ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

கருந்துளை’ பற்றிய அய்ன்ஸ்டீனின் கணக்கு சரி!



அன்றே சொன்னார் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன். அது இன்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. கருந்துளை எனப்படும் காலாவதியான நட்சத்திரம், தன்னைச் சுற்றியுள்ள எதையும் கபளீகரம் செய்யுமளவுக்கு, அசாதாரணமான ஈர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கும் என்பது அய்ன்ஸ்டீனின் கணிப்புகளுள் ஒன்று.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளிகற்றைகளைக் கூட கருந்துளை ஈர்த்துக் கொள்ளும் என்றார் அவர்.

அண்மையில், நமது பால் வீதியின் மத்தியில் உள்ள ‘சாஜிட் டாரியஸ்- - ஏ’ என்ற கருந்துளை அதைச் செய்து காட்டியிருப்பதாக அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு மய்யத்தின் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்திஉள்ளனர்.

சாஜிட்டாரியஸ் - ஏ கருந்துளையை சில நட்சத்திரக் கூட்டங்கள் அதிவேகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்றான, ‘எஸ் 2’ என்ற நட்சத்திரம் சாஜிட்டாரியஸ் - ஏவை ஒருமுறை வலம் வர, 15 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.

கடந்த மே, 19 அன்று எஸ் 2 நட்சத்திரம் கருந்துளைக்கு அருகா மையில் கடந்து போனது.

அப்போது அது வெளிவிடும் ஒளியை கருந்துளை அப்படியே ஈர்த்துக் கொண்டதை அய்ரோப்பிய விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் கண்டுள்ளனர். இதனால் அய்ன்ஸ்டீனின் கருந்துளை பற்றிய முக்கியமான கணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 23.8.18

உயிருள்ள செயற்கை இதயத்தை உருவாக்க முடியுமா?



இதய நோய்களுக்கான மருந்துகள் சோதித்துப் பார்க்க, எலி போன்ற விலங்குகளின் இதயத்தைத் தான் மருத்துவர்கள் பயன்படுத்துவர். ஆனால், எலியின் இதயத்தில் வேலை செய்த மருந்துகள், எல்லா வேளைகளிலும் மனித இதயத்தில் வேலை செய்யும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

எனவே, ஹார்வர்டு பல்கலைக்கழக மருத் துவர்கள், மனித இதயத்தை ஆய்வகத்தில் உரு வாக்க முடியுமா என சோதித்து வருகின்றனர்.

அண்மையில், ஹார்வர்டு மருத்துவர் குழு, ஜெலாட்டின் போன்ற நுண் பொருட்களை வைத்து, இதயத்தின் இடது பக்க அறையைப் போன்ற வடிவத்தை உருவாக்கினர்.

அந்த வடிவத்தை சாரமாக வைத்து, நிஜ மனித இதயத்திலிருந்து செல்களை ஆய்வகத்தில் வளர்த்தனர்.

சில வாரங்களில், ஜெலாடின் கரைந்து போகவே, இதய செல்கள் கூட்டாக வளர்ந்து துடிக்க ஆரம்பித்தன.

இது ஒரு மருத்துவ சாதனை என அறிவியல் இதழ்கள் புகழாரம் சூட்டியுள்ளன. விரைவில், இதே போல இதயத்தை செய்து மருந்துகளை சோதிக்க இருப்பதாக ஹார்வர்டு விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 23.8.18