– நீட்சே

இயல்பியல் மற்றும் பிரபஞ்சவியல் அறிவியல் துறைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல அறிவியல் கோட்பாடுகளைக் கண்டுபிடித்து வெளியிட்ட   லாரன்ஸ் மேக்ஸ்வெல் கிராஸ்(Lawrence Maxwell Krauss) என்ற அமெரிக்க நாட்டு அறிவியல் பேரறிஞர் 1954 மே 27 அன்று பிறந்தவர் ஆவார்.

பூமி மற்றும் விண்வெளி ஆய்வுப் பயண கல்வி நிறுவனத்தின் நிறுவனப் பேராசிரியராகவும், அரிசோனா மாகாணப் பல்கலைக்கழகத்தின் உயிர்த் தோற்ற ஆய்வு பற்றிய செயல்திட்ட இயக்குநராகவும்  இருந்தவர் அவர். இவர் எழுதி வெளியிட்டுள்ள,  அதிக பிரதிகள் விற்பனையான அறிவியல் நூல்கள் பலவற்றில் நட்சத்திரங்களின் இயக்கம் பற்றிய இயல்பியல்(The  Physics of Star Trek)  மற்றும் வெற்றிடத்திலிருந்து உருவான பிரபஞ்சம் (A Universe from Nothing) என்ற இரு நூல்களும் அறிவியல் உலகில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவையாகும். பொதுமக்கள் அறிவியலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும்,  சோதனைகளால் மெய்ப்பிக்கப்பட்ட உறுதியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பொதுநலக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும், பரவலான ஆழ்ந்த அறிவியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதையும், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிய கருத்து இன்றி அறிவியல் அடிப்படையிலான நம்பிக்கை கொண்டிருப்பதையும் வலியுறுத்திய அவர்,  மதம், கடவுள் பற்றிய  மூடநம்பிக்கைகள் மனித இனத்தின் மீது ஏற்படுத்தும் தீய பாதிப்புகளைக் குறைப்பதற்காக வெகுவாகப் பாடுபட்டார்.

நியூயார்க் நகரில் பிறந்த இவர் தனது இளமைப் பருவத்தை டொரன்டோ, ஒன்டாரியோ, கனடா போன்ற இடங்களில் கழித்தவர். ஒட்டாவா மாகாண கார்லடன் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயல்பியல் பாடங்களில் முதல்பிரிவில் தேர்ச்சி பெற்று 1977ஆம் ஆண்டில் இவர் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1982இல் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப அறிவியல் கழகம் இவருக்கு இயல்பியலில் ஆய்வு முனைவர் பட்டம் வழங்கியது.

கேஸ் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் இயல்பியல் துறைத் தலைவராக  1993 முதல் 2005 வரை இவர் இருந்தார். அப்பல்கலைக்கழகத்தின் தலைவர் எட்வர்ட் எம்.ஹன்ட்ரட் என்பவர் மீதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  முதல்வர் ஆண்டர்சன் மீதும்  இவர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் பெரும் ஆதரவுடன் நிறைவேறின என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தேசிய ஊடக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்ட இவர், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தலையங்கங்களையும் எழுதியுள்ளார்.  டார்வினின் உயிர்த் தோற்ற வளர்ச்சிக் கோட்பாட்டுக்கு எதிரான கடவுளே அறிவான படைப்பாளர் (Intelligent Design) என்ற கோட்பாட்டைப்  பள்ளிகளில் போதிப்பதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த இவர், 2004ஆம் ஆண்டில் ஓஹியோ மாகாண கல்விக் குழுவின் முன் விசாரணைக்குச் சென்றது முதல், இவரது புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கியது.

2008 அமரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தில் அறிவியல் கொள்கைக் குழுவிலும் இவர் பணியாற்றியுள்ளார். அமெரிக்க அறிவியலாளர் கூட்டமைப்பின் இயக்குநர் குழுவிற்கு இவர் 2010ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பிரபஞ்சவியல், பிரபஞ்சஇயல்பியல் மற்றும் இயல்பியல் ஆய்வுக் கழகத்தின் பகுதிநேரப் பேராசிரியர் பணியை இவர் ஒப்புக் கொண்டார்.

வெற்றிடத்திலிருந்து உருவான பிரபஞ்சம்: ஏதுமில்லாமல் இருப்பதை விட ஏதோ ஒன்று இருக்கிறது என்று கூறப்படுவது ஏன்? (A Universe from Nothing : Why There is Something Rather than Nothing)  என்ற இவரது நூல், புகழ்பெற்ற கடவுள் என்னும் பொய் (God’s Delusion)) என்ற நூலை எழுதிய ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins)  அவர்களின் பின்னுரையுடன்  2012 ஜனவரியில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திலேயே அதிக பிரதிகள் விற்பனையான நூல் என்ற பெருமையைப் பெற்ற  இந்நூல் இதுவரை 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தீவிர நாத்திகரும், புகழ் பெற்ற எழுத்தாளருமான கிறிஸ்டொபர் ஹிச்சன்ஸ் அவர்களின் முன்னுரையுடன் இந்நூல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது: ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்த காரணத்தினால், அந்த உரை எழுதும் பணி முற்றுப் பெறாமல் போனது. 2013ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இந்நூலின் மலிவுப் பதிப்பு புதிய முன்னுரையுடனும், ஹிக்ஸ் பாசன் துகள் பற்றிய இவரது கேள்வி பதில் பகுதியுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

2012 ஜூலையில் நியூஸ் வீக் இதழில் எழுதிய ஒரு கட்டுரையில், பிரபஞ்சப் பெருவெடிப்பு எவ்வாறு ஏற்பட்டு இருக்கக்கூடும் என்பதை ஹிக்ஸ் துகள் கோட்பாட்டினால் விளக்க முடியும் என்று இவர் தெரிவித்துள்ளார். இயல்பியல் அறிவியல் துறையிலேயே அதிகமாகப் பணியாற்றியுள்ள இவர் அத்துறையில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருந்திருக்கிறார். பிரபஞ்சத்தின் பெரும் அளவிலான அடர்த்தியும், ஆற்றலும்  (mass and energy) வெற்றிடத்தில்தான் அடங்கியுள்ளது என்று முதன் முதலாகக் கூறிய இயல்பியலாளர்களில் இவரும் ஒருவர். வெற்றிடத்திலிருந்தே இந்தப் பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும் என்று தனது வெற்றிடத்திலிருந்து உருவான பிரபஞ்சம்  என்ற நூலில்  குறிப்பிட்டிருந்தது போன்ற  ஒரு மாதிரியை இவர் உருவாக்கினார்.

தீவிர நாத்திகரான இவர் Hamza Tzortzis and William Lane Craig போன்ற மதத் தலைவர்கள், இறையியலாளர்களுடன் பல விவாதங்களை மேற்கொண்டுள்ளார். Tzortzis  உடனான அத்தகைய ஒரு விவாதத்தின்போது, பார்வையாளர்களில் இருந்த ஆண்களையும், பெண்களையும் தனித் தனியாக உட்காரச் செய்திருந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்ளாத இவர், அவர்கள் ஒன்றாக உட்கார வைக்கப்படும் வரை விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்ளமாட்டேன் என்று அறிவித்து அதன்படியே இருந்தார். விவாத ஏற்பாட்டாளர்கள் அவரது வேண்டுகோளை ஏற்று ஆண்கள் பெண்களை ஒன்றாக உட்கார வைத்த பிறகே அவர் தனது வாதத்தைத் தொடர்ந்தார்.

நம்பிக்கையற்றவர்கள் (unbelievers)  என்ற ஒரு முழுநீள செய்திப் படம் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார். இப்படத்தில் இவரும்  பேராசிரியர் ரிச்சர்ட் டாக்கின்சும் ஒன்றாக உலகம் முழுவதும் சுற்றி வந்து அறிவியல் மற்றும் பகுத்தறிவின் முக்கியத்துவத்தைப் பற்றியும்,  மதம் மற்றும் மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் வெளிப்படையாக மக்களிடம் பேசி பிரச்சாரம் செய்வது போலவும் Stephen Hawking, Ayaan Hirsi Ali, Sam Hams, Cameron  Diaz போன்ற  பிரபல கடவுள் மறுப்பாளர்கள் மற்றும்  பகுத்தறிவாளர்களை நேர்முகம் காண்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.

மக்களால் நன்கு அறியப்பட்டுள்ள  நுண்ணறிவாளர் (Public Intellectual) என்று Scientific American பத்திரிகையால் குறிப்பிடப்பட்டுள்ள,  தற்போது உயிருடன் இருக்கும் ஒரு சில இயல்பியலாளர்களில் லாரன்சும் ஒருவராவார். The American Physics Society, The American Association of Physics Teachers and The American Institute of Physics   என்ற அமெரிக்காவின் மூன்று முக்கிய பெரும் இயல்பியல் கல்வி நிறுவனங்களிடமிருந்தும்  விருதுகள் பெற்ற ஒரே இயல்பியலாளர் இவர் மட்டுமே. அமெரிக்கப் பொதுக் கல்வித் துறையில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பெரும் பங்காற்றியதற்காக தேசிய கல்விக் கழக பொதுச் சேவைப் பதக்கம் 2012ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. 2011 டிசம்பரில் சென்டர் ஃபார் என்குயரி (Centre for Inquiry) அமைப்பின் இயக்குநர்  குழுவிற்கு  வாக்கு அளிக்க இயலாத மதிப்புறு உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார்.

– தமிழில்: த.க.பாலகிருட்டிணன்