ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை!

அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்'

செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல்

இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று பாராட்டு


வல்லம், ஏப்.21 தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும் பொறியியல் மாணவியரால் இன்று (21.4.2019) முற்பகல் 11.42 மணிக்கு விண்ணில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப் பட்டது. கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்பதில் அய்யமில்லை.
ஆசியாவிலேயே மகளிர் சார்பில் முதலில் விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள் இதுதான் என்பது பெருமைக்கும், சிறப்பிற்கும் உரியதாகும். பெரியார் கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றே சொல்லவேண்டும்.
அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி இதற்கு மணியம்மையார் சாட்'' என்று பெயர் சூட்டப் பட்டது.
இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ' நிறுவனத்தின் மேனாள் திட்ட இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலை வருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அவருக்கு தேசிய மாணவர் படை (NCC)யின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
செயற்கைக்கோளின் சிறப்பம்சம்

மணியம்மையாரின் நூற் றாண்டில் அவரது நினைவைப் போற்றும் விதமாக “மணியம் மையார் சாட்'' எனும் பெயரில் ஏவப்பட்டதோடு, அதன்மீது மணியம்மையாரின் உருவப்படம் பொறிக்கப்பட் டிருந்தது.

மேலும் வேளாண்மையில் சிறந்தோங்கும் தஞ்சை மாவட் டத்திலிருந்து ஏவப்படுதவதால், மாணவிகள் அதில் விவசாயத்தை முன்னிறுத்தும் விதமான படங் களைச் சுற்றியும் இணைத்து வேளாண்மை தொழிலுக்குப் பெருமை சேர்த்தனர்.

காவிரி டெல்டா மாவட்டம் என்பதனை நினைவு கூறும் விதமாக, செயற்கைக்கோளின் மேற்கூரை பேம்பூ எனும் மூங்கில் குச்சிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது.

சரியாக 11.42 மணியளவில் மாணவிகளின் உற்சாகப் பெருக் கில், பார்வையாளர்களின் பலத்த கரவொலி, எழுச்சி, வாழ்த்து முழக்கத்துடன் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டதும், வான் நோக்கிப் பறந்திட, பல் கலைக் கழகமே உற்சாகப் பெருவெள்ளத்தில் திளைத்தது.

இந்த மகத்தான சாதனை நிகழ்வினை ஆசிய புக் ஆஃப் ரெக்கார்டு பதிவு செய்திட்டது, பல்கலைக் கழக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகத் திகழ்ந்தது.

பதிவாளர் வரவேற்புரை


பதிவாளர் பேராசிரியர் தனராஜ் வரவேற்புரை யாற்றினார். அவர் தனது உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
இந்த நாள் நமது கல்வி நிறுவனத்தின் பொன்னாள் - அதுவும் அன்னை மணியம்மையார்  நூற்றாண்டை யொட்டி அவர் பெயரால் இந்த செயற்கைக்கோள் (மணி யம்மையார் சாட்) ஏவப்பட்டு இருப்பது பொருத்தமான தாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ள சாதனையாளர் மயில் சாமி அண்ணாதுரை அவர்கள் 75-க்கும் மேற்பட்ட விருதுகளை அணிகலன்களாகப் பூண்டவர். அதே போல, இவ்விழாவில் பங்கேற்று பெருமை சேர்க்கும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் முதன்மைச் செயல் அதிகாரி டாக்டர் சிறீமதிகேசன், குந்தவை நாச்சியார் அரசினர் கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் எ.திரு வள்ளுவர், ஏசியா புக் ரெக்கார்டு பதிவாளர் எம்.ஆர்.ஹரீஷ், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஆர்.சித்தார்த்தன் ஆகிய பெருமக்கள் எல்லாம் பங்கேற்றது நிகழ்ச்சிக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும் என்று பதிவாளர் தன்ராஜ் தன் வரவேற்புரையில் கூறினார்.
பங்கேற்ற பெருமக்கள் அனைவருக்கும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் நினைவுப் பரிசுகள், புத்தகங்களை வழங்கி சிறப்பு செய்தார்.
விழாவிற்கு வருகை தந்த தஞ்சை ஏர்போர்ட் விமானப் படை குரூப் கமாண்டர் பிரஜ்வால் சிங் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
பாராட்டுக்குரிய மாணவிகள்

செயற்கைக்கோள் தயாரித்த மாணவியர்கள் குழு:

எஸ்.நிவேதா, பி.பிரணவி, எஸ்.ஜான்சி ராணி, ஆர்.சுபலட்சுமிதாஸ் - விண்வெளி பொறியியல் (Aerospace)

ஜி.அனுமந்திரா, வி.கனகப்பிரியா, வி.சத்யாசிறீ - எந்திரவியல் துறை.

எஸ்.சிவப்பிரியா, எஸ்.சுஷ்மா - மின்னணு தொடர் பியல் பொறியியல் ECE

கே.அபிநயா, டி.ஏ.அக்னேஷ் அர்ச்சனா, பி.எஸ்.மீனா லட்சுமி- கணினி அறிவியல் துறை

பி.ஜெயசிறீ, எம்.சங்கவி, இ.ஞானசுந்தரி - மின்னணு மின்னியல் துறை

துணைவேந்தர் உரை

துணைவேந்தர் பேராசிரியர் வேலுசாமி ஆற்றிய தலைமை உரையில்,
பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாகும். ஆசியாவிலேயே முதல் பெண் கல்லூரியாக தொடங்கிய இக் கல்லூரியில் முதல் முறையாக ஆசியாவிலேயே மாணவியர்களால்  இன்று இந்த செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. பெரியார் - மணியம்மை தொண்டுக்கு இது சான்றாகும். பொருத்தமான விருந்தினர் மயில்சாமி அண்ணாதுரை என்பதும் சிறப்பு.
பெரியார் - மணியம்மையாரின் கொள்கைகள் இன்று நடை முறைக்கு வருகின்றமைக்கு இது சான்றாகும். 100-க்கு 100 சதவிகிதம் வெற்றி பெற  மாணவர்கள் உழைக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும். இந்த செயற்கைக்கோள் வெற்றி பெறும். மாணவியர்களுள் 3 பேரை ரஷ்யா அனுப்பி பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யவும் கேட்டுக் கொண்டார்.  ரொபாட்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்திட தனி மய்யம் விரைவில் தொடங்க ஏற்பாடு செய்து கொண்டுள்ளோம். இதனை வளர்ச்சிக்கு என்று எடுத்துக் கொள்ளவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மகத்தான சாதனை!

இந்த செயற்கைக் கோளினை பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் பொறியியல் துறையில் கல்வி பயிலும் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த 15 மாணவியர்கள் கூட்டாகச் சேர்ந்து சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்று, கூட்டு முயற்சியுடன் தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டில் பெருமை சேர்க்கும் விதமாக "SKI NSLV 9 மணியம்மையார் சாட்''என அவர்கள் பெயர் சூட்டியுள்ளார்.

மாணவியர்களே தயாரித்த SKI NSLV 9  மணியம்மை யார் சாட் எனும் செயற்கைக்கோள் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திலிருந்து இன்று (21.4.2019) சரியாக 11.42 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோளானது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனுடன் 70 ஆயிரம் அடி வரை வான்வெளிக்குச் சென்று அங்குள்ள வெப்ப நிலை காரணமாக உருமாற்றம் பெற்று பாராசூட் உதவியுடன் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து 40 கி.மீ. சுற்று வட்டாரத்திற்குள் தரையிறங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த செயற்கைக்கோள் விண்ணை நோக்கி மேலே செல்லும்போதும், கீழே தரையிறங்கும் போதும் அதிலுள்ள கேமராவின் உதவியுடன் வான்வெளியிலுள்ள வளிமண்டலத்தின் வெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், அங்குள்ள வாயுக்களின் தன்மை நிலை குறித்தும் கண்டறியப்படவுள்ளது. இச்செயற்கைக்கோளானது சமிக்கைகள் மூலமாக முக்கியமான தகவல்களை ஆராய்ந்து தரக்கூடியது. மேலும் நேரடி டெலிமெட்ரியை அனுப்பும் செயற்கைக் கோளாகும். டெலிமெட்ரி மூலம் சமிக்கைகள் அட்சரேகை, உயரம், திசைவேகம், ஜி.பி.எஸ். மற்றும் வெப்ப நிலை கணக்கிட உதவும். இவை அனைத்தும் மைக்ரோ கண்ட்ரோலர் மூலமாகவும், ரேடியோ மூலமாகவும், தரவுகள் அனைத்தும் சேமிக்கப்பட்டு ஜி.பி.எஸ். மூலமாக கண்காணிக்கவும் உதவுகின்றன.

மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரை


மாணவியர் 15 பேர் தஞ்சையில் உள்ள பெரியார் பொறியியல் நிறுவனத்திலிருந்து இன்று செயற்கைக்கோள் ஏவப்படுவது பெருமை. வள்ளுவர் கூற்றுக்கேற்ப எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் என்பதும் பெரியாரின் கூற்றே! அதன்படிதான் செயற்கைக்கோள் இன்று வெற்றி பெற உள்ளது. 15 பேரில் 3 பேர் இல்லை; 15 பேரையும் ரஷ்யா தானாகவே அழைப்பார்கள். தமிழச்சியால், பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஆரம்பமாகும். இந்நிகழ்ச்சி அதுவும் மணியம்மையார் நூற்றாண்டில் அடுத்த கட்ட மைல்கல் ஆகும். கல்வி முறை தரம் நோக்கிச் செல்லவேண்டும். இதன் நிகழ்வுகளையும், விளக்கத்தையும் நோக்கும்போது பல்கலைக் கழகம் நல்ல வளர்ச்சிப் பாதை நோக்கி செல்கிறது. இன்றைய செயற்கைக்கோள் சில மணிநேரத்தில் திரும்பும். இதனைத் தொடர்ந்து, பள்ளி அதுவும் அரசு பள்ளி மாணவர்களும் செயற்கைக்கோள் குறித்து அறிந்துகொள்ள முயலவேண்டும்.
இதனை சரியாகப் பயன்படுத்தி, அடுத்த தலைமுறை மாணவர் களுக்கும் கொண்டு செல்வோம். இந்த முயற்சி கண்டிப்பாக ஆர்வத் தினைப் படைக்கும், சிந்தனையைத் தூண்டும். இது இன்னொரு வகையான படிப்பாகும். இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பல்கலைக் கழக நிர்வாகம், குறிப்பாக அன்புராஜ் அவர்களுக்கு எனது பாராட்டுகள். நீங்கள் ஒவ்வொருவரும் உயர்ந்த கல்வி, உயர்ந்த பணி உயர்ந்த இடத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன். இன்னும் சற்று நேரத்தில் ஏற்பாடுகள் முடிந்து, சாட்டிலைட் ஏவப்பட உள்ளது. வெற்றிக்கு எனது வாழ்த்துகள்! இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தமதுரையில் குறிப்பிட்டார். முடிவில், கல்விப்புல முதன்மையர் பேராசிரியர் சிறீவித்யா நன்றி கூறினார்.
-  விடுதலை நாளேடு, 21.4.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக