வெள்ளி, 19 ஏப்ரல், 2019

கருந்துளை: கண்டுபிடிப்பும், படிப்பினைகளும்...!

* மயில்சாமி அண்ணாதுரை (துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்யம்)
பூமி, செவ்வாய், புதன், வியாழன் உள்பட கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவது நாம் தெரிந்ததே.

சூரியனின் ஈர்ப்பு விசை. தற்போது ஒரு நிமிடம் கண்களை மூடி மேலே உயரே சென்று சூரிய மண்ட லத்தையும், அதன் கிரகங்களையும் மனதில் நினை யுங்கள். பூமி, செவ்வாய், புதன் சுற்றும்போது சூரியனை உங்களால் பார்க்க முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் சூரியனின் விசை இல்லாமல் அவை சுற்ற முடியாது. அதாவது நாம் சூரியனைப் பார்க்க முடியாவிட்டாலும் பூமி, செவ்வாய் எல்லாம் சுற்றும். இதற்கு சுற்று வட்டத்தின் மய்யம் கொடுக்கும் ஈர்ப்பு விசை இருக்கும் இடத்தில் இருப்பது ஆகும்.

சூரியன்தான் மற்ற கிரகங்கள் பயணத்தின் காரணி. ஆயினும் நம்மால் சூரியனை பார்க்க முடிவதன் காரணம் அதன் ஒளி நம் பூமிக்கு வருவதால்தான்.

ஆனால் அண்டத்தில் பல இடங்களில் பூமி, செவ்வாய் போன்றவை சுற்றி வரும்போது அவற்றின் மய்யத்தில் சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை மனிதனால் காண முடியாத நிலை இருந்தது. அதற்கு காரணம் மிக அதிகமான விசை உள்ள ஒரு பெரிய நட்சத்திரம் அதன் ஒளியைக் கூட வெளிவிடாதது காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்து அவற்றின் இருப்பை உணர்ந்து, அதை பார்க்க முடியாததால் அதற்கு கருந்துளை என்று பெயரிட்டனர். அதை இன்று வரை யாரும் காணவில்லை. தனது ஈர்ப்பு எல்லைக்குள் வரும் ஒளியைக் கூட வெளியேற விடாமல் தன்னகத்தே வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட இந்த கருந்துளைகள் அதன் அருகில் இருக்கும் நட்சத்திரங்களை கூட ஈர்த்து விழுங்கக்கூடியவை.

பெரிய நட்சத்திரங்களில் அதிகமான ஈர்ப்பு சக்தி இருக்கும்போது அதன் எடை அப்படியே இருக்கும். ஆனால் அதன் அளவு சுருங்கி கொண்டே போகும். அதனால் அதன் அடர்த்தி மிக, மிக அதிகமாகி கொண்டே போகும்.

பூமியில் நாம் ஒரு பொருளை சூரிய ஒளியின் பிரதிபலிப்பை வைத்துதான் பார்க்கிறோம். இரவில் நிலவு, மின்சார ஒளியின் உதவியால் அந்த பொருள் என்னவென்று பார்க்கிறோம். அதைப் போல தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களை சூரிய ஒளி இல்லாத இரவுகளில் அவை அனுப்பும் ஒளிக்கற்றைகளை வைத்து பார்க்க முடிகிறது.

அண்ட வெளியில் நட்சத்திர மண்டலத்தில் சூரிய ஒளிபோல் நட்சத்திர ஒளி இருந்தாலும் அவற்றையும் கருந்துளைகள் ஈர்த்துக்கொள்கின்றன. கருந்துளையில் அது உற்பத்தி செய்யக்கூடிய ஒளியைப் பார்க்க முடியாது. அதன் ஒளியை அதே ஈர்த்துக்கொள்கிறது.

வெளியில் இருந்து எந்த ஒளி வந்தாலும் அதை ஈர்த்துக்கொள்கிறது. நட்சத்திரங்கள் போல் எந்த பொருள் வந்தாலும் ஈர்த்துக்கொள்கிறது மற்றும் அதை நாம் பார்க்க முடியாது. எல்லாவற்றையும் ஈர்த்துக் கொள் வதால் அதை கருந்துளை என்கிறோம்.

அண்டத்தில் இருக்கும் பூமி, நிலவு உள்பட எல்லா நட்சத்திரங்களுக்கும் அதற்கான சுழற்சி இருந்து கொண்டு இருக்கிறது. சுழற்சி மற்றும் ஈர்ப்பு விசையில் இருக்கும் அண்டவெளியில் அதிகமான கதிர் வீச்சுகளும் உள்ளன. அது கருந்துளைக்கு அருகில் செல்லும்போது அவை ஈர்க்கப்படுகிறது.

இரவு நேரத்தில் விண்கற்கள் கீழே எரிந்து விழுவதை பார்த்து இருக்கிறோம். அவை பூமியால் ஈர்க்கப்பட்டு வரும்போது பூமியில் ஏற்படும் உராய்வினால் ஏற்படும் வெப்பமே இதற்கு காரணம்.

இதேபோன்று கருந்துளையை சுற்றியுள்ள இடங் களில் இருந்து கருந்துளையை நோக்கி ஈர்க்கப்படும் பல கதிர் இயக்க ஒளிக்கற்றைகள் மிகவும் லேசாக இருந் தாலும் கூட அதிகபட்சமான ஈர்ப்பு விசை இருப்பதால் கருந்துளைக்கு அருகில் செல்லும் போது வளிமண்டலத் தில் உராய்வு ஏற்படுகிற மாதிரி ஈர்ப்பு விசைக்குள் அவை உராய்ந்து உள்ளே சென்று விடுகிறது.

இத்தகைய கருந்துளைகளின் இருப்பு பற்றிய தகவல் களை பல ஆண்டுகளுக்கு முன்னே விஞ்ஞானிகள் கணித்து வந்தாலும் அதை படம் பிடிக்க முடியவில்லை. இப்போதுதான் முதல் முறையாக கருந்துளையை பார்க்க முடியாவிட்டாலும் அதை சுற்றி நிகழும் மேற்கண்ட நிகழ்வுகளை பார்க்க முடிகிறது. இந்த நிகழ்வுகளை பற்றிய அடுத்தகட்ட புரிதல்களும், கருந்துளையில் நடக் கக்கூடிய நிகழ்வுகளையும் நாம் புரிந்து கொள்ளும் போது இந்த பேரண்டத்தின் ஆதியை புரிந்துகொள் வதற்கான வழிமுறை ஏற்படும்.

நாம் வாழும் பால் வெளியில் இன்னொரு கருந்துளை இருந்தாலும் அதை இதுவரை நம்மால் பார்க்க முடிய வில்லை. அது நாம் தற்போது பார்க்கக்கூடிய கருந் துளையை விட அளவில் சிறியதாக இருப்பதால் அதை சுற்றியுள்ள இயற்கை நிகழ்வுகளின் வீரியம் குறைவாக இருக்கும்.

கருந்துளையை படம் எடுப்பது எளிதான காரியம் அல்ல. பல சவால்களை சந்திக்க வேண்டும். கருந் துளையை படம் பிடிக்க வேண்டும் என்றால் அந்த பொருளில் இருந்து காட்சி படும் அளவு கணிசமான ஒளி இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த பொருள் வெளிப்படுத்தும் மங்கலான ஒளியை கண்டு காட்சி பிம்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நவீன திறன் கொண்ட தொலைநோக்கி வேண்டும். கருந்துளை ஒளியை உமிழாது அதுமட்டுமின்றி அதன் மீது ஒளியை பாய்ச்சினாலும் பிரதிபலிக்காது. உறிஞ்சி கொண்டு விடும்.

தற்போது விஞ்ஞானிகள் படம் எடுத்துள்ள எம்:87 என்ற கருந்துளையை படம் பிடிக்க சற்றேறக்குறைய பூமியின் விட்டத்தில் ஒரு பெரிய தொலைநோக்கி இருந்தால் மட்டுமே முடியும். ஆனால் அப்படி ஒன்று தற்போது சாத்தியமில்லை.

இந்த குறையை நிவர்த்தி செய்ய கடந்த பத்து ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பேசி வந்த இரு வழி முறைகளை ஒருங்கே சேர்த்து பன்னாட்டு விஞ்ஞானிகள் கண்ட ஒரு தொலைநோக்கி தான் ஈவன்ட் தொலைநோக்கி என்ற அமைப்பு. இதில் பூமியில் அமெரிக்கா, அய்ரோப்பா, அண்டார்டிகா, ஆசியா ஆகிய கண்டங்களில் உள்ள எட்டு தொலைநோக்கிகள், ஒவ்வொன்றும் 10 மீட்டருக்கும் மேல் விட்டமுள்ளவை. அவை அனைத்தையும் ஒன்றாக இணைந்து ஒரே நேரத்தில் படம் எடுத்து பின் சேர்ப்பது என்பது ஒருமுறை. மற்றொன்று இதே முறையில் கிட்டத்தட்ட 10 நாட்கள் எடுக்கும்போது அண்டத்தில் இருந்து பார்க் கும்போது பூமியின் சுழற்சியில் ஒவ்வொரு தொலை நோக்கியும் வேறு, வேறு இடம் நோக்கி நகர்கிறது.

இந்த நகர்வுகள் எல்லாமே சேர்ந்து பூமியின் விட் டத்தை ஒத்த ஒரு தொலைநோக்கி போன்ற ஒரு செயல் முறை நிகழ்கிறது. அதனால் சிறிய எட்டு தொலை நோக்கிகளை வைத்து ஒரு பெரிய தொலைநோக்கி ஒத்த செயல்திறனை விஞ்ஞானிகள் உருவாக்கினர். ஆனால் இதற்கு பெரிய கணினிகளின் துறையும் 200 பன்னாட்டு விஞ்ஞானிகளின் உழைப்பும், கிட்டத்தட்ட ரூ.300 கோடியும் செலவாகி உள்ளது. இதன் மூலம் கிடைத்த படம்தான் நாம் இங்கே பார்ப்பது.

இருந்தாலும் இன்னும் செயல்திறன் அதிகமாக இருக்கக்கூடிய தொலைநோக்கிகளையும், செயற்கை கோள்களையும் வைத்து பிற்காலத்தில் இதை விரிவாக ஆராயக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

நமக்கு அருகில் உள்ள கருந்துளையை பார்க்க இன்னும் அதிகம் செலவாகும். அதற்கு செலவு செய்ய லாமா? வேண்டாமா? என்பதற்கும் நமது பால்வழியில் இருக்கக்கூடிய கருந்துளை பற்றி ஆராய்வதற்கும் அதனால் நமக்கும், நமது சூரிய மண்டலத்துக்கும் பாதிப்பு எதுவும் இருக்கிறதா? என்பதை பார்ப்பதற்கும் இந்த ஆராய்ச்சி முடிவு முன்னோடியாக இருக்கும்.

நமது செயற்கை கோள்களை விண்ணில் ஏவும்போது பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் கிரகங்களில் ஈர்ப்பு விசையை சரியாக புரிந்து, கணித்து, வடிவமைத்து அனுப்புகிறோம். சந்திரயான், மங்கல்யான் போன்ற செயற்கை கோள்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்.

இப்படிப்பட்ட கருந்துளைகளால் அதற்கு அருகில் உள்ள நட்சத்திர கூட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்பு களையும் ஆராய்வதற்கு இந்த கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் முன்னோடியாக அமையும். இந்த கண்டுபிடிப்பால் தற்போதைக்கு பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

நன்றி: தினத்தந்தி, 15.4.2019

- விடுதலை நாளேடு, 18.4.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக