வியாழன், 24 ஜனவரி, 2019

விண்வெளியில் ரேடியோ சிக்னல்?



சுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானிய லாளர்கள் கூறியுள்ளனர்.

கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

மிகச்சரியாக அது என்னவிதமான ரேடியோ அலைகள் என்பதோ, மிகச்சரியாக எங்கிருந்து வந்தது என்பது பற்றியோ தெரியவில்லை.

13 ரேடியோ வேக அதிர்வுகளில் ஒரு அசாதாரணமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து திரும்பத் திரும்ப வந்தது.

ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒளி பயணிக்கும். இந்த வேகத்தில் ஒளி ஓராண்டு பயணித்தால் அடையும் தூரமே ‘ஓர் ஒளி ஆண்டு தூரம்‘ எனப்படும்.

எனவே, விநாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் 150 கோடி ஆண்டுகள் பயணித்தால் செல்லக்கூடிய தூரத்தில் இருந்து இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் இருந்து ரேடியோ வேக அதிர்வுகள் திரும்பத் திரும்ப வரும் நிகழ்வு இதற்கு முன்பு ஒரே ஒருமுறை நடந்துள்ளது. அப்போது வேறொரு டெலஸ்கோப் உதவியுடன் அந்த சிக்னல் கண்டறியப்பட்டது.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின், ஒகநாகன் பள்ளத்தாக்கில் உள்ள சைம் வான் நோக்கியகம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

இந்த வான் நோக்கியகத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 100 மீட்டர் நீள அரை உருளை வடிவ ஆண்டெனாக்கள் உடனடியாக இந்த 13 ரேடியோ வேக அதிர்வுகளைக் கண்டுபிடித்தது. இந்த ஆண்டெனாக்கள் தினமும் வடதிசை வானத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து பார்க்கின்றன.

‘நேச்சர்’ ஆய்விதழில் இந்த ஆய்வு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 24.1.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக