வியாழன், 22 பிப்ரவரி, 2024

‘உயிரினங்களின் தோற்றம்’ – வீ.குமரேசன்

 

‘உயிரினங்களின் தோற்றம்’ – வீ.குமரேசன்

விடுதலைநாளேடு

‘உயிரினங்களின் தோற்றம்’
உலகில் நிலவிவந்த தவறான நம்பிக்கையைப் புரட்டிப்
போட்ட உண்மை அறிவியலாளர் – சார்லஸ் டார்வின்
இன்று (12.2.2024) டார்வினின் 224ஆம் ஆண்டு பிறந்த நாள்

திராவிடர் இயக்க வரலாற்றின் குறிப்புகளை மிகுதியாகக் கொண்டது செப்டம்பர் மாதம் எனலாம். பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் அந்த மாதத்தில் தான் நடைபெற்றுள்ளன – தொடங்கியும் உள்ளன. அது போலவே அறிவியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த தமது கண்டுபிடிப்புகளை மானுட பயன் பாட்டிற்கு – மேம்பாட்டிற்கு வழங்கிச் சென்றுள்ள அறிவியலாளர் பலர் – சிந்தனையாளர் சிலரின் பிறந்த நாள் கள் – மறைந்த நாள்கள் – பிப்ரவரி மாதத்தில் உள்ளன.

“எதனையும் சிந்தித்து செயலாற்று; அவர் சொன்னர், இவர் சொன்னார் எனக் கருதி நம்பி முடிவு செய்திடாதே” என்று ஏதென்ஸ் நகர் மக்களிடம் பகுத்தறிவுப் பயன் பாட்டை எடுத்துரைத்த தத்துவ அறிஞர் சாக்ரடீஸ் தண்டனையாக விஷம் குடிக்க வைத்து கொல்லப்பட்ட நாள் ‘பிப்ரவரி 15′ (பொ.ஆ.மு. 533).

‘பூமியைச் சுற்றித்தான் பிற கோள்கள், சூரியன் உள்பட வலம் வருகின்றன’ என்றிருந்த கருத்தினை தலைகீழாக்கி, உண்மையில் ‘சூரியன்தான் மய்யம். பிற கோள்கள்தான் பூமி உள்பட, சூரியனை சுற்றி வரு கின்றன’ எனும் உண்மையினை வெளிப்படுத்தியதற்கு, அரசின் கொடுமைகளுக்கு ஆளாகி ‘கொல்லப்பட்ட’ நிக்கலஸ் கோபர்நிகஸ் பிறந்த நாள் பிப்ரவரி 19 (பொ.ஆ.1473).

‘அண்டம் (universe) எல்லையற்றது; அதற்கு மய்யம் இருக்க முடியாது. சூரியன் ஒரு நட்சத்திரம்’ எனும் அறிவியல் உண்மையைச் சொல்லி மதபோத னைப் புத்தகத்தில் சொல்லப்பட்டவைக்கு எதிராக பேசியதற்காக, தீயிலே போட்டு துன்புறுத்தப்பட்டு ஜியார்டானோ புருனோ கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 17 (பொ.ஆ.1540).

கோபர் நிக்கஸின் கோட்பாடுகள் சரி என வலிந்துரைத்து டெலஸ்கோப் அமைப்பை விரிவாக்கி, வானவியல் உண்மைகள் பலவற்றை வெளிக் கொணர்ந்து, அறிவியல் வழிமுறைகள் பற்றி கூறியதால் சிறைத் தண்டனைகள், கொடுமைகளுக்கு ஆளான கலிலியோ கலீலி பிறந்த நாள் பிப்ரவரி 15 (பொ.ஆ. 1642).

‘உயிரினங்கள் படிப்படியாக நடைபெற்ற மாற்றங் களால் தோன்றியவையே. (இன்றைக்கு இருக்கும் வடிவமைப்பிலேயே திடீரென உருவாகவில்லை). இன்றைக்கு உள்ள உயிரினங்கள் ஆண்டாண்டு கால மாக தங்களை தக்க வைத்துக் கொள்ள போராடிய வைகளின் தொடர்ச்சிதான். இதில் கால வெள்ளத்தில் தங்களுக்கான தெரிவை தேர்ந்தெடுக்காத உயிரினங் கள் பல அழிந்து விட்டன’ என தனது பல்லாண்டு கால ஆராய்ச்சியில் பரிணாமக் கொள்கையை நிறுவிய சார்லஸ் டார்வின் பிறந்தது பிப்ரவரி 12 (பொ.ஆ. 1809).
பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் தற்காலிகமானவைதான். இதில் ஒன்றும் புனிதம் கிடையாது – ஒரு வரலாற்றுக் குறிப்பை நினைவுபடுத்தி அந்த அறிவியலாளர்கள் உலக மக்களுக்கு வழங்கிய பங்களிப்பிற்கு நன்றி பாராட்டி, பயன்படுத்திட வழி கோலும் ஒரு முறை. அவ்வளவே!

சார்லஸ் டார்வின்

சார்லஸ் டார்வின், இயல்பாகவே புழு, பூச்சி, விலங் குகள், சுற்றுப்புற சூழல் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்து வளர்ந்தவர். அவரது தந்தையார், தாத்தா ஆகியோர் மருத்துவர்கள் என்ற நிலையில், டார்வினும் மருத்துவராக வரவேண்டும் என குடும்பத்தார் விரும் பினர். அதில் நாட்டம் இல்லாத நிலையில் ‘இறையியல்’ கல்லூரியில் சேர்ந்து படித்திடுவதற்கு பணித்த நிலையில் அப்படியே செய்தார். இறையியல் படிப்பை முடித்ததும் திருச்சபையில் சேர்ந்து ஊழியம் செய்திட டார்வின் விரும்பவில்லை. திருச்சபையின் நம்பிக் கைக்கு மாறாக பின்னாளில் அறிவியல் கோட்பாட்டை நிறுவிட இருந்த டார்வினுக்கு, திருச்சபையில் சேர்ந்து பணியாற்றிட, எப்படி விருப்பம் இருந்திருக்க முடியும்?
தான் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் பழக்கத்தில் இருந்த தாவரவியல் ஆசிரியர் கென்ஸ்லோ (Henslow) வுடான தொடர்பைத் தவிர. உயிரியல் குறித்து முறையாக படிப்பு படிக்காத ஒரு இயற்கை அறிவியலாளர் – டார்வின். 22 வயதில் உலகைச் சுற்றிப் பார்த்து உயிரினங்கள் பற்றித் தெரிந்து கொள்ள கடல் பயணம் மேற்கொள்கிறார். அய்ந்து ஆண்டுகள் பயணம் செய்கிறார்.

பல நாடுகளில் வாழும் விலங்கினங்களின் – பறவையினங்களின் உடலமைப்பு, நடவடிக்கைகள் குறித்து நேரடியாக பார்த்தும், இறந்த பிறகு உடல் எச்சங் களில் மிச்சம் இருக்கும் உறுப்புகளைச் சேகரித்தும் திரும்புகிறார். ‘ஒரே விதமான பறவை பல நாடுகளில் தோற்றங்களில் ஏன் மாறுபடுகின்றது?’ என பல கேள்விகளை தன்னுள் டார்வின் கேட்டுக் கொள்கிறார். பயணம் முடிந்து நாடு திரும்பியதும், உடன் பழகிய அறிவியலாளர்களின் வற்புறுத்தலில்தான் ‘உயிரினங் களின் தோற்றம்’ (Henslow) எனும் நூலினை தனது 40ஆம் வயதில் (1859) வெளியிடுகிறார். இதில் மனித இனம் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. பின்னா ளில் தான் நிறுவிய ‘பரிணாமக் கொள்கை’க்கான சுருக் கம்தான் ‘உயிரினங்களின் தோற்றம்’ என்பதை டார்வின் கூறுகிறார். தான் ஆய்வு செய்து நிறுவிய பரிணாமக் கொள்கை குறித்து அறிவியல் உலகம் பரவலாக அறிந்து வந்த நிலையில் 1871ஆம் ஆண்டில் தனது 62 வயதில்

‘பாரம்பரிய மாற்றத்தால் வந்த மனிதன்’ (The Descent of Man)எனும் ஆய்வு நூலை வெளியிடுகிறார்.
மதபீடங்கள் காட்டிய எதிர்ப்பு

மனித இனத்தை குறித்து ஆய்வு வெளிவந்த நிலையில் மத பீடங்களிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. மத குருமார்கள் டார்வினை கடுமையாக எதிர்த்தனர். பொதுவெளியில் டார்வின் கேலி, கிண்டல் செய்யப் பட்டார். இன்றைய மனிதன் முந்தைய குரங்கினத்திலிருந்து வந்திருக்க கூடிய வாய்ப்பு உள்ளது என்றார். தனது ஆய்வுக் குறிப்புகளில் கடவுளைக் குறித்து டார்வின் எங்குமே குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருப்பினும் அன்று நிலவிய – இன்றும் நிலவி வரும், ‘கடவுள்தான் மனிதனைப் படைத்தார்’ என்கின்ற எந்த ஆதாரமும் இல்லாத ஒன்றை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டு வாழ்கின்ற மக்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் கடவுளுக்கு – கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர் டார்வின் என சித்தரிக் கப்படுகிறார். ஆனால் இறுதிவரை தான் கண்டறிந்த அறிவியல் உண்மை நிலையிலிருந்து டார்வின் பின் வாங்கவில்லை.

டார்வின் கண்டறிந்த பரிணாமக்
கொள்கை என்பது என்ன?

1. மாற்றம் – எல்லா உயிரினங்களிலும் மாற்றம் நடை பெற்றுக் கொண்டுதான் வருகிறது (இந்த மாற்றங்கள் ஒரு மனித வாழ்வு காலத்தில் தொடங்கி முடிவடைவது இல்லை). இன்று உள்ள மனித இனமே மாற்றத்தின் முற்றுப்புள்ளி அல்ல.
2. தலைமுறையாகப் பெருக்கம்: ஒத்த உயிர் வடிவத்தைக் கொண்டுள்ள ஒவ்வொரு உயிரினமும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் மிக்கது.
3. உயிர் வாழ்வதற்கான போராட்டம்(Struggle for existence): ஒவ்வொரு உயிரினமும் தான் வாழும் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்றவாறு மாறுதல்களை கணித்து உருவாக்கிக் கொள்ளும்; அதற்கேற்ற முறை யில் இனப்பெருக்க முறைகளை தீர்மானித்து மாறுதல் களை ஏற்படுத்திக் கொள்ளும். இந்த ஒட்டுமொத்த மாறுதல்களுக்கு உரிய வகையில் செயல்படாத உயிரினங்கள் கால வெள்ளத்தில் இல்லாமலே போயிருக் கின்றன. இது ஒரு வகையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வரும் போராட்ட மாறுதல் முறையாகும். (இந்த போராட்டத்தில் வெற்றி காணு பவை பிழைத்துக் கொள்ளும்; மற்றவை இல்லாமலே போய்விடும்).
இந்த உண்மையானது அதுவரை நிலவி வந்த கட வுள்தான் அனைத்து உயிரினங்களையும் இன்றைக்கு இருக்கும் வடிவமைப்பிலே படைத்தார் என்பதை இயல்பாகவே மறுத்து விடுகிறது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவரல்ல டார்வின். கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்வதை ஒரு காலக்கட்டத்தில் நிறுத்திக் கொள்கிறார். மற்றபடி கடவுளுக்கு எதிரான, மத பீடத்திற்கு எதிரான கருத்துகளை எடுத்துரைக்க வில்லை. பரிணாமக் கொள்கையின் தாக்கத்தால் மதபீடம் ஆட்டம் கண்டது; அதனால் அது டார்வினுக்கு பல்வேறு தடைகளை விதித்தது. அவை பற்றி பொருட் படுத்தாதவராகவே டார்வின் வாழ்ந்து மறைந்தார்.

இன்றைய அறிவியல் வளர்ச்சி, ஆய்வுக் கூட கட்டமைப்பு தொழில்நுட்பப் பெருக்கம். டார்வின் காலத்தில் இல்லை. கண்ணில் பார்த்தவை குறித்து ஆய்வு செய்து அனுமானத்தின் அடிப்படையில் தொடங்கி தக்க ஆதாரங்களோடு தகுந்த கண்டறிதலை உலகிற்கு அளித்தார். டார்வினைப் போலவேதான் அவர் காலத்தில் வாழ்ந்த, முன்னர் வாழ்ந்த அறிவியலாளர்கள் – பலரும் வெளிப்படையாக பார்த்த – ஆனால் புலப்படாத உண்மைகளை அறிவியல் உலகிற்கு வழங்கிச் சென்றார்கள். அன்று அந்த அறிவியலாளர்கள் கண்டறிந்தவைகளால் இன்று உயிரினங் களின் மரபணுக்கள் பற்றிய ஆய்வு உரிய கட்டமைப்பு வசதிகளுடன் தொடர்ந்து வரும் வேளையில் மறுக்க முடியாதவைகளாக இருப்பது சிறப்புக்குரியதாகும்.

மாறும் அறிவியல் உண்மைகள்

மத நம்பிக்கைகள் எந்நாளும் மாறாத் தன்மை யானவை. ஆனால் அறிவியல் உண்மைகள் வருங் காலத்திலும் அப்படியே தொடரும் எனச் சொல்லிவிட முடியாது. உரிய ஆதாரங்களுடன் புதிய உண்மைகள் அறியப்படும் நிலையில், இன்று நிலவிடும் உண்மைகள் மாறக்கூடிய நிலை வரலாம்; இதுதான் அறிவியல் உண்மைகளுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் உள்ள வேறுபாடு. ஆனால் மேற்கத்திய உலகில் செய்த தவறை ஏற்றுக் கொள்வது வெகு காலம் கடந்த நிலை யில் நிகழ்ந்துள்ளது.
“மனிதர்களைச் சிந்தித்து கருத்துகளின் மீது முடி வெடுக்கச் சொன்னதால் – இளைஞர்களின் மனதை கெடுக்கிறார்” என்று அரச நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, கொல்லப்பட்டார் சாக்ரடீஸ் – சென்ற நூற்றாண்டில்தான் கிரீஸ் நாட்டு நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தவறு – குற்றச்சாட்டும் தவறு என வெளிப் படையாக தெரிவித்தது.

சார்லஸ் டார்வினின் உயிரினங்களின் தோற்றம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்க மறுத்த கிறிஸ்தவ மத பீடம், 2009ஆம் ஆண்டில்தான் டார்வி னின் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டது; தாம் நடத்திடும் கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைத்திடும் நிலையினை உருவாக்கியது.

அறிவியல் வேறு; போலி அறிவியல் வேறு

காலங்கடந்தும் உண்மையை ஏற்றுக் கொள்வதுதான் அறிவு நாணயமிக்க செயல். ஆனால் கடவுளரே அவதாரங்கள் பலவாக எடுத்துப் பிறந்த இந்த ‘புனித மண்ணில்’ அறிவியலுக்கு புறம்பான எதிர்வினையை விட – திரிபுவாத நிலையினை உருவாக்கும் செயல்தான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பையும் எந்த ஆதாரமுமின்றி வெறும் புராணப் புனைவுகளை மட்டும் சுட்டிக் காட்டி – அப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் முன்னரே இந்த மண்ணில் நிலவி வந்தவைகள் என – அறிவு நாணய மற்ற கூற்றுகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன. அறிவியல் அல்லாதவற்றை வெறும் வியாக்கியனங்கள் மூலமாக அறிவியலை போன்று சொல்லுவது வாடிக் கையாகப் போய்விட்டது. போலி அறிவியலை மூலதன மாக்கி ஆதிக்க சக்திகள் ஊக்கம் பெற்று வரும் நிலை முறியடிக்கப்பட வேண்டும். அறிவியல் வேறு; போலி அறிவியல் வேறு என இனம் பிரித்து புரிந்து கொள்ளும் நிலை – அதனை பரவலாக எடுத்துச் செல்லும் நிலை சிறிய அளவில்தான் நடைபெற்று வருகிறது. இப்படிப் பட்ட செயல்கள் மேலும் வலுப்பட்டு பெருகிட வேண்டும்.

அறிவியல் மனப்பான்மை பெருகிடுக

சார்லஸ் டார்வினின் 224ஆம் பிறந்த நாளில் அறிவுப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டிய செய்தி இதுவே; பொய்மைக்கு ஆதரவு காட்டிடாத அடக்கு முறைக்கு ஆளாகாத துணிவு பெருகிட வேண்டும். அறிவியல் செய்திகளை பரவலாக்கி, இயல்பாகவே அனைவரும் அறிவியல் மனப்பான்மை கொண்டு எதனையும் அணுகிடும் பாங்கினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சார்லஸ் டார்வினின் அறிவியல் உண்மைகள் வாழ்க! பிற அறிவியல் உண்மைகளும் பல்கிப் பெருகிடுக!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக