வியாழன், 22 டிசம்பர், 2022

செயற்கைக் கருப்பை அறிவியலின் அடுத்த அடி


இயந்திரங்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் மனித வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு முன்பே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது. எதிர்காலத்தில் இயந்திரங்கள் மூலம் என்ன என்ன நடக்கும் என்று கணிப்பது கடினம்.  அந்த வகையில் இப்போது செயற்கைக் கருப்பை மூலம் குழந்தைகளை பிறக்க வைக்க முடியும் என்று எக்டோ லைப்  என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. எக்டோலைப் நிறுவனம் பெர்லினை தலைமையகமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம். இந்த நிறுவனம் தான் உலகின் முதல் செயற்கைக் கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது.   வருங்காலத்தில் தாய் கர்ப்பமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை போன்ற வலிகளில் இருந்து பெண்கள் விடுதலை அடைவார்கள்

எக்டோலைஃப், 'உலகின் முதல் செயற்கைக் கருவூட்டல் வசதி' என்பது குழந்தைகளை பெற்றெடுக்க பெற்றோர் களுக்கு இது ஒரு வசதியாக வழிமுறையை வழங்குகிறது.  பெண்களின் கருப்பை போலவே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள கருப்பை  அமைப்புகள் மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்று எக்டோலைப் நிறுவனம் கூறுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு செயற்கைக் கருப்பைகளிலும் குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், வெப்பநிலை, சுவாசம் உள்ளிட்ட முக்கிய உயிர்காக்கும் அம்சங்களை கண்காணிக்கும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது தொடர்பான காணொலிக் காட்சிப் பதிவை எக்டோலைப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களின் ஐம்பது ஆண்டுகால 'முன்னோடியில்லாத அறிவியல் ஆராய்ச்சி'யின் அடிப்படையில் கூறிள்ளது,  ஒரு ஆய்வகத்தில் ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை வளர்க்க முடியும். மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இது பெரிதும் உதவும் என்றும், உடல் நல பாதிப்புகள் மற்றும் கருப்பை பாதிப்புகளால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் பெண்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் எனவும் கூறப்படுகிறது. இது முழுவதும் மாசற்ற மின்சார சக்தியில் இயங்கும் இதன் கீழ் 75 ஆய்வகங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஆய்வகத்தில் 400 செயற்கைக் கருப்பை இருக்கும்.