செவ்வாய், 1 டிசம்பர், 2015

பால்வெளி மண்டலம்
பிரபஞ்ச ரகசியத் தொடரில் அவ்வப்போது பால்வெளி மண்டலம் என்ற பெயரை பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் பால்வெளி மண்டலம் பற்றி தமிழில் அவ்வளவான செய்திகள் அதிகம் இல்லை, அப்படியே இருந்தாலும் அறிவியல் வார்த்தைகள் சரியாக தமிழ்படுத்தப் படாமலும், தெளிவில்லாமலும் உள்ளது.
அப்படிப்பட்ட கட்டுரைகள் வானியல் பற்றி நன்கு விபரம் அறிந்த சிலருக்கு மட்டும் புரியும் படியாக உள்ளது. பால்வெளி மண்டலம் என்பது நாம் குடியிருக்கும் வீடு போன்றது நமது வீட்டைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டாமா? எளிய தமிழில் எதிர்காலத்தில் விண்ணை ஆளப்போகும் பிஞ்சுகளுக்காக இதைக் கொடுத்துள்ளோம். இது பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல பால்வெளி மண்டலம் பற்றி அறிய ஆர்வமுள்ள அனைவருக்குமானது.
தொடர்ந்து படித்து வந்த சூரியன், கோள்கள், விண்மீன் மண்டலங்கள், ஒளிர்முகில் கூட்டம் இதர, இவை அனைத்தும் நமது பால்வெளி மண்டலத்தில் தான் அடங்கியுள்ளது.
இரவு நாம் வானில் காண்பவை  அனைத்தும், நமது பால்வெளி மண்டலத்தின் மிகச்சிறிய பகுதியே. எடுத்துக்காட்டாக பால்வெளி மண்டலத்தை நாம் வசிக்கும் வீடாக  எடுத்துக் கொண்டால் நாம் இருக்கும் பகுதி வீட்டு அலமாரியில் வைத்திருக்கும் ஒரு சிறிய தீப்பெட்டி போன்றது தான்,
நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை வானத்தை நன்கு கூர்ந்து கவனித்தால் வடக்கிலிருந்து தெற்கு முகமாக அழகிய சிறிய வண்ணச்சிதறல் பட்டையைப் போன்று ஒன்றைக் காணலாம்.  நீங்கள் பார்க்கும் அந்த அழகிய வெண்சிதறல் பட்டைதான்  பால்வெளி மண்டலம் அல்லது பால்வீதி ஆகும். இதை ஆகாய கங்கை என்று கூறி பல மூடநம்பிக்கை கதைகளைத் திணிப்பார்கள்.
ஆகவே மூடநம்பிக்கைப் பெயரான ஆகாய கங்கை (வட மொழியில் ஆகாஷ் கங்கா) என்ற பெயரைப் பயன்படுத்துவது தவறான கருத்தைக் கொடுத்துவிடும்
சாதாரண தொலைநோக்கி கொண்டு பார்க்கும் போது எண்ணிலடங்கா விண்மீன் சிதறல்கள் இந்த பால்வீதியில் இருப்பதைக் காணலாம். நவீன தொலைநோக்கி கொண்டு பார்க்கும் போது விண்மீன்கள் மேலும் தெளிவாகத் தெரியும்.
வடக்கு முகமாக காசியோப்பியா என்ற விண்மீன் மண்டலத்தில் இருந்து,   ஓரையான் வழியாக தெற்கே தென்சிலுவை செண்டாரஸ் விண்மீன் மண்டலத்தில் முடியும், இந்தப் பால்வீதியின் விளிம்புகளைப் பார்த்தால் ஒழுங்கற்று காட்சிதரும்.
நன்றாக கவனித்து வந்தால் சில இடங்களில் பெரியதாகவும் சில இடங்களில் இரண்டாக பிரிந்து பிறகு ஒன்று சேர்வது போல் காட்சிதரும். சித்திரை (ஸ்பைகா), ஸ்வாதி  (அர்க்டூரஸ்), மகம் (ரெகுலஸ்), பாமல்ஹெனத் போன்ற பிரபலமான விண்மீன்களின் பின்பலத்தில் இவை காட்சி தரும். முக்கியமாக இந்த விண்மீன்கள் குளிர்காலத்தில் தெரியும்.
ஆகவே இந்த விண்மீன்களை நாம் தொடர்ந்து பார்ப்போமோயானால் பால்வீதியை நாம் எளிதில் காணலாம்.
பால்வெளி மண்டலத்தை நமக்கு அடையாளம் காட்டியவர்
நீண்ட காலமாக துருவப்பகுதி மற்றும் அய்ரோப்பியப் பகுதியில் பாலை வானில் சிதறிவிட்டது போல் (Milky Way) காட்சி தரும் பொருளைப் பற்றி அறிய பல அறிவியல் ஆய்வாளர்கள் முனைந்தனர். அதில்  முதன்முதலாக வெற்றிகண்டவர் தொலை நோக்கியைக் கண்டறிந்த கலிலியோ தான்,
கோள்களை ஆய்வு செய்வதற்காக, தானே தயாரித்த தொலைநோக்கியைக் கொண்டு வானை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார், அவர் கண்டுபிடித்த தொலை நோக்கி தற்போதுள்ள சாதாரண தொலை நோக்கியைவிட சக்தி குறைந்தது என்றாலும் அவர் அதன் மூலம் நமக்கு பல்வேறு கேள்விகளுக்கான விடைகளைச் சொல்லிச்சென்றார்.
அதில் ஒன்று தான் இந்தப் பால்வெளி மண்டலம், கோள்களைப் பற்றிய தனது ஆய்வின் போது எண்ணிலடங்கா விண்மீன் பட்டைகளைக் கொண்ட பால்வெளி மண்டலத்தையும் அவர் ஆய்வு செய்யத் தவறவில்லை,
கலிலியோவின் பால்வெளி மண்டலம் பற்றிய பல்வேறு ஆய்வு 1920 வரை பலரால் கவனிக்கப் படாமலேயே இருந்தது. 1920 ஆம் ஆண்டு ஹர்லொவ் சேப்லீ, அவரது உதவியாளர் ஹேபர் குர்டிஸ் இருவரும் கலிலியோவின் ஆய்வுக் குறிப்புகளில் உள்ள பால்வெளி மண்டலம் பற்றி ஆய்வு செய்ய முடிவுசெய்தனர்.
இவர்களுக்கு எட்வின் ஹப்பிள் உதவிபுரிந்தார். அன்றிலிருந்து இன்று வரை நாம் பல கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங் களைப் பற்றி தெரிந்து கொண்டோம்.
விழாக்காலங்களில் எரியும் சங்குசக்கர பட்டாசு போன்று தோற்றமளிக்கும் பால்வெளி மண்டலம் சுமார் லட்சத்து எண்பதாயிரம் (1,80,000) ஒளியாண்டு அளவில் உள்ளது. அதாவது ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குச் செல்ல 1,80,000 ஒளியாண்டுகள் ஆகும்.
இது 100-முதல் 400 பில்லியன் விண்மீன்களை உள்ளடக்கியது, இதில், நமது சூரியனும் ஒன்று, சில அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு டிரில்லியன் விண்மீன்கள் வரை இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
இந்த விண்மீன்கள்களை மையமாக வைத்து நமது சூரியக்குடும்பத்தில் உள்ளக் கோள்களைப் போல் சுமார் 100--மில்லியன் கோள்கள் இருக்கலாம் என்று கருதுகிறார் கள். நாம் இதுவரை 4000-த்திற்கும் மேற்பட்ட கோள்களைக் கண்டுபிடித்து விட்டோம். அந்தக் கோள்களில் நம்மைப் போன்ற உயிரினங்கள் உள்ளதா என்ற ஆய்வும் நடந்து வருகிறது.
நாம் தற்போது இந்த பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதிக்கு அருகில் இருக்கிறோம், நமக்கும் மையப்பகுதிக்கும் உள்ள தூரம் 21,000 ஒளியாண்டுகள் ஆகும்.
பிறப்பு
பெருவெடிப்புக் கொள்கைக்குப் பிறகு பல்வேறு பொருட்கள் உருவாகி அண்டத்தின் வெற்றுவெளியில் நான்கு புறமும் பரவத் துவங்கியது. அவ்வாறு பரவியப் பொருட்களில் அதிகமாக உள்ளவை தூசுகள் தான். இந்த தூசுகள் நாம் முன்பு பார்த்த ஒளிர்முகில் போன்றவைதான்,
ஆனால் இவ்வகை தூசுக்கள் பல ஆயிரம்கோடி மடங்கு பெரியவை, ஒளிவேகத்தில் நான்குபுறமும் பரவிக்கொண்டு இருந்த இந்த தூசுகள் நாளடைவில் தங்களுக்குள்ளே ஈர்ப்புவிசை காரணமாக மையப் புள்ளி ஒன்றை இலக்காக வைத்து சுழல ஆரம்பிக்கின்றது. நாளடைவில் அருகருகில் உள்ள தூசுப் படலங்கள் அனைத்தையும் ஈர்க்கும் போது அது சுருள்வடிவமுள்ள அழகிய பால்வெளி மண்டலங்களாக உருமாறுகிறது.
எடுத்துக்காட்டாக நாம் பஞ்சுமிட்டாய் செய்யும் இயந்திரத்தை எடுத்துக் கொள்ளலாம், பஞ்சுமிட்டாய் செய்பவர் சர்க்கரையை சுழல் சக்கர அடுப்பின் மையத்தில் கொட்டிய பிறகு வேகமாக சுழலும் பாத்திரத்திற்குள் மெல்லிய பஞ்சு போல் படியுமல்லவா அது போல் தான் நமது பால்வெளி மண்டலமும் காட்சிதரும்.
விண்வெளி ஆய்விற்காக ஹப்பிள் (Hubble) என்ற மிகப்பெரிய  தொலை நோக்கியை நாசா வானியல் ஆய்வாளர்கள் கடந்த 1990--ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆ-ம் தேதி விண்ணில் செலுத்தினர். இந்த தொலைநோக்கியின் மூலம் ஏராளமான புகைப்படங்கள் பெறப்பட்டு, தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நமது  பால்வளி மண்டலம் பற்றிய பல்வேறு உண்மைத் தகவல்களைப் படம்பிடித்து அனுப்பி வருகிறது.
முக்கியமாக நமது பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி பற்றி பல்வேறு தகவல்கள் கணக்கீடுகளின் மூலம் கிடைத்தாலும் அதை கண்களால் கண்டு தகவல்களை உறுதிப்படுத்த விண்ணியல் ஆய்வாளர்கள் பேராவல் கொண்டு இருந்தனர். அவர்களின் ஆர்வத்திற்கு ஈடு செய்யும் வகையில் ஹப்பிள் பல்வேறு படங்களை அனுப்பி இருந்தது,
பால்வெளி மண்டலங்களுக்கிடையே இருக்கும் கருந்துளை பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
-பெரியார் பிஞ்சு மாத இதழ்,நவம்பர் 2015

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக