கருந்துளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருந்துளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 நவம்பர், 2019

புதிய கருந்துளை கண்டுபிடிப்பு

சூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட திலேயே இது தான் மிகச்சிறியது எனத் தெரிவித்துள்ளனர். உருவில் பெரிய நட்சத்திரமானது தனது ஆற்றலை இழந்து உருக்குலைந்து வெடித்துச் சிதறும் போது அதீத ஈர்ப்பு விசையைக் கொண்ட கருந்துளையாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேவேளையில் வெடித்துச் சிதறும் போது நியூட்ரான் நட்சத்திரங்களாவதாகவும் அவர்கள் குறிப்பிடு கின்றனர். ஆனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரிய னுடன் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு மட்டுமே அளவில் பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரியனுடன் ஒப்பிடுகையில் 4000 கோடி மடங்கு பெரியது தொடங்கி குறைந்தது 5 முதல் 15 மடங்கு பெரிய கருந்து களைகளை இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், சூரியனை விட 3.3 மடங்கு மட்டுமே அளவில் பெரிய கருந்துளையை ஓகியோ மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன் சூரியனை விட 3.8 மடங்கு பெரிய கருந்துளை கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

நியூட்ரான் நட்சத்திரத்திற்கு இவ்வளவு பெரிய நிறை இல்லாத போது, இந்த சிறிய கருந்துளை உண்டானது எப்படி என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்வியானது நட்சத்திரங்களின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய மறுவரையறைக்கு வழிவகுத் திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

- விடுதலை நாளேடு 14 11 19

செவ்வாய், 21 மே, 2019

கண்டுபிடிப்புகள்: கருந்துளை கண்டறிந்து சாதனை


உலக விஞ்ஞானிகள் இணைந்து உற்சாகமும் குதூகலிப்புடன் உலகின் அய்ந்து இடங்களில் ஒரே நேரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்த்தி 26,000 ஒளியாண்டு தொலைவில் உள்ள சஜிடேரியஸ் A* மற்றும் 6 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள M87 எனும் கேலக்சியின் மீ ராட்சத கருந்துளை ஆகியவற்றை புகைப்படம் எடுத்து சாதனை படைத்துள்ளோம் என அறிவித்துள்ளார். இதுவே கருந்துளைகளின் முதல் முதல் புகைப்படம்.

கருந்துளை என்றால் என்ன?

பூமியின் தரைப்பரப்பிலிருந்து ஒரு பொருளை சுமார் நொடிக்கு 11.2 கி.மீ என்ற வேகத்தில் எறிந்தால் அந்தப் பொருள் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி வெளியேறிவிடும். இதுவே பூமியின் விடுபடு வேகம். பூமியைவிட பருத்த வியாழன் கோளில் இது 59.5 km/sec. குறிப்பிட்ட திணிவு கொண்ட பொருளில் விடுபடு வேகம் ஒளியின் வேகத்தைவிட மிஞ்சும் என ஜான் மிச்சல் (John Mitchell) எனும் ஆங்கிலேயே அறிஞர் 1783இல் நியூட்டன் இயற்பியலைக் கொண்டு கணிதம் செய்தார். இதுவே கருந்துளைகளின் துவக்க ஆய்வு. அதன் பின்னர் பிரெஞ்சு அறிவியல் அறிஞர் பியர் சிமோன் லாப்பிளாஸ் (Pierre-Simon Laplace) ஆறு கிலோமீட்டர் விட்ட பந்து அளவில் சூரியனின் மொத்த நிறையையும் அடைந்துவிட்டால் ஏற்றப்படும் ஈர்ப்பு புலத்தில் ஒளிகூட வெளியே வர முடியாது என்று கணிதம் செய்தார்.

எனினும் இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தக் கருத்து தீவிர ஆய்வுக்கு உட்பட்டது. ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவத்தின் தொடர்ச்சியாக கார்ல் சுவார்ட்ஷில்ட் (Karl Schwarzschild) 1916இல் கருந்துளைகள் என்கிற வினோத வான்பொருள் ஏற்படலாமென யூகம் செய்தார். அவரைத் தொடர்ந்து 1958இல் டேவிட் ஃபிங்கல்ஸ்டீன் (David Finkelstein) என்பார் கருந்துளைக்குள் என்ன சென்றாலும் திரும்ப வராது என்று நிறுவினார்.

1967இல் ஜான் வீலர் (John Wheeler) எனும் இயற்பியலாளர் கருந்துளை (blackhole) என்ற பெயரை பிரபலப்படுத்த அதுவே நிலைத்துவிட்டது. எனினும் சாமானியர்களும் கருந்துளைகள் குறித்து கேள்விப்படவைத்த பெருமை கருந்துளை நாயகன் ஸ்டீபன் ஹாகிங்கைதான் சாரும்.

கருந்துளையை படம் எடுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதும் அல்ல. ஏதாவது ஒரு பொருளைக் காண வேண்டும் என்றால் இரண்டு சவால்களை சந்திக்க வேண்டும். ஒன்று அந்தப் பொருளிலிருந்து காட்சி படும் அளவு கணிசமான ஒளி நம்மை வந்து அடைய வேண்டும். இரண்டாவது அந்தப் பொருள் வெளிப்படுத்தும் மங்கலான ஒளியைக் கண்டு காட்சி பிம்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பிரிதிறன் கொண்ட நுட்ப தொலைநோக்கி வேண்டும்.

கருந்துளை ஒளியை உமிழாது என்பது மட்டுமல்ல. ஒளி உட்பட எல்லாவற்றையும் பிரதிபலிக்காது உறிஞ்சிக் கொண்டுவிடும் தன்மை கொண்ட கருந்துளையை பார்ப்பது எப்படி, படம் பிடிப்பது எப்படி? உள்ளபடியே கருந்துளையின் நிழலைத்தான் படம் பிடித்துள்ளார்கள். கருந்துளையை சுற்றி செறிவான திணிவு கொண்ட பகுதி இருந்தால், அந்தப் பொருள்கள் விளக்கைச் சுற்றி ஈசல்கள் சுழல்வது போல சுழலும். அவ்வாறு சுழன்றுகொண்டே அந்தப் பொருள் கருந்துளையின் உள்ளே விழும்போது  வெப்பநிலையை அடைந்து அவை ரேடியோ அலைகளை உமிழும். இந்த ஒளியைக் காண முடியும். இந்த ஒளியில் கருந்துளையின் கருமையான மையத்தைச் சுற்றி பிறை வடிவில் ஒளிக்கீற்று தான்படும். பின்புல ஒளியில் இந்த மங்கலான ஒளிக்கீற்றை இனம் காணுவது மிகப்பெரிய சவால்.

அதனால் சிறிய எட்டு டெலஸ்கோப்களை வைத்து ஒரு பெரிய டெலஸ்கோப்பை ஒத்த செயல்திறனை விஞ்ஞானிகள் உருவாக்கினர். ஆனால், இதற்கு பெரிய கம்ப்யூட்டர்களின் துறையும் 200 சர்வதேச விஞ்ஞானிகளின் உழைப்பும், கிட்டத்தட்ட ரூ.300 கோடியும் செலவாகி உள்ளது. இதன்மூலம் கிடைத்த படம்தான் நாம் இங்கே பார்ப்பது.

- உண்மை இதழ், 1-15.5.19

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

கருந்துளை: கண்டுபிடிப்பும், படிப்பினைகளும்...!

* மயில்சாமி அண்ணாதுரை (துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்யம்)




பூமி, செவ்வாய், புதன், வியாழன் உள்பட கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவது நாம் தெரிந்ததே.

சூரியனின் ஈர்ப்பு விசை. தற்போது ஒரு நிமிடம் கண்களை மூடி மேலே உயரே சென்று சூரிய மண்ட லத்தையும், அதன் கிரகங்களையும் மனதில் நினை யுங்கள். பூமி, செவ்வாய், புதன் சுற்றும்போது சூரியனை உங்களால் பார்க்க முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் சூரியனின் விசை இல்லாமல் அவை சுற்ற முடியாது. அதாவது நாம் சூரியனைப் பார்க்க முடியாவிட்டாலும் பூமி, செவ்வாய் எல்லாம் சுற்றும். இதற்கு சுற்று வட்டத்தின் மய்யம் கொடுக்கும் ஈர்ப்பு விசை இருக்கும் இடத்தில் இருப்பது ஆகும்.

சூரியன்தான் மற்ற கிரகங்கள் பயணத்தின் காரணி. ஆயினும் நம்மால் சூரியனை பார்க்க முடிவதன் காரணம் அதன் ஒளி நம் பூமிக்கு வருவதால்தான்.

ஆனால் அண்டத்தில் பல இடங்களில் பூமி, செவ்வாய் போன்றவை சுற்றி வரும்போது அவற்றின் மய்யத்தில் சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை மனிதனால் காண முடியாத நிலை இருந்தது. அதற்கு காரணம் மிக அதிகமான விசை உள்ள ஒரு பெரிய நட்சத்திரம் அதன் ஒளியைக் கூட வெளிவிடாதது காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்து அவற்றின் இருப்பை உணர்ந்து, அதை பார்க்க முடியாததால் அதற்கு கருந்துளை என்று பெயரிட்டனர். அதை இன்று வரை யாரும் காணவில்லை. தனது ஈர்ப்பு எல்லைக்குள் வரும் ஒளியைக் கூட வெளியேற விடாமல் தன்னகத்தே வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட இந்த கருந்துளைகள் அதன் அருகில் இருக்கும் நட்சத்திரங்களை கூட ஈர்த்து விழுங்கக்கூடியவை.

பெரிய நட்சத்திரங்களில் அதிகமான ஈர்ப்பு சக்தி இருக்கும்போது அதன் எடை அப்படியே இருக்கும். ஆனால் அதன் அளவு சுருங்கி கொண்டே போகும். அதனால் அதன் அடர்த்தி மிக, மிக அதிகமாகி கொண்டே போகும்.

பூமியில் நாம் ஒரு பொருளை சூரிய ஒளியின் பிரதிபலிப்பை வைத்துதான் பார்க்கிறோம். இரவில் நிலவு, மின்சார ஒளியின் உதவியால் அந்த பொருள் என்னவென்று பார்க்கிறோம். அதைப் போல தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களை சூரிய ஒளி இல்லாத இரவுகளில் அவை அனுப்பும் ஒளிக்கற்றைகளை வைத்து பார்க்க முடிகிறது.

அண்ட வெளியில் நட்சத்திர மண்டலத்தில் சூரிய ஒளிபோல் நட்சத்திர ஒளி இருந்தாலும் அவற்றையும் கருந்துளைகள் ஈர்த்துக்கொள்கின்றன. கருந்துளையில் அது உற்பத்தி செய்யக்கூடிய ஒளியைப் பார்க்க முடியாது. அதன் ஒளியை அதே ஈர்த்துக்கொள்கிறது.

வெளியில் இருந்து எந்த ஒளி வந்தாலும் அதை ஈர்த்துக்கொள்கிறது. நட்சத்திரங்கள் போல் எந்த பொருள் வந்தாலும் ஈர்த்துக்கொள்கிறது மற்றும் அதை நாம் பார்க்க முடியாது. எல்லாவற்றையும் ஈர்த்துக் கொள் வதால் அதை கருந்துளை என்கிறோம்.

அண்டத்தில் இருக்கும் பூமி, நிலவு உள்பட எல்லா நட்சத்திரங்களுக்கும் அதற்கான சுழற்சி இருந்து கொண்டு இருக்கிறது. சுழற்சி மற்றும் ஈர்ப்பு விசையில் இருக்கும் அண்டவெளியில் அதிகமான கதிர் வீச்சுகளும் உள்ளன. அது கருந்துளைக்கு அருகில் செல்லும்போது அவை ஈர்க்கப்படுகிறது.

இரவு நேரத்தில் விண்கற்கள் கீழே எரிந்து விழுவதை பார்த்து இருக்கிறோம். அவை பூமியால் ஈர்க்கப்பட்டு வரும்போது பூமியில் ஏற்படும் உராய்வினால் ஏற்படும் வெப்பமே இதற்கு காரணம்.

இதேபோன்று கருந்துளையை சுற்றியுள்ள இடங் களில் இருந்து கருந்துளையை நோக்கி ஈர்க்கப்படும் பல கதிர் இயக்க ஒளிக்கற்றைகள் மிகவும் லேசாக இருந் தாலும் கூட அதிகபட்சமான ஈர்ப்பு விசை இருப்பதால் கருந்துளைக்கு அருகில் செல்லும் போது வளிமண்டலத் தில் உராய்வு ஏற்படுகிற மாதிரி ஈர்ப்பு விசைக்குள் அவை உராய்ந்து உள்ளே சென்று விடுகிறது.

இத்தகைய கருந்துளைகளின் இருப்பு பற்றிய தகவல் களை பல ஆண்டுகளுக்கு முன்னே விஞ்ஞானிகள் கணித்து வந்தாலும் அதை படம் பிடிக்க முடியவில்லை. இப்போதுதான் முதல் முறையாக கருந்துளையை பார்க்க முடியாவிட்டாலும் அதை சுற்றி நிகழும் மேற்கண்ட நிகழ்வுகளை பார்க்க முடிகிறது. இந்த நிகழ்வுகளை பற்றிய அடுத்தகட்ட புரிதல்களும், கருந்துளையில் நடக் கக்கூடிய நிகழ்வுகளையும் நாம் புரிந்து கொள்ளும் போது இந்த பேரண்டத்தின் ஆதியை புரிந்துகொள் வதற்கான வழிமுறை ஏற்படும்.

நாம் வாழும் பால் வெளியில் இன்னொரு கருந்துளை இருந்தாலும் அதை இதுவரை நம்மால் பார்க்க முடிய வில்லை. அது நாம் தற்போது பார்க்கக்கூடிய கருந் துளையை விட அளவில் சிறியதாக இருப்பதால் அதை சுற்றியுள்ள இயற்கை நிகழ்வுகளின் வீரியம் குறைவாக இருக்கும்.

கருந்துளையை படம் எடுப்பது எளிதான காரியம் அல்ல. பல சவால்களை சந்திக்க வேண்டும். கருந் துளையை படம் பிடிக்க வேண்டும் என்றால் அந்த பொருளில் இருந்து காட்சி படும் அளவு கணிசமான ஒளி இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த பொருள் வெளிப்படுத்தும் மங்கலான ஒளியை கண்டு காட்சி பிம்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நவீன திறன் கொண்ட தொலைநோக்கி வேண்டும். கருந்துளை ஒளியை உமிழாது அதுமட்டுமின்றி அதன் மீது ஒளியை பாய்ச்சினாலும் பிரதிபலிக்காது. உறிஞ்சி கொண்டு விடும்.

தற்போது விஞ்ஞானிகள் படம் எடுத்துள்ள எம்:87 என்ற கருந்துளையை படம் பிடிக்க சற்றேறக்குறைய பூமியின் விட்டத்தில் ஒரு பெரிய தொலைநோக்கி இருந்தால் மட்டுமே முடியும். ஆனால் அப்படி ஒன்று தற்போது சாத்தியமில்லை.

இந்த குறையை நிவர்த்தி செய்ய கடந்த பத்து ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பேசி வந்த இரு வழி முறைகளை ஒருங்கே சேர்த்து பன்னாட்டு விஞ்ஞானிகள் கண்ட ஒரு தொலைநோக்கி தான் ஈவன்ட் தொலைநோக்கி என்ற அமைப்பு. இதில் பூமியில் அமெரிக்கா, அய்ரோப்பா, அண்டார்டிகா, ஆசியா ஆகிய கண்டங்களில் உள்ள எட்டு தொலைநோக்கிகள், ஒவ்வொன்றும் 10 மீட்டருக்கும் மேல் விட்டமுள்ளவை. அவை அனைத்தையும் ஒன்றாக இணைந்து ஒரே நேரத்தில் படம் எடுத்து பின் சேர்ப்பது என்பது ஒருமுறை. மற்றொன்று இதே முறையில் கிட்டத்தட்ட 10 நாட்கள் எடுக்கும்போது அண்டத்தில் இருந்து பார்க் கும்போது பூமியின் சுழற்சியில் ஒவ்வொரு தொலை நோக்கியும் வேறு, வேறு இடம் நோக்கி நகர்கிறது.

இந்த நகர்வுகள் எல்லாமே சேர்ந்து பூமியின் விட் டத்தை ஒத்த ஒரு தொலைநோக்கி போன்ற ஒரு செயல் முறை நிகழ்கிறது. அதனால் சிறிய எட்டு தொலை நோக்கிகளை வைத்து ஒரு பெரிய தொலைநோக்கி ஒத்த செயல்திறனை விஞ்ஞானிகள் உருவாக்கினர். ஆனால் இதற்கு பெரிய கணினிகளின் துறையும் 200 பன்னாட்டு விஞ்ஞானிகளின் உழைப்பும், கிட்டத்தட்ட ரூ.300 கோடியும் செலவாகி உள்ளது. இதன் மூலம் கிடைத்த படம்தான் நாம் இங்கே பார்ப்பது.

இருந்தாலும் இன்னும் செயல்திறன் அதிகமாக இருக்கக்கூடிய தொலைநோக்கிகளையும், செயற்கை கோள்களையும் வைத்து பிற்காலத்தில் இதை விரிவாக ஆராயக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

நமக்கு அருகில் உள்ள கருந்துளையை பார்க்க இன்னும் அதிகம் செலவாகும். அதற்கு செலவு செய்ய லாமா? வேண்டாமா? என்பதற்கும் நமது பால்வழியில் இருக்கக்கூடிய கருந்துளை பற்றி ஆராய்வதற்கும் அதனால் நமக்கும், நமது சூரிய மண்டலத்துக்கும் பாதிப்பு எதுவும் இருக்கிறதா? என்பதை பார்ப்பதற்கும் இந்த ஆராய்ச்சி முடிவு முன்னோடியாக இருக்கும்.

நமது செயற்கை கோள்களை விண்ணில் ஏவும்போது பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் கிரகங்களில் ஈர்ப்பு விசையை சரியாக புரிந்து, கணித்து, வடிவமைத்து அனுப்புகிறோம். சந்திரயான், மங்கல்யான் போன்ற செயற்கை கோள்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்.

இப்படிப்பட்ட கருந்துளைகளால் அதற்கு அருகில் உள்ள நட்சத்திர கூட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்பு களையும் ஆராய்வதற்கு இந்த கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் முன்னோடியாக அமையும். இந்த கண்டுபிடிப்பால் தற்போதைக்கு பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

நன்றி: தினத்தந்தி, 15.4.2019

- விடுதலை நாளேடு, 18.4.19

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

கருந்துளையை முதல் முறையாக படமெடுத்து விஞ்ஞானிகள் சாதனை



அரிசோனா, ஏப். 11- அண்ட வெளியில் காணப்படும் கருந்துளையை முதல் முறையாகப் படமெடுத்து, விண்வெளி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

அண்டவெளியில், மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசையைக் கொண்ட பகுதிகளை 18-ஆம் நூற்றாண்டே கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அவற்றை கருப்பு நட்சத்திரம் என்று அழைத்து வந்தனர்.

அந்த கோளவடிமான ஈர்ப்பு எல்லைக்குள் செல்லும் விண் துகள்கள், ஒளி போன்ற மின்காந்த கதிர்வீச்சுகள் கூட, ஊடுருவி வெளியேற முடியாத அளவுக்கு அவற்றின் ஈர்ப்பு சக்தி மிக வீரிய மாக இருந்ததால், அவற்றின் உருவம் எத்தகைய தொலைநோக்கிகள் மூலமும் பார்க்க முடியாது; எல்லைக்குள் என்ன நடக்கிறது என்பதை எந்த வித கருவியைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியாது.

எனினும், அவற்றின் ஈர்ப்பு சக்தி காரணமாக எல்லைக்கு அப்பால் நிகழும் நிகழ்வுகளைக் கொண்டு, அவற்றின் இருப்பிடம் குறித்து அறிந்து கொள்ள முடியும். உதாரணத்துக்கு, குறிப்பிட்ட பகுதியை விண்மீன்கள் சுற்றி வந்தால், அந்தப் பகுதியில் அதீத சக்தி வாய்ந்த ஈர்ப்புவிசைப் பகுதி இருப்பதைக் கண்டறியலாம்.

எனினும், அவற்றைப் பார்க்க முடியாது என்பதால் அதற்கு கருந்துளை என்று விஞ்ஞானிகள் பெயரிட்டு அழைத்தனர்.

இதுவரை கருந்துளை குறித்த கற்பனைப் படங்களே வரை யப்பட்டு வந்த நிலையில், பெரும் முயற்சிக்குப் பிறகு அண்ட வெளியில் உள்ள மேசியர்-87 என்ற பால்வெளி மண்டலத்தில் உள்ள எம்87 என்றழைக்கப்படும் கருந்துளையை விஞ்ஞானிகள் முதல்முறையாக படம் பிடித்துள்ளனர்.

பூமியிலிருந்து 5 கோடி ஒளிவருட தொலைவில் உள்ள அந்தக் கருந்துளையைப் படம் பிடிக்கும் அளவுக்கு மிகப் பெரிய தொலை நோக்கியை உருவாக்க முடியாது என்பதால், அமெரிக்காவின் கவாய், அரிசோனா பகுதிகளிலும், ஸ்பெயின், மெக்சிகோ, சிலி உள்ளிட்ட நாடுகளிலும் உள்ள தொலைநோக்கிகளின் மூலம் பல நாள்களாக கவனித்து எடுக்கப்பட்ட படங்களை ஒருங்கிணைந்து, எம்87 கருந்துளையின் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அதையடுத்து, இதுவரை கற்பனையில் மட்டுமே வரையப்பட்டு வந்த கருந்துளை, உண்மையில் எப்படி இருக்கும் என்பதை முதல் முறையாகப் பார்க்க முடிந்துள்ளது. விண்வெளி ஆய்வில் இந்த சாதனை ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

- விடுதலை நாளேடு, 11.4.19

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

கருந்துளை’ பற்றிய அய்ன்ஸ்டீனின் கணக்கு சரி!



அன்றே சொன்னார் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன். அது இன்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. கருந்துளை எனப்படும் காலாவதியான நட்சத்திரம், தன்னைச் சுற்றியுள்ள எதையும் கபளீகரம் செய்யுமளவுக்கு, அசாதாரணமான ஈர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கும் என்பது அய்ன்ஸ்டீனின் கணிப்புகளுள் ஒன்று.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளிகற்றைகளைக் கூட கருந்துளை ஈர்த்துக் கொள்ளும் என்றார் அவர்.

அண்மையில், நமது பால் வீதியின் மத்தியில் உள்ள ‘சாஜிட் டாரியஸ்- - ஏ’ என்ற கருந்துளை அதைச் செய்து காட்டியிருப்பதாக அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு மய்யத்தின் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்திஉள்ளனர்.

சாஜிட்டாரியஸ் - ஏ கருந்துளையை சில நட்சத்திரக் கூட்டங்கள் அதிவேகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்றான, ‘எஸ் 2’ என்ற நட்சத்திரம் சாஜிட்டாரியஸ் - ஏவை ஒருமுறை வலம் வர, 15 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.

கடந்த மே, 19 அன்று எஸ் 2 நட்சத்திரம் கருந்துளைக்கு அருகா மையில் கடந்து போனது.

அப்போது அது வெளிவிடும் ஒளியை கருந்துளை அப்படியே ஈர்த்துக் கொண்டதை அய்ரோப்பிய விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் கண்டுள்ளனர். இதனால் அய்ன்ஸ்டீனின் கருந்துளை பற்றிய முக்கியமான கணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 23.8.18