சனி, 4 மே, 2019

கடலில் இரண்டு லட்சம் வகை வைரஸ்கள் உள்ளதாம்!உலகம் முழுவதும் கடல் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த வைரஸ்கள் உள்ளது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த வைரஸ்கள் கடலின் உள்ளே சுமார் 4,000 மீட்டர்கள் ஆழத்தில் வட துருவம் முதல் தென் துருவம் வரை உள்ள பகுதிகளில் காணப்படுவதாக அந்த ஆராய்ச்சி முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை மனிதர் களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், இவை திமிங்கலம், இரால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளுக்கு பிரச் சினைகளை ஏற்படுத்தக் கூடும்.

பல அதிசயங்கள் நிறைந்த கடல்வாழ் உயிரிகளின் வாழ்க்கையில் இந்த வைரஸ் களின் பங்கு குறித்த ஆய்வுகளை இப்போது தான் ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட கடல் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீரின் மாதிரிகளை அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததன் ஊடாகவே இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதில் குறிப்பாக, மொத்தமுள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வைரஸ்களை அவற்றின் இடம் மற்றும் ஆழத்தை பொறுத்து அய்ந்தே குழுக்களில் வகைப்படுத்த முடி வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

“அய்ந்து வகைப்பாடுகளிலுள்ள வைரஸ் களின் மரபணுக்களை நாங்கள் பரிசோதித்த போது, அவை தாங்கள் வாழும் பகுதிக்கேற்ப தகவமைத்து கொள்ளும் திறனை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது,” என்று அந்த ஆராய்ச்சிக் குழுவை சேர்ந்த ஒருவரான ஆன் கிரிகோரி கூறுகிறார்.

அதேபோன்று, ஆர்டிக் பெருங்கடலில் பெறப்பட்ட தண்ணீர் மாதிரியில் பல்வேறு வகையான வைரஸ்கள் இருந்தது தங்களை ஆச்சர்யப்படுத்தியதாகவும், மேலதிக சோதனையில் அந்த குறிப்பிட்ட கடல் பகுதி வேறுபட்ட வைரஸ்களை பிரிக்கும் இடமாக விளங்குவது தெரியவந்ததாக ஆராய்ச்சியா ளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

வைரஸ்கள் கடலில் என்ன செய்கின்றன?


உலகம் முழுவதும் சூழ்ந்துள்ள கடல்களில் வைரஸ்கள் நிறைந்துள்ளன. அவை கடல் உயிரிகளின் ஆரோக்கியத்தையும், செயல் பாட்டையும் எப்படி பாதிக்கிறது என்பது குறித்த ஆய்வின் விளிம்பு நிலையிலே ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட சில வகை வைரஸ்கள் கடலில் மிகுந்து காணப்படும் பாசிகளின் பெருக்கத்தை தடை செய்கின்றன என்று விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.

ஒரு லிட்டர் கடல் நீரில் கிட்டதட்ட பல பில்லியன் கணக்கான வைரஸ்கள் காணப் படுகின்றன; அவற்றில் பெரும்பாலானவை இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. தற் போது வெளிவந்துள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட வைரஸ்களில் 90%, இதுவரை உரு வாக்கப்பட்டுள்ள குழுக்களில் ஒன்றில்கூட வகைப்படுத்த முடியவில்லை.

கடல் வைரஸ்கள் கடலிலுள்ள மற்ற நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் பூஞ்சை உள்ளிட்டவற்றின் மீது செல்வாக்கு செலுத்து வதால் அவை குறித்து அறிந்துகொள்ள அவசியமானதாக கருதப்படுகிறது.

வளிமண்டலத்தில் இருந்து கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்ஸைடு) உறிஞ்சி, நாம் சுவாசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மிதவை வாழிகள் (பிளாங்டன்கள்) உள்ளிட்ட கடல் வாழ் உயிரிகளின் வாழ்க்கையில் வைரஸ்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

“நுண்ணுயிரிகள் இல்லை என்றால் இந்த உலகம், அதிலுள்ள கடல்கள், மனிதர்களின் என அனைத்தின் செயல்பாடும் நின்றுவிடும். அப்பேற்பட்ட நுண்ணுயிரிகளை இந்த வைரஸ்கள் எப்படி பாதிக்கின்றன என்று நாங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்“ என்று ஒஹாயோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மாத்யூ சல்லிவன் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சி குறித்த தகவல்கள் ‘செல்’ என்னும் சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.

- விடுதலை நாளேடு, 2.5.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக