புதன், 24 ஜூன், 2015

குழந்தை கொடுப்பது மனிதனா? கடவுளா?

குழந்தை கொடுப்பது மனிதனா? கடவுளா?
- பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து எம்.ஏ., பி.எச்.டி

ஆண்_பெண் உடல் உறவு இல்லாமலே மருத்துவர்கள் செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கும் காலம் மிக விரைவில் வரும். சோதனைக் குழாய்களில் விந்துக்களைச் செலுத்தி, கருத்தரிப்பு நிகழ்ந்த பிறகு அதனைப் பெண்ணின் கருப்பையில் வைத்துக் குழந்தையை வளர்க்கும் காலம் வருங்காலம்! பிள்ளைப் பேற்றுக்கு ஆண்_பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல உடற்கட்டும் புதிய நுட்பமும், அழகும், உடல் வலிமையும் உள்ள குடிமக்கள் ஏற்படும்படியாக, பொலிகாளைகளைப் போல் தெரிந்தெடுத்து, மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை ஊசிமூலம் பெண்களின் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும். ஆண்_பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.
1943இல் தந்தை பெரியார் இக்கருத்துகளை வெளியிட்டபோது பலர் அதிர்ச்சியடைந்து போனார்கள். மயங்கி விழுந்தவர்களும் உண்டு. ஆனால் மருத்துவ அறிவியல் தந்தை பெரியார் என்னும் இயற்கை அறிவியலாளரின் திசையிலேயே பயணித்தது. 1978இல் பிரிட்டனில் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. அதன் பெயர் லூசி பிரவுன். அதன் பின்னர் சில ஆண்டுகளில் கல்கத்தாவில் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. இன்று உலகில் எல்லா நாடுகளிலும் இந்த முறை மிக எளிமையாகிவிட்டது.
தென்னகத்தைப் பொருத்தவரையில், அரச மரத்தைச் சுற்றிவந்தால், கோவில்களில் சின்னச் சின்ன தொட்டில்களைக் கட்டித் தொங்க விட்டால், விரதமிருந்தால் குழந்தை பிறக்கும் என்னும் மூடநம்பிக்கை ஆழமாக வேரூன்றியிருந்தது. அதைவிட, சாமியார்கள் பிள்ளைவரம் கொடுக்கும் ஒரு கொள்ளை நோய் பரவியிருந்தது. சாமியார்களிடமும் ஆசிரமங்களுக்கும், மடாலயங்களுக்கும் சென்று மக்கள் மானத்தை இழந்துவரும் தொடர்கதை இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையில், தந்தை பெரியார் இத்தகைய மூடநம்பிக்கைகளை எதிர்த்து முழக்கமிட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டினார்.
மலட்டுத்தன்மை: மலட்டுத்தன்மை என்பதைக் காரணமாகக் காட்டி பல பெண்கள், ஆண்களால் புறக்கணிக்கப் பட்டார்கள். ஆனால் மலட்டுத்தன்மை என்பது ஆண்களிடமும் உண்டு என்னும் திடுக்கிடத்தக்க உண்மை வெளியானவுடன் பெண்கள் கொஞ்சம் விழிப்புணர்வு பெற்றார்கள். அச்சம் அகன்று துணிவு பிறந்தது. கணவன்_மனைவி இருவருமே இப்போது மருத்துவரை நாடித் தம் குறைபாடுகளை நீக்கிக் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆக மலட்டுத்தன்மை என்பது இப்போது பொய்யாக்கப்பட்டு பெண்களை மட்டுமே குறிப்பிட்டுக் கூறப்பட்டு வந்த மலடி என்ற சொல் (ஆண்களைக் குறிக்கும் இதற்கு நிகரான சொல் இல்லை) தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. இந்த மலடி என்ற சொல்லைப் பயன்படுத்தி ஓர் ஆண் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் பழக்கமும் இப்போது காண்பதற்கு அரிதாகும்.
சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கம் பற்றித் தந்தை பெரியார் 1938இல் தம் புரட்சிக் கருத்துகளை வெளியிட்டபோது, இது கடவுள் படைப்புக்கு எதிரான கருத்து; நாத்திகர்களின் கோணல் பார்வை என்று தந்தை பெரியாரைச் சாடினார்கள் மதவாதிகள்!
இன்று மருத்துவ அறிவியல் வியத்தகு வளர்ச்சியை அடைந்துள்ளது. சோதனைக் குழாய் மூலம் குழந்தை வளர்ப்பு என்பது பழைய முறையாகிவிட்டது! பெண்ணின் கரு முட்டைகளை அதிகம் உருவாக்கி (என்சைம்ஸ் வழியாக) அதனை எடுத்து ஆணின் உயிரணுக்களோடு சோதனைக் குழாயில் அய்ந்தாறு நாட்கள் வளர்த்து அதன்பின் அதனைத் தாயின் கருப்பையில் வைத்து வளர்ப்பது சோதனைக் குழாய் (Test Tube Methode) முறையாகும். இம்முறையிலிருந்து படிநிலை வளர்ச்சி பெற்று இப்போது கேப்சுயூல் டெஸ்ட் (Capsule Test) என்னும் மிக நுட்பமான வளர்நிலையை எட்டியுள்ளது.
கேப்சுயூல் டெஸ்ட் (Capsule Test): இந்த முறை மருத்துவம் மிக நுட்பமானது. ஒரு மெல்லிய ஊசி; அந்த ஊசியின் உட்புறம் ஒருவகை வேதிப் பொருள் கலவையால் பூசப்பட்டிருக்கும் (டெஃப்ரான்). இந்த மெல்லிய ஊசியின் மூலமாகப் பெண்ணின் கருமுட்டை காயம் ஏற்படாமல் சேதாரம் இல்லாமல் வெளியே எடுக்கப்படுகிறது. அதனோடு ஆண் உயிரணுவைச் சேர்த்து ஒரு கேப்சுயூலில் வைத்துப் பெண்ணின் பிறப்புறுப்பிலேயே கரு வளர்க்கப்படுகிறது; இதன் பின்னர், தாயின் கருப்பையில் அக்கரு வைக்கப்படுகிறது. தாயின் இயற்கையான வெப்பத்தில் கரு வளர்ந்துவரும். இதற்கு முன்பு சோதனைக் குழாய் முறைக்கு ஆன செலவை விட கேப்சுயூல் முறைக்கு மூன்றில் ஒரு பங்குதான் செலவு!
கேப்சுயூல் முறை மருத்துவத்திற்கான கருவிகள் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இவற்றின் விலை சற்றுக் கூடுதலாக இருக்கிறது. இவற்றை இங்கேயே உற்பத்தி செய்யும் நிலை வந்துவிட்டால் செலவு மிக மிகக் குறைவாகும். ஏழைகளுக்கு இந்த வாய்ப்பு எளிதில் கிடைக்கும் நல்வாய்ப்பாகிவிடும்.
கேப்சுயூல் முறையில் குழந்தை வெளியே வளர்வதில்லை. அது தாயின் அரவணைப்பில் கருப்பையிலேயே வளர்கின்றது. ஒருமுறை தோல்வி அடைந்துவிட்டால் மறுமுறையும் இதே சோதனையை எளிதில் தொடரலாம். 2011ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்தச் சோதனை வெற்றிபெற்றது. இந்தியாவில் _ தமிழகத்தில் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சோதனை வெற்றி பெற்றது.
ஈரோட்டில் 64 வயதுப் பெண்மணிக்கு: ஈரோட்டில் 64 வயதான ஒரு பெண்மணி; பல ஆண்டுகளாகக் குழந்தையில்லாமல் மலடி என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டு உறவினர்களின் ஓரப் பார்வையால் சொல்லவொண்ணாத் துன்பத்திற்கு ஆளாகி வாழ்ந்து வந்தார். அவருக்கு 45ஆம் வயதில்  மாதவிடாய் நின்றுவிட்டது. இருபது ஆண்டுகளாகச் சர்க்கரை நோய்; இரத்த அழுத்தம் எல்லாம் இருந்தன. கணவருக்கு அகவை 75; அவர் இதய நோயாளி. என்றாலும் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்காதா என்ற கவலை ஒருபுறம் நெஞ்சைத் துளைத்து ஏங்கிக் கொண்டிருந்தார்கள். எல்லா மருத்துவத்தையும் பார்த்துவிட்டார்கள்.
கடைசியில் கேப்சுயூல் முறையையும் பார்த்துவிடலாம் என்று டாக்டர் நிர்மலா சதாசிவத்தை அணுகினார்கள். 64 வயதுப் பெண்ணுக்கு இருந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து அவருக்குத் தாய்மைப் பேற்றை நல்கி அவர்கள் இருவரும் இதுவரை பெற்றிராத மகிழ்ச்சியைக் கொடுத்தார் டாக்டர் நிர்மலா சதாசிவம். உலகில் இந்த வயதில் எவருக்கும் குழந்தை பிறந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் முதல்முறையாக ஈரோட்டில் இந்த மருத்துவம் மருத்துவத் துறை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தச் சோதனைகளின் மூலவர், தொலை நோக்குச் சிந்தனையாளர், சோதனைக் குழாயில் குழந்தை உருவாகும் என்ற முன் அறிவிப்பை வெளியிட்ட அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்தச் சாதனை நிகழ்த்தப் பெற்றிருக்கிறது.
டாக்டர் நிர்மலா சதாசிவம் இணையரை அழைத்து பெரியார் மன்றம் பெருமைப்படுத்தியது. பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கி அய்யாவுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
1926 வரையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்த விதியை தந்தை பெரியார், பனகல் அரசரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அந்த விதியை அகற்றினார்கள். அதன் பின்புதான் நம்மவர்கள் மருத்துவத்துறையில் நுழைய முடிந்தது! இன்று உலகம் வியக்கத்தக்க சாதனைகளை நம்முடைய மருத்துவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்!

-உண்மை,16-30 ஜூன்2015