வியாழன், 30 மே, 2019

நம்ப முடிகிறதா? ஆனாலும்... செயற்கை இறைச்சிவிவசாயம் குறைகிறது, தண்ணீர் பற்றாக்குறை என்றெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இனி உணவு உற்பத்தி இல்லாமல் மனித குலம் எப்படி வாழும் என்றும் போராடிக் கொண்டிருக்கிறோம். மிகவும் தீவிரமான இந்த பிரச்சினையை விஞ்ஞானம் வேறு ஒரு கோணத்தில் அணுகுகிறது.

மனிதனுக்கு உணவு வேண்டும் அவ்வளவுதானே? விளைநிலங்களில்தான் உணவு உற்பத்தியாக வேண்டுமா? ஆய்வுக்கூடங்களிலும் அதே சத்தூட்டங்கள் கொண்ட உணவை தயார் செய்துவிட முடியாதா? என்ற கேள்விகளோடு ஆராய்ச்சி யாளர்கள் வெகுவேகமாக முன்னேறி கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே நாம் சாப்பிட்டுக் கொண்டி ருக்கும் கணிசமான உணவுகள் ஆய்வகங் களில் வடிவமைக்கப்பட்டு, தொழிற்சாலை களில் தயாராகி வருபவைதான். பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள், சத்து மாத்திரைகள், துரித உணவுகள் என பல்வேறு உணவுகள் இயற்கையாக உருகாதவைதான். இன்னும் சொல்லப் போனால் காய்கறிகள், பழங்களைக் கூட மரபணு மாற்றம் செய்து தங்கள் விருப்பத்துக் கேற்றவாறு விளைவிக்க முடிகிறது.

எனவே, இனி எல்லாமே சாத்தியம்தான். எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டதுதான் என்று நம்பிக்கையோடு களம் இறங்கியிருக் கிறார்கள். இந்த ஆராய்ச்சியில் இரண்டு முக்கியமான மைல் கல்களையும் அடைந் திருக்கிறார்கள். சுவையும், சத்தும் மிக்க இறைச்சியை ஆய்வகங்களில் உற்பத்தி செய்யும் முயற்சி வெற்றி அடைந்திருக் கிறது. அதேபோல், அரிசியை ஆய்வகத்தில் தயார் செய்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம் பெற்று வைத்திருக்கிறது.

இதயநோய் நிபுணரும், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனில் தலைமைப் பொறுப்பில் உள்ளவருமான விஜய வாடாவைச் சார்ந்த இந்தியரான உமா வேலட்டி தன்னுடைய ஆய்வகத்தில் விலங்குகளின் ஸ்டெம் செல்லில் இருந்து சுத்தமான மாமிசத்தை உருவாக்கியுள்ளார். சுற்றுச்சூழலைப் பாதிக்காத மற்றும் மிருகவதையிலிருந்து விலங்குகளை பாதுகாக்கும் இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

விலங்கின் ஸ்டெம் செல்லில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த மாமிசம் 100 சதவீதம் சுத்தமானது என்பதால் தன்னுடைய இந்த ஆய்வை மற்ற உணவுப் பொருட்களிலும் தொடரப் போவதாகவும், எதிர்காலத்தில் உணவு மேஜையில் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட உணவுப்பொருட்களே இருக்கும் என்றும் வேலட்டி உறுதி அளிக்கிறார். அவருடைய கிளன் மீட் டெக்னாலஜி மூலம் உருவாகும் மாமிச தயாரிப்பு நிறுவனமான மெம்பிஸ் இப்போது அமெரிக்காவில் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது.

இறைச்சி ஒவ்வாமை, முட்டை வெள்ளை புரதம் ஒவ்வாமை, வேர்க்கடலை ஒவ்வாமை ஆகியவற்றால் உணவு சகிப்புத்தன்மை பிரச்சினை உடையவர்களுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பயன் அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- விடுதலை ஞாயிறு மலர் 25. 5 .2019

புதன், 29 மே, 2019

விண்கல்லில் தண்ணீர்ஜப்பானிய   விண்கலனான, 'ஹயபுசா' 2010ஆம் ஆண்டில், 'இடோகா' என்ற விண் கல்லின் மாதிரிகளை சேக ரித்து, பூமிக்கு அனுப்பியது. அந்த மாதிரிகளை ஆராய்ந்து, விண்கற்களில் ஏதாவது புதிய உலோகங்கள், தாதுக்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதும், பிர பஞ்சத்தில் கிரகங்கள் உரு வான விதம் குறித்து அறி வதும் தான், அந்த ஆய்வின் நோக்கம்.

ஆனால், இடோகா விண் கல் மாதிரிகளை ஆராய்ந்த, அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள்,  அந்த விண்கல்லில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டறிந்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளனர்.பூமியில் தண்ணீர் இருப்பதற்குக் காரணமே, பல கோடி ஆண்டுகளுக்கு முன், பல மைல் அகல முள்ள விண்கற்கள் தாக்கியதால் தான் என்று சொல்லும் விஞ்ஞானிகளும் உண்டு. இடோகாவில் இருப்ப தாக சொல்லப்படும் தண் ணீர் தடயம், அந்தக் கருத் துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

- விடுதலை நாளேடு 23 .5 .2019

நிலவு உருவானபோதுதான் பூமிக்கு நீர் கிடைத்தது ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வில் தகவல்பிராங்போர்ட், மே 23- நிலவு உருவானபோதுதான் பூமியின் உயிர் ஆதாரமான நீர் கிடைத் ததாக, ஜெர்மனி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவு கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, நேச்சர் அஸ்ட் ரானமி அறிவியல் இதழில் வெளியான, அந்த ஆய்வு குறித்த கட்டுரையில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:

அண்டவெளியில் இதுவரை அறியப்பட்ட கிரகங்களிலேயே பூமியில் மட்டும்தான் உயிரி னங்கள் இருக்கின்றன. பூமி யில் உயிரினங்கள் தோன்றிய தற்கு, இந்த கிரகத்தில் மிக அதிக அளவில் நீர் இருப்பது தான் முக்கியக் காரணம் ஆகும்.

சூரியக் குடும்பத்தில் சூரி யனுக்கு பக்கத்தில் இருக்கும் பிற கிரகங்களைப் போல் பூமியும் உலர்ந்த கிரகமாகவே இருந்திருக்க வேண்டும்.

எனினும், 440 கோடி ஆண் டுகளுக்கு முன்னர், செவ்வாய் கிரகத்தின் அளவு கொண்ட தெயியா என்ற பொருள் பூமி மீது மோதியதால்தான் பூமிக்கு நீர் கிடைத்ததாக ஜெர்மனியின் மன்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.

பூமியில் தெயியா மோதிய போது ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்றாகத்தான் நிலவு உருவா னது. மற்ற கிரகங்களுக்கு உள்ள நிலவுகளை விட தெயியா மோதலால் ஏற்பட்ட பூமியின் நிலவு பெரிய அளவில் இருந்த தால், அது பூமியின் சுழற்சியை உறுதிப்படுத்தி வருகிறது.

இதுவரை, நிலவு உருவாக் கத்துக்குக் காரணமான தெயியா பொருள், சூரியனுக்கு அருகி லிருந்து வந்தது என்று கருதப் பட்டது.

எனினும், மன்ஸ்டர் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சூரிய னுக்கு அப்பால் உள்ள, நீர் நிறைந்த கோள்கள் கொண்ட பகுதியிலிருந்து வந்த பொரு ளாக இருக்கும் என்று கண்ட றியப்பட்டுள்ளது.

இதன் மூலம், பூமிக்கு அதிக  அளவு நீர் கிடைப்பதற் குக் காரணமாக, நிலவை உரு வாக்கிய தெயியா விளங்கியது.

அந்த வகையில், பூமிக்கு நிலவுதான் உயிரூட்டியதாகக் கூற முடியும் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- விடுதலை நாளேடு 23. 5 .2019

செவ்வாய், 21 மே, 2019

கண்டுபிடிப்புகள்: கருந்துளை கண்டறிந்து சாதனை


உலக விஞ்ஞானிகள் இணைந்து உற்சாகமும் குதூகலிப்புடன் உலகின் அய்ந்து இடங்களில் ஒரே நேரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்த்தி 26,000 ஒளியாண்டு தொலைவில் உள்ள சஜிடேரியஸ் A* மற்றும் 6 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள M87 எனும் கேலக்சியின் மீ ராட்சத கருந்துளை ஆகியவற்றை புகைப்படம் எடுத்து சாதனை படைத்துள்ளோம் என அறிவித்துள்ளார். இதுவே கருந்துளைகளின் முதல் முதல் புகைப்படம்.

கருந்துளை என்றால் என்ன?

பூமியின் தரைப்பரப்பிலிருந்து ஒரு பொருளை சுமார் நொடிக்கு 11.2 கி.மீ என்ற வேகத்தில் எறிந்தால் அந்தப் பொருள் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி வெளியேறிவிடும். இதுவே பூமியின் விடுபடு வேகம். பூமியைவிட பருத்த வியாழன் கோளில் இது 59.5 km/sec. குறிப்பிட்ட திணிவு கொண்ட பொருளில் விடுபடு வேகம் ஒளியின் வேகத்தைவிட மிஞ்சும் என ஜான் மிச்சல் (John Mitchell) எனும் ஆங்கிலேயே அறிஞர் 1783இல் நியூட்டன் இயற்பியலைக் கொண்டு கணிதம் செய்தார். இதுவே கருந்துளைகளின் துவக்க ஆய்வு. அதன் பின்னர் பிரெஞ்சு அறிவியல் அறிஞர் பியர் சிமோன் லாப்பிளாஸ் (Pierre-Simon Laplace) ஆறு கிலோமீட்டர் விட்ட பந்து அளவில் சூரியனின் மொத்த நிறையையும் அடைந்துவிட்டால் ஏற்றப்படும் ஈர்ப்பு புலத்தில் ஒளிகூட வெளியே வர முடியாது என்று கணிதம் செய்தார்.

எனினும் இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தக் கருத்து தீவிர ஆய்வுக்கு உட்பட்டது. ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவத்தின் தொடர்ச்சியாக கார்ல் சுவார்ட்ஷில்ட் (Karl Schwarzschild) 1916இல் கருந்துளைகள் என்கிற வினோத வான்பொருள் ஏற்படலாமென யூகம் செய்தார். அவரைத் தொடர்ந்து 1958இல் டேவிட் ஃபிங்கல்ஸ்டீன் (David Finkelstein) என்பார் கருந்துளைக்குள் என்ன சென்றாலும் திரும்ப வராது என்று நிறுவினார்.

1967இல் ஜான் வீலர் (John Wheeler) எனும் இயற்பியலாளர் கருந்துளை (blackhole) என்ற பெயரை பிரபலப்படுத்த அதுவே நிலைத்துவிட்டது. எனினும் சாமானியர்களும் கருந்துளைகள் குறித்து கேள்விப்படவைத்த பெருமை கருந்துளை நாயகன் ஸ்டீபன் ஹாகிங்கைதான் சாரும்.

கருந்துளையை படம் எடுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதும் அல்ல. ஏதாவது ஒரு பொருளைக் காண வேண்டும் என்றால் இரண்டு சவால்களை சந்திக்க வேண்டும். ஒன்று அந்தப் பொருளிலிருந்து காட்சி படும் அளவு கணிசமான ஒளி நம்மை வந்து அடைய வேண்டும். இரண்டாவது அந்தப் பொருள் வெளிப்படுத்தும் மங்கலான ஒளியைக் கண்டு காட்சி பிம்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பிரிதிறன் கொண்ட நுட்ப தொலைநோக்கி வேண்டும்.

கருந்துளை ஒளியை உமிழாது என்பது மட்டுமல்ல. ஒளி உட்பட எல்லாவற்றையும் பிரதிபலிக்காது உறிஞ்சிக் கொண்டுவிடும் தன்மை கொண்ட கருந்துளையை பார்ப்பது எப்படி, படம் பிடிப்பது எப்படி? உள்ளபடியே கருந்துளையின் நிழலைத்தான் படம் பிடித்துள்ளார்கள். கருந்துளையை சுற்றி செறிவான திணிவு கொண்ட பகுதி இருந்தால், அந்தப் பொருள்கள் விளக்கைச் சுற்றி ஈசல்கள் சுழல்வது போல சுழலும். அவ்வாறு சுழன்றுகொண்டே அந்தப் பொருள் கருந்துளையின் உள்ளே விழும்போது  வெப்பநிலையை அடைந்து அவை ரேடியோ அலைகளை உமிழும். இந்த ஒளியைக் காண முடியும். இந்த ஒளியில் கருந்துளையின் கருமையான மையத்தைச் சுற்றி பிறை வடிவில் ஒளிக்கீற்று தான்படும். பின்புல ஒளியில் இந்த மங்கலான ஒளிக்கீற்றை இனம் காணுவது மிகப்பெரிய சவால்.

அதனால் சிறிய எட்டு டெலஸ்கோப்களை வைத்து ஒரு பெரிய டெலஸ்கோப்பை ஒத்த செயல்திறனை விஞ்ஞானிகள் உருவாக்கினர். ஆனால், இதற்கு பெரிய கம்ப்யூட்டர்களின் துறையும் 200 சர்வதேச விஞ்ஞானிகளின் உழைப்பும், கிட்டத்தட்ட ரூ.300 கோடியும் செலவாகி உள்ளது. இதன்மூலம் கிடைத்த படம்தான் நாம் இங்கே பார்ப்பது.

- உண்மை இதழ், 1-15.5.19

வியாழன், 9 மே, 2019

6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததற்கான ஆதாரங்கள்குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டு களுக்கு முன்பு, பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்த தற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது பூமியை தாக்கிய குறுங்கோளால் அழிவுற்ற மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிமங்கள் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, குறுங்கோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்த விவரங்கள் பிஎன்ஏஎஸ் என் னும் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப் பட்டுள்ளது.

வடக்கு டக்கோட்டா மாகாணத்திலுள்ள டேனிஸ் என்ற பகுதியில், மில்லியன் கணக் கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குறுங் கோள் தாக்கிய பின்னர் சுமார் சில நிமிடங்கள் முதல் ஒருசில மணிநேரங்களில் அப்பகுதியில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் குறித்த புரிதல் களை இந்த புதைபடிமங்கள் வழங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 12 கிலோ மீட்டர் அகலம் கொண்ட அந்த குறுங்கோள் தற்போதைய மெக்சிகோ வளைகுடா பகுதியில் விழுந்தபோது சிதறிய பாறைகள் வானத்தை நோக்கி அனைத்து திசைகளிலும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு விழுந்தன.

அப்போது, மீண்டும் பூமியின் நிலப் பரப்பில் வந்து விழுந்த பாகங்கள் டேனிஸ் பகுதியில் ஏற்படுத்திய சேதங்களை முதலாக கொண்டே இந்த தகவல்கள் வெளி வந்துள்ளன.

தற்போது இந்த கண்டுபிடிப்புக்கு வழி கோலியுள்ள மீன்களின் செவுள்களின் பூமியில் விழுந்த குப்பைகளில் ஒட்டி இருந்த தாக தெரியவந்துள்ளது. மேலும், அப்போது அந்த பகுதியில் இருந்த மரப் பிசின்களில் பூமியின் மீது மோதிய குறுங்கோளின் துகள்கள் ஒட்டியுள்ளன.

அதுமட்டுமின்றி, அங்கு கிடைத்துள்ள துகள்களின் காலத்தை, மெக்சிகோவின் கடல் பரப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய தாக்கத்தோடு தொடர்புடைய காலத்துடன் ஆராய்ச்சியா ளர்கள் ஒப்பிடுகின்றனர்.

இந்த நிகழ்வு ஏற் பட்டதாக கணிக்கப் பட்டுள்ள 65.76 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான், உலகம் முழுவதும் இதை யொத்த சம்பவங்கள் நடை பெற்றுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக் கின்றன.

டேனிஸ் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள புதைபடிமங் களை பார்க்கும்போது, குறுங் கோள் மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அந்த பகுதியை மிகப் பெரிய அளவில் தண்ணீர் சூழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர்.

இதில் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க தகவல் என்ன வென்றால், முதலில் மெக்சி கோ வளைகுடா பகுதியை தாக்கிய இந்த குறுங்கோளால் அங்கு ஏற்பட்ட சுனாமியால் உருவான அலைகள், பல மணிநேரங்கள் சுமார் 3,000 கிலோ மீட்டர்கள் பயணித்து வடக்கு டக்கோட்டாவை அடைந்திருக்க வேண்டும்.

இருப்பினும், மெக்சிகோ வளைகுடா பகுதியில் குறுங்கோள் விழுந்தபோது அதை மய்யமாக கொண்டு ஏற்பட்ட 10 அல்லது 11 அளவுள்ள நிலநடுக்கத்தினால், டேனிஷ் உள்ளிட்ட சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதற்கு முன்னதாகவே, அருகி லுள்ள பகுதிகளிலிருந்து நீரின் இடமாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

“நீரின் இடப்பெயர்வின்போது மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகள், மரங்கள், முற்றிலும் அழிந்துபோன கடல்வாழ் உயிரின மான அம்மோனைட்டுகள் உள்ளிட்ட பல் வேறு உயிரிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அடித்து செல்லப்பட்டன” என்று கூறுகிறார் இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள டீபால்மா.

“குறுங்கோள் தாக்கிய இடத்திலிருந்து புதைபடிமங்கள் கிடைத்துள்ள இடத்தை சுனாமி அலைகள் அடைவதற்கு குறைந்தது 17 மணிநேரங்கள் ஆகியிருக்கும். ஆனால், அதிர்வு அலைகள் மற்றும் தொடர் எழுச்சிகள் (புயலாலோ, நில நடுக்கத்தாலோ நீர் நிலையில் திடீர் என்று ஏற்படும் அசைவு) சம்பவ இடத்தை அடைவதற்கு பத்து நிமிடங் களே எடுத்துக்கொண்டிருக்கக் கூடும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

பிஎன்ஏஎஸ் சஞ்சிகையின் பதிப்பில் இடம்பெற்றுள்ள இந்த இதுகுறித்த கட்டு ரையை டைனோசர்களின் அழிவை குறிக்கும் வரலாற்றை ஆவணப்படுவதில் பெரும் பங்காற்றிய லூயிஸ் அல்வாரெசின் மகனும், கலிஃபோர்னியாவை சேர்ந்த அகழ்வாராய்ச்சி யாளருமான வால்டர் அல்வாரெஸ் ஆகி யோரும் அடக்கம்.

- விடுதலை நாளேடு, 9.5.19

சனி, 4 மே, 2019

கடலில் இரண்டு லட்சம் வகை வைரஸ்கள் உள்ளதாம்!உலகம் முழுவதும் கடல் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த வைரஸ்கள் உள்ளது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த வைரஸ்கள் கடலின் உள்ளே சுமார் 4,000 மீட்டர்கள் ஆழத்தில் வட துருவம் முதல் தென் துருவம் வரை உள்ள பகுதிகளில் காணப்படுவதாக அந்த ஆராய்ச்சி முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை மனிதர் களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், இவை திமிங்கலம், இரால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளுக்கு பிரச் சினைகளை ஏற்படுத்தக் கூடும்.

பல அதிசயங்கள் நிறைந்த கடல்வாழ் உயிரிகளின் வாழ்க்கையில் இந்த வைரஸ் களின் பங்கு குறித்த ஆய்வுகளை இப்போது தான் ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட கடல் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீரின் மாதிரிகளை அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததன் ஊடாகவே இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதில் குறிப்பாக, மொத்தமுள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வைரஸ்களை அவற்றின் இடம் மற்றும் ஆழத்தை பொறுத்து அய்ந்தே குழுக்களில் வகைப்படுத்த முடி வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

“அய்ந்து வகைப்பாடுகளிலுள்ள வைரஸ் களின் மரபணுக்களை நாங்கள் பரிசோதித்த போது, அவை தாங்கள் வாழும் பகுதிக்கேற்ப தகவமைத்து கொள்ளும் திறனை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது,” என்று அந்த ஆராய்ச்சிக் குழுவை சேர்ந்த ஒருவரான ஆன் கிரிகோரி கூறுகிறார்.

அதேபோன்று, ஆர்டிக் பெருங்கடலில் பெறப்பட்ட தண்ணீர் மாதிரியில் பல்வேறு வகையான வைரஸ்கள் இருந்தது தங்களை ஆச்சர்யப்படுத்தியதாகவும், மேலதிக சோதனையில் அந்த குறிப்பிட்ட கடல் பகுதி வேறுபட்ட வைரஸ்களை பிரிக்கும் இடமாக விளங்குவது தெரியவந்ததாக ஆராய்ச்சியா ளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

வைரஸ்கள் கடலில் என்ன செய்கின்றன?


உலகம் முழுவதும் சூழ்ந்துள்ள கடல்களில் வைரஸ்கள் நிறைந்துள்ளன. அவை கடல் உயிரிகளின் ஆரோக்கியத்தையும், செயல் பாட்டையும் எப்படி பாதிக்கிறது என்பது குறித்த ஆய்வின் விளிம்பு நிலையிலே ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட சில வகை வைரஸ்கள் கடலில் மிகுந்து காணப்படும் பாசிகளின் பெருக்கத்தை தடை செய்கின்றன என்று விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.

ஒரு லிட்டர் கடல் நீரில் கிட்டதட்ட பல பில்லியன் கணக்கான வைரஸ்கள் காணப் படுகின்றன; அவற்றில் பெரும்பாலானவை இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. தற் போது வெளிவந்துள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட வைரஸ்களில் 90%, இதுவரை உரு வாக்கப்பட்டுள்ள குழுக்களில் ஒன்றில்கூட வகைப்படுத்த முடியவில்லை.

கடல் வைரஸ்கள் கடலிலுள்ள மற்ற நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் பூஞ்சை உள்ளிட்டவற்றின் மீது செல்வாக்கு செலுத்து வதால் அவை குறித்து அறிந்துகொள்ள அவசியமானதாக கருதப்படுகிறது.

வளிமண்டலத்தில் இருந்து கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்ஸைடு) உறிஞ்சி, நாம் சுவாசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மிதவை வாழிகள் (பிளாங்டன்கள்) உள்ளிட்ட கடல் வாழ் உயிரிகளின் வாழ்க்கையில் வைரஸ்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

“நுண்ணுயிரிகள் இல்லை என்றால் இந்த உலகம், அதிலுள்ள கடல்கள், மனிதர்களின் என அனைத்தின் செயல்பாடும் நின்றுவிடும். அப்பேற்பட்ட நுண்ணுயிரிகளை இந்த வைரஸ்கள் எப்படி பாதிக்கின்றன என்று நாங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்“ என்று ஒஹாயோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மாத்யூ சல்லிவன் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சி குறித்த தகவல்கள் ‘செல்’ என்னும் சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.

- விடுதலை நாளேடு, 2.5.19

புதன், 1 மே, 2019

ஒளியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியுமா?

இந்தப் பேரண்டத்திலேயே, மிகவும் வேகமாக பயணிக்கும் ஆற்றல் ஒளிக்குத் தான் உண்டு. அந்த ஒளியின் வேகத்தை கட்டுப்படுத்தவும், இன்னும் வேகப்படுத்தவும், ஏன், அதை பின்னோக்கிப் பயணிக்கவும் செய்ய முடியுமா?
முடியும் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள மத்திய புளோரிடா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். ‘ஸ்பாசியல் லைட் மாடுலேட்டர்’ என்ற, எளிய கருவியின் ஊடாக ஒளியை செலுத்தி, அந்தரத்திலேயே அந்த ஒளிக்கதிரை இயல்பு வேகத்தை விட பாதியாகக் குறைக்கவும், 30 மடங்கு வேகமாக பயணிக்கவும், வந்த ஒளியை அதே பாதையில் திரும்பச் செல்ல வைக்கவும் முடிந்ததாக, பரிசோதனையில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த, 2006ல் விஞ்ஞானிகள் ஒளி இழைகளுக்கு நடுவே பாயும் ஒளியை, இது போல கட்டுப்படுத்த முடியும் என்று காட்டியுள்ளனர்.
ஆனால், புளோரிடா விஞ்ஞானிகள் திறந்த வெளியில் இதை சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது,
அதிவேக தகவல் தொடர்பு துறை உட்பட, பல இயற்பியல் சார்ந்த துறைகளில் இந்த கண்டுபிடிப்பு பயன்படும்.
- விடுதலை நாளேடு,25.4.19

காற்று மாசுகளை தின்னும் பாக்டீரியா!

பலவித ஆலைக் கழிவுகள், இயற்கைக் கழிவு களிலிருந்து கசியும் மீத்தேன், காற்று மண்டலத்தில் கலந்து திரண்டு, பூமியிலிருந்து வெளியேறும் வெப்பத்தை தடுத்து நிறுத்துகிறது.
இதனால் புவி வெப்பமாதல் அதிகரிக்கிறது.
வளி மண்டல மீத்தேனை அப்படியே கபளீகரம் செய்யும் ஒரு பேக்டீரியாவை அய்ரோப்பிய விஞ்ஞானிகள் அண்மையில் அடையாளம் கண்டுள் ளனர்.
காற்றை உண்டு, காற்றிலேயே வாழும், ‘மெதை லோகேப்சா கோர்கோனா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பேக்டீரியாக்கள், மீத்தேன், நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் ஆகியவற்றை உட்கொண்டு உயிர்வாழ்கின்றன.
இந்த புதுவித பேக்டீரியாவை வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆய்வகத்திலேயே வைத்து வளர்க்கும் உத்தியையும் கண்டறிந்துள்ள னர்.
புவி வெப்பமாதலுக்கு காரணமான மாசுகளை உணவாக உட்கொள்ளும் இதுபோன்ற வேறு நுண்ணுயிரிகள் உள்ளனவா என்பதையும் வியன்னா விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
சில ஆண்டுகளில் அவற்றை ஏராளமான அளவில் காற்றில் கலந்துவிட்டு, மாசுபாட்டை வேகமாகக் குறைக்க முடியும் என, அந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- விடுதலை நாளேடு, 25.4.19