வியாழன், 24 ஜனவரி, 2019

தாவர ஒளிச்சேர்க்கையில் திருத்தம் செய்த விஞ்ஞானிகள்!



செடிகள் பச்சையம் தயாரிக்க சூரிய ஒளியை பயன்படுத்தும் விதத்தில், ஒரு குறையை கண்டுபிடித்துள்ளது சர்வதேச விஞ்ஞானிகள் குழு.

அது என்ன குறை? தாவரங்களில், ‘ரூபிஸ்கோ’ என்ற என்சைம் உள்ளது. இந்த என்சைம், ஒளிச்சேர்க்கை நிகழும் போது, கார்பன்டையாக்சைடு மூலக்கூறுகளை ஈர்த்து, பச்சையம் தயாரிக்கிறது.

ஆனால், அவ்வப்போது ஆக்சிஜன் மூலக்கூறுகளையும் ரூபிஸ்கோ ஈர்த்து விடுகிறது. இதனால், தாவரங்களின் உடலில் நச்சுகள் சேர்ந்து விடுகின்றன.

இந்த நச்சை, ஒளி சுவாசம் - போட்டோ ரெஸ்பைரேஷன் என்ற வேதிவினை மூலம், தாவரங்கள் அகற்ற வேண்டியிருக்கிறது.

இந்த வேதிவினைக்காக, ஒரு தாவரம் சேகரிக்கும் ஆற்றலில், கணிசமான ஆற்றல் வீணாகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆற்றல் செடியின் வளர்ச்சிக்கு மடை மாற்றப்பட்டால், செடியின் வளர்ச்சியும், அதன் காய், கனி, பூக்கள் போன்ற விளைச் சலும் கணிசமாக அதிகரிக்கும்.

‘சயின்ஸ்’ இதழில் வெளியாகியுள்ள கட்டு ரையின்படி, விஞ்ஞானிகள், தாவரங்களின் மரபணுவில் எளிய மாற்றத்தை செய்ததன் மூலம், செடிகளின் வளர்ச்சியும், மகசூலும், 40 சதவீதம் வரை அதிகரிக்க முடியும்.

கார்பன் டை ஆக்சைடை மட்டும் ஈர்க்கும் வகையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட புகையிலை செடி, மற்றும் சாதாரண புகை யிலை செடிகளை வைத்து, ஆய்வகத்தில் இரண்டு ஆண்டுகள் சோதித்ததில், மரபணு மாற்றப்பட்ட செடி அதிவேகமாக, அதிக இலைகளுடன் வளர்ந்திருப்பதை உறுதி செய்தது, விஞ்ஞானிகள் குழு.

அது மட்டுமல்ல, தாங்கள் உருவாக்கிய செடிக்கு, 25 சதவீதம் குறைவான தண்ணீரே தேவைப்பட்டது எனவும், அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

விலையுயர்ந்த உரங்களைக் கொட்டாமல், ஒளிச்சேர்க்கை முறையில் மட்டும் திருத்தம் செய்து இந்த வெற்றி கிடைத்துள்ளதால், அடுத்த சில ஆண்டுகளில், வளரும் நாடுகளி லுள்ள சிறு விவசாயிகளுக்கு, இந்த தொழில் நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என, விஞ்ஞானிகள் தீர்மானித்து உள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 17.1.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக