வெள்ளி, 31 அக்டோபர், 2014

சில்லுகள் போர்த்திய பூமி


சில்லுகள் போர்த்திய பூமி
சிதறுகாய் போடுவது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். தரையில் ஓங்கி வீசப்பட்ட தேங்காய் உடைந்து பெரியதும் சிறியதுமான சில்லுகளாகச் சிதறும். இச்சில்லுகள் அனைத்தையும் சேகரித்து மிகக் கவனமாக ஒன்றோடு ஒன்று பொருத்தினால் முழுத் தேங்காய் கிடைக்கும். இப்போது அத்தேங்காய பல சில்லுகளால் ஆனதாக இருக்கும். பூமியின் மேற்புறம் இப்படியான பல சில்லுகளால் ஆனதே.
இந்த சில்லுகள் மீது தான் கண்டங்களும் கடல் களும் அமைந்துள்ளன.  உண்மையில் சில்லுகள் தான் நகருகின்றன. சில்லுகள் நகரும் போது கண்டங்களும் அதைச் சுற்றியுள்ள கடல்களும் சேர்ந்து நகருகின்றன.
இதுவே சில்லுப் பெயர்ச்சி இயல்  எனப்படுகிறது. மேலே உள்ள படத்தில் ஆப்பிரிக்காவைச் சுற்றிலும் கடல்கள் உள்ளன. ஆப்பிரிக்கா நகரும் போது அதைச் சுற்றியுள்ள கடலகளும் சேர்ந்து நகரும். இந்தியச் சில்லு நகரும் போது இந்தியத் துணைக் கண்டமும், அத்துடன் அதைச் சுற்றியுள்ள கடல்களும் சேர்ந்து நகரும்.
கடந்த 2003 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட கணக்குப்படி பூமியில் மொத்தம் 52 சில்லுகள் உள்ளன. இவற்றில் 14 சில்லுகள் பெரியவை  மற்றவை சிறியவை. பெரிய சில்லுகளில் பசிபிக் சில்லு, யுரேசிய சில்லு, வட அமெரிக்க சில்லு, தென் அமெரிக்க சில்லு, ஆப்பிரிக்க சில்லு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
சில்லு என்பது உண்மையில் பிரம்மாண்டமானது. ஒரு சில்லு சில ஆயிரம் கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டதாக இருக்கலாம். இவற்றின் பருமன் மேலிருந்து கீழ் வரை 15 அல்லது 200 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கலாம்.அதாவது சில்லுகள் வடிவில் பெரியவை.
உதாரணமாக இந்தியச் சில்லுவின் தடிமன் சுமார் 150 கிலோ மீட்டர். இத்துடன் ஒப்பிட்டால் இதன் விளிம்பில் அமைந்துள்ள இமயமலை வெறும் கல் துண்டு போன்றதே. இமயமலையின் - எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 9 கிலோ மீட்டருக்கும் குறைவு. சில்லுகள் அனைத்துமே நகருகின்றன. இவற்றை 1. விலகும் சில்லுகள் 2. புதையும் (செருகும்) சில்லுகள் 3. உரசும் சில்லுகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உதாரணமாக அமெரிக்காவின் மேற்குக் கரையில் பசிபிக் சில்லுவும் வட அமெரிக்க சில்லுவும் எதிரும் புதிருமாக உரசிச் செல்கின்றன. இதன் விளைவாகவே கலிபோர்னியா பகுதியில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. எப்போதாவது கடும் பூகம்பம் நிகழ்கிறது.
இச்சில்லுப் பகுதி உலகிலேயே விரிவாக ஆராயப்பட்டதாகும். எதிர்காலத்தில் சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய கலிபோர்னியா சில்லு தனியே பிரிந்து தீவு போலாகி விடலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். விலகும் சில்லுகளுக்கு முக்கிய உதாரணம் அட்லாண்டிக் கடலின் நடுவே  சில்லுகளாகும். இவை எதிர் எதிர் திசையில் நகருகின்றன. பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே யூரேசிய சில்லும், வட அமெரிக்க சில்லும் எதிர் எதிரான திசையில் விலகுகின்றன. நடுக்கோட்டுக்குத் தெற்கே ஆப்பிரிக்க சில்லும் தென் அமெரிக்க சில்லும் இதே போல எதிர் எதிரான திசைகளில் விலகுகின்றன. இது கடலடியில் நிகழ்வதால் நம்மால் காண இயலாது.
ஆனால் அய்ஸ்லாந்தில் நிலப் பகுதியில் சில்லுப் பெயர்ச்சியை - அதன் அடையாளத்தை நேரில் காண முடியும். அய்ஸ்லாந்தில் ஓரிடத்தில் நகரும் இரு சில்லுகளுக்கு இடையே நீங்கள் நடந்து செல்லலாம். இந்த இடம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. செருகும் சில்லுகள் இருக்குமிடத்தை நீங்கள் பார்க்க வேண்டுமானால் இமயமலைக்குச் சென்றால் போதும்.அங்கு யுரேசிய சில்லுக்கு அடியில் இந்தியச் சில்லு செருகுவதாக உள்ளது. இதன் விளைவாகவே இமயமலை தோன்றியது. இங்கு நிலப் பகுதியாக் உள்ள சில்லு இதே போல நிலப் பகுதியாக உள்ள வேறு சில்லுக்கு அடியில் செருகுகிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவுடன் ஒட்டிக்கொண்டிருந்த இந்தியத் துணைக் கண்டம் மெதுவாக நகர்ந்து வந்து யுரேசிய சில்லுவின் தென் பகுதியில் ஒட்டிக்கொண்டது. அதற்கு முன்னர் இந்திய துணைக்கண்ட சில்லுவில் இமயமலை கிடையாது. இந்திய துணைக்கண்ட சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் செருக ஆரம்பித்த பின்னரே இமயமலை தோன்றியது. நிலப் பகுதியில் மட்டுமன்றி கடல்களுக்கு அடியிலும் ஒரு சில்லு இன்னொரு சில்லுக்கு அடியில் புதையுண்டு போகலாம். இந்தியாவுக்குக் கிழக்கே அந்தமான் தீவுகளுக்கு அப்பால் கடலுக்கு அடியில் யுரேசிய சில்லுவின் ஒரு பகுதியான பர்மா சில்லு உள்ளது. இந்த பர்மா சில்லுக்கு அடியில் இந்தியச் சில்லு புதைகிறது. பல சமயங்களிலும் இந்தியச் சில்லுவையும் ஆஸ்திரேலிய சில்லுவையும் சேர்த்து இந்திய- ஆஸ்திரேலிய சில்லு என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்தோனேசியத் தீவுகள் பகுதியில் ஆஸ்திரேலிய சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. தவிர, அங்கு பசிபிக் சில்லுவும் யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. ஜப்பானுக்குக் கிழக்கே பிலிப்பைன் சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. பசிபிக் சில்லு வட அமெரிக்க சில்லுக்கு அடியில் புதைகிறது. இப்படியான சில்லுப் பெயர்ச்சிகளால் தான் கண்டங்கள் இடம் பெயருகின்றன. ஒட்டிக்கொண்டிருந்த கண்டங்கள் விலகும் போது புதிதாகக் கடலகள் தோன்றுகின்றன. விலகியிருந்த கண்டங்கள் ஒன்று சேரும் போது அவற்றின் இடையில் இருந்த கடல்கள் மறைந்து போகின்றன.
ஆனால் உரசும் சில்லுகளாலும் புதையும் சில்லுகளாலும் பூமியின் மேற்பரப்பில் விபரீத விளைவுகள் ஏற்பட்டு அவ்வப்போது கடும் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது.

விடுதலை17.1.13பக்7