வியாழன், 31 ஜனவரி, 2019

'மாட்டு மூத்திர மகாத்மியம்'பற்றி அளந்து கொட்டுபவர்களுக்கு மரண அடி!

கரியமில வாயுவைவிட அபாயகரமானது- 300 மடங்கு வெப்ப சலனத்துக்குக் காரணம் மாட்டு மூத்திரமே!


பன்னாட்டு அறிவியல் அறிஞர்களின் ஆய்வு அறிக்கைகள் அம்பலம்




மாட்டு மூத்திரம் கிருமி நாசினி என்றும், மருத்துவக் குணம் கொண்டது என்றும் அளந்து கொட்டும் பிற்போக்குவாதிகள் - கோமாதா புத்திரர்களுக்கு' மரண அடி கொடுக்கும் வகையில் அறிவியல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்திரப் பிரஸ்தா பல்கலைக் கழக பயோ-டெக்னாலஜி துறைப் பேராசிரியரும், சர்வதேச நைட்ரோஜன் இனிஷியேட்டிவ் அமைப்பின் தலைவருமான என்.இரகுராம் கூறியுள்ளார். இதனை எடுத்தாண்டு  திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

பசு மாட்டை கோமாதா - குலமாதா' என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் வணங்குவதுடன், பசு பாதுகாப்புக் குழு - காவல் படை என்ற பெயரில் மற்றவர்களை - குறிப்பாக தலித்துகளை - முசுலீம்களைக் கொல்லும் நிகழ்வுகளும், குஜராத்திலும், உ.பி.யிலும், வடமாநிலங்களிலும் (பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்) இதற்குத் தனியே ஒரு அமைச்சகமும், அமைச்சர் எல்லாம்கூட ஏற்படுத்தி, கூத்தடிக்கின்றனர்!'' எதிர்த்துப் போட்டியிடும் எதிர்கட்சிகள்கூட அதனையே தாங்கள் செய்வதாகக் காட்டி, வாக்கு வங்கி அரசியல் நடத்துவது அதைவிட - பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்சைவிட மகாமகா கேலிக் கூத்தாகும்!

வெப்ப சலனத்தால் ஏற்படும் தீங்குகள்!


இன்று வந்துள்ள ஆங்கில நாளேடு இந்து' பத்திரிகையில் (கோவை பதிப்பு 7 ஆம் பக்கம், 31.1.2019) உள்ள ஒரு செய்தி - அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் திடுக்கிடுவதாக இருக்கிறது.

நாட்டின் பல்வேறு அசாதாரண இயற்கை நிகழ்வுகள் - பருவ மழை தவறுதல், புயல், சுனாமிச் சீற்றங்கள் போன்றவை ஏற்படுவதற்கு மூலகாரணம் வெப்ப சலனம் (Global Warming) ஆகும் என்பது நிலைநாட்டப்பட்ட உறுதியான அறிவியல் கருத்தாகும்.

மாட்டு மூத்திரத்தால் மிகப்பெரிய கேடு - பேராபத்துகள்!


பசு மாட்டின் மூத்திரம் கிருமிகளைக் கொல்லுகிறது - மருத்துவமனைகளில் கிருமி நாசினிகளாகப் பயன் படுகிறது (Disinfectant)  - இது பயிரை வளர்க்கிறது  - நோய்களைத் தீர்க்கிறது  என்று அளந்து கொட்டியவர்கள் முகத்திரையைக் கிழிக்கும் அறிவியல் தகவல் இன்று (31.1.2019) வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு சதவிகிதம் பலன்  அவற்றால் என்றால், பல மடங்கு இந்த மாட்டு மூத்திரத்தால் ஏற்படும் 'நைட்ரஜன்' N2O என்ற Nitrous oxide emissions  என்பது வெப்ப சலனத்தை உருவாக்கக் காரணமான கரியமிலவாயுவைவிட 300 மடங்கு அதிகமான ஆபத்தை உருவாக்கக் கூடிய சக்தியுள்ளதாக  உள்ளது என்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளை அதிகம் உபயோகிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என்பதால், குறிப்பாக இந்த நைட்ரோ ஆக்சைடுமூலம் ஏற்படும் தீமை மிக அதிகம் என்பதை, கொலம்பியா, அர்ஜென்டினா, பிரேசில், நிகரகுவா, டிரினிடாட், டோபோகோ ஆகிய நாடுகளின் ஆய்வுகள் தொகுப்பாக ‘Scientific Reports' (விஞ்ஞான அறிக்கைகள்) என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது!

இந்த அறிவியல் அறிக்கைகள்மூலம் பசு மாட்டு மூத்திரம் (பஞ்சகவ்யம் உள்பட) எவ்வளவு ஆபத்தான ஒன்று என்பது புரிகிறதா?

உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்!


எனவே, கோமாதா மூத்திரம் - உலக அழிவு - வெப்ப சலனம்மூலம் ஏற்பட முக்கிய காரணம் என்றால், இதைத் தடுப்பது - மாற்றுவதுபற்றி விஞ்ஞானிகள் கூடிக் கலந்து தடுப்புப் பரிகாரம் தேடவேண்டும் என்பதே நமது முக்கிய வேண்டுகோள்.

டில்லி இந்திரப் பிரஸ்தா பல்கலைக் கழக பயோ-டெக்னாலஜித் துறை பேராசிரியரும்,  சர்வதேச நைட்ரோஜன் இனிஷியேட்டிவ் அமைப்பின் தலை வருமான என்.இரகுராம் இதுபற்றி மேலும் ஆய்வு களும், மாற்றுப் பரிகார, தடுப்புக்கான வழிவகைகளைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இதுவும் முக்கிய மாகும்!

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

கோவை

31.1.2019

-  விடுதலை நாளேடு, 31.1.19

வியாழன், 24 ஜனவரி, 2019

தாவர ஒளிச்சேர்க்கையில் திருத்தம் செய்த விஞ்ஞானிகள்!



செடிகள் பச்சையம் தயாரிக்க சூரிய ஒளியை பயன்படுத்தும் விதத்தில், ஒரு குறையை கண்டுபிடித்துள்ளது சர்வதேச விஞ்ஞானிகள் குழு.

அது என்ன குறை? தாவரங்களில், ‘ரூபிஸ்கோ’ என்ற என்சைம் உள்ளது. இந்த என்சைம், ஒளிச்சேர்க்கை நிகழும் போது, கார்பன்டையாக்சைடு மூலக்கூறுகளை ஈர்த்து, பச்சையம் தயாரிக்கிறது.

ஆனால், அவ்வப்போது ஆக்சிஜன் மூலக்கூறுகளையும் ரூபிஸ்கோ ஈர்த்து விடுகிறது. இதனால், தாவரங்களின் உடலில் நச்சுகள் சேர்ந்து விடுகின்றன.

இந்த நச்சை, ஒளி சுவாசம் - போட்டோ ரெஸ்பைரேஷன் என்ற வேதிவினை மூலம், தாவரங்கள் அகற்ற வேண்டியிருக்கிறது.

இந்த வேதிவினைக்காக, ஒரு தாவரம் சேகரிக்கும் ஆற்றலில், கணிசமான ஆற்றல் வீணாகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆற்றல் செடியின் வளர்ச்சிக்கு மடை மாற்றப்பட்டால், செடியின் வளர்ச்சியும், அதன் காய், கனி, பூக்கள் போன்ற விளைச் சலும் கணிசமாக அதிகரிக்கும்.

‘சயின்ஸ்’ இதழில் வெளியாகியுள்ள கட்டு ரையின்படி, விஞ்ஞானிகள், தாவரங்களின் மரபணுவில் எளிய மாற்றத்தை செய்ததன் மூலம், செடிகளின் வளர்ச்சியும், மகசூலும், 40 சதவீதம் வரை அதிகரிக்க முடியும்.

கார்பன் டை ஆக்சைடை மட்டும் ஈர்க்கும் வகையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட புகையிலை செடி, மற்றும் சாதாரண புகை யிலை செடிகளை வைத்து, ஆய்வகத்தில் இரண்டு ஆண்டுகள் சோதித்ததில், மரபணு மாற்றப்பட்ட செடி அதிவேகமாக, அதிக இலைகளுடன் வளர்ந்திருப்பதை உறுதி செய்தது, விஞ்ஞானிகள் குழு.

அது மட்டுமல்ல, தாங்கள் உருவாக்கிய செடிக்கு, 25 சதவீதம் குறைவான தண்ணீரே தேவைப்பட்டது எனவும், அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

விலையுயர்ந்த உரங்களைக் கொட்டாமல், ஒளிச்சேர்க்கை முறையில் மட்டும் திருத்தம் செய்து இந்த வெற்றி கிடைத்துள்ளதால், அடுத்த சில ஆண்டுகளில், வளரும் நாடுகளி லுள்ள சிறு விவசாயிகளுக்கு, இந்த தொழில் நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என, விஞ்ஞானிகள் தீர்மானித்து உள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 17.1.19

விண்வெளியில் ரேடியோ சிக்னல்?



சுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானிய லாளர்கள் கூறியுள்ளனர்.

கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

மிகச்சரியாக அது என்னவிதமான ரேடியோ அலைகள் என்பதோ, மிகச்சரியாக எங்கிருந்து வந்தது என்பது பற்றியோ தெரியவில்லை.

13 ரேடியோ வேக அதிர்வுகளில் ஒரு அசாதாரணமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து திரும்பத் திரும்ப வந்தது.

ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒளி பயணிக்கும். இந்த வேகத்தில் ஒளி ஓராண்டு பயணித்தால் அடையும் தூரமே ‘ஓர் ஒளி ஆண்டு தூரம்‘ எனப்படும்.

எனவே, விநாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் 150 கோடி ஆண்டுகள் பயணித்தால் செல்லக்கூடிய தூரத்தில் இருந்து இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் இருந்து ரேடியோ வேக அதிர்வுகள் திரும்பத் திரும்ப வரும் நிகழ்வு இதற்கு முன்பு ஒரே ஒருமுறை நடந்துள்ளது. அப்போது வேறொரு டெலஸ்கோப் உதவியுடன் அந்த சிக்னல் கண்டறியப்பட்டது.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின், ஒகநாகன் பள்ளத்தாக்கில் உள்ள சைம் வான் நோக்கியகம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

இந்த வான் நோக்கியகத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 100 மீட்டர் நீள அரை உருளை வடிவ ஆண்டெனாக்கள் உடனடியாக இந்த 13 ரேடியோ வேக அதிர்வுகளைக் கண்டுபிடித்தது. இந்த ஆண்டெனாக்கள் தினமும் வடதிசை வானத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து பார்க்கின்றன.

‘நேச்சர்’ ஆய்விதழில் இந்த ஆய்வு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 24.1.19

வியாழன், 10 ஜனவரி, 2019

திரை வேண்டாம் - சுவரே போதும்!



ஏற்கெனவே உள்ளதுதான். என்றாலும் அதிலும் சில புதுமைகளைப் புகுத்தியிருக்கிறது எல்.ஜி., திரையில் லாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரைப் படங்களையும் பார்க்க உதவும் புரஜக்டர்கள் வீட்டுப் பயன்பாட்டுக்கு வந்து பலகாலம் ஆகிவிட்டது.

என்றாலும், புரஜக்டரில் உள்ள ஒரு சிக்கல், ஒளிக் கற்றைக்குக் குறுக்கே யாராவது நடந்துபோனால், கையைக் காட்டினால், காட்சியில் நிழல் விழும். இந்தக் குறையை போக்க, சுவருக்கு, 2 அங்குல துரத்தில் வைத்தால் முழுமையாக, துல்லியமாக படத்தைக்காட்டும், ‘சினி பீம்‘ என்ற புரஜக்டரை எல்.ஜி., விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

சுவரிலிருந்து, 2 அங்குல தொலைவில் வைத்தால், 90 அங்குல அகலத்திற்கு சினி பீம் படம் காட்டுகிறது. அதிலிருந்து தொலைவை அதிகரித்தால், இன்னும் பெரிய அளவில் படம் தெரியும்.

சுவரில் அல்லது திரையில் படத்தைக் காட்டுவது லேசர் கதிர்கள் என்பதால், காட்சிகளின் விளிம்பில்கூட பிசிறு இருக்காது என்கிறது, எல்.ஜி., மேலும், தொலைக்காட்சி சேனல்களை மாற்ற மேஜிக் ரிமோட் என்ற புதுமையான ரிமோட்டையும் எல்.ஜி., வடிவமைத் துள்ளது.

அல்லது வீட்டிலிருப்பவர்களின் குரல் கட்டளை களையும் கேட்டு ஒலியை கூட்டிக் குறைக்கவும், காட்சி களை சரி செய்யவும், சேனல்களை மாற்றவும் முடியும். ஜனவரி, 2019இல் நடக்கவுள்ள உலகப் புகழ்பெற்ற சி.இ.எஸ்., கண்காட்சியில் சினி பீம் அறிமுகமாக இருக்கிறது.

- விடுதலை நாளேடு, 10.1.19

காட்சியோடு வாசம் காட்டும் மெய்நிகர் தொழில்நுட்பம்



முப்பரிமாண மாய உலகத்தைக் காட்டும் மெய்நிகர் தொழில்நுட்பம், இதுவரை கண்களுக்கு மட்டுமே விருந் தளித்து வந்தது. இனி, இத்துடன், ‘பீல் ரியல்’ முகமூடியை அணிந்து கொண்டால், கண்களில் தெரியும் காட்சிக்கு ஏற்ப, பலவித வாசனைகளையும் பார்வையாளர் உணரலாம்.

பீல் ரியல் முகமூடிக்குள் ஒன்பது வாசனைகளுக்கான குமிழ்கள் உள்ளன. இவற்றை காட்சி சூழலுக்கு ஏற்றபடி பீய்ச்சியடிப்பதன் மூலம், 255 விதமான வாசனைகள், நாற்றங்களை பார்வையா ளரின் மூக்கிற்கு அனுப்பலாம்.

காபியின் கமகம மணம், லாவண்டரின் நறுமணம் முதல் சாலையில் டயர் உராய்ந்து ஏற்படும் வாடை, ஏன், துப் பாக்கி மருந்து எரியும் நாற்றம் உள்ளிட்ட பல வாடைகளை, பீல் ரியலின் முக மூடியால் வேண்டிய நேரத்தில் உருவாக்க முடியும்.

‘மூக்கிற்கு மட்டுமல்ல, மற்ற புலன் களுக்கும் தேவையான உணர்வுகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம்‘ என, பீல் ரியலின் வடிவமைப்பாளர்கள்

தெரிவித்துள்ளனர்.

உதாரணத்திற்கு, மெய்நிகர் காட்சியில் பனி இருந்தால், பார்வையாளரின் முகமூடிக்குள் ஜில்லென்ற காற்று வீசும். தீப்பிடிக்கும் காட்சி என்றால் வெப்பக் காற்று முகமூடிக்குள் வீச, பார்வையாளர், தீயிற்கு அருகே இருப்பது போல உணர்வார்.

தற்போது உள்ள மெய்நிகர் விளை யாட்டுகளை உருவாக்கியவர்கள், இனி பீல் ரியல் முகமூடியின் வாசனைகளை தூண்டும்படியான மென்பொருள்களை எழுதலாம் என்கின்றனர். இதன் மூலம் அந்த விளையாட்டுகள், கண்களுக்கு மட்டுமல்லாமல் மூக்கு, தோல் உள்ளிட்ட பிற புலன்களுக்கும், நடப்பவை நிஜம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்த முடியும்.

தற்போது, பிரபலமாக உள்ள மெய் நிகர் கருவிகளான, ஆக்குலஸ் ரிப்ட், சாம்சங் கியர் வி.ஆர்., - எச்.டி.சி., வைவ், பிளே ஸ்டேஷன் வி.ஆர் போன்ற வற்றுடன், பீல் ரியல் முகமூடியும் சேர்ந்து இயங்கும் திறன் கொண்டது.

-  விடுதலை நாளேடு, 10.1.19