புதன், 17 ஏப்ரல், 2019

நிழலில்லா நாள்

நிழலில்லா நாள்’’ குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி: ஏப்.10-க்குள் பதிவு செய்யலாம்




சென்னை, ஏப்.8  வரும் 24-ஆம் தேதி ஏற்படும் “நிழலில்லா நாள்’ குறித்து பயிற்சி பெற விரும்பும் பள்ளி மாணவர்கள் வரும் 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும், கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும், இடையில் உள்ள நில உலக வெப்ப மண்டல பகுதியை சூரியன் கடக்கும் போது இரண்டு நாள்கள் மட்டும் மதிய வேளையில் நிழல் விழாத நிகழ்வு ஏற்படுகிறது. அப்போது சூரியன் நமது தலைக்கு நேர் உச்சியில் இருக்கும். இதனால் மதிய நேரத்தில் நாம் சூரிய ஒளியில் நின்றால் நமது நிழல் நமது பாதத்தின் கீழ் நேராக விழும். அதனால் நமது நிழலை நாம் பார்க்க முடியாது. இந்த நிழ்வுக்கு “நிழலில்லா நாள்’  என்று பெயர். மற்ற நாள்களில் நமது நிழல், நமது பின்புறம் அல்லது முன்புறம் விழுவதை நாம் பார்க்க முடியும். சென்னையில் இந்த நாள், ஏப்.24-ஆம் தேதி நிகழ்கிறது.

இந்த நாளில், சென்னையில் வசிப்போர் மதிய வேளையில் சூரியன் உச்சிக்கு வரும்போது நமது நிழலை நாம் பார்க்க முடியாது. அதற்குப் பிறகு சூரியன் மேற்கு நோக்கி நகரும்போது, நமது நிழலைப் பார்க்க முடியும்.

இதுபோன்ற நிகழ்வு ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் பூர்வமாகத் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யத்தின் சார்பில் சென்னை காந்தி மண்டபம் சாலையில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யத்தில் ஏப்.15-ஆம் தேதி ஒரு கருத்தரங்கம் மற்றும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை கருத்தரங்கம், பயிற்சி நடைபெறும். இதில் 7-ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். இது தொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர் 044-24410025 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யம் தகவல் தெரிவித்துள்ளது.

- விடுதலை நாளேடு, 9.4.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக