாரிப்பு முன்னோடி நிலையத்திற்கு நான் சென்றிருந்த போது, அதை விரிவாக்கம் செய்ய ஆராய்ச்சி யாளர்கள் நிதி திரட்டிக் கொண்டிருந்தனர்.

தங்களுக்கு 5.5 மில்லியன் யூரோக்கள் முதலீடாகக் கிடைத்துள்ளது என்று இப்போது அவர்கள் கூறுகின்றனர். மின்சாரத்துக்கான செலவின் அளவைப் பொருத்து, தசாப்தத்தின் இறுதிக்குள் இதன் உற்பத்தி விலை சோயா உற்பத்தி விலைக்கு இணையாக மாறிவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

2025 ஆம் ஆண்டுக்குள்ளேயே கூட இது சாத்தியமாகலாம் என்கின்றனர்.

சோலெயின் எனப்படும் - புரதம் நிறைந்த மாவு தயாரிப்பதற்கான சில தானியங்களை நான் சாப்பிட்டுப் பார்த்தேன். அதில் எந்த ருசியும் இல்லை. அப்படி உருவாக்குவதற்குத்தான் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

எல்லா வகையான உணவுகளுடனும் சேர்க்கக் கூடிய ருசியற்ற கூடுதல் சேர்க்கை உணவுப் பொருளாக இது இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

நிலக்கடலை, அய்ஸ்கிரீம், பிஸ்கட்கள், பாஸ்டா, நூடுல்ஸ், சாஸ் அல்லது ரொட்டியுடன் சேர்ப்பது போன்று இது பயன்படுத்தப்படலாம்.

செயற்கை முறையில் மாமிசம் அல்லது மீன் இறைச்சி உருவாக்குவதற்கான அடிப்படைப் பொருளாக, திசுக்கள் வளர்வதற்கான தளமாக இதைப் பயன்படுத்தலாம் என்றும் கண்டுபிடிப் பாளர்கள் கூறுகின்றனர்.

மழைக் காடுகளில் வளர்க்கப்படும் சோயாவுக்கு பதிலாக இதனை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

திட்டமிட்டபடி முயற்சிகள் வெற்றிகரமாகத் தொடர்ந்தால், உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, பல ஆண்டுகள் முன்னதாகவே புரோட்டீன் உற்பத்தியை அதிகரித்துவிட முடியும். ஆனால், இது நடக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு. செயற்கை முறையிலான உணவு தயாரிப்பை நோக்கிய பல ஆய்வுத் திட்டங்களில் இதுவும் ஒன்று.

- விடுதலை நாளேடு 6 2 20

120 நாட்களுக்கு மேல் உணவருந்தாமல் உயிர்வாழும் உயிரினம்!

பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் பனிக்கரடி. பெரும்பா லும் நிலத்தில் பிறந்தாலும் பனிக்கட்டிகள் தான் இதன் இருப்பிடம். பருவநிலை மாற்றத்தால் பனிக்கரடி இருப்பிடங்கள் காணாமல் போவது துயரம்.

இந்நிலையில் பனிக்கரடிகளுக்கே உரித்தான  வினோத  வழக்கம் ஒன்றை மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பொதுவாக பனிக்கரடிகள் உறைபனி வரு வதற்கு முந்தைய மாதங்களில், அளவுக்கு அதிகமாக இரைகளை உண்டு கொழுத்து விடுகின்றன. கடுமையாக பனி கொட்ட ஆரம்பித்ததும் தங்களின் குகைகளுக்குள் போய் ஒடுங்கிக் கொள்கின்றன. இந்த நிகழ்வை ‘ஹைபர்னேஷன்’ என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். குகைக்குள்ளேயே நீண்ட உறக்கம், அசைவில்லாமல் படுத்திருப்பது என்று நான்கு மாதங்களைக் கழித்து, இளைத்துப் போய் வெளியே வரும். அந்த நான்கு மாதங்களில், உயிர் வாழ அது, உடலில் உள்ள மிகையான கொழுப்பை பயன்படுத்திக் கொள்ளும்.

விஞ்ஞானிகளுக்கு ஒரு ஆச்சரியம் என்னவெனில், பனிக் கரடி தசைகளுக்கு வேலை கொடுக்காமல் பல மாதங்கள் இருந்தாலும், தசைகளின் செயல்பாடு பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாகவே இருப்பது எப்படி என்பது தான்.

அண்மையில்,அமெரிக்காவிலுள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்,  ஹைபர் னேஷனில் இருக்கும் வழக்க முள்ள சில அணில், எலி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளை ஆராய்ந்தனர். அதில், அவற்றின் மரபணுவில் உள்ள தனித் தன்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.

இதை ,  பூமியிலிருந்து செவ்வாய் போன்ற கோள்களுக்கு பயணிக்கும் விண்வெளி வீரர் கள், பல மாதங்கள் அசையாமல் படுத்திருக்க நேரும் நோயாளிகள் போன்றவர்களின் தசைகளில் பாதிப்பு களைத் தடுக்கப் பயன்படுத்தலாம் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

- விடுதலை நாளேடு 6 2 20

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

தேசிய அறிவியல் தினம் (பிப்.28ஆம் தேதி)

தேசிய அறிவியல் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி பள்ளிகள், அறிவியல் மய்யங்களில் நிகழ்ச் சிகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது இந்தாண்டு கொண்டாட்டத்தினுடைய மய்யக் கருத்தாக உள்ளது.

"ராமன் விளைவு" கண்டறியப் பட்ட பிப்ரவரி 28-ஆம் தேதியே தேசிய அறிவியல் தினமாக கொண் டாடப்படுகிறது.  இந்த தினம், கடந்த 1986-ஆம் ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புகழ்மிக்க அறிவியலாளரான சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவை கண்டுபிடித்ததால் 1930-இல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

டில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெறும் விழாவில் அறிவியல் துறையில் மகளிரின் பங்கு குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு முக்கிய பெண் அறிவியலாளர்களுக்கு பரிசு களை வழங்கி கவுரவிக்கிறார்

தேசிய அறிவியல் தினம் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:

1. தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்பத்திற்கான கவுன்சில் கடந்த 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவிக்க வேண் டும்  என கேட்டுக் கொண்டது. இதை  மத்திய அரசும் ஏற்று, அன்று தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது.

2. அறிவியல் மற்றும் அதன் பயன்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதுதான் இந்த தேசிய அறிவியல் தினத்தின் நோக்கமாகும்.

3. முதன் முறையாக 1987, பிப் ரவரி 28-ஆம்தேதி தேசிய அறி வியல் தினம் கொண்டாடப்பட்டது.

4. நடப்பாண்டில் 'அறிவியலில் பெண்களின் பங்கு' என்பது மய்யக் கருத்தாக இருக்கிறது.

5. அறிவியல் மய்யங்கள், அறிவியல் ஆய்வகங்களில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை என்.சி.எஸ்.டி.சி. எனப்படும் அறிவியல், தகவல் தொழில் நுட்பத் திற்கான கவுன்சில் கவ னிக்கிறது.

6. அறிவியலை செம் மைப்படுத்துதலுக்காக அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் பரிசுகளை வழங்கி வருகிறது.

7. ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக் கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதனை கண்டுபிடித்ததால் சர் சி.வி. ராம னுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-இல் வழங்கப்பட்டது.

8. நாட்டிற்கு பெருமை தேடித் தந்ததால் சர்  சி.வி. ராமனுக்கு 1954-இல் பாரத ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

- விடுதலை நாளேடு 28. 2.20

சனி, 8 பிப்ரவரி, 2020

பூமியில் சூரியனை விட மிகப்பழைமையான திடப்பொருள்

நியூயார்க், ஜன. 24- கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம். கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதியே பேரண்டம். பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டங்களில் ஒன்றுதான் பால்வெளி மண்டலம். சூரியன் உட்பட நம்ம கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பால்வெளி மண் டலத்தைச் சார்ந்தவை. பால் வெளியும் மிக அடர்த்தியான விண்மீன்களின் தொகுதிதான்.

அவற்றுள் பல விண்மீன்கள் சூரி யனை விட பல மடங்கு பெரியது. மிக நீண்ட தொலைவில் தூரத்திலே இருப்ப தாலே நம் கண்களுக்கு வெறும் புள்ளி கள் போன்று தெரிகின்றன.

ஒரு மிக சக்திவாய்ந்த வெடிப்பின் காரணமாக திடீரென பிரகாசத்தில் பெரிதும் அதிகரிக்கும் ஒரு நட்சத்திரம், அதன் நிறையை வெளியேற்றுகிறது. இந்த நட்சத்திரம் சூப்பர்நோவா என அழைக்கப்படுகிறது. விஞ்ஞானத்தின் படி, ஸ்டார்டஸ்ட் எனும் விண்மீன் துகள்கள் ஒரு சூப்பர்நோவா வெடிப்பி லிருந்து மீதமுள்ள துகள்களால் ஆனது.

விண்வெளியில் மிதக்கும் தூசி மற் றும் வாயு ஒன்றுடன் ஒன்று மோதி வெப்பமடையும் போது விண்மீன்கள் உருவாக்கப்படுகின்றன. அது மட்டு மல்லாது அறிவியலின் படி விண்மீன்கள் என்றென்றும் பிரகாசிப்பதில்லை. நம் மைப் போல, மற்ற எல்லா உயிரினங் களைப்போலவே, அவை பிறக்கின்றன, வாழ்கின்றன, பின்னர் இறக்கின்றன.

மில்லியன் கணக்கான ஆண்டுகளாக எரியும் நட்சத்திரங்களின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர் அதன் துகள்கள் விண்வெளியில் வீசப்படுகின்றன. நமது பால்வெளியில் ஆற்றல் மூலமாக இருக் கும் சூரியன் உருவாவதற்கு முன்னதா கவே விண்மீன்கள் உருவாகியிருந்தன எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், பூமியில் விழுந்த விண் கல்லினுள் இருந்த விண்மீன் துகள்கள் தான் பூமியின் மிகப்பழமையான திடப் பொருள் என ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

வானியற்பியலில், அண்டக்கதிர் (காஸ்மிக் கதிர்கள்) என்பது குறிப்பாகச் சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய ஓர் உயர்-ஆற்றல் பெற்ற அணுத் துகள் ஆகும். காஸ்மிக் கதிர்கள் உற்பத்தி மூலக்கூறுகள் வான்வெளி துகள்களில் எவ்வளவு உள்ளதை என் பதை கணிப்பதன் மூலம் அவை எவ் வளவு ஆண்டுகள் பழமையானது என கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வகையில், 1969ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் விழுந்த முர்சிசன் என்ற விண்கல்லை ஆய்வு செய்த அமெரிக்கா ஆய்வாளர்கள் அதில் சூரியனுக்கும் முந் தைய துகள்கள் உள்ளதாக கண்டறிந்து உள்ளனர்.

அவற்றில் உள்ள துகள்கள் 4.6 முதல் 4.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தை யவை எனவும் அவற்றுள் உள்ள மற்றும் சில துகள்கள் சுமார் 5.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் முந்தையது எனவும் கண்டறிந்துள்ளனர். இவை பூமியில் உள்ள திடப்பொருட்களில் மிகவும் பழமையானது எனவும் சூரியனுக்கும் முன்பு உருவானதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அறிவியலாளர்களின் கருத்துப்படி சூரியனின் வயது 4.603 பில் லியன் ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 24 .1.20