வியாழன், 3 டிசம்பர், 2015

உலகிலேயே மிக நீளமான உயிரினம் எது ?


உலகிலேயே மிக நீளமான உயிரினம் எது ?
நீலத் திமிங்கிலம் அல்லது சிங்கப்பிடரி ஜெல்லிமீன் என்று பதில் கூறினால் அவை சரியான விடைகள் அல்ல. Lineus longissimus  என்னும் நாடாப் புழுதான் உலகத்திலேயே  மிக நீளமான உயிரினம் ஆகும். இதன் நீளம் 60 மீட்டர் வரை (200 அடி) நீளும் தன்மை கொண்டது. இது ஏறக்குறைய நீலத் திமிங்கிலத்தின் நீளத்தைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டதாகும். ஜெல்லிமீனை விட மூன்றில் ஒரு பங்கு கூடுதல் நீளம் கொண்டது.
ஒரு நாடாப்புழுவை ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் இரு முனைகளை இணைத்துக் கட்டினாலும், அதன் நீளம் அதை விட அதிகமாகவே இருக்கும். இது நெமேட்டா (Nemettea) புழுக்குடும்பத்தைச் சேர்ந்தது. நெமேட்டா என்பது கடல்கன்னி (Nemertes)  என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது. இவைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன; அவைகளில் பெரும்பாலானவை கடல்வாழ் உயிரினங்களாகும். மெல்லியதாகவும், நீளமான தாகவும் இருப்பவை அவை. அவற்றில் நீளமானவை கூட குறுக்களவில் ஒரு சில மில்லி மீட்டர் அளவே இருக்கும்.
நாடாப்புழு 30 மீட்டர் (100அடி) வரைதான் நீளும் என்று பலதரப்பினர் தெரிவிக்கின்றனர்.  இது சிங்கப் பிடரி ஜெல்லிமீனைப் போன்ற நீளம் கொண்டதல்ல.  ஆனால், அவற்றின் நீள்தன்மை மிகவும் அசாதாரணமானது என்று அண்மைக்காலத் தகவலல்கள் தெரிவிக்கின்றன. 50 மீட்டர் (165 அடி) வரை முழுமையாக நீளக்கூடிய நாடாப்புழுக்கள் பல காணப்பட்டுள்ளன.
அவை 50 கோடி ஆண்டு காலமாக இருந்து வருகின்றன என்பதை அவற்றின் கற்படிவங்கள் காட்டுகின்றன.
நாடாப்புழுக்களுக்கு இதயம் கிடையாது. தங்கள் சதையின் மூலமே அவை ரத்த ஓட்டத்தைப் பெறுகின்றன. தனியான வாயையும், கழிவு உறுப்பையும் பெற்றிருக்கும் ஒரு சாதாரணமான எளிய உயிரினம் இது.
நச்சுத்தன்மை கொண்ட கொக்கிகள் கொண்ட, ஒட்டிக் கொள்ளும், ஒரு நீண்ட மெல்லிய குழாயை  வேகமாக செலுத்த இயன்ற,  புலாலை விரும்பி உண்ணும் உயிரினம் இது. ரம்பம் போன்ற பற்களைக் கொண்ட இந்தக் குழாய்கள் கடின ஓடு கொண்ட நத்தை, நண்டு போன்ற உயிரினங்களைத் திகைப்படையச் செய்த பின், அவற்றை இவை உணவாகக் கொள்ளும். பெரும்பாலான நாடாப் புழுக்கள் கடலின் அடியில்  தங்கி சுற்றித் திரிபவையாகும். அவற்றில் சில வியக்கத்தக்க வகையில் வண்ணமாக ஒளிரக்கூடியவை.
Nemerteans  சிதைக்கப்பட்டாலும் இனப்பெருக்கம் அடையக்கூடியது. சில நாடாப் புழு இனங்கள் தங்களைத் தாங்களே சிறிய சிறிய துண்டுகளாக ஆக்கிக் கொண்டு, அந்தத் துண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு புதிய புழுவாக ஆகும் வகையில் இனப்பெருக்கு செய்ய இயன்றவை.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
-விடுதலை,5.1.12

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக