வியாழன், 30 மே, 2019

நம்ப முடிகிறதா? ஆனாலும்... செயற்கை இறைச்சி



விவசாயம் குறைகிறது, தண்ணீர் பற்றாக்குறை என்றெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இனி உணவு உற்பத்தி இல்லாமல் மனித குலம் எப்படி வாழும் என்றும் போராடிக் கொண்டிருக்கிறோம். மிகவும் தீவிரமான இந்த பிரச்சினையை விஞ்ஞானம் வேறு ஒரு கோணத்தில் அணுகுகிறது.

மனிதனுக்கு உணவு வேண்டும் அவ்வளவுதானே? விளைநிலங்களில்தான் உணவு உற்பத்தியாக வேண்டுமா? ஆய்வுக்கூடங்களிலும் அதே சத்தூட்டங்கள் கொண்ட உணவை தயார் செய்துவிட முடியாதா? என்ற கேள்விகளோடு ஆராய்ச்சி யாளர்கள் வெகுவேகமாக முன்னேறி கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே நாம் சாப்பிட்டுக் கொண்டி ருக்கும் கணிசமான உணவுகள் ஆய்வகங் களில் வடிவமைக்கப்பட்டு, தொழிற்சாலை களில் தயாராகி வருபவைதான். பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள், சத்து மாத்திரைகள், துரித உணவுகள் என பல்வேறு உணவுகள் இயற்கையாக உருகாதவைதான். இன்னும் சொல்லப் போனால் காய்கறிகள், பழங்களைக் கூட மரபணு மாற்றம் செய்து தங்கள் விருப்பத்துக் கேற்றவாறு விளைவிக்க முடிகிறது.

எனவே, இனி எல்லாமே சாத்தியம்தான். எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டதுதான் என்று நம்பிக்கையோடு களம் இறங்கியிருக் கிறார்கள். இந்த ஆராய்ச்சியில் இரண்டு முக்கியமான மைல் கல்களையும் அடைந் திருக்கிறார்கள். சுவையும், சத்தும் மிக்க இறைச்சியை ஆய்வகங்களில் உற்பத்தி செய்யும் முயற்சி வெற்றி அடைந்திருக் கிறது. அதேபோல், அரிசியை ஆய்வகத்தில் தயார் செய்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம் பெற்று வைத்திருக்கிறது.

இதயநோய் நிபுணரும், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனில் தலைமைப் பொறுப்பில் உள்ளவருமான விஜய வாடாவைச் சார்ந்த இந்தியரான உமா வேலட்டி தன்னுடைய ஆய்வகத்தில் விலங்குகளின் ஸ்டெம் செல்லில் இருந்து சுத்தமான மாமிசத்தை உருவாக்கியுள்ளார். சுற்றுச்சூழலைப் பாதிக்காத மற்றும் மிருகவதையிலிருந்து விலங்குகளை பாதுகாக்கும் இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

விலங்கின் ஸ்டெம் செல்லில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த மாமிசம் 100 சதவீதம் சுத்தமானது என்பதால் தன்னுடைய இந்த ஆய்வை மற்ற உணவுப் பொருட்களிலும் தொடரப் போவதாகவும், எதிர்காலத்தில் உணவு மேஜையில் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட உணவுப்பொருட்களே இருக்கும் என்றும் வேலட்டி உறுதி அளிக்கிறார். அவருடைய கிளன் மீட் டெக்னாலஜி மூலம் உருவாகும் மாமிச தயாரிப்பு நிறுவனமான மெம்பிஸ் இப்போது அமெரிக்காவில் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது.

இறைச்சி ஒவ்வாமை, முட்டை வெள்ளை புரதம் ஒவ்வாமை, வேர்க்கடலை ஒவ்வாமை ஆகியவற்றால் உணவு சகிப்புத்தன்மை பிரச்சினை உடையவர்களுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பயன் அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- விடுதலை ஞாயிறு மலர் 25. 5 .2019

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக