டார்வின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டார்வின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஜூன், 2024

கடவுள் கற்பனையைப் போட்டுடைத்த சார்லஸ் டார்வின்



– முனைவர் வா.நேரு

சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் 1879-ஆம் ஆண்டு பிறந்து 1973-ஆம் ஆண்டு மறைந்தார். அறிவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்து, ஏப்ரல் 19, 1882இல் தனது 73-ஆம் வயதில் மறைந்தார். தந்தை பெரியார் மறைந்து 49 ஆண்டுகளுக்குப் பின்பும் அவர் நினைக்கப்படுவதும், அவரின் பணி இன்னும் பல பணிகளை நாம் ஆற்றுவதற்கு அடிப்படையாகவும் உந்துதலாகவும் இருப்பதைப் போலவே சார்லஸ் டார்வின் மறைந்து 140 ஆண்டுகள் ஆனாலும் அவர் தொடங்கி வைத்த பணி என்பது இன்னும் முழுமையாகவில்லை, தொடர்ந்து அறிவியல் அறிஞர்கள் புதிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.


மனிதர்களை எளிதாக வசப்படுத்துவதற்கு கடவுள் என்னும் கற்பனையை மதவாதிகள் ஏற்படுத்தி, இந்த உலகம் என்பது கடவுளால் படைக்கப்பட்டது, இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும், எப்படி எப்படி இருக்கிறதோ, அப்படி அப்படியே கடவுளால் உருவாக்கப்பட்டது என்னும் சித்திரத்தை மனிதர்களின் மனங்களில் மிக ஆழமாக வரைந்து வைத்திருந்தனர். அதனை மிகக் கட்டுப்பாடாக பிரச்சாரத்தின் மூலம் நிலை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த மனச்சித்திரத்தை போட்டு உடைத்தவர் சார்லஸ் டார்வின்.

ஆனால், அன்றைக்கு சார்லஸ்டார்வின் அவர்கள் சொன்ன இயற்கைத் தேர்வும், பரிணாமமும் என்னும் கோட்பாடு பலருக்குப் புரியவில்லை. மதவாதிகள் அதை எதிர்த்து பரப்புரை செய்த நிலையில், சக அறிவியல் அறிஞர்களும் ஓவன் போன்றவர்களும் சார்லஸ் டார்வினின் கோட்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் எதிர்த்து இருக்கின்றனர். இன்றைக்கு சார்லஸ் டார்வின் அவர்-களின் இயற்கைத் தெரிவு, உயிரினங்கள் தோற்றம், பரிணாம வளர்ச்சி போன்றவற்றை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது, ஆனாலும் மதவாதிகள் இன்றும் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக கிறித்துவ, இஸ்லாமிய சமூகத்தைச்சார்ந்த மதவாதிகள் பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி ஏற்றுக்கொள்வது, தங்கள் மத நூல்கள் சொல்லும் கருத்துக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.

அறிவியல் என்பது உண்மை. ஒரு கருத்தை எடுத்துக்கொள்வது, அந்தக் கருத்தை அறிவியல் முறைப்படி சோதனைகள் செய்வது.
சோதனைகளின் முடிவுகளை அட்டவணைப் படுத்துவது, மீண்டும் மீண்டும் சோதனைகள் செய்து உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டுவது என்பது அறிவியல் வழிமுறையாகும். சார்லஸ் டார்வின் அவர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்னால் தனது ஆய்வுப் பயணத்தின் விளைவாக விளைந்த கருத்தினை, பரிணாமக் கொள்கையினை ஆராய்ச்சி செய்தவர்.மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களைச் சேகரித்து,சேகரித்து இயற்கைத் தெரிவு என்னும் கருத்தினை வெளியிட்டவர். பல சோதனைகளுக்கும் ஆய்வுகளுக்கும் 20 ஆண்டுகள் உட்படுத்தி, தான் உலகில் பல பாகங்களில் கண்ட, பரிசோதித்த கருத்தினை
தன்னுடைய கோட்பாடாக வெளியிட்டவர். அவரின் ஆராய்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது தொல்லுயிர் படிவங்
களும் (இறந்த உயிர்களின் உடல்கள்) ஆமைகளும்.

இன்றைய உலகிலேயே இல்லாத, அழிந்து போன இனமான டைனோசர் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உலகத்தில் வாழ்ந்தது என்பதை அறிய முடிகிறது. கீழடியில் கிடைத்த ஒரு மண்பாண்டம் 3500 ஆண்டுகளுக்கு முந்தை
யது என்பதை இந்தக் கரிமக் காலக் கணிப்பு மூலமாகக் கண்டறிய முடிகிறது.தொல்லுயிர்ப் படிவங்கள் மூலமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த உயிரினங்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்கும் என்னும் முடிவைக்கூட இன்றைய அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி விடை தரும் ‘கரிமக் காலக் கணிப்பு’ பற்றி அறியாத சார்லஸ் டார்வின் அவர்கள் மிக நுட்பமாக இந்த உலகில் இருக்கும் உயிரிகளின் பரிணாம வளர்ச்சியை தனது ஆராய்ச்சியின் மூலம் சொன்னது வியப்பாக இருக்கிறது.
மரபணுக் குறியீடு(நிமீஸீமீtவீநீ சிஷீபீமீ) பற்றிய ஆராய்ச்சி இன்றைக்கு அறிவியலின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. உயிரியல் துறை என்பது தனது புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. பாரம்பரியப் பண்புகள் எப்படி தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் பல விளக்கங்கள் இன்று நமக்குக் கிடைக்கிறது.குரோமோசோமுக்குள் இருக்கும் மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சியும் அதன் விளைவாக விளையும் பயனும் மனித குலத்திற்கு மிகப்பெரிய பாய்ச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மனித உடலுக்குள்இன்றைக்கு ஏறக்குறைய 30000 மரபணுக்கள் இருக்கின்றன, மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு மரபணுவும் எப்படிப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களில் இருக்கும் மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் புதிது புதிதாய் செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஒருவன் மிகத் தீவிரமான பக்திமானாக இருப்பதற்குக் காரணமாக இருக்கும் மூளைக்குள் இருக்கும் வேதிப்பொருள்கள் பற்றியும் மரபணுக்கள் பற்றியும் ஆராய்ச்சி இன்று நடந்துகொண்டிருக்கிறது.

ஒருவன் பெண் பித்தனாக, காமப் பைத்தியம் பிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? அதனை மரபணு மாற்றத்தின் மூலமாக மாற்ற இயலுமா? என்பன போன்ற சோதனைகளும், செயற்கை இருதயம் பொருத்துவதுபோல செயற்கை மூளையை உருவாக்க முடியுமா என்னும்
முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் கடவுள்தான் இந்த உலகத்தில் இருக்கும் உயிரினங்களைப் படைத்தார் _ படைக்கிறார் என்று சொல்பவர்களும் மதவாதிகளும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர், தான் படித்த காலத்தில், தனக்குப் பாடம் நடத்திய கிறித்துவ நம்பிக்கை கொண்ட ஆசிரியர், சார்லஸ் டார்வின் அவர்களின் பரிணாமக் கொள்கைப் பாடத்தை நடத்திவிட்டு, முடிவில் இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்த சார்லஸ் டார்வின் அவர்கள் தன்னுடைய கடைசிக் காலத்தில், இவை எல்லாம் தப்பு என்றும், கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்றும் டைரியில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார் என்றும் சொன்னார் என்பதைச் சொன்னார்.
அறிவியல் ஒருபக்கம் உண்மையை வெளிப்-படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் கடவுள் நம்பிக்கையாளர்கள் அறிவியலுக்கு எதிரான கருத்துகளை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள் மனதில் விதைக்கிறார்கள். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் ‘கடவுள் இல்லை,கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை’ என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி அதையே அடிப்படை முழக்கமாக வைத்தார். கடவுள் இந்த உலகத்தைப் படைக்கவில்லை, இந்த உலகத்தில் உள்ள உயிரினங்கள் எல்லாம் இயற்கையாக, பரிணாம வளர்ச்சியில் தோன்றியவை என்று நிரூபணம் செய்த சார்லஸ் டார்வின் அவர்களைத் தந்தை பெரியார் தந்த ஈரோட்டுக் கண்ணாடி வழியாகப் பார்க்கின்றபோது மிகத் தெளிவாக சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை அறிய முடிகிறது. மிக நுட்பமாக உணரமுடிகிறது. வாழ்க சார்லஸ் டார்வின் அவர்களின் புகழ்!

வியாழன், 22 பிப்ரவரி, 2024

‘உயிரினங்களின் தோற்றம்’ – வீ.குமரேசன்

 

‘உயிரினங்களின் தோற்றம்’ – வீ.குமரேசன்

விடுதலைநாளேடு

‘உயிரினங்களின் தோற்றம்’
உலகில் நிலவிவந்த தவறான நம்பிக்கையைப் புரட்டிப்
போட்ட உண்மை அறிவியலாளர் – சார்லஸ் டார்வின்
இன்று (12.2.2024) டார்வினின் 224ஆம் ஆண்டு பிறந்த நாள்

திராவிடர் இயக்க வரலாற்றின் குறிப்புகளை மிகுதியாகக் கொண்டது செப்டம்பர் மாதம் எனலாம். பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் அந்த மாதத்தில் தான் நடைபெற்றுள்ளன – தொடங்கியும் உள்ளன. அது போலவே அறிவியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த தமது கண்டுபிடிப்புகளை மானுட பயன் பாட்டிற்கு – மேம்பாட்டிற்கு வழங்கிச் சென்றுள்ள அறிவியலாளர் பலர் – சிந்தனையாளர் சிலரின் பிறந்த நாள் கள் – மறைந்த நாள்கள் – பிப்ரவரி மாதத்தில் உள்ளன.

“எதனையும் சிந்தித்து செயலாற்று; அவர் சொன்னர், இவர் சொன்னார் எனக் கருதி நம்பி முடிவு செய்திடாதே” என்று ஏதென்ஸ் நகர் மக்களிடம் பகுத்தறிவுப் பயன் பாட்டை எடுத்துரைத்த தத்துவ அறிஞர் சாக்ரடீஸ் தண்டனையாக விஷம் குடிக்க வைத்து கொல்லப்பட்ட நாள் ‘பிப்ரவரி 15′ (பொ.ஆ.மு. 533).

‘பூமியைச் சுற்றித்தான் பிற கோள்கள், சூரியன் உள்பட வலம் வருகின்றன’ என்றிருந்த கருத்தினை தலைகீழாக்கி, உண்மையில் ‘சூரியன்தான் மய்யம். பிற கோள்கள்தான் பூமி உள்பட, சூரியனை சுற்றி வரு கின்றன’ எனும் உண்மையினை வெளிப்படுத்தியதற்கு, அரசின் கொடுமைகளுக்கு ஆளாகி ‘கொல்லப்பட்ட’ நிக்கலஸ் கோபர்நிகஸ் பிறந்த நாள் பிப்ரவரி 19 (பொ.ஆ.1473).

‘அண்டம் (universe) எல்லையற்றது; அதற்கு மய்யம் இருக்க முடியாது. சூரியன் ஒரு நட்சத்திரம்’ எனும் அறிவியல் உண்மையைச் சொல்லி மதபோத னைப் புத்தகத்தில் சொல்லப்பட்டவைக்கு எதிராக பேசியதற்காக, தீயிலே போட்டு துன்புறுத்தப்பட்டு ஜியார்டானோ புருனோ கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 17 (பொ.ஆ.1540).

கோபர் நிக்கஸின் கோட்பாடுகள் சரி என வலிந்துரைத்து டெலஸ்கோப் அமைப்பை விரிவாக்கி, வானவியல் உண்மைகள் பலவற்றை வெளிக் கொணர்ந்து, அறிவியல் வழிமுறைகள் பற்றி கூறியதால் சிறைத் தண்டனைகள், கொடுமைகளுக்கு ஆளான கலிலியோ கலீலி பிறந்த நாள் பிப்ரவரி 15 (பொ.ஆ. 1642).

‘உயிரினங்கள் படிப்படியாக நடைபெற்ற மாற்றங் களால் தோன்றியவையே. (இன்றைக்கு இருக்கும் வடிவமைப்பிலேயே திடீரென உருவாகவில்லை). இன்றைக்கு உள்ள உயிரினங்கள் ஆண்டாண்டு கால மாக தங்களை தக்க வைத்துக் கொள்ள போராடிய வைகளின் தொடர்ச்சிதான். இதில் கால வெள்ளத்தில் தங்களுக்கான தெரிவை தேர்ந்தெடுக்காத உயிரினங் கள் பல அழிந்து விட்டன’ என தனது பல்லாண்டு கால ஆராய்ச்சியில் பரிணாமக் கொள்கையை நிறுவிய சார்லஸ் டார்வின் பிறந்தது பிப்ரவரி 12 (பொ.ஆ. 1809).
பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் தற்காலிகமானவைதான். இதில் ஒன்றும் புனிதம் கிடையாது – ஒரு வரலாற்றுக் குறிப்பை நினைவுபடுத்தி அந்த அறிவியலாளர்கள் உலக மக்களுக்கு வழங்கிய பங்களிப்பிற்கு நன்றி பாராட்டி, பயன்படுத்திட வழி கோலும் ஒரு முறை. அவ்வளவே!

சார்லஸ் டார்வின்

சார்லஸ் டார்வின், இயல்பாகவே புழு, பூச்சி, விலங் குகள், சுற்றுப்புற சூழல் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்து வளர்ந்தவர். அவரது தந்தையார், தாத்தா ஆகியோர் மருத்துவர்கள் என்ற நிலையில், டார்வினும் மருத்துவராக வரவேண்டும் என குடும்பத்தார் விரும் பினர். அதில் நாட்டம் இல்லாத நிலையில் ‘இறையியல்’ கல்லூரியில் சேர்ந்து படித்திடுவதற்கு பணித்த நிலையில் அப்படியே செய்தார். இறையியல் படிப்பை முடித்ததும் திருச்சபையில் சேர்ந்து ஊழியம் செய்திட டார்வின் விரும்பவில்லை. திருச்சபையின் நம்பிக் கைக்கு மாறாக பின்னாளில் அறிவியல் கோட்பாட்டை நிறுவிட இருந்த டார்வினுக்கு, திருச்சபையில் சேர்ந்து பணியாற்றிட, எப்படி விருப்பம் இருந்திருக்க முடியும்?
தான் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் பழக்கத்தில் இருந்த தாவரவியல் ஆசிரியர் கென்ஸ்லோ (Henslow) வுடான தொடர்பைத் தவிர. உயிரியல் குறித்து முறையாக படிப்பு படிக்காத ஒரு இயற்கை அறிவியலாளர் – டார்வின். 22 வயதில் உலகைச் சுற்றிப் பார்த்து உயிரினங்கள் பற்றித் தெரிந்து கொள்ள கடல் பயணம் மேற்கொள்கிறார். அய்ந்து ஆண்டுகள் பயணம் செய்கிறார்.

பல நாடுகளில் வாழும் விலங்கினங்களின் – பறவையினங்களின் உடலமைப்பு, நடவடிக்கைகள் குறித்து நேரடியாக பார்த்தும், இறந்த பிறகு உடல் எச்சங் களில் மிச்சம் இருக்கும் உறுப்புகளைச் சேகரித்தும் திரும்புகிறார். ‘ஒரே விதமான பறவை பல நாடுகளில் தோற்றங்களில் ஏன் மாறுபடுகின்றது?’ என பல கேள்விகளை தன்னுள் டார்வின் கேட்டுக் கொள்கிறார். பயணம் முடிந்து நாடு திரும்பியதும், உடன் பழகிய அறிவியலாளர்களின் வற்புறுத்தலில்தான் ‘உயிரினங் களின் தோற்றம்’ (Henslow) எனும் நூலினை தனது 40ஆம் வயதில் (1859) வெளியிடுகிறார். இதில் மனித இனம் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. பின்னா ளில் தான் நிறுவிய ‘பரிணாமக் கொள்கை’க்கான சுருக் கம்தான் ‘உயிரினங்களின் தோற்றம்’ என்பதை டார்வின் கூறுகிறார். தான் ஆய்வு செய்து நிறுவிய பரிணாமக் கொள்கை குறித்து அறிவியல் உலகம் பரவலாக அறிந்து வந்த நிலையில் 1871ஆம் ஆண்டில் தனது 62 வயதில்

‘பாரம்பரிய மாற்றத்தால் வந்த மனிதன்’ (The Descent of Man)எனும் ஆய்வு நூலை வெளியிடுகிறார்.
மதபீடங்கள் காட்டிய எதிர்ப்பு

மனித இனத்தை குறித்து ஆய்வு வெளிவந்த நிலையில் மத பீடங்களிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. மத குருமார்கள் டார்வினை கடுமையாக எதிர்த்தனர். பொதுவெளியில் டார்வின் கேலி, கிண்டல் செய்யப் பட்டார். இன்றைய மனிதன் முந்தைய குரங்கினத்திலிருந்து வந்திருக்க கூடிய வாய்ப்பு உள்ளது என்றார். தனது ஆய்வுக் குறிப்புகளில் கடவுளைக் குறித்து டார்வின் எங்குமே குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருப்பினும் அன்று நிலவிய – இன்றும் நிலவி வரும், ‘கடவுள்தான் மனிதனைப் படைத்தார்’ என்கின்ற எந்த ஆதாரமும் இல்லாத ஒன்றை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டு வாழ்கின்ற மக்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் கடவுளுக்கு – கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர் டார்வின் என சித்தரிக் கப்படுகிறார். ஆனால் இறுதிவரை தான் கண்டறிந்த அறிவியல் உண்மை நிலையிலிருந்து டார்வின் பின் வாங்கவில்லை.

டார்வின் கண்டறிந்த பரிணாமக்
கொள்கை என்பது என்ன?

1. மாற்றம் – எல்லா உயிரினங்களிலும் மாற்றம் நடை பெற்றுக் கொண்டுதான் வருகிறது (இந்த மாற்றங்கள் ஒரு மனித வாழ்வு காலத்தில் தொடங்கி முடிவடைவது இல்லை). இன்று உள்ள மனித இனமே மாற்றத்தின் முற்றுப்புள்ளி அல்ல.
2. தலைமுறையாகப் பெருக்கம்: ஒத்த உயிர் வடிவத்தைக் கொண்டுள்ள ஒவ்வொரு உயிரினமும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் மிக்கது.
3. உயிர் வாழ்வதற்கான போராட்டம்(Struggle for existence): ஒவ்வொரு உயிரினமும் தான் வாழும் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்றவாறு மாறுதல்களை கணித்து உருவாக்கிக் கொள்ளும்; அதற்கேற்ற முறை யில் இனப்பெருக்க முறைகளை தீர்மானித்து மாறுதல் களை ஏற்படுத்திக் கொள்ளும். இந்த ஒட்டுமொத்த மாறுதல்களுக்கு உரிய வகையில் செயல்படாத உயிரினங்கள் கால வெள்ளத்தில் இல்லாமலே போயிருக் கின்றன. இது ஒரு வகையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வரும் போராட்ட மாறுதல் முறையாகும். (இந்த போராட்டத்தில் வெற்றி காணு பவை பிழைத்துக் கொள்ளும்; மற்றவை இல்லாமலே போய்விடும்).
இந்த உண்மையானது அதுவரை நிலவி வந்த கட வுள்தான் அனைத்து உயிரினங்களையும் இன்றைக்கு இருக்கும் வடிவமைப்பிலே படைத்தார் என்பதை இயல்பாகவே மறுத்து விடுகிறது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவரல்ல டார்வின். கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்வதை ஒரு காலக்கட்டத்தில் நிறுத்திக் கொள்கிறார். மற்றபடி கடவுளுக்கு எதிரான, மத பீடத்திற்கு எதிரான கருத்துகளை எடுத்துரைக்க வில்லை. பரிணாமக் கொள்கையின் தாக்கத்தால் மதபீடம் ஆட்டம் கண்டது; அதனால் அது டார்வினுக்கு பல்வேறு தடைகளை விதித்தது. அவை பற்றி பொருட் படுத்தாதவராகவே டார்வின் வாழ்ந்து மறைந்தார்.

இன்றைய அறிவியல் வளர்ச்சி, ஆய்வுக் கூட கட்டமைப்பு தொழில்நுட்பப் பெருக்கம். டார்வின் காலத்தில் இல்லை. கண்ணில் பார்த்தவை குறித்து ஆய்வு செய்து அனுமானத்தின் அடிப்படையில் தொடங்கி தக்க ஆதாரங்களோடு தகுந்த கண்டறிதலை உலகிற்கு அளித்தார். டார்வினைப் போலவேதான் அவர் காலத்தில் வாழ்ந்த, முன்னர் வாழ்ந்த அறிவியலாளர்கள் – பலரும் வெளிப்படையாக பார்த்த – ஆனால் புலப்படாத உண்மைகளை அறிவியல் உலகிற்கு வழங்கிச் சென்றார்கள். அன்று அந்த அறிவியலாளர்கள் கண்டறிந்தவைகளால் இன்று உயிரினங் களின் மரபணுக்கள் பற்றிய ஆய்வு உரிய கட்டமைப்பு வசதிகளுடன் தொடர்ந்து வரும் வேளையில் மறுக்க முடியாதவைகளாக இருப்பது சிறப்புக்குரியதாகும்.

மாறும் அறிவியல் உண்மைகள்

மத நம்பிக்கைகள் எந்நாளும் மாறாத் தன்மை யானவை. ஆனால் அறிவியல் உண்மைகள் வருங் காலத்திலும் அப்படியே தொடரும் எனச் சொல்லிவிட முடியாது. உரிய ஆதாரங்களுடன் புதிய உண்மைகள் அறியப்படும் நிலையில், இன்று நிலவிடும் உண்மைகள் மாறக்கூடிய நிலை வரலாம்; இதுதான் அறிவியல் உண்மைகளுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் உள்ள வேறுபாடு. ஆனால் மேற்கத்திய உலகில் செய்த தவறை ஏற்றுக் கொள்வது வெகு காலம் கடந்த நிலை யில் நிகழ்ந்துள்ளது.
“மனிதர்களைச் சிந்தித்து கருத்துகளின் மீது முடி வெடுக்கச் சொன்னதால் – இளைஞர்களின் மனதை கெடுக்கிறார்” என்று அரச நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, கொல்லப்பட்டார் சாக்ரடீஸ் – சென்ற நூற்றாண்டில்தான் கிரீஸ் நாட்டு நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தவறு – குற்றச்சாட்டும் தவறு என வெளிப் படையாக தெரிவித்தது.

சார்லஸ் டார்வினின் உயிரினங்களின் தோற்றம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்க மறுத்த கிறிஸ்தவ மத பீடம், 2009ஆம் ஆண்டில்தான் டார்வி னின் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டது; தாம் நடத்திடும் கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைத்திடும் நிலையினை உருவாக்கியது.

அறிவியல் வேறு; போலி அறிவியல் வேறு

காலங்கடந்தும் உண்மையை ஏற்றுக் கொள்வதுதான் அறிவு நாணயமிக்க செயல். ஆனால் கடவுளரே அவதாரங்கள் பலவாக எடுத்துப் பிறந்த இந்த ‘புனித மண்ணில்’ அறிவியலுக்கு புறம்பான எதிர்வினையை விட – திரிபுவாத நிலையினை உருவாக்கும் செயல்தான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பையும் எந்த ஆதாரமுமின்றி வெறும் புராணப் புனைவுகளை மட்டும் சுட்டிக் காட்டி – அப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் முன்னரே இந்த மண்ணில் நிலவி வந்தவைகள் என – அறிவு நாணய மற்ற கூற்றுகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன. அறிவியல் அல்லாதவற்றை வெறும் வியாக்கியனங்கள் மூலமாக அறிவியலை போன்று சொல்லுவது வாடிக் கையாகப் போய்விட்டது. போலி அறிவியலை மூலதன மாக்கி ஆதிக்க சக்திகள் ஊக்கம் பெற்று வரும் நிலை முறியடிக்கப்பட வேண்டும். அறிவியல் வேறு; போலி அறிவியல் வேறு என இனம் பிரித்து புரிந்து கொள்ளும் நிலை – அதனை பரவலாக எடுத்துச் செல்லும் நிலை சிறிய அளவில்தான் நடைபெற்று வருகிறது. இப்படிப் பட்ட செயல்கள் மேலும் வலுப்பட்டு பெருகிட வேண்டும்.

அறிவியல் மனப்பான்மை பெருகிடுக

சார்லஸ் டார்வினின் 224ஆம் பிறந்த நாளில் அறிவுப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டிய செய்தி இதுவே; பொய்மைக்கு ஆதரவு காட்டிடாத அடக்கு முறைக்கு ஆளாகாத துணிவு பெருகிட வேண்டும். அறிவியல் செய்திகளை பரவலாக்கி, இயல்பாகவே அனைவரும் அறிவியல் மனப்பான்மை கொண்டு எதனையும் அணுகிடும் பாங்கினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சார்லஸ் டார்வினின் அறிவியல் உண்மைகள் வாழ்க! பிற அறிவியல் உண்மைகளும் பல்கிப் பெருகிடுக!

சனி, 10 பிப்ரவரி, 2024

படைப்புத் தத்துவமா? பரிணாம வளர்ச்சியா?



மார்ச் 01-15

–  மு.பாண்டியன் நெடுஞ்செழியன்

1831 — பிரிட்டனின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து பீகிள் கப்பலில் புறப்பட்டு 5 ஆண்டுகள் காடு, மலை, கடலென பயணம் செய்த சார்லஸ் டார்வின் 1859இல் வெளியிட்ட இயற்கைத் தேர்வு வழிப்பட்ட உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species of Natural Selection) என்ற நூலின் மூலமாக பரிணாம வளர்ச்சி என்ற மகத்தான கோட்பாட்டை உலகுக்கு அர்ப்பணித்தார்.

 

1809 பிப்ரவரி 9ஆம் தேதி பிரிட்டனின் ஷரெவ்ஸ்பரி நகரில் பிறந்த சார்லஸ் டார்வின் தன்னுடைய 16ஆவது வயதில் மருத்துவம் படிக்கப் போனார். அது பிடிக்கவில்லை என்பதால், அவரது தந்தை ராபர்ட் டார்வின் மகனை கிறித்தவப் பாதிரியாராக்க முயற்சித்தார். அதற்கு ஏதுவாக கேம்பிரிட்ஜில் 1828இல் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்டார்.

பாதிரியாராகப் போயிருக்க வேண்டிய சார்லஸ் டார்வின் இயற்கை, உயிரியல் ஆராய்ச்சியாளராக பீகிள் கப்பலில் பயணமானது, அவருக்கு மட்டுமல்ல, உயிரியல் துறைக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது.

பீகிள் கப்பலில் பயணம் செய்த தூரம் 40 ஆயிரம் மைல்கள் _ நிலவழிப் பயணம் 2000 மைல்கள். நில அமைப்பு, தாவரவியல் குறித்து அவர் எழுதிய குறிப்புகள் 1700 பக்கங்கள் _ நாட்குறிப்புகள் 800 பக்கங்கள் _ சேகரித்த எலும்புகள், உயிரின மாதிரிகள் எண்ணிக்கை 5000.

பீகிள் பயணத்தின் முடிவில், அதாவது தனது 27 வயதில் டார்வின் சாதித்துக் காட்டியதுதான் இவையெல்லாம்!

தனது 16ஆவது வயதில் உயிரியல் சம்பந்தமாக ஆய்வுக்கட்டுரை எழுதத் தொடங்கிய டார்வின் _ தனது 72ஆவது வயதில் தன்னுடைய கடைசி நூலாக _ மண் புழுக்களைப் பற்றிய ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். அதில் மண்புழுக்கள் பூமியின் கீழிருந்து மேற்பரப்பிற்கு நிலத்தை உயர்த்திக் கொண்டே இருக்கின்றன! இதன் மூலம் 60 ஆண்டுகளில் ஓர் அடி அளவிற்கான நில அடுக்கை (Layer)  ஏற்படுத்த முடியும் என்று கண்டறிந்து வெளியிட்டார். இந்த உண்மையைக் கண்டறிய மண்புழுக்களைப் பற்றி சுமார் 42 ஆண்டுக்காலம் ஆராய்ச்சி செய்திருந்தார் டார்வின்!

1831 முதல் 1836 வரையிலான அவரது பீகிள் கப்பல் பயணம் தொடங்கி _ 1859இல் உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியீடு தொடர்ந்து _ 1882இல் அவர் இறக்கும் வரையிலான 73 ஆண்டுக்கால டார்வினின் வாழ்க்கைப் பயணம் சலிப்பே இல்லாத இடையறாத அறிவியல் ஆய்வுப் பயணம்!

பீகிள் கப்பல் பயணத்தின்போது தென் அமெரிக்காவிற்கு மேற்கே, பசிபிக் பெருங்கடலில் உள்ள கோலேபோகோ தீவுகளில் அவர் பார்த்த கடல் ஆமைகளிடையே புலப்பட்ட வேறுபாடுகள்தான் இயற்கைத் தேர்வு (Natural Selection) குறித்த கோட்பாடுகளை டார்வின் மனதில் உருவகப்படுத்தின! இதன்படி, உயிரினங்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கேற்ப தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றன.  இப்படி சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் (Adaptation) போராட்டங்கள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்றன. இந்தப் போராட்டங்களில் தகுதி யானவை  வாழ்கின்றன _ தகுதியற்றவை சாகின்றன என்று கண்டறிந்தார்.

அதேபோல உயிரினங்களில் சூழ்நிலைக்கேற்ப ஏற்படும் மாறுதல்கள் காரணமாக அவற்றின் சில உறுப்புகள் பயனற்ற நிலையில் காலப்போக்கில் எச்சங்களாகி (Vestiges) விடுகின்றன என்று கண்டறிந்த டார்வின், அதற்கு உதாரணமாக ஆண் உயிரினங்களின் பால் சுரப்பிகள் பயனின்றி எச்சமாகி விட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

டார்வின் தனது நூலில் உயிரினங்களின் தோற்றம் குறித்த பரிணாம வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்தது. உயிரினங்களின் தாழ் நிலையிலிருந்து உயரிய நிலைக்கு இட்டுச் சென்றது. இப்படித்தான் மனிதனின் தோற்றம் (Homosapiens) ஏற்பட்டது! பரிணாம வளர்ச்சியில் மாற்றம் _ தேர்வு _ விருத்தி என்ற படிகள் முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

பரிணாம வளர்ச்சி என்பது நீண்டகால இடைவெளியில் நிகழ்வது என்ற டார்வினின் கருத்துக்குச் சான்றாக கொரில்லாவையும், சிம்பன்சியையுமே எடுத்துக் கொள்ளலாம்! 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கொரில்லாவிலிருந்து உயிரியல் ரீதியாக கொஞ்சமே வேறுபடும் சிம்பன்சி இனம் பரிணாம வளர்ச்சியில் தோன்ற காலம் எடுத்துக்கொண்ட இடைவெளி சுமார் 25 லட்சம் ஆண்டுகள்!

460 கோடி ஆண்டுகளுக்கு முன்தோன்றிய பூமியில் _ சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் உயிரினம் சைனா பைட்டா போன்ற பாசி இனம்தான்! அதற்குப் பின் பல்வேறு தாவர இனங்கள் _ நீர் வாழ் உயிரினங்கள் _ நிலநீர் வாழ்வன _ ஊர்வன _ பறப்பன _ பாலூட்டிகள் என ஒரு பெரும் சங்கிலித் தொடராக உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் தோன்றி வளர்ந்தன!

நிலநீர் வாழ்வன _ ஊர்வன உயிரினமாக பரிணாம வளர்ச்சி அடைய இடைப்பட்ட இணைப்பு உயிரினமாக (Conjuction) ஆமை, முதலை போன்றவற்றைக் குறிப்பிடலாம்! அதேபோல ஊர்வன உயிரினம் _ பறப்பனவாக பரிணாம வளர்ச்சி அடைய இடைப்பட்ட இணைப்பு உயிரினமாக பறக்கும் பல்லியைக் (Flying Lizard) குறிப்பிடலாம்! பறப்பன _ பாலூட்டிகளாக பரிணாமம் பெற இடைப்பட்ட உயிரினமாக வவ்வால்களைக் குறிப்பிடலாம்! அவை பறக்கவும் செய்யும் _ பாலூட்டவும் செய்யும்! இவற்றையெல்லாம் சார்லஸ் டார்வின் ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டினார்!

26லு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி 6லு கோடி ஆண்டுகளுக்கு முன் ஒட்டுமொத்தமாக அழிந்துபோன (Mass Extinction) டைனோசர்கள் இந்தப் பூமியில் 20 கோடி ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன! அவை வாழ்ந்த காலத்தில் பறவைகளும், பெரிய பாலூட்டிகளும் அதிக அளவில் தோன்றியிருக்கவில்லை என்பது ஓர் ஆச்சரியமான உண்மை! இவையெல்லாம் டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் அடிப்படையில் அவர் காலத்துக்குப் பின், அண்மையில் கண்டறியப்பட்ட ஆராய்ச்சியின் பாற்பட்ட உண்மைகள்!

சுமார் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய வால் குரங்குகள் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கொரில்லாக்கள் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிம்பன்சிகள் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ எபிலிஸ் _ 17லு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ எரக்டஸ் என்ற ஆதிமனிதன் _ அதற்குப் பின்னால் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ சேபியன்ஸ் எனும் மனிதர்களாகிய நாம்! இதுதான் பரிணாம வளர்ச்சியில் உயிரியல் ரீதியாக நம்முடைய வரலாறு!

டார்வின் கண்டறிந்து சொன்ன பரிணாம வளர்ச்சித் தத்துவம் அவர் வாழ்ந்த காலத்தில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை! அவர் வாழ்ந்த 19ஆம் நூற்றாண்டு அய்ரோப்பாவில் பாராளுமன்ற ஜனநாயக முறைகள் முகிழ்த்த காலகட்டம் என்பதால் _ உலகம் உருண்டை என்று சொன்னதற்காக உயிரோடு கொளுத்தப்பட்ட அறிஞர் புருனோவுக்கு நேர்ந்த கதி _ இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு கண்கள் குருடாக்கப்பட்ட அறிஞர் கலிலியோவுக்கு நேர்ந்த கதி _ அறிஞர் டார்வினுக்கு ஏற்படவில்லை என்று நாம் ஆறுதல் அடையலாம்! நாம் வாழும் இந்த உலகம் _ மனிதன், தாவர, மிருக ஜீவராசிகள் எல்லாவற்றையும் ஆண்டவன் 6 நாட்களில் படைத்தான் என்று சொன்ன கிறித்துவ மதம் தொடங்கி உலகில் உள்ள எல்லா மதங்களும் போதித்து வரும் படைப்புத் தத்துவத்திற்கு (Creationism) நேர் எதிராக அமைந்த புரட்சிதான் டார்வின் முன்வைத்த பரிணாம வளர்ச்சித் தத்துவம்(Evolution Theory).

துன்பமும் துயரமும் இயற்கைச் சீற்றங்களும் நிறைந்த தனது 5 ஆண்டுகால கடற்பயணத்தின் முடிவில் சார்லஸ் டார்வின் கூறுகிறார், இயற்கை அப்படியொன்றும் எளிமையாகக் கையாளக் கூடியதாக இல்லை! பரந்து கிடக்கும் உயிரினங்கள் (Distribution) தெய்வீகப் படைப்பு என்ற கருத்திற்கு ஏற்றதாக இல்லை என்று! அவர் கண்டறிந்த இயற்கைத் தேர்வு (Natural Selection)கோட்பாடுதான் தெய்வீகப் படைப்பு கோட்பாட்டைவிட சிறந்தது என்பதற்கு உதாரணமாக கடந்த பல தலைமுறைகளாக மக்கள்தொகை எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள படிப்படியான மாற்றத்தைச் சுட்டிக் காட்டினார்.

இரு தோடுடைய சிப்பியின் அழகிய இணைப்பு _ உயிரினங்களின் விதவிதமான பல்வேறு வகைகள் _ இவற்றில் பரிணாம வளர்ச்சியின்றி _ வேறெந்த படைப்பு வடிவமைப்பும் இல்லை என்றே தெளிவாகத் தெரிகிறது என்று தனது அந்திமக்காலத்தில் டார்வின் ஆணித்தரமாக அறிவித்தார்!

உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் கடவுள்தான் படைத்தார் என்று வாதிட்டு _ டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு எதிராகக் கிளம்பிய கடவுள் படைப்புவாதிகளில் முன்னோடியாக பிரிட்டனைச் சார்ந்த வில்லியம் பேலீ இருந்தார். அவர் ஒரு கடிகாரத்தில் உள்ளடங்கிய சிக்கலான உள்பாகங்களுக்கு ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் (Intelligent Designer) தேவைப்படுவது போன்றே சிக்கல் நிறைந்த ஒரு முழுமையான உயிரமைப்பு பிரபஞ்சம். இவற்றுக்கு ஒரு கடவுள் நிச்சயம் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

டார்வினின் சமகாலத்தில் வாழ்ந்த ஸ்காட்லாந்தைச் சார்ந்த டேவிட் ஹியூம் _ பேலீயின் வாதத்திற்குப் பதிலடியாக, மனிதனைப் படைத்த உயர்ந்த வடிவமைப்பாளர் கடவுள் என்றால், அவரைப் படைத்த வடிவமைப்பாளர் யார்? என்ற கேள்வி முடிவுறாது போய்க் கொண்டேயிருக்கும் என்றுரைத்தார்.

டார்வினின் காலத்துக்குப் பின்னாலும் இந்தத் தத்துவப் போர் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது!

கடவுள் படைப்புத் தத்துவத்துக்கு ஆதரவாக டார்வினின் கொள்கையை மறுப்பவர்கள் இன்றும் மிகப் பெரும்பான்மையாகவே இருக்கிறார்கள்!

1989இல் வெளிவந்த “Of Pandas and People” என்ற நூலில் மைக்கேல் பெஹெ என்ற அறிவியலாளர் தன் யூக முடிவாக குறைக்கப்பட முடியாத சிக்கல்களைக் (Irreducible complexities)  கொண்ட உயிரினங்களையும் அவற்றின் உறுப்புகளையும் ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் – அதாவது கடவுள்தான் படைத்திருக்க முடியும். டார்வின் கண்டுபிடித்த பரிணாம வளர்ச்சி முறையில் உருவாகியிருக்க முடியாது என்று அறிவித்தார்.

எது எப்படியிருந்தாலும் _ விஞ்ஞான உலகத்தில் _ குறிப்பாக உயிரியலில் மகத்தான சாதனையாகவும் _ பெரும் புரட்சியாகவும் விளங்கும் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு நவீன விஞ்ஞானத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது! ஆனால் உலகத்திலுள்ள கடவுள் படைப்பு வாதத்தின் தீவிர ஆதரவாளர்கள், ஆளும் வர்க்க அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் இன்றளவிலும் டார்வினின் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு நில்லாமல் _ அந்த அறிவியல் தத்துவத்தையே குழிதோண்டிப் புதைக்க எத்தனிக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்!

அண்மையில் 2005இல் இது சம்பந்தமாக ஒரு வழக்கு அமெரிக்காவில் நடைபெற்றது! டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை பள்ளிப் பாடங்களிலிருந்து நீக்கப்பட்டு _ மதவாத அடிப்படையிலான (Human Intelligent Design) “ அறிவார்ந்த கடவுள் படைப்பு என்ற கோட்பாடே பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த வழக்கு! அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்கூட, மதவாதிகளுக்கு ஆதரவாகத்தான் அணி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!

அந்த வழக்கின் முடிவில் நீதிபதி, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுதான் விஞ்ஞானப்பூர்வமானது _ அதைப் பாடத்தில் இருந்து நீக்க முடியாது! என்று தீர்ப்பளித்தார் என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி!

டார்வினின் மனைவி எம்மா டார்வின் கிறித்தவ மதத்தில் ஊறிப்போனவர்! திருமணத்திற்குப் பிறகு கணவன்_மனைவி இருவரும் கருத்து வேறுபாடுகளைப் பரிமாற்றம் செய்தே வாழ்க்கை நடத்தினர்! ஆனால், காலப்போக்கில் தமக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களாலும் _ அறிவியல் உண்மைகளின் தாக்கத்தாலும், சார்லஸ் டார்வின் கடவுள் நம்பிக்கையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டார்.

நீண்ட காலம் கணவனோடு நல்லதொரு இல்லறம் நடத்திய எம்மா டார்வின் அவரிடமே சொன்னது இது! _ நீங்கள் நியாய உணர்வுடன் செயல்படுகிறீர்கள்! உண்மையை அறியவும் _ உலகுக்கு அறிவிக்கவும் அக்கறையுடன் ஆர்வம் கொண்டு இருக்கிறீர்கள்! அதற்காக சதாசர்வகாலமும் முயற்சிக்கிறீர்கள்! காரணம், நீங்கள் நேர்மையானவர் _ தவறாக எதையும் செய்ய மாட்டீர்கள்!

தனது கண்டுபிடிப்புகளை யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலாக வெளியிட்ட டார்வினின் நேர்மையும் _ அவர் மனித குலத்துக்கு அர்ப்பணித்த பரிணாம வளர்ச்சித் தத்துவமும் என்றும் வாழும்!

(9.2.2014 – சார்லஸ் டார்வினின் 205ஆவது பிறந்த நாள்.)