வெள்ளி, 23 ஜூன், 2017

அறிவியல் துளிகள்


இணையத்தில் அடையாளத் திருட்டும், அதன் மூலம் ஏற்படும் இழப்பும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் புதிய வழியை உருவாக்கியுள்ளனர். ஒரு நபரின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய கேட்கப் படும் பாதுகாப்புக் கேள்விகளுடன், அவர் கணினியின் மவுசை நகர்த்தும் பாணியையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது அந்த புதிய முறை. இந்த இரு தகவல்களை வைத்து, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் உதவியுடன், அடையாளத் திருடர் யார் என்பதை 95 சதவீதம் துல்லியமாக கண்டு பிடிக்கலாம் என்று, ‘பிலாஸ் ஒன்’ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது.

***


மனித உடலில் பெரிய உறுப்பும், சிக்கலானதுமானது கல்லீரல். அதை புரிந்துகொள்ள தொடர்ந்து ஆராய்ச் சிகள் நடக்கின்றன. ‘செல்’ என்ற ஆய்விதழில் அண் மையில் வெளியான கட்டுரை ஒன்று, மனிதனின் கல்லீரல் தினமும் வளர்ந்து, பின், 40 சதவீதம் வரை சுருங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சியும் சுருக்கமும் 24 மணி நேரத்திற்குள் நடப்பது மிகப் பெரிய ஆச்சரியமில்லையா?

***


உலகின் மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதத்தை பீடித்திருக்கும் உடல் குறைபாடு எது? உடல் பருமன் தான். ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்’ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, உலகில், 2 பில்லியன் பேருக்குமேல் அதிக உடல் எடை அல்லது பருமன் நோய்க்கு ஆளாகியுள்ளனர். கடந்த, 25 ஆண்டுகளில், 195 நாடுகளில் உள்ள மக்களின் உடல் நல புள்ளிவிபரங்களை வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வற்றாத பிளாஸ்டிக் நதிகள்!

நதிகளால் தான் கடல்கள் வற்றாமல் இருக்கின்றன. அதே போல, நதிகள் மூலம்தான் கடலுக்குள் பிளாஸ் டிக் கழிவுகள் போய் சேருகின்றன. ஆண்டுதோறும் 1.15 மில்லியன் முதல், 2.41 மில்லியன் டன் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பை கடலில் கலப்பதாக, ‘நேச்சர்’ இதழ் தெரிவிக்கிறது. மேலும், உலகமெங்கும் கடந்த ஆண்டு அதிகளவிற்கு கடலில் குப்பையை கலந்த, 20 பெரு நதிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது நேச்சர். அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே நதி கங்கை. சீனாவின் ஐந்து பெரு நதிகள் கடலை மாசுபடுத்துவதில் முன்னணி வகிக்கின்றன.

மொழி தடையை நீக்கும் கருவி!

 



எந்த மொழியிலிருந்தும், வேறு எந்த மொழிக்கும் மொழிபெயர்க்கக்கூடிய கருவிகள், அறிவியல் புனை கதைகளில் மட்டுமே வரக்கூடியவையாக இருந்தன. அதாவது, அண்மைக்காலம் வரை! ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘லிங்மோ’ வரும் ஜூலையில், ‘டிரான்ஸ்லேட் ஒன் டு ஒன்’ என்ற கருவியை சந்தைக்கு கொண்டு வர உள்ளது.

அய்.பி.எம்., வாட்சனின் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைக் கொண்டு இயங்கும் இந்த கருவியை, காதில் அணிந்துகொள்ளலாம். ‘வை பை’ மூலம் இயங்குவதால் இந்த கருவிக்கு மின் கம்பிகள் தேவையில்லை.

லிங்மோ கருவிக்குள் செயற்கை நுண்ணறிவு மூலம் மொழிபெயர்ப்பு நடப்பதால், அதை அணிந்தவருக்கு முன் நின்று, ஒருவர் புரியாத மொழியில் பேசினால், உடனுக்குடன் அவருக்கு அந்த பேச்சின் மொழிபெயர்ப்பு காதில் ஒலிக்கும். தற் போதைக்கு மாண்டரின், ஜப்பான், பிரஞ்சு, இத்தாலி, ஜெர்மன், போர்சுகீசு, ஆங்கிலம் மற்றும் ஸ்பெயின் ஆகிய எட்டு மொழிகளில், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மொழிபெயர்க்கும் திறனைக் கொண்டுள்ளது, ‘ஒன் டு ஒன்’ கருவி; இதன் விலை, 11 ஆயிரத்து 500 முதல், 14 ஆயிரத்து 500 ரூபாய் வரை இருக்கும்.

இரு வேறு மொழிகளைப் பேசுபவர்கள் இந்த கருவி களை அணிந்து கொண்டால், மொழித் தடைகள் இன்றி, உரையாட முடியும். கூகுளின் டிரான்ஸ்லேட் சேவை, ஸ்கைப்பின் மொழிபெயர்ப்பு சேவை ஆகியவற்றின் துல்லியம் வெகுவாக கூடியிருக்கிறது. என்றாலும், எங்கும் எடுத்துச் செல்லும் மொழிபெயர்ப்புக் கருவிக்கு தேவை இருப்பதாகச் சொல்கிறது லிங்மோ!  

கை கழுவுதலின் பின்னால் உள்ள உளவியல்   



பல கலாசாரங்களில், ஒரு நடத்தை, சிந்தனை அல்லது செய்கையை விட்டுவிட்டு புதிய ஒன்றுக்கு மாறுவதை, ‘கை கழுவுதல்’ என்று சொல்கின்றனர்.

இது, உண்மையிலேயே பலனளிக்குமா என்று கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சோதித்துப் பார்த்தனர்.

ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது போன்ற ஒரு குறிப்பிட்ட குறிக்கோளைப் பற்றி சிலரை சிந்திக்க வைத்தனர் ஆராய்ச்சியாளர்கள். பிறகு, அவர்களில் சிலருக்கு ஈரக் காகித நாப்கினைத் தந்து கைகளை துடைக்கச் செய்தனர். சிலர் மட்டும், அந்த நாப்கினை சும்மா பார்த்தால் போதும் என்றனர்.

அதன் பின், ஆரோக்கியமான பண்டத்தையும், ஆரோக்கியத்துக்கு எதிரான பண்டத்தையும் தந்தனர். கையைத் துடைத்தவர்கள் ஆரோக்கியம் பற்றிய சிந்தனையை மறந்துவிட்டு, சாக்லேட் போன்றவற்றையே தேர்ந்தெடுத்தனர்.

கையைத் துடைக்காதவர்கள், இன்னும் ஆரோக் கியமான சிந்தனையோடே இருந்ததால், சாக்லேட்டை தவிர்த்தனர்.

இதனால், பழைய அனுபவம், சிந்தனை, செய்கையை உதறிவிட்டு புதிய குறிக்கோளை நோக்கித் திரும்பவேண்டும் என்றால் கைகளை கழுவுவது உதவலாம் என, ‘ஜர்னல் ஆப் எக்ஸ்பெரிமென்டல் சைக்காலஜி: ஜெனரல்’ இதழில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

சொத்தைப் பல்லை உயிர்ப்பிக்கும் சிகிச்சை!

பல் சொத்தையாகும் போது, சொத்தைப் பகுதியை நீக்குவது பல் மருத்துவர்கள் தரும் சிகிச்சை. இந்த அறுவை சிகிச்சையின்போது, பல்லின் வேர்ப் பகுதியிலுள்ள ரத்தக் குழாய்கள் துண்டிக்கப்படும்.

சொத்தையை அடைத்ததும், அந்தப் பல் உயிரின்றி இருக்க நேரிடும். இதை தவிர்க்க, ஈற்றுப் பகுதியில் வேரூன்றியிருக்கும் பல்லுக்கு செயற்கையாக ரத்த நாளங்களை உருவாக்க முடியுமா? முடியும் என்பதை, அமெரிக்காவின் ஒரிகன் சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த, பல் மருத்துவ பேராசிரியர் லுயிஸ் பெர்டாசோனி, செய்து காட்டியிருக்கிறார். ஆய்வுக்கூடத்தில், ‘3டி பயோபிரின்டர்’ எனப்படும் முப்பரிமாண உயிரி அச்சியந்திரத்தின் மூலம், சர்க்கரை அணுக்களை வைத்து, ரத்த நாளங்களைப்போன்ற குழாய்களை லுயிஸ் அச்சிட்டார். சாரம் போல தற்காலிகமாக இருக்கும் அந்தக் குழாய்களுக்குள், ஈறுகளில் உள்ள ரத்த நாளங்களின் செல்களை எடுத்து வைத்து, ஆய்வகத்தில் வளர்த்தார். ஒரு வாரம் கழித்து அந்த செல்கள், இயல்பான ரத்த நாளங்களைப் போல வளர ஆரம்பிக்கவே, சர்க்கரை அணுக்களாலான சாரக் குழாய்களை நீக்கினார். அதன் பிறகு, பல் வளர்வதற்கான செல்கள் வளர ஆரம்பித்திருப்பதை கண்டார். இன்னும் பரிசோதனை நிலையில் இருக்கும் இந்த செயற்கை ரத்த நாள முறை, நடைமுறைக்கு வந்தால், சொத்தைப் பல்லுக்காக பல்லை பிடுங்காமல், சொத்தையை நீக்கி, மீண்டும் அந்தப் பகுதியில் பற்களை வளரச் செய்ய முடியும் என்கிறது, ஆய்விதழான, ‘சயின்டிபிக் ரிபோர்ட்ஸ்.’

பட்டாம்பூச்சியும் சூரிய ஒளித் தகடும்!



புதிய பொருட்களை உருவாக்க இயற்கையிடமிருந்து விஞ்ஞானிகள் கற்றுக்கொள்வது பரவலாகியிருக்கிறது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தை சேர்ந்த பொறியியல் வல்லு னர்கள், பட்டாம்பூச்சியின் இறக்கை அமைப்பை ஆராய்ந்து, செம்மையாக செயல்படும் சூரிய ஒளித் தகடுகளை வடிவமைக்கலாம் என்று கண்டறிந் துள்ளனர். நீல நிறத்திலுள்ள, ‘மார்போ டிடியஸ்’ என்ற பட்டாம்பூச்சி, தன் இறக்கையிலுள்ள நுண்ணிய அமைப்புகளை வைத்து, சூரிய ஒளியை சிதற வைத்தல், பிரதிபலித்தல், உறிஞ்சுதல் ஆகியவற்றை தன் விருப்பப்படி செய்வதாக, இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் நீரஜ் லால் மற்றும் அவர்களது குழுவினர் கண்டறிந்தனர். நீலப் பட்டாம்பூச்சியின் இறக்கையிலுள்ள அதே போன்ற நேனோ அமைப்புகளை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி, இயக்கியபோது, ஒளியை விரும்பியபடி கட்டுப்படுத்த முடிந்தது என்று நீரஜ் லால் தெரிவித்துள்ளார்.

இத் தொழில்நுட்பத்தை வைத்து சூரிய மின் ஒளித் தகடுகளை தயாரித்தால், கிடைக்கும் ஒளியில் அதிக மின்சாரம் தயாரிப்பது சாத்திய மாகலாம். மேலும், கட்டடங்கள், ராணுவம் போன்ற பல துறைகளிலும் இத் தொழில்நுட்பம் உதவும், என, நீரஜ் தன் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

-விடுதலை,22.6.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக