திங்கள், 30 நவம்பர், 2015

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?வங்கக் கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ கத்தின் கரையோர மாவட்டங் களில் பரவலாக மழை இருக்க லாம் என்று டிவி அல்லது ரேடி யோவில் வானிலை அறி விப்பின் போது தெரிவிப்பார்கள். மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?
தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று வியாபித்துள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில் சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும். ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.

ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத்தில் காற்றழுத்தம் மிக அதிகமாக இருக்கும்.வேறிடத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம். காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக முக்கியம். வானிலைத் துறையினர் காற்றழுத்தத்தை அளக்க மேலே சொன்ன (சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு என்ற) கணக்கை பின்பற்றுவதில்லை.அவர்கள் கணக்குப்படி கடல் மட்டத்தில் சராசரி காற்றழுத்தம் 1013 மில்லி பார். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவு மானி வைக்கப்படுகிறது.

காற்றழுத்தமானிகள் தெரிவிக்கின்ற எண்ணற்ற தகவல் களை வைத்து காற்றழுத்த நிலவரப் படம் தயாரிப்பார்கள். எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரி அழுத்தம் இருக்கிறதோ அந்த இடங்களை எல்லாம் சேர்த்து கோடு போடுவார்கள். இதற்கு  lsobar என்று பெயர். மேலே உள்ள படத்தில்  எல் என்ற எழுத்து  Low என்பதைக் குறிப்பதாகும். எச் என்பது  High என்பதைக் குறிப்பதாகும்.படத்தில் 1008 என்று குறிப்பிடப்பட்ட கோட்டைக் கவனிக்கவும். அக்கோடு அமைந்துள்ள இடங்கள் அனைத்திலும் காற்றழுத்தம் அந்த அளவில் இருக்கிறது என்று அர்த்தம். ஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்க, அதைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் அதிகமாக இருக்க நேரிடலாம். நட்ட நடுவே காற்றழுத்தம் குறைவாக உள்ள இடத்தை  Low  என்று குறிப்பிடுவார்கள். நேர் மாறாக நட்ட நடுவே ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அது  High.

மேடாக இருக்கும் இடத்திலிருந்து தண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கியவையாக வருகின்றன. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகிற்து.. ஆகவே கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் மழை பெய்யும் வாய்ப்பு தோன்றுகிறது.

-விடுதலை,19.11.15
.

புதன், 11 நவம்பர், 2015

அகழ்வாராய்ச்சியில் நாய்களைப் பற்றிய தகவல்


- மு.வி. சோமசுந்தரம்
நாய்கள், மனிதர்களின் சிறந்த நண் பர்கள் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட  உண்மை. அதற்கு மேலும் நாய்களுக்கு சிறப்பு உண்டு. உயிரின வளர்ச்சி வர லாறு, அகழ்வாய்வு மூலம் கண்ட றியப்பட்டவை நாய்களைப் பற்றி பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது. இன்று நாம் நேசிக்கும் நாய் 20000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தில்லை.
எப்பொழுது, எங்கே, முதல் முதலாக நாய் என்ற மிருகம் பற்றி அறிய வந்தது? அவை முதலில் உணவுக்காக பயன்படுத்தப்பட்டதா? வளர்ப்பு நண்பனாக வைத்திருந் தார்களா? வேட்டையாடும் திறமை கண்டு வளர்த்தார்களா? இந்த கேள்விகள் விலங்கியல் துறையிடையே முக்கியத்துவம் பெற்றன.
நாய் இனம் வேட்டையாடும் முரட்டு நாய் ஜேக்கால் (Jackal) சீனவழி வந்தவை என்ற கருத்து சரியல்ல என்பதாயிற்று. சாம்பல் நிற ஓநாய் (Wolf) இனத்தின் வழி வந்தவை என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அடுத்து, நாய்கள் முதலில், சீன நாட்டிலா, தூரகிழக்கு நாட்டிலா, ஆப்பிரிக்காவிலா செல்லப் பிராணி யாக வளர்க்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. புதிய கற்காலத்தில்  நாய்கள் முக்கிய பங்கு வகித்தன. 10000 ஆண்டு களுக்கு முன்னதாக, மனித வாழ்க் கையில் நாய்கள் சிறந்த காவலாளியாக, மதச்சடங்குகளில் பலியிடுவதற்காக, உடலுக்குத் தேவையான புரதசத்தை பெறுவதற்கான மிருகம் என்ற பங்கை வகித்து வந்தன. இந்த செய்தி சீனா, ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட எலும் புக் கூடுகளின் வாயிலாக அறியப்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் ஓநாய் (Wolf)   இன வழியாக இவை உற்பத்தி அடைந்தன என்றும், பயிர் தொழில், வேட்டையாடுதல் தொழிலில் ஈடுபட்டவரி டையே நாய்கள் வளர்ச்சி யடைந்திருக்க முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. லாஸ்ஏன்ஜல்ஸ் கலி போர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட்வயன், வளர்ப்பு நாயின் டி.என்.ஏ. கிழக்கு நாடுகளின் ஓநாயினுடைய டி.என்.ஏ வுடன் ஒத்து உள்ளதாகக் கூறுகிறார். விக்டோரியா பல்கலைக்கழக அகழா ராய்ச்சிப் பேராசிரியர் கிராக்போர்ட் (Crockford) கூறுவது; நாய்களை புதைக்கும் பழக்கம், ஆன்மீக சிந்தனையுடன் நாய் தொடர்புள்ளதை காட்டுகிறது. அடுத்து காவலுக்கு பயன்படுத்தும் பழக்கம் வந்துள்ளது. வேட்டைக்கு அன்று துவக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
மக்கள் கலாச்சாரத்தோடு நாய் எப்படி தொடர்புடையதாக இருந்தது என்பதைப் பற்றிய செய்தி வருமாறு:
தென் அமெரிக்காவின் பெருநகரத் தின் கல்லறைகளில், 80 நன்கு பதப் படுத்தப்பட்ட நாய்கள் அவற்றின் சொந் தக்காரருடன் புதைக்கப்பட்டிருந்தது. அழகான கம்பிளி துணியால் மூடப்பட்டு அவற்றின் மூக்கின் அருகில் மீன் வைத்துள்ளனர். அதன் எலும்பு காணப்படுகிறது. அவை குட்டியிலிருந்து பெரிய நாய்களாக உள்ளன. பண்டய எகிப்தியர் நாயை கடவுளாக மதித்தனர். இந்த உலகத்திற்கும், இறந்த பின் மறு உலகத்துக்கும் துணைவனாக கருதப் பட்டது. சில புதைக்கப்பட்ட நாய்களுடன் ஒரு கிண்ணமும் உள்ளது. ரோம கலாச்சாரத்தில் நாயை மனிதருக்குக் கொடுக்கும் மதிப்போடு மதிக்கும் பழக்கம் இருந்தது.
தேவதைகளை திருப்திபடுத்த நாயை பலியிடும் பழக்கம், மதத்தின் அடிப்படையில் நடைபெற்றது. கிரேக்க நாட்டில் ஸ்பார்டன் பகுதி மக்கள் போரில் வெற்றிபெற நாயை பலியிட் டனர். குழந்தை பிறந்த பிறகு, ஒருவர் இறந்த பிறகு தூய்மை ஏற்பட நாயை பலியிடும் பழக்கம் கிரேக்கரிடம் இருந்தது. இதைப்போலவே ஹங்கேரி நாட்டில் நாய்குட்டிகளை சிறு பானைகளில் வைத்து புதைத்துள்ளனர். தீய சக்திக்களை நீக்குவதற்கு இந்த பழக்கம்   இருந்தது. இங்கிலாந்தில் உள்ள ரோம நாட்டு கட்டடங்களில் சுடுமண் ஓடுகளில் நாய்களின் பாதங்களை பதிய வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.
உணவுக்காக நாய்
பழக்கத்தின் காரணமாக, விருப்பத் தின் காரணமாக அல்லது தேவையின் காரணமாக நாயை உணவுக்காக பயன் படுத்தும் கலாச்சாரம் இருந்து வந்துள் ளது. உலோக காலத்தில் (450 - 100 BC)உணவுக்காக நாயை வளர்த்து வந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எளிதில் புரத உணவுப்பொருளை பெறு வதற்கு நாய் உணவு பயன் பட்டது. சில நேரங்களில் விழாக்காலங்களிலும் நாய் உணவு சாப்பிட்டு வந்தனர்.
ஆத்மாவுக்கு பாதுகாவலன்
பழங்கால மக்கள், இறந்த பின் மறு உலகத்தில் நாய் களை சந்திக்க முடியும் என்று நம்பினர். ரிக்வேதத் திலும் , கிரேக்க, ரோம நாட்டு கதைகளிலும் இது பற்றி கூறப்பட்டுள்ளது. பல கலாச்சாரங்களில் ஆத்மா வுக்கு வழிகாட்டியாக நாய் உள்ளதாகக் கருதப்பட்டது.
(‘ARCHAEOLOGY’ (அகழ் ஆராய்ச்சி) அக்டோபர் 2010 இதழிலிருந்து வழங்கப்படும் செய்தி)
இந்தியாவிலும் நவீன கற்கால மனிதர்கள் இறந்தவர்களை குழியில் புதைக்கும் வழக்கத்தில் இருந்தனர். சில சமயங்களில் இறந்தவர்களை புதைக்கும் போது அவருடைய நாயுடன் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. காஷ்மீர், கர்நாடகம், தமிழகம் போன்ற பகுதிகளில் இந்த முறை இருந்துள்ளது. (வி.வி.கிருஷ்ணசாஸ்திரி, பழங்கால வரலாற்று நாகரீகங்கள்) நாய் பற்றிய பழமொழிகளுக்கும் பஞ்சமில்லை. நாயின் குணங்களைப் பற்றியும், இன்று அவை எந்தெந்த வகையில் மனிதர் களுக்குப் பயன்படுகிறதென்றும் நாம் அறிவோம்.
நாய் கண்காட்சிகள் நடப்பதும், அவற்றிற்கு பரிசளிப்பதும் உலகெங்கும் நடைபெறுவதுண்டு. அக்கண்காட்சிகளில் பலவகைத் தோற்றத்துடைய நாய்களைக் காண் கிறோம். நாய்களை வீட்டில் வளர்ப்பதற்கு சில விதிமுறைகளை அரசு விதிப்பதால், தெரு நாய்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதில்லை. இந்த முறையை சிறப்பான வகையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் கடைபிடிப்பதைக் காண முடிந்தது. நாய்கடிக்கு பல நாட்கள் ஊசி போடும் முறைக்குப் பதிலாக ஒரு ஊசி போதும் என்பதாக அறிவியல் உதவியுள்ளது.
-விடுதலை ஞா.ம.4.5.13

பழங்கள் பிறந்த கதை


ஆரம்ப காலத்தில் அதாவது சுமார் 60 கோடி வருடங்களுக்கு முன்பு, விதைகளின் மேல் சதை பற்றில்லாமல் கரடு முரடான கரோட்டின் எனப்படும் ஒரு வகை பட்டைமட்டுமே இருந்தது. அது டைனோசர்களின் காலம் அங்கு பழங்களை சாப்பிட அதிக உயிரினமில்லை, அப்போது உயிரினங்களில் இரண்டு வகை மட்டுமே ஒன்று தாவரஉண்ணி மற்றொன்று மாமிச உண்ணி, தாவர உண்ணிகளிடம் இருந்து தாவரங்கள் தன்னை  காப்பாற்றிக்கொள்ள எந்த அளவு உய்ரவேண்டுமே அந்த அளவு உயர நேர்ந்தது, அன்றைய காலகட்டங்களில் சாதாரண செடிகள் கூட சென்னை எல்.அய்.சி. கட்டிடத்தை மிஞ்சும் உயரம் வளரவேண்டி இருந்தது, விண்கற்களின் தாக்குதலால் பூமி நிலை குலைந்தது, நடமாடும் உயிரினங்கள் தாவரங்கள் 90 அழிந்தது, பூமி தனது பாதையில் மாற்றம் காண நேர்ந்தது விளைவு துருவங்கள் உருவாகின, துருவங்கள் உருவான பிறகு கால நிலை மாற்றம், புதியவகை தாவர உயிரினம் தோன்றியது சுமார் 30 கோடி வருடங்கள் ஓடிவிட்டது,  தாவரங்கள் தங்களை செடிகளாக, புதர்களாக, கொடிகளாக மரங்காளாக மாற்றிக்கொண்டு வாழும் சுழலில் சிறிய சிறிய இடம்பெயர் உயிரினங்கள் (பாலூட்டி, பூச்சி, பறவை, ஊர்வன) தோன்றின.இந்த புதிய உயிரினங்களை தங்கள்  இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் தாவரங்களுக்கு ஏற்பட்டது., அந்த உயிரினங்கள் வண்ணங்களை பகுப்பாராயும் தன்மை கொண்டவை இதை அறிந்து கொண்ட தாவரங்கள் ஒரு புதிய யுக்தியை கையாண்டது, வண்ண வண்ண பூக்கள், சதைப்பற்றுள்ள காய்களை உற்பத்தி செய்தது, தான் தயாரா கிவிட்டேன் என்ற சமிக்ஞைக்காக தன்னுடைய மேற்புற நிறத்தை மாற்றியது.
இதுவரை பச்சை பச்சையான நிறத்தை பார்த்து வந்த உயிரினங்கள் புதியதாக பலப்பல வண்ணங்களில் வித்தியாசமாக தெரிய அவற்றை உண்ணுவதற்கு நடமாடும் உயிரினங்கள்  அதிக ஆர்வம் காட்டியது, முன்பு கடினமான கரோட்டின், விதை உறையாக மாறியது, அதன் மேல் இனிப்பு புளிப்பு இதர சுவைகளில் ஒரு பொருளை தாவரம் உற்பத்தி செய்தது காரணம் அதை உண்டு விட்டு விதைகளை எறிந்து விடவேண்டும் இயற்கையின் இந்த அற்புத தொழில் நுட்பம் இந்த பூமி எங்கும் தாவரம் பரவ காரணமாகியது. இது பழங்கள் பிறந்த கதை,
விடுதலை ஞா.ம.,23.2.13
குறிப்பு -  விளக்கவுரையில்  கருத்து மாறுபாடு உண்டு.                                                             

திங்கள், 9 நவம்பர், 2015

பழங்கால மனிதனை மீண்டும் உருவாக்குதல்


விஞ்ஞானம் வியக்கும் வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதன் இன்னொரு மைல்கல்லாக மறைந்து போன பழங்கால மனிதர்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி மனித இனத்தில் 4 பிரிவுகள் இருந்துள்ளன. அவை பரவலாக அறியப்பட்ட எஸ்கிமோக்கள் மற்றும் நகானாசான்ஸ், கோர்யாக்ஸ், சக்சிஸ். இந்த இனங்கள் அனைத்தும் இப்போது இல்லை.
ஹோபன்கேகன் பல்கலைக்கழக நிபுணர்குழு, கிரீன்லாந்தின் பெர்மாபிராஸ்ட் பகுதியில் ஒரு எஸ்கிமோ மனிதனின் சடைபிடித்த கெட்டியான ரோமத் துண்டை தோண்டி எடுத்துள்ளனர். இதனை தீவிரமாக ஆராய்ந்ததில் பல்வேறு வியப்பூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
இவர்கள் வாழ்ந்த காலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த மனித இனத்தின் கண்களும், ரோமங்களும் பழுப்பும், காவியும் கலந்த நிறமாக இருந்திருக்கின்றன. உடல் தோற்பரப்பின் நிறமும் அறியப்பட்டுள்ளது. ரோமங்கள் அடர்த்தியாக இருந்துள்ளன. அப்போதைய காலத்தில் தலை வழுக்கை இருந்திருக்காது என்று அறிய முடிகிறது.
இதுவரை நமக்கு கிடைத்துள்ள படிமங்களைவிட கூடுதல் சிறப்பம்ச மாக இதன் டி.என்.ஏ. வடிவமைப்பை வரைய முடிந்துள்ளது. இதனை வைத்து அப்போதைய மனிதர்களின் பழக்கவழக்கம் முதல் பல முக்கிய உண்மைகளை அறிய முடியும்.
இதை அடிப்படையாக வைத்து கணினியில் வரைபடம் வரையப் பட்டது. இதற்கு `இனங்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மரபணு குறியீடு வரையறுக்கப்பட்டு எஸ்.என்.பி. என்னும் நவீன தொழில் நுட்பம் மூலம் அந்த நாட்டின் சுற்றுப் பகுதியில் உள்ள 3.5 லட்சம் பேரின் மரபணுவோடு ஒப்பிட்டு ஆய்வு நடந்து வருகிறது.
-விடுதலை ஞா.ம.10.11.12

பூமியின் சுற் றளவு என்ன?


அசோகன் இந்தியாவை ஆண்ட சில காலத்துக்கெல்லாம் (கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகள் முன்பு) ஏராஸ்தனஸ் (Erosthenes) எனும் கிரேக்க பூகோள அறிஞர் இருந்தார். அலெக்சாண்டிரியாவில், தன் ஆராய்ச்சிக் கூடத்தை அமைத் திருந்தார். அவர் பூமியின் சுற் றளவு என்ன என்பதைக் கணக் கிட்டார்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இதை எப்படிச் செய்தார் என்று வியப்பே தோன்றும். எகிப்து நாட்டிலுள்ள இரண்டு ஊர் களை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த இரண்டு ஊர்களிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில், சூரியனுடைய நிழல் எப்படி விழுகிறது என்பதைக் கணக் கெடுத்தார்.
அ, ஆ எனும் இரண்டு கல் தூண்கள். ஆ தூணை அலக் சாண்டிரியாவில் நட்டார் அ தூணை செயன் எனும் ஊரில் நிறுத்தினார். இரண்டும் ஒரே அளவில் ஒரே மாதிரியாக நிறுத் தப்பட்டன. இரண்டு ஊருக்கும் இடையிலிருந்த தூரம் கிரேக்கக் கணக்குப்படி 5000 ஸ்டேடியா (551 மைல்கள் ஆகும்) நண் பகலில், சூரியன் உச்சியிலிருக் கும்போது செயனில், நிழல் விழாததைக் கண்டார், அதே நேரத்தில், அலெக்சாண்டிரியா வில் நாட்டப்பட்ட தூணில் நிழல் விழுவதை இன்னொரு நாள் கணக்கெடுத்தார்.
எவ் வளவு சாய்வு இருக்கிறதென் பதை நிழலைக் கொண்டு அளந்து தெரிந்து கொண்டார். சூரியகிரணம் 7/50 சாய்வாக வருவதை உணர்ந்தார். உலகம் உருண்டையானது என்பதையும் அப்போதே கிரேக்க விஞ் ஞானிகள் அறுதியிட்டிருந்தனர். அதனால், உருண்டையின் சுற்றளவு 360 டிகிரி என்பதும் பகுக்கப் பட்டிருந்தது.
அதனால்:
அ, ஆ, பூமியின் சுற்றளவு: 7 1/5 0:360
அதாவது,
பூமியின் சுற்றளவு: 551 X 36D X 5/36
அதாவது
27,500 மைல்கள் என்று கணக் கிடப்பட்டது. இந்தக் கணக்குச் சரியென்று 2000 ஆண்டுகளுக் குப் பிறகே கண்டு பிடிக்கப்பட்டது.
-விடுதலை ஞா.ம,26.10.13

ஞாயிறு, 8 நவம்பர், 2015

புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்புஉலகம் முழுவதும் 18 ஆயிரம் புதிய உயிரினங்களை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில், பூனையை போன்ற கரடியும், தரைக்கு கீழ், 3,000 அடிக்கு கீழ் இருக்கும் கண்ணில்லாத நத்தையும் அடங்கும். இதுகுறித்து, நேஷனல் மியூசியம் ஆப் நேச்சுரல் சயின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் உயிரியல் விஞ்ஞானி, அண்டோனியோ வால்டேகேசஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் கூறியதாவது:  உலகில் 20 லட்சம் உயிரினங்கள் இருப் பதாகவும், இவற்றில் தற்போது 18 ஆயிரம் உயிரினங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இன்னும் 1 கோடி உயிரி னங்கள் கண்டுபிடிக்க வேண்டியுள் ளது. அவற்றில் பல அழிவின் விளம் பில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
-விடுதலை ஞா.ம.9.8.14

சனி, 7 நவம்பர், 2015

கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!

கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - 7


- மதிமன்னன்
பிறக்கும்போதே காது கேட்காமல், செவிடாகச் சிலர் பிறக்கிறார்கள். சிலர் பேச இயலாத ஊமையாகப் பிறக்கிறார்கள். காது கேளாதவர்களுக்குப் பேச்சு வராது. ஒலிகளையும் உச்சரிப்புகளையும் கேட்டு அவை மூளையில் பதிவானால்தான் அதே ஒலிகளையும் உச்சரிப்புகளையும் குழந்தையால் திருப்பிக் கூற முடியும். பேச முடியும். கேட்கும் திறனே இல்லையென்றால் பேசவும் இயலாது. செவிட்டு ஊமை என்ற பெயர் கிடைக்கும். (Deaf and Dumb) என்கிறார்கள். இக்குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவியை எந்நேரமும் வைத்துக்கொள்ளச் செய்வதன்மூலம் கேட்கும் ஆற்றல் வரும்! நாளடைவில் பேசும் ஆற்றலும் வரும். முழுவதும் செவித்திறன் இழந்தவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் காதுக்குள் அறுவை செய்து காது கேட்கச் செய்ய முடியும். செவிப்பறை அதிர்ந்து, அவை நரம்புகளின் மூலம் மூளைக்குச் செல்லும் இயற்கை முறைக்கு மாற்றாக, மின் அதிர்வுகளை ஏற்படுத்தி அவை நரம்புகள் மூலம் மூளைக்குச் செல்லும் வகையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. காக்ளியர் இம்ப்ளான்ட் (Cochlear Implant) எனப்படும் முறையை வில்லியம் ஹவுஸ் எனும் அமெரிக்கர் கண்டுபிடித்தார். 1961இல் மூன்று செவிடர்களுக்கு இத்தகைய கருவியைப் பொருத்தி சிறிதளவு முன்னேற்றம் கண்டார். 1969இல் தொடர்ந்த ஆய்வுகளின் மூலம் இதனைச் சரியான இடத்தில் பொருத்துவதில் வெற்றி கண்டார். காதுக்குள் அணிந்துகொள்ளும் கருவியைக் கண்டுபிடித்து வெற்றி கண்டார்.
ஆனாலும் செயற்கைமுறைத் தூண்டல் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்கிற கருத்து பரப்பப்பட்டது. மீண்டும் ஆய்வுகள் தொடர்ந்தன. 1984ஆம் ஆண்டில் இக்கருவிகளுக்கான அங்கீகாரம் அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறையால் அளிக்கப்பட்டு வாதப் பிரதிவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது இருக்கும் இம்ப்ளான்ட் கருவி மேம்படுத்தப்பட்டு 2005இல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
குருடர்கள் பார்ப்பதும், செவிடர்கள் கேட்பதும், ஊமையர் பேசுவதும், முடவர்கள் நடப்பதும் கடவுளால் அல்ல! மனிதர்களால், அறிவியலாளர்களால்!
இந்துமத வேதம் எனப்படும் ரிக் பாடல்களில் ஒரு கதை. விஷ்பிளா எனும் ராணி போரிடும்போது ஒரு காலை இழக்கிறாள். தேவலோக மருத்துவனான அஸ்வின் இரும்புக்கால் ஒன்றைப் பொருத்திவிட்டானாம். அரசி மீண்டும் சண்டை போட்டாளாம்.
கிரேக்கத் தொன்மங்களில் ஹெகசிஸ்ட் ராடஸ் எனும் பாரசீகப் போர்வீரன் ஸ்பார்டன் அரசால் கைது செய்யப்படுகிறான். தப்பித்துப் போகாமல் இருப்பதற்காக அவனது கால் வெட்டப்படுகிறது. இருந்தாலும் அவன் மரக்கால் ஒன்றைச் செய்து அணிந்து கொண்டு 30 மைல்கள் நடந்து டிரெக்யா எனும் நகருக்குப் போய்விடுகிறான். ஜாக்கின்தியசால் அங்கே சிறைபிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறான்.
பழங்கால வரலாற்று ஆசிரியரான பிளினி (Pliny) ஒரு சம்பவத்தை மார்கஸ் செர்ஜியஸ் எனும் ரோமப் பேரரசன் வரலாற்றை எழுதும்போது படைத்தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த அவன் 23 காயங்களைப் பெற்றதனால் அவனது வலது கையை வெட்டி எடுக்க வேண்டி நேரிட்டதையும் இரும்புக்கரம் ஒன்றைச் செய்து பொருத்திக் கொண்டு போருக்குத் திரும்பியதையும் அதன் பின்னர் நான்கு போர்களில் சமர் செய்ததையும் விவரித்திருக்கிறார்.
1858இல் இத்தாலி நாட்டில் உள்ள கபுவா (Capua) எனும் இடத்தில் ஒரு சமாதி கண்டுபிடிக்கப்பட்டது. சாம்னைட் போரின்போது ஈடுபட்டவர்களின் புதைகுழி.  அதில் மரம், செம்பு ஆகியவற்றால் செய்யப்பட் செயற்கைக்கால் அதில் கிடைத்தது.
தொழிற்சாலைகளில் பணியின்போது கை, கால்களை இழக்கும் தொழிலாளர்களின் பயன்பாட்டுக்காக மின்சக்தியால் இயங்கும் செயற்கைக் கைகள் 1949இல் வடிவமைக்கப்பட்டது. மூனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்துவந்த ரீன்ஹோல்ட் ரீய்டர் என்பார் கண்டுபிடித்தார். அதனை எளிமைப்படுத்தித் தயாரிக்கும் முயற்சியில் இருந்தபோது ஜெர்மனியின் பொருளாதார சீர்கேட்டால் நிதி கிடைக்காமல் ஆய்வு நிறுத்தப்பட்டது. 1958இல் கி.ணி.கோப்ரின்ஸ்கி என்பாரின் தலைமையிலான ரஷியக் குழு 1958இல் செயற்கைக் கரம் ஒன்றை உருவாக்கியது. 1968, 1974 ஆகிய ஆண்டுகளில் மாசசூசட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நார்பர்ட் வெய்னர், மெல்வின் கிளிம்சர், அமர்போஸ், ராபர்ட் மாண் ஆகியோர் மற்றும் சிலருடன் சேர்ந்து உருவாக்கிய செயற்கைக் கரம் சிறப்பாகச் செயல்பட்டது. பாஸ்டன் எல்போ என இதற்குப் பெயரிட்டார்கள். தசைச் சுருக்கத்தால் ஏற்படும் மின்சக்தியை உணர்ந்து செயல்படும் உணர்விகள் (Sensors) பொருத்தப்பட்டு இவை செயல்படுகின்றன.
படைத்தானே, படைத்தானே! மனிதனை ஆண்டவன் படைத்தானே! என்று சாக்குருவி வேதாந்தம்/சித்தாந்தம் பாடிக் கொண்டிருக்கும் திண்ணைத் தூங்கிகளைப் போல் இல்லாமல் மேலை நாட்டவர்கள் பலரும் அறிவியல் மனப்பான்மையுடன் ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர். மனித குலத்திற்கு நன்மை பயக்கும் புதிய, புதிய கண்டுபிடிப்புகளைச் செய்கின்றனர். கடவுளால் செய்யப்பட்ட கோளாறுகளைச் சரி செய்கின்றனர்.
அந்த வகையில் செயற்கைத் தோலை உருவாக்கியுள்ளனர். மனித உடலில் உள்ள தோல் அற்புதமான பொறியியல் சாதனை. மிகவும் வன்மையானது. விரிந்து கொடுக்கக் கூடியது. நெகிழக்கூடியது. கடும் வெப்பம், மழை, நோய்த்தொற்று போன்றவற்றில் இருந்து காப்பாற்றக்கூடியது. அதற்கு மாற்றுப் பொருள் ஒன்றைச் செய்திட இயலாது. அத்தகைய தனித்தன்மை வாய்ந்தது.
தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருத்துவதற்குத் தோல் அவசியமாகத் தேவைப்படுகிறது. உடலின் எல்லா இடங்களிலும் தோல் உள்ளது. என்றாலும் பாதி உடம்புக்குமேல் தீப்புண் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குத் தோலை பிற பகுதிகளிலிருந்து எடுத்துப் பொருத்த இயலாது. என்ன செய்வது? என்று ஆய்வு செய்தனர் ஜான்பர்க் எனும் அறுவை மருத்துவரும், பயன்னாஸ் எனும் வேதியியல் பேராசிரியரும்! விலங்குகளின் தசைகளை எலும்புடன் பிணைக்கும் தசை நாண்களில் மிகுந்திருக்கும் புரோட்டீன்களைப் பற்றிய ஆய்வில் இருந்தவர். இருவரும் இணைந்து மாட்டின் தோலில் உள்ள புரோட்டீனைப் பிரித்தெடுத்து பாலிமர் சவ்வு தயாரித்தனர். இதனை உலரவைத்து விஸ்கோஸ் பிளாஸ்டிக் உடன் இணைத்தனர். இவை இரண்டும் காகிதம் அளவு கனமாக இருந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதனைக் கொண்டு மூடினால், தோலைப் போலவே நோய்த்தொற்று ஏற்படாமல் காக்கின்றன. நீர்ச்சத்து இல்லாமல் வறண்டு போகாமல் பாதுகாக்கின்றன. புதிய தோல் உருவாகிச் செல்கள் வளர உதவுகின்றன. புதிய தோல் செல்கள் வளர்ந்து முழுமை அடைந்ததும் இது சிறிது சிறிதாக உடைந்து வெளியேறுகின்றன. கையினால் உரித்து எடுத்து விடவும் முடிகின்றன. புதிய தோல் முந்தைய இயற்கைத் தோலைப் போலவே இருக்கிறது. வியர்வைச் சுரப்பிகள், மயிர்க்கால்கள் அமைவதில்லை. 50 முதல் 90 விழுக்காடு வரை தீக்காயங்கள் பட்டவர்களுக்கான சிகிச்சையில் செயற்கைத் தோல் மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது.
தோலை உரித்துவிடுவேன் என்று எவராவது மிரட்டினாலும் இனிமேல் கவலையில்லை. செயற்கையாகப் புதிய தோலை வளர்த்துக் கொள்ளலாம்!
கொடுமை செய்பவனைப் பார்த்து உனக்கு இதயமே இல்லையா? என்று கேட்பார்கள். தமிழ்த் திரைப்படங்களில் இதனை பார்க்கலாம். ஈவு, இரக்கம், அன்பு, கோபம், கொடூரம், துரோகம், வஞ்சம் போன்ற பலவகைக் கெட்ட குணங்களும் மனிதர்களிடம் இருப்பதற்கு இதயம்தான் காரணி என்கிற (மூட) நம்பிக்கை! இதனாலேதான் மேலை நாடுகளில் இதயத்தின் பகுதியில் கை வைத்துக் கொண்டு உறுதிமொழி கூறுகிற மடத்தனம் உள்ளது. குணங்களுக்கும் இதயத்திற்கும் தொடர்பில்லை என்று சிக்மண்ட் ஃபிராய்டு எழுதி எண்பித்த பிறகும்கூட, பழக்கத்தை விடவில்லை என்றால் வேறு எப்படித்தான் அழைப்பது?
நம் ஊரில்கூட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இப்பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அதனைப் பார்த்தோ என்னவோ, வணக்கம் சொல்லும்போது கையை இதயத்தின் மேல் வைப்பதுபோலச் சைகை செய்கிற பழக்கம் பரவி வருகிறது. ஆன்மீக வேடம் போடும் போலிகளின் மத்தியில் பரவலாகப் பார்க்கலாம்.

கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - 8


- மதிமன்னன்
உடலின் பல பாகங்களுக்கும் குருதி ஓட்டம் சீராக நடைபெறும் பணியை இதயம் செய்கிறது. இதன் பணியில் சீர்குலைவு ஏற்பட்டாலோ, பாதிப்பு பெருமளவு உடலுக்கு ஏற்படுகிறது. இதய அடைப்பு ஏற்படுகிறது. உயிரை இழக்கவும் நேரிடுகிறது. அதனைச் சீர் செய்திட அறுவை மூலம் மருத்துவம் பார்க்க நேரிடுகிறது. இதயத்தைத் திறந்து சீர் செய்ய வேண்டிய நிலையில் குருதி ஓட்டம் தடையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழுதான இதயம் மூலம் அன்றி வேறொரு இதயம் மூலம் செய்திட வேண்டும்.
செயற்கை இதயம் தேவைப்படுகிறதே! செயற்கை இதயத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துத் தந்துவிட்டனர்! அமெரிக்காவில் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த பால் விஞ்ச்செல் மற்றும் டாக்டர் ஹென்றி ஹெல்மிச் ஆகிய இருவரும் இணைந்தனர். டாக்டர் ஹெல்மிச் இதய அறுவை சிகிச்சை செய்யும்போது பால்விஞ்செல் உடனிருந்து கவனித்தார். குருதி ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்கான கருவியை வடிவமைத்தார். 1956இல் இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.
1963இல் காப்புரிமை கிடைத்தது. இந்த உரிமையை அவர் உடா (UTAH)பல்கலைக்கழகத்திற்கு அளித்துவிட்டார். ராபர்ட் ஜார்விக் உட்பட 7 பேர் ஆய்வாளர்கள் இந்தக் கருவியை மேம்படுத்திப் புதிய செயற்கை இதயத்தை மேம்படுத்திப் புதிய செயற்கை இதயத்தை வடிவமைத்தனர். உடலில் பொருத்துமளவில் உருவாக்கினர். 1982ஆம் ஆண்டில் டிசம்பர் 2ஆம் நாளில் பார்னி கிளார்க் எனும் பல் மருத்துவர் ஒருவருக்கு டாக்டர் வில்லியம் டி வீனாஸ் செயற்கை இதயத்தைப் பொருத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தார். என்றாலும் 112 நாள்களுக்குப் பிறகு செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்துபோனார். முழுவதுமாக இதயம் பழுதுபட்டவர்கள் மாற்று இதயம் கிடைத்து பொருத்தப்படும் வரை, உயிருடன் இருப்பதற்கு இத்தகையச் செயற்கை இதயம் பெருமளவில் உதவுகிறது. குருதி ஓட்டம் தடைபடாமல் நடைபெற உதவுகிறது. குருதியை பம்ப் செய்யும் பணியை நிறுத்தாமல் செய்கிறது. மருத்துவ அறிவியல் உலகில் செயற்கை இதயம் மாபெரும் சாதனை அல்லவாம்!
செயற்கை ஈரல்தான் மிகப்பெரும் சாதனை என்கிறார்கள். ஏனென்றால், ஈரல் பலப்பல பணிகளைச் செய்கிறது. உண்ணும் உணவைச் சத்தாக மாற்றுகிறது. உணவில் உள்ள தீங்கான வேதிப் பொருள்களின் நச்சுத் தன்மையைப் போக்குகிறது. கலப்படம் இல்லாத பொருளே இல்லை, உணவே இல்லை என்பது இந்திய நிலைமை. பற்பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பொருள்களையெல்லாம் கொள்ளையே குறியாகக் கொண்ட வியாபாரிகள் இங்கே கொண்டுவரும்போது முந்தி விரித்து வாங்கிச் சந்தைப்படுத்துகிறவர்கள் இந்தியர்கள்.
அத்தகைய பொருள்களின் நச்சுத் தன்மையை நீக்கும் ஈரல் எத்தகைய மனிதநேயப் பணியைச் செய்யும் உறுப்பு! சத்துப் பொருளாக மாற்றிய உணவைத் தேக்கி இருப்பு வைக்கிறது ஈரல். வெட்டுக் காயங்களினால் இரத்தம் வெளியேறி உயிருக்கு ஊறு விளைவிப்பதைத் தடுத்து பித்தநீர்(Bile) சுரந்து புரதத்தில் சேர்க்கும் தடுப்பு நடவடிக்கையை ஈரல் செய்கிறது. இப்படிப் பலவற்றையும் செய்யும் ஈரலைக் குலைக்காமல் மனிதன் இருக்கிறானா? ஈரலைக் கெடுக்கும் ஆல்கஹாலை அருந்தாமல் இருக்கிறானா-? மது குடித்து ஈரலைப் பாழாக்குகிறார்களே! பாழாக்கப்பட்ட ஈரலைப் பழுது பார்க்க எத்தனையோ வழிகளில் முயன்றும் முடியவில்லை என்ற நிலையில் 2001இல் டாக்டர் கென்னத் மட்சுமுரா என்பவர் செயற்கை ஈரலை உருவாக்க முனைந்தார்.
ஈரலின் செல்களை எடுத்து, அதன் மூலம் செயற்கை ஈரலை உருவாக்கிட ஆராய்ச்சி செய்தார். வெற்றி கண்டார். புதிதாக ஈரல் கிடைத்து, ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரை, செயற்கை ஈரல் மூலம் வாழலாம் என்கிற வகையில் இது பெரிய அறிவியல் கொடை. பிரிட்டனின் மருத்துவ அறிவியலாளர்கள், செயற்கையாகவே ஈரல் செல்களை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர். தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் முழுவதும் செயற்கை செல்களால் ஆன செயற்கை ஈரலைக் கண்டுபிடித்து மனித குலத்தைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவர். அறிவியல் முடிவில்லாதது, தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும். ஒன்றை விஞ்சும் ஆய்வு ஒன்றினை ஆய்வாளர்கள் நடத்துவர். வெற்றி பெறுவர். அதுவரை ஆய்வுகள் நடக்கும். குழந்தையைப் பெற்றெடுப்பது எப்பேர்ப்பட்ட துன்பம் என்பதைப் பிரசவ வைராக்கியம் எனும் சொல்லே எடுத்துக்காட்டும். அந்த நோவு பொறுக்க முடியாமல் இருப்பதால்தான், தாய்மார்கள் இனி, குழந்தைக்காகக் கணவனுடன் கூடுவதே கூடாது என்று உறுதி எடுத்துக் கொள்வார்களாம், பின்னரும் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதுவேறு சங்கதி! முந்தைய காலங்களில் பிள்ளைப் பேற்றின்போது இறந்து போகும் தாய்மார்கள் அதிகம். நிறைப் பிள்ளைத் தாய்ச்சியைத் தலையில் சாவை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்றும், பெற்றுப் பிழைத்து வந்தாள் என்றும் கூறுவதுண்டு.
இத்தகையச் சாவுகளுக்குக் காரணம் பிள்ளைப் பேற்றின்போது குருதிப்போக்கு நிறைய இருந்ததுதான். இதனைத் தடுத்துத் தாயின் உயிரைக் காக்க வேண்டும் என்றால் குருதி இழப்பை ஈடுசெய்யும் வகையில் இரத்தம் அவளின் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். எப்படி உள் செலுத்துவது? பூனை, நாய் போன்றவற்றிடம் ஆய்வுகள் நடத்தினர். பின்னர் மனிதனிடம் வந்தனர். முதன்முதலில் ரத்தம் உள் செலுத்தப்பட்டது ஓர் ஆணுக்குத்தான். வயிற்றில் புற்றுநோய்ப் பாதிப்புக்கு உள்ளான ஆண் ஒருவருக்குத்தான் ரத்தம் செலுத்தப்பட்டது. 22.12.1818இல் செலுத்தப்பட்டது. மொத்தம் 14 அவுன்சு ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக சிரிஞ்சு (ஊசி மருந்து செலுத்தும் கருவி) மூலம் செலுத்தப்பட்டது. 56 மணி நேரம் கழித்து அவர் இறந்துவிட்டார். ரத்தம் அளிப்பவரிடமிருந்து தேவைப்படுபவருக்குச் செலுத்த ஒரு வகைக் கருவியை ஜேம்ஸ் பிளன்டல் எனும் மகப்பேறு மருத்துவர் வடிவமைத்திருந்தார். அதன் மூலம் 1818 முதல் 1829 வரை பத்துப் பேருக்கு ரத்தம் செலுத்தினார்.
அவற்றுள் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். ரத்தம் உள்ளே செலுத்தப்பட்டோர் கருப்பு நிறச் சிறுநீரை வெளியேற்றியதாக பிளன்டல் எழுதினார். இதற்கான காரணம் 1900இல்தான் தெளிவாகியது. சிலரின் ரத்தம் சிலர்க்கு ஒத்துவராத நிலையில் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் இறந்து போகின்றன என்பதுதான் காரணி என்பதைக் கண்டறிந்தார் கார்ல் லான்ட்ஸ்டீனர் எனும் வியன்னா மருத்துவர். அவர்தாம் ரத்தத்தில் மூன்று வகைகள் உள்ளன எனக் கண்டறிந்தார். அவற்றை A, B, C என்று வகைப்படுத்தினார். பின்னர் இவை A, B, O எனப் பெயரிடப்பட்டன. நான்காவதாக ஒரு ரத்தவகை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அது AB எனப்பட்டது. ஆரியச் சநாதன மதமான இந்து மதத்தின் கேடுகெட்ட மனிதப் பிரிவுகளான நால்வருணங்களை இந்த ரத்த வகைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார் காஞ்சிபுரம் மடத்தலைவர் சாமிநாத சங்கராச்சாரி. ரத்தம் உள்செலுத்தும்போது ரத்த வகைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என லான்ட்ஸ்டீனர் கூறியதை மருத்துவ உலகு பத்தாண்டுகளாகக் கண்டுகொள்ளவேயில்லை. தற்போது மிகவும் கவனமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இக்காலத்தில் இயங்கிவரும் இரத்த வங்கியைத் தொடங்கியவர் சார்லஸ் ட்ரூ என்பவர். 46 வயதிலேயே இறந்துபோன இவர் ரத்தத்தின் பிளாஸ்மாவிலிருந்து சிவப்பு அணுக்களைப் பிரித்தெடுப்பதைக் கண்டுபிடித்தார். அதனைப் பாதுகாத்து, உள் செலுத்துவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தார்.
1941இல் இவர் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்க ரத்த வங்கியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆயிரக்கணக்கான யூனிட் ரத்தத்திலிருந்து காயவைக்கப்பட்டுப் பவுடராக்கப்பட்ட பிளாஸ்மாவைச் சேமித்து வைத்தார்.
பின்னர் காய்ச்சி வடிகட்டிய நீருடன் கலந்து திரவ பிளாஸ்மாவாக ஆக்கப்பட்டுத் தேவைப்படுவோர்க்குச் செலுத்தப்பட்டது. உலக யுத்தத்தின்போது ரத்தம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட மக்கள், போர்வீரர்களல்லாதவருக்கும் ரத்தம் செலுத்தி உயிர்பிழைக்க வைக்க வேண்டும் என விரும்பினர். 1950 வரை கண்ணாடிப் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட ரத்தம் தற்போது பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த முறையைக் கண்டுபிடித்தவரான ட்ரூ (ஞிக்ஷீமீஷ்) கடுமையான கார் விபத்தில் சிக்கி, நிறைய ரத்தம் வீணாகிப் போனதால் ரத்தம் உள் செலுத்தப்பட்டு உயிர் பிழைத்தார். சேமித்து வைத்திட குருதிக்கொடை வழங்குபவர்கள் குறைவு. மேலும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்த் தொற்று இருப்போர் தரும் ரத்தத்தை மற்றொருவருக்குச் செலுத்துவதனால் ஏற்படும் அபாயம் ஒரு பக்கம். எனவே, செயற்கை ரத்தத்தைக் கண்டுபிடித்திடும் தேவை ஏற்பட்டது.
பல்கலைக்கழக மாணவரான தாமஸ் ஷான் என்பவர் 1956இல் செயற்கை ரத்தச் செல்களை உருவாக்கினார். அப்போது அவருக்கு 23 வயதுதான்.
இந்தச் செயற்கை ரத்தத்தைத் தம் உடலில் செலுத்திக்கொள்ளப் பலரும் முன்வரவில்லையாம். ரத்தத் தூய்மை எனும் மினுக்கித்தனம் மனித மனதில் ஆழ்ந்து பதிந்துள்ளதே! ரத்தத்தில் சேரும் கழிவுகளைப் பிரித்துச் சிறுநீர்க் குழாய் வழியே வெளியே அனுப்பும் பணியைச் சிறுநீரகம் செய்கிறது.
சிறுநீரகம் பழுதுபட்டுவிட்டால் கழிவுப் பொருள்கள் ரத்தத்திலேயே தேங்கி விடுகின்றன. அதனால் மனிதர் இறக்க நேரிடும். எனவே, சிறுநீரகத்தின் பணியைச் செய்திடும் கருவியைக் கண்டுபிடித்திடும் அவசியம், ஆராய்ச்சிகள் தொடங்கின. வில்லியம் கோல்ஃப் எனும் மருத்துவர் தொடங்கினார். இரண்டாம் உலகப் போர் நடந்ததால் அத்தியாவசியமான பொருள்கள் கிடைக்கவில்லை. எனினும் கிடைத்தவற்றைக் கொண்டு செயற்கைச் சிறுநீரகம் உருவாக்கினார். 1943இல் ஒரு நோயாளிக்குச் சிகிச்சையும் செய்தார்.
போர் முடிந்தபிறகு கோல்ஃப் அமெரிக்கா திரும்பினார். செயற்கைச் சிறுநீரகத்தை சிறப்பாக வடிவமைக்க உழைத்தார். 1956இல் உருவாக்கி விற்பனையும் செய்தார்.
1960 முதல் டையலாசிஸ் எனப்படும் செயற்கைச் சிறுநீரகம் பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தேவையே கண்டுபிடிப்புகளின் தாய். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது சாக்குருவி வேதாந்தம். உருப்படாத தத்துவம். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
- (தொடரும்)

கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - 9


- மதிமன்னன்
ரோமன் கத்தோலிக மதத்தில் தீவிர நம்பிக்கையுள்ளவரான ஜான்ராக் எனும் மகப்பேறு மருத்துவர் கிரிகோரி பின்கஸ் எனும் உயிரியல் நிபுணருடன் இணைந்து ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததுதான் மகளிர்க்கான கருத்தடை மாத்திரைகள். கருத்தடையை எதிர்ப்பது கத்தோலிகம். கருத்தரிப்பதை மேம்படுத்த வேண்டும் என்று ஆய்வுகள் செய்தார் ஜான் ராக். அவர் கண்டுபிடித்த மாத்திரையை உட்கொண்ட பெண்ணுக்கு கருத்தரிப்பதற்கான ஹார்மோன்கள் பாதிப்புக்கு ஆளாகிவிட்டன. கருத்தடைக்கான மாத்திரை கிடைத்துவிட்டது. பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிவிட்டதோ? கிணறு தோண்ட பூதம் வெளிப்பட்டதோ? எப்படியோ மதத்திற்கு எதிரான விடை கிடைத்துவிட்டது. மகளிர்க்கு _ சிறப்பாக மனித குலத்திற்கு ஒரு கொடை!
ஆண்களின் முகத்தில் தாடி மீசை வளர்வது வித்தியாசமான தோற்றத்தைத் தருகிறது. தாடி, மீசையைச் சிரைக்காமல் அப்படியே விட்டு வளர்ப்பது சிலர்க்கு அழகிய பொலிவைத் தருகிறது. கார்ல் மார்க்ஸ், தந்தை பெரியார் ஆகியோர்க்குத் தாடி அமைந்தது மிக அழகிய தோற்றத்தைத் தருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆண்தான் அழகு என்பார்கள். சிங்கத்தின் பிடரி, மானின் கொம்பு சேவலின் கொண்டை, மயிலின் தோகை, யானையின் தந்தம் என்று பட்டியலிட்டு நீக்கி முழக்குவார்கள். குயிலின் குரலைச் சொல்லும்போது மறுக்கத் தோன்றாது. எனினும் கூடுதல் உறுப்புகள் இல்லாமலே பெண்ணின் அழகு கவரக்கூடியதுதானே! அப்படிப்பட்ட வகையில் ஆணு    க்கேயுரிய தாடி மீசையை அகற்றுவது சிரமமாக இருந்தது. அதைச் செய்யும் தொழிலாளரை அணுக வேண்டும் அல்லது நெருங்கிய உறவினரின் உதவி வேண்டும். ஏனென்றால், சவரக் கத்தி கழுத்தையும் அறுத்துவிடும் அபாயம் உண்டே! அதற்காகப் பாதுகாப்பான ரேஸர் கண்டுபிடித்தனர்.
மரத்தாலான கைப்பிடியில் பாதுகாப்பாகப் பொருத்தப்பட்ட பிளேடுடன் கூடிய ரேஸரை 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரஞ்ச் நாட்டவரான ஜுன் ஜாக்குவிஸ் பெர்ரெ என்பவர் வடிவமைத்தார். 1875ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டவர்களான ஃபிரெடெரிக், ரிச்சர்டு, ஓட்டோ ஆகிய சகோதரர்கள் வடிவமைத்தது பாதுகாப்பாக இருந்தது. 1901இல் கிங் கில்லட் எனும் அமெரிக்கரும் வில்லியம் நிக்கர்சன் என்பவரும் சேர்ந்து உருவாக்கிய ரேசரில் பயன்படுத்தித் தூக்கி எறியும் பளேடு பயன்படுத்தப்பட்டது. பின்னர் மிகவும் மெல்லியதும் கூரியதுமான பிளேடுகளை கில்லட் கண்டுபிடித்தார். முதல் உலகப் போரில் பணி செய்த ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காகப் பிளேடுகளை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. நீண்ட நாள்கள் உழைக்கக்கூடிய பிளேடுகளை இங்கிலாந்து நாட்டவரான வில்கின்சன் ஸ்வேர்டு கண்டுபிடித்தார்.
இது துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்பட்டது.
முகம் மழிப்பதற்கு முன்பு சோப் அல்லது கிரீம் தடவி ஈரமாக்கிப் பின்னர் சிரைப்பது எளிது. தண்ணீர், சோப் அல்லது கிரீம் இல்லாமல் முகம் மழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டது. மின் மோட்டார் பொருத்தப்பட்ட மின்சார ரேஸர் வடிவமைக்கப்பட்டது. 1931இல் இது பயன்பாட்டுக்கு வந்தது. 1939இல் ஹாலந்து நாட்டு நிறுவனமான ஃபிலிப்ஸ் இம்மாதிரி ரேஸர்களைத் தயாரித்து விற்பனை செய்தது. பேட்டரியால் இயங்கும் ரேஸர் 1940இல் வந்தது. 1947இல் பெண்களுக்கான ரேஸர் வடிவமைக்கப்பட்டது. 1960இல் கிரீம் தடவிப் பயன்படுத்தக்கூடிய மின்ரேஸர்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுதான் வேடிக்கை.
தீக்குச்சியால் விளக்கேற்றி நூல்களைப் படிக்கலாம். தீக்குச்சியால் வீடுகளைக் கொளுத்தி ஜாதி சண்டைகளை வெளிப்படுத்தலாம். கத்தியைக் கொண்டு காய், கனிகளை வெட்டிச் சமைக்கலாம். கழுத்தை அறுத்துக் கொலையும் செய்யலாம். அறிவியல் அறிவைக் கொண்டு ஆக்கப் பணிகளுக்கான அரியனவற்றையும் கண்டுபிடிக்கலாம். தீய விளைவுகளை ஏற்படுத்தும் கருவிகளையும் கண்டுபிடிக்கலாம். அந்த அடிப்படையில் மனிதன் கண்டுபிடித்த சமுதாயக் கேடான கருவிகளும் நிறைய உண்டு.
வெடிமருந்து அப்படிப்பட்ட ஒன்று. பொதுவாக மருந்து எனும் சொல் நோய்தீர்த்து நன்மை பயக்கும் ஆற்றல் பெற்ற பொருள்களுக்குப் பயன்படும் சொல். வெடிமருந்து அப்படி அல்லவே! ஒரு குழாயில் அதனைத் திணித்துப் பற்ற வைத்தால் நெடுந்தொலைவுக்கு அதன் தீயவிளைவு அழிவை ஏற்படுத்தும். அதனை எப்படி மருந்து எனலாம்? ஆங்கிலத்தில் வெடிப்பொடி என்கின்றனர் (கன் பவுடர்). எனவே, நாமும் அப்படியே அழைக்க வேண்டும், மொழியைக் காப்பாற்றிட!
பொட்டாசியம் நைட்ரேட் 75%, மரக்கரி 15%, கந்தகம் 10% என்ற அளவில் கலந்து தயாரிக்கப்படும் பொடி (கரும்பொடி _ பிளாக் பவுடர்) ஒரு பக்கத்தில் மூடப்பட்ட குழாயில் திணிக்கப்பட்டு எரிக்கப்பட்டால் வெகு தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழித்திடும் ஆற்றல் பெற்றதாகிறது. சீனர்கள் இந்த முறையை ஆதியில் கையாண்டனர். 13ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் இதனைக் கையாண்டார்கள். மூங்கில் குழாயை இரும்புத் தகடால் கெட்டிப்படுத்தி வெடிப்பொடியைத் திணித்துத் துப்பாக்கி தயாரித்தனர். பின்னர் இத்தொழில்நுட்பம் அய்ரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 19ஆம் நூற்றாண்டில் கரும்பொடி மேம்படுத்தப்பட்டு, நைட்ரோ செல்லுலோஸ் பயன்படுத்தியதால் சிறிதளவே புகைவருவதுபோல் மென்மையாகத் தயாரிக்கப்பட்டது. தற்போதைய தயாரிப்பு வெடிப்பொருள்கள் சிறிதளவுகூடப் புகை வராதவகையில் தயாரிக்கப்படுகின்றன.
14ஆம் நூற்றாண்டில் சீனர்கள், வெடிப்பொடியைப் பயன்படுத்தித் தாக்கும் மஸ்கட் என்ற கருவியைக் கண்டுபிடித்தனர். ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டைபோல் ஒரு முனையில் வளைந்தும் மறுமுனை நேராகவும் அமைந்த இரும்புக் குழாயினுள் வெடிப்பொருளைத் திணித்துப் பற்றவைத்துத் தாக்குதலுக்குப் பயன்படுத்தினார்கள். இதனை நிறுத்துவதற்கு ஒரு ஸ்டாண்டு தேவைப்பட்டது. தொலைக்கண்ணாடியைப் பொருத்தும் ஸ்டாண்டு போல! பொடியைத் திணிப்பதற்கு நெடுநேரம் ஆனதால் இது அவ்வளவாகப் பயன்படவில்லை. இருப்பினும் போர்த்துக்கீசியர்கள் இதனைத் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.
ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் Arquebus என்றழைக்கப்படும் சிறிய பீரங்கி ஒன்றை வடிவமைத்தனர். 1300ஆம் ஆண்டிலிருந்தே பீரங்கிகள் போரில் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றாலும் கைகளில் ஏந்திச் சுடும் வகையில் இருந்தால் தேவலை என்ற எண்ணம் ஏற்பட்டு இது வடிவமைக்கப்பட்டது. இருந்தாலும் குறிபார்த்துச் சுடுவதற்கு இது சரிப்படவில்லையாம்.
சிறிய கைத்துப்பாக்கி (Flintlock) பதின்மூன்றாம் லூயி எனும் பிரான்சு நாட்டு மன்னனின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்தது. கிட்டத்தட்ட 1612ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனலாம். வெடிப்பொடி கிட்டித்து வைக்கும் குழாய்ப் பகுதியோடு இணைக்கப்பட்டுள்ள விசை (டிரிக்கர்) இழுக்கப்பட்டவுடன் வெடிப்பொடி எரிந்து வெளிப்பட்டு சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. என்னதான் வேகமாகச் செயல்படும் ஆளாக இருந்தாலும் வெடிப்பொடி கிட்டித்துச் சுடுவதற்கு 15 நொடிகள் தேவைப்படும். இந்த வகைத் துப்பாக்கி செயல்படும் விதத்திலிருந்து உருவான ஆங்கிலச் சொல்லடை (Phrase) தான் லாக், ஸ்டாக் அன்ட் பாரல் (Lock Stock and Barrel) என்பதாகும். அதைப் போலவே மற்றொரு சொல்லடை Going off  Half Cocked என்பதும்.
சாமுவேல் கோல்ட் எனும் அமெரிக்கர் வடிவமைத்து உருவாக்கியதுதான் ரிவால்வர் கைத்துப்பாக்கி. ஒரு குண்டு திணித்துச் சுட்டுக் கொண்டிருந்தபோது, 1835இல் கோல்ட் ரிவால்வரைக் கண்டுபிடித்தார். அய்ந்து அல்லது ஆறுமுறை தொடர்ந்து சுடும் ஆற்றல் இதற்கு உண்டு. தொடக்கத்தில் கோல்ட் துப்பாக்கிகளை வாங்க ஆளில்லை. அவர் தொழிற்சாலையை மூடிவிடலாம் என்று நினைத்திருந்தபோது, அமெரிக்க ராணுவம் ஆயிரம் துப்பாக்கிகளுக்கு ஆர்டர் கொடுத்தது. 1856இல் உலகம் முழுவதும் இருந்து துப்பாக்கிகள் கேட்டு வாங்கினர். கோல்ட் பெரும் பணக்காரர் ஆனார். ஸ்மித் அண்ட் வெஸ்சன் எனும் போட்டி நிறுவனமும் துப்பாக்கித் தயாரிப்பில் இறங்கியது. மனிதர்களை அழிக்கும் கொலைக் கருவிகள் தயாரிப்பில் போட்டி!
ரைஃபிள் என்பது நீண்ட குழல் உடைய பெரிய துப்பாக்கி. இதில் ஒரு குண்டு போட்டுச் சுடுவார்கள். இதனை மேம்படுத்தி பெஞ்சமின் டைலர் ஹென்றி என்பவர் பல தோட்டாக்களைத் திணித்துத் தொடர்ச்சியாகச் சுடக்கூடிய ரிபீட்டிங் ரைஃபிளை வடிவமைத்தார். 1860இல் வந்த இத்துப்பாக்கி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கிறிஸ்டோபர் ஸ்பென்சர் என்பார் வேறு மாதிரி துப்பாக்கியை வடிவமைத்தார். அமெரிக்க வணிகரான வின்கெஸ்டர் என்பவர் மேலும் மேம்படுத்தப்பட்ட துப்பாக்கியை உருவாக்கினார். வின்கெஸ்டர் மாடல் துப்பாக்கிகள் இன்றளவும் தயாரிக்கப்படுகின்றன என்பதே அதன் சிறப்பைக் கூறும்.
(தொடரும்)

கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - மதிமன்னன்


1862ஆம் ஆண்டில் ரிச்சர்ட் காட்லிங் என்பவர் மெஷின் கன் எனப்படும் இயந்திரத் துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். பித்தளைத் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பத்துக் குழாய்களில் அவை நிரப்பப்பட்டுச் சுடப்படுகின்றன. மிகமிக வேகமாகச் சுடக்கூடிய ஆற்றல் வாய்ந்தது. அமெரிக்காவில் நிறவெறியின் அடிப்படையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது இந்த வகைத் துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்தது.
1884இல் ஹிரம் ஸ்டீவன் மாக்சிம் என்பவர் தானியங்கித் துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். சுடப்பட்ட தோட்டாக்களின் கூடுகள் தானாகவே வெளியே விழும் வகையிலும் புதிய தோட்டாக்கள் நிரப்பப்படும் வகையிலும் இது உருவாக்கப்பட்டது. ஒரு நிமிடத்திற்கு 600 தோட்டாக்களைச் சுடும் ஆற்றல் உள்ளது. எடை குறைவாகவும் எடுத்துச் செல்ல எளிதாகவும் அமைந்துள்ளதால் அய்ரோப்பிய ராணுவங்களில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டு அது விளைவித்த உயிர்ச்சேதம் மிகவும் கடுமையும் கொடுமையும் ஆனதாகும். இரண்டாம் உலகப் போரிலும் அந்தக் காரணத்திற்காகவே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது.
சகமனிதர்களை எதிரியாகப் பாவித்து அவர்களைக் கொன்று தீர்ப்பதில் மனிதன் ஏன் இவ்வளவு ஆர்வம் கொள்கிறான்? சகமனிதனை நேசிக்காமல் கொல்லும் வெறுப்புணர்வு வளர்ந்தது எப்படி? யாரால்? இந்தத் தீய எண்ணம் மனிதனின் மனதில் தோன்றியதற்கும் வளர்ந்ததற்கும் யார் காரணி? இந்தத் தீங்குக்குத் தொடக்கம் எது? யார்? இதைத்தான் கிரேக்க அறிஞன் எபிகூரஸ் கேட்டார். கிறித்து பிறப்பதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர் கேட்ட கேள்விக்கு விடையை எவரும் தரவில்லையே! எல்லாமும் கடவுள் செயல் என்றால் இதுவும் அதன் செயல்தானே! அப்படியானால் அதை என்ன செய்யலாம்? ஒன்றும் செய்ய முடியாது! அது கற்பனைதானே! அந்தக் கற்பனையை ஏற்பதைக் கைவிட வேண்டியதுதானே!
எந்திரத் துப்பாக்கியைக் கண்டுபிடித்த மாக்சிம் என்பாரின் மகன் ஹிரம் பெர்சி மாக்சிம் என்பார் தன் தந்தையின் கண்டுபிடிப்பின் வாயை அடைத்துவிட்டார்!  மோட்டார் சைக்கிள் என்ஜின் போடும் சத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் சைலன்சர், மஃப்ளர் போன்ற ஒன்றை வடிவமைத்து எந்திரத் துப்பாக்கியில் பொருத்தினார். தோட்டா வெடிக்கும்போது ஏற்படும் பெரும்சத்தம் குறைந்துவிட்டது. ஓசைப்படாமல் வெடித்து உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறது. 1902இல் வடிவமைத்து 1909இல் காப்புரிமை பெறப்பட்ட இது காவல்துறையிலும் ராணுவத்திலும் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
கொடுமை என்னவென்றால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரும் இதனைப் பயன்படுத்தி ஓசைப்படாமல் சுட்டுத்தள்ளிக் கொண்டே இருக்கின்றனர் என்பதுதான்.
வானவெளியிலிருந்து பெரும் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தி அழிவை ஏற்படுத்தும் நிலை முதல் உலகப் போரில் 1914இல் தொடங்கியது. 1939இல் இரண்டாம் உலகப் போரில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன. ஒரு பெட்டியில் வைக்கப்படும் பல குண்டுகள் வெடித்துச் சிதறிப் பல திக்குகளிலும் சிறுசிறு குண்டுகளாகப் பாய்ந்து பேரழிவைப் பெரும் பரப்பளவில் ஏற்படுத்தும். இரண்டாம் உலகப் போரின்போது இது மிகவும் கண்டனத்தைப் பலரிடம் இருந்தும் பெற்றது. பாரசூட் மூலம் வீசப்படும் கொத்துக் குண்டுகள் (Cluster Bombs) விமான தளங்கள், குடியிருப்புப் பகுதிகள் போன்றவற்றில் வீசப்பட்டன. இவை கான்கிரீட் தளங்களைப் பிளந்தன. ராணுவக் கவச மோட்டார்களை, டாங்கிகளை கிழித்து அழித்தன. வியட்நாம் நாட்டின் விடுதலை வீரர்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய அக்கிரமப் போரின்போது அமெரிக்கா பயன்படுத்தியது. நாபாம் போன்ற கொடிய வேதிப்பொருள் நிரப்பிய குண்டுகளை வியட்நாம், லாவோஸ், கம்போடியா நாடுகளின்மீது அமெரிக்கா வீசியது. அண்மையில் கொசாவோ, ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளின் மீது நடத்திய கொடுந் தாக்குதல்களிலும் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
இலங்கையில் தங்கள் தாயகமான ஈழத்தின் விடுதலைக்காகப் போராடிய நிராதரவான தமிழ்க் குடிமக்கள் மீது சிங்கள இனவாத அரசு இத்தகைய கொத்துக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திக் கொன்ற கொடுமையும் நிகழ்ந்தது. மானுடப் பற்றாளர்களும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரும் குரல் எழுப்பி இக்கொடும் குண்டுகளைத் தடை செய்திட வேண்டுகோள் விடுத்தனர். ஆனாலும், கொடும் வல்லரசுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா போன்றவை கேளாக் காதினராக இருந்து வருகின்றனர்.
52 ஆயிரம் கோடி டாலர் செலவு செய்து மன்ஹாட்டன் திட்டம் என்ற பெரியாரியல் கமுக்கமாக ஆய்வு செய்து அமெரிக்கா கண்டுபிடித்த பேரழிவு ஆயுதம்தான் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டு. ஜெர்மனியில் ஆண்ட நாஜி அரசு (இட்லரின் ஆட்சி) அணுகுண்டைத் தயாரிக்கும் என்கிற அச்சத்தை இட்லரின் பரம எதிரிகளான யூதர்கள் சிலர் தெரிவித்தனர்.
ஜெர்மனியை முந்திக் கொண்டு தாம் தயாரித்து விடவேண்டும் என்று அமெரிக்கா துடித்தது. திட்டமிட்டது. திட்ட இயக்குநராக ராபர்ட் ஓபன்ஹீமர் என்பார் நியமிக்கப்பட்டார். 1942இல் தொடங்கிய ஆய்வு 16.7.1945இல் முதல் அணுகுண்டைத் தயாரித்தது. அதற்குப் பெயர் டிரினிட்டி எனச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் மூன்று முக்கிய கடவுள்களுக்கு (திரிமூர்த்தி) இப்பெயர்.  கத்தோலிக்கக் கிறித்துவத்தில் பரிசுத்த ஆவி, தந்தை, தாய் ஆகிய மூன்றுக்கும் இப்பெயர். வழிபாட்டுக்கு உரியதாகக் கருதப்படும் மதப் பெயர் பேரழிவுக்குக் காரணமாகும் அணுகுண்டுக்கு வைத்த விசித்திரத்தை என்ன சொல்வது? கடவுள்களை நம்புவதும்கூட மனித இனத்தை அழித்திடும் மூடநம்பிக்கை என்பதாக இருப்பதால் வைத்தார்களோ? இதனை நியூமெக்சிகோவில் அலமகார்டோ என்ற இடத்தில் வெடிக்கச் செய்து சோதனை நடத்தின நாள் 16.7.1945! ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது வீசி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று மகிழ்ந்தது அமெரிக்கா?
அணுகுண்டு தயாரித்த மன்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்றிய எட்வர்ட் டெல்லர் என்பவர் ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க முடியும் என நம்பினார். முயற்சித்தார். ஸ்டானிஸ்லா உலம் என்பாருடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்தார். ஹைட்ரஜன் குண்டைத் தயாரித்தார். இரண்டாம் உலகப் போரில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு 20 ஆயிரம் டன் TNT ஆற்றல் வாய்ந்தது. ஆனால் அய்வி மைக் (Ivy Mike) எனப் பெயர் சூட்டப்பட்ட  ஹைட்ரஜன் குண்டு 104 லட்சம் டன் TNT ஆற்றல் பெற்றது என்றால் எத்துணை வலிமை வாய்ந்த பேரழிவு ஆயுதம் என்பதை விளங்கிக் கொள்ளலாம். 1952 நவம்பர் மாதத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இதனையெல்லாம் அறிந்த அறிஞர் அய்ன்ஸ்டீன் குறிப்பிட்டார். இந்த ஹைட்ரஜன் குண்டு மூன்றாம் உலகப் போரில் பயன்படுத்தப்படும். அந்தப் போருக்குப் பிறகு நடக்கும் போர்களில் கழி, கல் முதலியவற்றைக் கொண்டு தாக்கிக் கொள்வார்கள் என்று! எல்லாம்தான் அழிந்துபோய் இருக்குமே! கல்லும் கழியும்தான் எஞ்சி இருக்கும் என்ற கருத்து! சரிதானே! நம்முடைய நாட்டில் ஆயுத பூஜை என்று கொண்டாடுகிறார்கள். காவல்துறையும் ராணுவமும் கொலைக் கருவிகளுக்குப் பூஜை போட்டு வணங்குகிறார்கள். அவை என்ன மானுட வாழ்க்கைக்குப் பயன்படும் கருவிகளா? துப்பாக்கிகளைக் கண்டுபிடித்தவர்களின் பெயர் தெரியாது இவர்களுக்கு! ஆனால் பூஜை செய்கிறார்கள்.
இத்தகைய மடத்தனம் மலிந்திருப்பதால்தான் அறிவியல் மனப்பான்மையே இல்லாத மக்களாக இந்தியர்கள்! இம்மனப்பான்மை மாற்றப்பட்டு அறிவியலும் வளர வேண்டும், அரிய கண்டுபிடிப்புகளைச் செய்திட வேண்டும் என்கிற ஆர்வமும் ஆற்றலும் வளர வேண்டும். சும்மா வெறுமனே செக்கு மாட்டு வாழ்க்கை வாழக்கூடாது. இதற்கான கண்களை இந்திய மக்களுக்குத் திறக்க வைக்கக் கட்டுரை பயன்படட்டும்!