மார்ச் 01-15

–  மு.பாண்டியன் நெடுஞ்செழியன்

1831 — பிரிட்டனின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து பீகிள் கப்பலில் புறப்பட்டு 5 ஆண்டுகள் காடு, மலை, கடலென பயணம் செய்த சார்லஸ் டார்வின் 1859இல் வெளியிட்ட இயற்கைத் தேர்வு வழிப்பட்ட உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species of Natural Selection) என்ற நூலின் மூலமாக பரிணாம வளர்ச்சி என்ற மகத்தான கோட்பாட்டை உலகுக்கு அர்ப்பணித்தார்.

 

1809 பிப்ரவரி 9ஆம் தேதி பிரிட்டனின் ஷரெவ்ஸ்பரி நகரில் பிறந்த சார்லஸ் டார்வின் தன்னுடைய 16ஆவது வயதில் மருத்துவம் படிக்கப் போனார். அது பிடிக்கவில்லை என்பதால், அவரது தந்தை ராபர்ட் டார்வின் மகனை கிறித்தவப் பாதிரியாராக்க முயற்சித்தார். அதற்கு ஏதுவாக கேம்பிரிட்ஜில் 1828இல் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்டார்.

பாதிரியாராகப் போயிருக்க வேண்டிய சார்லஸ் டார்வின் இயற்கை, உயிரியல் ஆராய்ச்சியாளராக பீகிள் கப்பலில் பயணமானது, அவருக்கு மட்டுமல்ல, உயிரியல் துறைக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது.

பீகிள் கப்பலில் பயணம் செய்த தூரம் 40 ஆயிரம் மைல்கள் _ நிலவழிப் பயணம் 2000 மைல்கள். நில அமைப்பு, தாவரவியல் குறித்து அவர் எழுதிய குறிப்புகள் 1700 பக்கங்கள் _ நாட்குறிப்புகள் 800 பக்கங்கள் _ சேகரித்த எலும்புகள், உயிரின மாதிரிகள் எண்ணிக்கை 5000.

பீகிள் பயணத்தின் முடிவில், அதாவது தனது 27 வயதில் டார்வின் சாதித்துக் காட்டியதுதான் இவையெல்லாம்!

தனது 16ஆவது வயதில் உயிரியல் சம்பந்தமாக ஆய்வுக்கட்டுரை எழுதத் தொடங்கிய டார்வின் _ தனது 72ஆவது வயதில் தன்னுடைய கடைசி நூலாக _ மண் புழுக்களைப் பற்றிய ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். அதில் மண்புழுக்கள் பூமியின் கீழிருந்து மேற்பரப்பிற்கு நிலத்தை உயர்த்திக் கொண்டே இருக்கின்றன! இதன் மூலம் 60 ஆண்டுகளில் ஓர் அடி அளவிற்கான நில அடுக்கை (Layer)  ஏற்படுத்த முடியும் என்று கண்டறிந்து வெளியிட்டார். இந்த உண்மையைக் கண்டறிய மண்புழுக்களைப் பற்றி சுமார் 42 ஆண்டுக்காலம் ஆராய்ச்சி செய்திருந்தார் டார்வின்!

1831 முதல் 1836 வரையிலான அவரது பீகிள் கப்பல் பயணம் தொடங்கி _ 1859இல் உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியீடு தொடர்ந்து _ 1882இல் அவர் இறக்கும் வரையிலான 73 ஆண்டுக்கால டார்வினின் வாழ்க்கைப் பயணம் சலிப்பே இல்லாத இடையறாத அறிவியல் ஆய்வுப் பயணம்!

பீகிள் கப்பல் பயணத்தின்போது தென் அமெரிக்காவிற்கு மேற்கே, பசிபிக் பெருங்கடலில் உள்ள கோலேபோகோ தீவுகளில் அவர் பார்த்த கடல் ஆமைகளிடையே புலப்பட்ட வேறுபாடுகள்தான் இயற்கைத் தேர்வு (Natural Selection) குறித்த கோட்பாடுகளை டார்வின் மனதில் உருவகப்படுத்தின! இதன்படி, உயிரினங்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கேற்ப தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றன.  இப்படி சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் (Adaptation) போராட்டங்கள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்றன. இந்தப் போராட்டங்களில் தகுதி யானவை  வாழ்கின்றன _ தகுதியற்றவை சாகின்றன என்று கண்டறிந்தார்.

அதேபோல உயிரினங்களில் சூழ்நிலைக்கேற்ப ஏற்படும் மாறுதல்கள் காரணமாக அவற்றின் சில உறுப்புகள் பயனற்ற நிலையில் காலப்போக்கில் எச்சங்களாகி (Vestiges) விடுகின்றன என்று கண்டறிந்த டார்வின், அதற்கு உதாரணமாக ஆண் உயிரினங்களின் பால் சுரப்பிகள் பயனின்றி எச்சமாகி விட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

டார்வின் தனது நூலில் உயிரினங்களின் தோற்றம் குறித்த பரிணாம வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்தது. உயிரினங்களின் தாழ் நிலையிலிருந்து உயரிய நிலைக்கு இட்டுச் சென்றது. இப்படித்தான் மனிதனின் தோற்றம் (Homosapiens) ஏற்பட்டது! பரிணாம வளர்ச்சியில் மாற்றம் _ தேர்வு _ விருத்தி என்ற படிகள் முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

பரிணாம வளர்ச்சி என்பது நீண்டகால இடைவெளியில் நிகழ்வது என்ற டார்வினின் கருத்துக்குச் சான்றாக கொரில்லாவையும், சிம்பன்சியையுமே எடுத்துக் கொள்ளலாம்! 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கொரில்லாவிலிருந்து உயிரியல் ரீதியாக கொஞ்சமே வேறுபடும் சிம்பன்சி இனம் பரிணாம வளர்ச்சியில் தோன்ற காலம் எடுத்துக்கொண்ட இடைவெளி சுமார் 25 லட்சம் ஆண்டுகள்!

460 கோடி ஆண்டுகளுக்கு முன்தோன்றிய பூமியில் _ சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் உயிரினம் சைனா பைட்டா போன்ற பாசி இனம்தான்! அதற்குப் பின் பல்வேறு தாவர இனங்கள் _ நீர் வாழ் உயிரினங்கள் _ நிலநீர் வாழ்வன _ ஊர்வன _ பறப்பன _ பாலூட்டிகள் என ஒரு பெரும் சங்கிலித் தொடராக உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் தோன்றி வளர்ந்தன!

நிலநீர் வாழ்வன _ ஊர்வன உயிரினமாக பரிணாம வளர்ச்சி அடைய இடைப்பட்ட இணைப்பு உயிரினமாக (Conjuction) ஆமை, முதலை போன்றவற்றைக் குறிப்பிடலாம்! அதேபோல ஊர்வன உயிரினம் _ பறப்பனவாக பரிணாம வளர்ச்சி அடைய இடைப்பட்ட இணைப்பு உயிரினமாக பறக்கும் பல்லியைக் (Flying Lizard) குறிப்பிடலாம்! பறப்பன _ பாலூட்டிகளாக பரிணாமம் பெற இடைப்பட்ட உயிரினமாக வவ்வால்களைக் குறிப்பிடலாம்! அவை பறக்கவும் செய்யும் _ பாலூட்டவும் செய்யும்! இவற்றையெல்லாம் சார்லஸ் டார்வின் ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டினார்!

26லு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி 6லு கோடி ஆண்டுகளுக்கு முன் ஒட்டுமொத்தமாக அழிந்துபோன (Mass Extinction) டைனோசர்கள் இந்தப் பூமியில் 20 கோடி ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன! அவை வாழ்ந்த காலத்தில் பறவைகளும், பெரிய பாலூட்டிகளும் அதிக அளவில் தோன்றியிருக்கவில்லை என்பது ஓர் ஆச்சரியமான உண்மை! இவையெல்லாம் டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் அடிப்படையில் அவர் காலத்துக்குப் பின், அண்மையில் கண்டறியப்பட்ட ஆராய்ச்சியின் பாற்பட்ட உண்மைகள்!

சுமார் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய வால் குரங்குகள் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கொரில்லாக்கள் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிம்பன்சிகள் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ எபிலிஸ் _ 17லு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ எரக்டஸ் என்ற ஆதிமனிதன் _ அதற்குப் பின்னால் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ சேபியன்ஸ் எனும் மனிதர்களாகிய நாம்! இதுதான் பரிணாம வளர்ச்சியில் உயிரியல் ரீதியாக நம்முடைய வரலாறு!

டார்வின் கண்டறிந்து சொன்ன பரிணாம வளர்ச்சித் தத்துவம் அவர் வாழ்ந்த காலத்தில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை! அவர் வாழ்ந்த 19ஆம் நூற்றாண்டு அய்ரோப்பாவில் பாராளுமன்ற ஜனநாயக முறைகள் முகிழ்த்த காலகட்டம் என்பதால் _ உலகம் உருண்டை என்று சொன்னதற்காக உயிரோடு கொளுத்தப்பட்ட அறிஞர் புருனோவுக்கு நேர்ந்த கதி _ இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு கண்கள் குருடாக்கப்பட்ட அறிஞர் கலிலியோவுக்கு நேர்ந்த கதி _ அறிஞர் டார்வினுக்கு ஏற்படவில்லை என்று நாம் ஆறுதல் அடையலாம்! நாம் வாழும் இந்த உலகம் _ மனிதன், தாவர, மிருக ஜீவராசிகள் எல்லாவற்றையும் ஆண்டவன் 6 நாட்களில் படைத்தான் என்று சொன்ன கிறித்துவ மதம் தொடங்கி உலகில் உள்ள எல்லா மதங்களும் போதித்து வரும் படைப்புத் தத்துவத்திற்கு (Creationism) நேர் எதிராக அமைந்த புரட்சிதான் டார்வின் முன்வைத்த பரிணாம வளர்ச்சித் தத்துவம்(Evolution Theory).

துன்பமும் துயரமும் இயற்கைச் சீற்றங்களும் நிறைந்த தனது 5 ஆண்டுகால கடற்பயணத்தின் முடிவில் சார்லஸ் டார்வின் கூறுகிறார், இயற்கை அப்படியொன்றும் எளிமையாகக் கையாளக் கூடியதாக இல்லை! பரந்து கிடக்கும் உயிரினங்கள் (Distribution) தெய்வீகப் படைப்பு என்ற கருத்திற்கு ஏற்றதாக இல்லை என்று! அவர் கண்டறிந்த இயற்கைத் தேர்வு (Natural Selection)கோட்பாடுதான் தெய்வீகப் படைப்பு கோட்பாட்டைவிட சிறந்தது என்பதற்கு உதாரணமாக கடந்த பல தலைமுறைகளாக மக்கள்தொகை எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள படிப்படியான மாற்றத்தைச் சுட்டிக் காட்டினார்.

இரு தோடுடைய சிப்பியின் அழகிய இணைப்பு _ உயிரினங்களின் விதவிதமான பல்வேறு வகைகள் _ இவற்றில் பரிணாம வளர்ச்சியின்றி _ வேறெந்த படைப்பு வடிவமைப்பும் இல்லை என்றே தெளிவாகத் தெரிகிறது என்று தனது அந்திமக்காலத்தில் டார்வின் ஆணித்தரமாக அறிவித்தார்!

உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் கடவுள்தான் படைத்தார் என்று வாதிட்டு _ டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு எதிராகக் கிளம்பிய கடவுள் படைப்புவாதிகளில் முன்னோடியாக பிரிட்டனைச் சார்ந்த வில்லியம் பேலீ இருந்தார். அவர் ஒரு கடிகாரத்தில் உள்ளடங்கிய சிக்கலான உள்பாகங்களுக்கு ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் (Intelligent Designer) தேவைப்படுவது போன்றே சிக்கல் நிறைந்த ஒரு முழுமையான உயிரமைப்பு பிரபஞ்சம். இவற்றுக்கு ஒரு கடவுள் நிச்சயம் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

டார்வினின் சமகாலத்தில் வாழ்ந்த ஸ்காட்லாந்தைச் சார்ந்த டேவிட் ஹியூம் _ பேலீயின் வாதத்திற்குப் பதிலடியாக, மனிதனைப் படைத்த உயர்ந்த வடிவமைப்பாளர் கடவுள் என்றால், அவரைப் படைத்த வடிவமைப்பாளர் யார்? என்ற கேள்வி முடிவுறாது போய்க் கொண்டேயிருக்கும் என்றுரைத்தார்.

டார்வினின் காலத்துக்குப் பின்னாலும் இந்தத் தத்துவப் போர் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது!

கடவுள் படைப்புத் தத்துவத்துக்கு ஆதரவாக டார்வினின் கொள்கையை மறுப்பவர்கள் இன்றும் மிகப் பெரும்பான்மையாகவே இருக்கிறார்கள்!

1989இல் வெளிவந்த “Of Pandas and People” என்ற நூலில் மைக்கேல் பெஹெ என்ற அறிவியலாளர் தன் யூக முடிவாக குறைக்கப்பட முடியாத சிக்கல்களைக் (Irreducible complexities)  கொண்ட உயிரினங்களையும் அவற்றின் உறுப்புகளையும் ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் – அதாவது கடவுள்தான் படைத்திருக்க முடியும். டார்வின் கண்டுபிடித்த பரிணாம வளர்ச்சி முறையில் உருவாகியிருக்க முடியாது என்று அறிவித்தார்.

எது எப்படியிருந்தாலும் _ விஞ்ஞான உலகத்தில் _ குறிப்பாக உயிரியலில் மகத்தான சாதனையாகவும் _ பெரும் புரட்சியாகவும் விளங்கும் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு நவீன விஞ்ஞானத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது! ஆனால் உலகத்திலுள்ள கடவுள் படைப்பு வாதத்தின் தீவிர ஆதரவாளர்கள், ஆளும் வர்க்க அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் இன்றளவிலும் டார்வினின் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு நில்லாமல் _ அந்த அறிவியல் தத்துவத்தையே குழிதோண்டிப் புதைக்க எத்தனிக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்!

அண்மையில் 2005இல் இது சம்பந்தமாக ஒரு வழக்கு அமெரிக்காவில் நடைபெற்றது! டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை பள்ளிப் பாடங்களிலிருந்து நீக்கப்பட்டு _ மதவாத அடிப்படையிலான (Human Intelligent Design) “ அறிவார்ந்த கடவுள் படைப்பு என்ற கோட்பாடே பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த வழக்கு! அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்கூட, மதவாதிகளுக்கு ஆதரவாகத்தான் அணி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!

அந்த வழக்கின் முடிவில் நீதிபதி, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுதான் விஞ்ஞானப்பூர்வமானது _ அதைப் பாடத்தில் இருந்து நீக்க முடியாது! என்று தீர்ப்பளித்தார் என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி!

டார்வினின் மனைவி எம்மா டார்வின் கிறித்தவ மதத்தில் ஊறிப்போனவர்! திருமணத்திற்குப் பிறகு கணவன்_மனைவி இருவரும் கருத்து வேறுபாடுகளைப் பரிமாற்றம் செய்தே வாழ்க்கை நடத்தினர்! ஆனால், காலப்போக்கில் தமக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களாலும் _ அறிவியல் உண்மைகளின் தாக்கத்தாலும், சார்லஸ் டார்வின் கடவுள் நம்பிக்கையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டார்.

நீண்ட காலம் கணவனோடு நல்லதொரு இல்லறம் நடத்திய எம்மா டார்வின் அவரிடமே சொன்னது இது! _ நீங்கள் நியாய உணர்வுடன் செயல்படுகிறீர்கள்! உண்மையை அறியவும் _ உலகுக்கு அறிவிக்கவும் அக்கறையுடன் ஆர்வம் கொண்டு இருக்கிறீர்கள்! அதற்காக சதாசர்வகாலமும் முயற்சிக்கிறீர்கள்! காரணம், நீங்கள் நேர்மையானவர் _ தவறாக எதையும் செய்ய மாட்டீர்கள்!

தனது கண்டுபிடிப்புகளை யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலாக வெளியிட்ட டார்வினின் நேர்மையும் _ அவர் மனித குலத்துக்கு அர்ப்பணித்த பரிணாம வளர்ச்சித் தத்துவமும் என்றும் வாழும்!

(9.2.2014 – சார்லஸ் டார்வினின் 205ஆவது பிறந்த நாள்.)