வியாழன், 30 ஜூன், 2016

செல்ல நாயின் திசுக்களில் இருந்து இரண்டு குட்டி நாய்கள்தங்களது செல்ல நாய் இறந்துவிட் டதால் அதே போல் நாயை உருவாக்க நினைத்த லண்டன் இணையரின் ஆசையை நிறைவேற்றிய கொரிய உயிர் அறிவியலாளர்கள்  நாயின் உடலில் இருந்து திசுவை எடுத்து அதே போல் தோற்றம் மற்றும் குணநலமுடைய இரண்டு குட்டி நாய்களை உருவாக்கிக் காட்டி சாதனை படைத்துள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த லாரா ஜாக்வின் ரிச்சர்ட் ரெமெடோ இவர்கள் நீண்ட காலமாக பாக்ஸர் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றைச் செல்லமாக வளர்த்து வந்தனர். இதற்கு டைலின் என்று பெயர் சூட்டினர் இந்த நாய் முதுமையின் காரணமாக விரைவில் இறந்து போகும் நிலை ஏறபட்டது. நாயின் பிரிவை தாங்களால் தாங்கமுடியாது என்ற நிலையில் தாங்கள் வளர்க்கும் நாயைப் போன்றே குளோனிங் (நாயின் திசுக்களில் புதிய உயிர் உருவாக்குதல்) முறையில் வேறொருநாயை உருவாக்க நினைத் தனர். இதனை அடுத்து பல்வேறு அறிவியல் ஆய்வாளர்களிடம் தங்களின் விருப்பத்தை கேட்டுக்கொண்டனர்.
கொரியாவைச் சேர்ந்த சோம் உயிர் ஆய்வியல் கழகம் இவர்களின் வேண்டு கோளை ஏற்று அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டது. இதனிடையே நாய் மரணிக்கும் முன்பாக அதன் உடலின் நாக்கு பாகத்தில் உள்ள திசுக்களை எடுத்துக் கொண்டது. திசுவை எடுத்த சில நாட்களில் முதுமையின் காரணமாக, டைலின் என்று பெயர்சூட்டப்பட்ட அந்த நாய் மரணமடைந்தது. இந்த நிலையில் கொரிய அறிவியலாளர்கள் டயலின் நாயின் திசுவை பெண் பாக்சர் இன நாயின் கருமுட்டையையும் இணைத்து சோதனைக்குழாயில் வைத்து கரு முட்டை  மற்றும் திசுக்கள் இணைந்து புதிய கரு ஒன்றை உருவாக்கினர்.
புதிதாக உருவான கருவை பெண் நாயின் கருப்பையில் செலுத்தினர். பெண் நாயின் கருப்பபையில் முழு மையாக வளர்ச்சி யடைந்த நிலை யில் இரண்டு நாய்க் குட்டிகளை ஈன் றுள்ளது. அந்த நாய்க்குட்டிகள் இரண்டுமே மரணம்டைந்த டையலின் நாயைப் பிரதி எடுத்ததைப் போல் உள்ளன.
இது குறித்து லாரா ஜாக்வின் த கார்டியன் என்ற இதழுக்கு கூறியதா வது,  நாங்கள் மீண்டும் எங்கள் டயலின் வருகையை எதிர்ப்பார்த்திருக்கிறோம். முதலில் ஒரு டயலின் தான் இருந்தது, தற்போது எங்க ளுக்கு புத்தாண்டு பரிசாக இரண்டு டயலின்கள் வருகை தரவிருக்கிறது என்று கூறினார்.
தென் கொரிய உயிர் ஆய்வாளர்களின் முதல் முயற்சியிலேயே குளோனிங் குட்டிகள் வெற்றிகரமாக உருவாகியுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் பலர் தங்களது செல்லப்பிராணி களை இவ்வாறு மீண்டும் புதிதாக ஒரே தோற்றம் குணநலமுடைய குட்டி களை உருவாக்க முடியும் என சோம் உயிர் ஆய்வியல் கழகம் தலைமை ஆய்வாளர் பேராசிரியர் ஹூ சுக் வாங் கூறினார்.
-விடுதலை ஞா.ம.,,2.1.16

திங்கள், 27 ஜூன், 2016

மீன்களின் பல்வேறு வகைகள்


மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை.
* மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
* முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண் ணிக்கை அதிகம்.
* மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்ப நிலையைப் பொறுத்து மாறும்.
* ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்பு களைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.
* மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ் வொரு வகை மீனும் நிறத்திலும் வடிவத்திலும் பருமனிலும் வேறுபட்டு உள்ளது.
* பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரைக் குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளி யேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸி ஜனை எடுத்துக் கொண்டு கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகின்றன.
* மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை.
* மீன்களுக்கு புறச் செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன.
* காட், சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். உணவாகவும், எலும்பு மற்றும் செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
* மிகச்சிறிய மீன் கோபி. இது 13 மி.மீட்டர் அளவே இருக்கும். மிகப்பெரிய மீன் திமிங் கலம். இது 18 மீட்டர் நீளம் இருக்கும்.
* லங் ஃபிஷ் என்ற மீன் நுரையீரல் மூலம் சுவாசிக்கும்.
* ஆழ் கடலில் ஒளியை உமிழும் மீன்கள் வசிக் கின்றன.
* பறக்கும் மீன்கள் குறிப்பிட்ட தூரத்திற்குத் தாவிச் செல்லக் கூடியவை.
* மிக வேகமாகச் செல்லக்கூடியது செயில் ஃபிஷ்
* பெரிய மீன்களின் வாயையும் உடலையும் சுத்தம் செய்யக்கூடியது க்ளீனர் மீன்.
* பஃபர் ஃபிஷ் தட்டையாக இருக்கும். எதிரியைக் கண்டதும் தண்ணீரைக் குடித்து உருண்டையாகிவிடும். அதைக் கண்ட எதிரி பயந்து ஓடும்!
* சூரிய மீன் என்ற வகை மீன் கோடிக் கணக்கில் முட்டைகள் இடும்.
* சர்ஜன் மீன் என்ற மீனின் வால் பகுதியில் இரு பக்கமும் சிறிய கத்தி போன்ற அமைப்பு உள்ளன.
-விடுதலை,19.6.14

தாயின் கருப்பையை கொடையாகப் பெற்று குழந்தையை ஈன்றெடுத்த பெண்

... மகப்பேறு மருத்துவர்கள்
உலகிலேயே முதல் முறை  தாயின் கருப்பையை கொடையாகப் பெற்று குழந்தையை ஈன்றெடுத்த பெண்
லண்டன், டிச.5_  உலகிலேயே முதல் முறையாக ஸ்வீடனில், தனது தாயின் கருப்பை யையே கொடையாகப் பெற்று அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார் ஒரு பெண். ஒரு மாதத்துக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை தனது தாயுடன் நலமாக உள்ளது.
இதன் மூலம், பிரிட்டனில், கருப்பையே இல்லாமல் பிறந்த மற்றும் நோய் காரணமாக கருப்பையை நீக்கிய பெண்களும் குழந்தைப் பேறு அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் 7 பெண்கள் தற்போது தாய்மை அடைந் துள்ளனர். இதில் தற்போது குழந்தையை ஈன்றவருக்கு, அவரது தாயே தனது கருப்பையை கொடையாக வழங்கியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்புதான் உருவான கருப்பையையே கொடையாகப் பெற்று அதில் தனது குழந்தையை கருவாக சுமந்து ஈன்றெடுத் துள்ளார் ஒரு பெண்.
-விடுதலை,5.12.14

வெள்ளி, 17 ஜூன், 2016

240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடல்வாழ் உயிரினம்


முதலையைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட கடல்வாழ் விலங்கினம் ஒன்று சுமார் 240 மில்லியன் ஆண்டு களுக்கு முன்னர் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.  இந்த விலங்கினம் 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது
புதிதாக கிடைக்கபெற்ற புதைபடிவத்திலிருந்து முற்றாக தாவரங்களை மட்டுமே உண்டு வாழ்ந்த மிகப்பழமையான கடல்வாழ் விலங்கினம் என ஸ்காட்லாந்திலுள்ள அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கிடைத்த புதைபடிமங்களை ஆராய்ந்த அவர்கள், வினோதமான வகையில் சுத்தியல் போன்ற தலை வடிவம் கொண்ட அந்த உயிரினம், கடல்நீருக்கு அடியில் இருந்த தாவரங்களையே உணவாகக் உட்கொண்டன என அந்த அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.     தாவரங்களை மட்டுமே உண்ட இந்த விலங்கினத்தை தாடை மற்றும் பற்களின் அமைப்பு இப்படி இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
அடோபொடெண்டாடஸ் என அழைக்கப்படும் அந்த உயிரினம், அகண்ட தாடைகளையும், பட்டையான கூர் வடிவப் பற்களையும் கொண்டிருந்தன என்பது இந்தப் புதைபடிமங்களில் தெரிகிறது.
அப்படியான பற்களைக் கொண்டு கடலுக்கு அடியில் இருந்த பாறைகளைச் சுற்றி வளர்ந்திருந்த தாவரங்களை சுரண்டி அவை உணவாக உட்கொண்டன.
இந்த உயிரினத்துடன் சமகாலத்தில் வாழ்ந்த ஊர்வன விலங்கினங்கள் மீன் மற்றும் இதர உயிரனங்களை அல்லது தமது இனத்தையே அடித்து உண்ணும் வழக்கத்தைக் கொண் டிருந்தன எனவும் அந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
-விடுதலை,26.5.16

ஞாயிறு, 12 ஜூன், 2016

பூமியில் வாழும் உயிரினங்கள் மொத்தம் எத்தனை?

பூமியின் மீது வாழும் உயிரினங்கள் மொத்தம் எத்தனை? உயிரியல் வல்லுநர்கள் முன் இருக்கும் மிகப் பெரிய சவால்களுள் இதை கண்டறிவதும் ஒன்று.

சமீபத்தில் ஓர் ஆய்வு, உலகில் 1 லட்சம் கோடி உயிரினங்கள் இருப்பதாக கண்டறிந்தது. அதில் நமக்கு, 99.99 சதவீத உயிரினங்களைப் பற்றி தெரியாது.
உலகெங்கும் அரசாங்கங்கள், கல்வி அமைப்புகள் சேமித்த பிரம்மாண்டமான புள்ளிவிவர களஞ்சியங்களை தொகுத்து ஒரு முடிவுக்கு வர அமெரிக்காவிலுள்ள இந்தி யானா பல்கலைக்கழக உயிரியல் வல்லுநர்கள் சமீபத்தில் முயற்சி செய்துள்ளனர்.
இதில் நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களும் அடங்கும். இந்த தகவல் தொகுப்பில், உலகெங்கும் உள்ள, 35 ஆயிரம் இடங் களிலிருந்து, 56 லட்சம் நுண்ணுயிரிகள் மற்றும் நுண்ணுயிரிகள் அல்லாதவை பற்றிய விவரங்கள் உள்ளன.
‘’எங்கள் ஆய்வு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய புள்ளிவிவர தொகுப்பை கணக்கில் எடுத்துக் கொண்டது.
புதிய சூழலியல் மாதிரிகள் மற்றும் பல்லுயிர்தன்மை குறித்த புதிய விதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கறாராக இந்த மதிப்பீட்டை செய்திருக்கிறோம்,’’ என்கிறார் ஆய்வில் பங்கேற்ற துணை பேராசிரியர் ஜே.டி.லென்னான்.
‘’இந்த கணக்கெடுப்பில் கிடைத்துள்ளதைவிட, ஒரு லட்சம் மடங்கு நுண்ணுயிரிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன,’’ என்கிறார் லென்னான். உலகில் தற்போது ஒரு லட்சம் கோடி (ஒரு ட்ரில்லியன்) உயிரினங்கள் இருக்கலாம் என்று, இந்த ஆய்வுக் குழுவினர் மதிப்பிட்டுள்ளனர்.
-விடுதலை,12.5.16

உயரே உள்ள மேகம் பூமியை மீறி விண்வெளிக்கு செல்லுமா?


மேகம், புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்படுமா?
உயரே உள்ள மேகம் பூமியை மீறி விண்வெளிக்கு செல்லுமா?
காற்று மண்டலம் பூமியை போர்த்தியிருப்பதே புவியீர்ப்பு விசையால் தான். காற்று மண்டலத்தில், ‘மிதக்கும்‘ இலகுவான மேகங்களும், அதே புவியீர்ப்பு விசைக்குட்படுகின்றன.
பூமியிலுள்ள நீர் பரப்புகளிலிருந்து வெப்பத்தால் ஆவி யாகும் நீராவி இலகுவானது. அது, காற்று மண்டலத்தில் மிதந்து குறிப்பிட்ட உயரம் சென்ற பின் குளிர்ச்சியடைந்து நீர் துகள்களாக மாறுகிறது. குண்டூசி முனையைவிட பலநூறு மடங்கு சிறிய நீர்த்துகள்கள் அவை.
அந்த நீர்த்துகள்கள் வளி மண்டல வாயுக்கள் மற்றும் தூசு துரும்புகளுடன் சேர்ந்து மேகம் உருவாகிறது. பூமி எந் நேரமும் தன்னை நோக்கி மேகத்தை ஈர்த்தபடியே இருக்கிறது. அதே சமயம், காற்று மண்டலமும் மேகம் கீழே வருவதை தொடர்ந்து தடுத்தபடியே இருக்கிறது. தவிர, வேகமாக நகரும் காற்றோட்டமும் மேகத்தை உயரே அலைக்கழித்தபடியே இருக்கிறது. மேகம் குளிர்ச்சியடைந்து கனமாகும்போது தாழ்வாக வருவதை மலைப் பகுதியில் நீங்கள் பார்க்க முடியும்.
பூமியின் வளி மண்டலத்திற்குள் சிக்கியுள்ள மேகம், புவியீர்ப்பு விசைக்குத் தப்பித்து, விண்வெளிக்கு செல்ல, ‘எஸ்கேப் வெலாசிட்டி’ எனப்படும் வேகம் தேவை. அதாவது, விநாடிக்கு அதிகபட்சம், 11.2 கி.மீ., வேகமும், குறைந்தபட்சம், 7.1 கி.மீ., வேகமும் தேவை.
அந்த வேகம் மேகங்களுக்கு இல்லை. மனிதர்கள் உருவாக்கிய ராக்கெட்டுக்களுக்கே உண்டு.
-விடுதலை,12.5.16

திங்கள், 6 ஜூன், 2016

குரங்குகள் ஏன் மனிதர்களாக மாறுவதில்லை?

குரங்கிலிருந்து
மனித இனம் தோன்றியது என்றால்,
குரங்குகள் ஏன் மனிதர்களாக மாறுவதில்லை?
பரிணாம வளர்ச்சி என்பது ஒரு விலங் கினத்தில், எல்லா விலங்குகளுக்குள்ளும் ஒரே சமயத்தில், ஒரே மாதிரி நடப்பதில்லை. அது, குறிப்பிட்ட சூழலில் உள்ள சிக்கல்கள், பல விலங்கினங்களுக்குள் இருக்கும் ஜீவ மரண போராட்டங்கள், உணவு,
இருப்பிடத் திற்கான போட்டிகள் போன்றவற்றை சமாளிக்க, ஒரு குறிப்பிட்ட இனத்தின் மரபணுக்கள் செய்யும் தகவமைப்பு முயற்சி. அதேபோல, பரிணாம வளர்ச்சியால், ஒரு புதிய இனம் உருவானதும், அது உருவாகி வந்த முந்தைய இனம் அழிக்கப்பட்டுவிடும் என்பதில்லை.
‘கிப்பன்ஸ்’ குரங்கு இனத்திலிருந்து, ‘உராங்குடான்’ குரங்கு பரிணமித்து வந்ததாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். ஆனால் இன்றும், இரு இன குரங்குகளும் உலகில் இருக்கின்றன. நம் பெற்றோரும், நாமும் ஒரே காலத்தில் வாழ்வதைப் போல.
பரிணாம வளர்ச்சி பல லட்சம் ஆண்டு களாக, சிறுகச் சிறுக நடப்பது. குரங்கு குட்டியாக பிறந்து வளரும் சில ஆண்டு கால இடை வெளியில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு விடாது.
மரபணு அளவில்கூட கவனிக்கத் தக்க மாறுதல்கள் ஏற்பட பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும்.இப்போதும் நீங்கள் காணும் குரங்குகள் பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கம் தான். அவற்றிலிருந்து சிறிய காதுகளை உடைய, சின்ன வால் உடைய, ரோமங்களே இல்லாத, ‘மொழுக்‘ குரங்கு இனம் ஒன்று கிளைத்து வருவது போன்ற எதுவும் நடக்கலாம்.
-விடுதலை,14.3.16

எச்.அய்.வி கிருமியின் பூர்வீகம் என்ன?


உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோய்க் கிருமி பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதில் விஞ்ஞானத்திற்கு எப்போதும் ஒரு தீவிர ஆவல் இருக்கும். அந்த வகையில் ஹெச்.அய்.வி. கிருமி பற்றிய ஒரு தொல்லியல் ஆராய்ச்சி என்று வர் ணிக்கப்படும் ஒரு ஆய்வின் முடிவு சயின்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.
மக்கள்தொகைப் பெருக்கம், சமூக மாற்றங்கள், புதிதாக புழக்கத்துக்கு வந்த ரயில் போக்குவரத்து எல்லாமும் சேர்ந்த ஒரு கலவையால்தான் 1920களில் காங்கோ தலைநகர் கின்ஷாஸாவில் இருந்து இந்நோய் மற்ற இடங் களுக்குப் பரவியது என்கிறது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் பெல்ஜியத்தின் லியூவென் பல்கலைக் கழகமும் சேர்ந்து நடத்திய ஆய்வு!
பல்வேறு காலகட்டத்திலும் சேமித்து வைக்கப்பட்ட எச்.அய்.வி. கிருமியின் மரபணுத் தொகுதிகளை ஒவ் வொன்றாக ஆராய்ந்து, எது முந்தைய தலைமுறை என்று கண்டுபிடித்துக்கொண்டே போக, அதன் ஆரம்பத் தோற்றம் ஆய்வாளர்களை 1920களின் கின்ஷாஸாவுக்கு இட்டுச் சென்றுள்ளது.
அந்நேரம் அந்தப் பகுதியில் நடந்த மிகப் பெரிய மக்கள்தொகைப் பெருக்கம், தடையின்றி பெருமளவில் நடந்த பாலியல் தொழில், விழிப்புணர்வு இல்லாமல் கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள் பயன்படுத்தப்பட்டது ஆகிய காரணங்களால் அவ்விடத்திலிருந்து மற்ற மற்ற இடங்களுக்கு எச்.அய்.வி. பரவியிருந்துள்ளது.
தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசாக இருக்கும் நாடு, அந்த நேரத்தில் பெல்ஜியத்தால் ஆளப்பட்ட காங்கோவாக இருந்தது. கின் ஷாஸா நகரம் 1966க்கு முன்பாக லியோபோல்ட்வில் என்று அழைக்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அவ்விடத்தில் குறைவாக இருந்ததால், பாலியல் தொழில் அதிக அளவில் நடந்திருக்கிறது.
தவிர அந்த நேரத்தில்தான் அங்கு புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு தூரத்து இடங்களிலிருந்து மக்கள் வந்துபோக ஆரம்பித்திருந்தனர். இதெல்லாம்தான் நோய் பரவக் காரணம் என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலிவர் பைபஸ். எச்.அய்.வி. உலகின் கவனத்தை ஈர்த்த தென்பது என்னவோ 1980களில்தான்.
இதுநாள்வரை இக் கிருமித் தொற்று உலகில் ஏழரைக் கோடி பேருக்கு வந்துள்ளது. ஆனால் ஆப்ரிக்க கண்டத்தில் இந்த நோய்க்கு இதனினும் நீண்ட வரலாறு உள்ளது. ஆனால் குறிப்பாக எந்த இடத்தி லிருந்து இந்த நோய் பரவ ஆரம்பித்தது என்பது சம்பந்தமாக பல்வேறு கருத்துகள் இருந்து வருகின்றன.
குரங்குகளிடத்தில் இருந்துதான் இந்தக் கிருமி மனிதர் களுக்குப் பரவியிருந்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அவ்வாறு தாவியிருந்தது. முதலில் ஒருமுறை அப்படி குரங்குகளிடத்தில் இருந்து மனிதனுக்குத் தாவிய எச்.அய்.வி கிருமியின் ஒரு குறிப்பிட்ட ரகம் கேமரூன் நாட்டில் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்திருந்தது.
ஆனால் அது உலகம் முழுக்க பரவவில்லை.  மேலும் இந்த ஆய்வு, தற்போது மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிவரும் எபோலா போன்ற கிருமிகள் உலக நோயாகப் பரவுவதை தடுக்க வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தும் விதமாக உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
-விடுதலை,10.3.16

பிரமிக்க வைக்கும் பூஞ்சை: ஆய்வு தகவல்

பூஞ்சைகள் மட்டும் இல்லையென்றால், இந்த பூமியே இல்லை. என்ன, நம்ப முடியவில்லையா?  அதுதான் உண்மை. பூஞ்சைகள் பற்றிய அசத்தலான தகவல்கள் இதோ...
நாம் பார்க்கும் காளான்கள், பூஞ்சைகளின் பழம் போன்ற பாகமாகும். பூஞ்சைகள், பூமி முழுவதும் வியாபித்திருக்கின்றன. பூமியின் எல்லாப் பகுதி சூழலிலும் வாழும் அசாத்திய சக்தி பெற்றவை இவை. குளிர், பனி, வெயில் என எதுவும் இதற்கு பொருட்டில்லை! தாவரங்கள், மிருகங்கள் என்று அனைத்து உயிரினங்களின் மீதும்  வளரும் இயல்புடையது பூஞ்சை.
பல ஆண்டுகளாக பூஞ்சைகள், தாவர பட்டியலில் வைக்கப்பட்டிருந்தன. பின்னர்தான், பூஞ்சைகள் தாவரத்தை விட மிருகங்களுடன் அதிகளவு ஒத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. எனவே, பூஞ்சைகள் தனி ராஜ்ஜியமாக  பிரிக்கப் பட்டுள்ளன.
பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு பூஞ்சையியல் என்று பெயர். பூஞ்சைகளிடம் க்ளோரோஃபில் எனப்படும் பச்சையம் கிடையாது. எனவே, தாவரங்களைப் போல் உணவைத் தானே தயாரித்துக்கொள்ள இவற்றால் முடியாது. தாவரங்களின் உயிரணுக்களின் சுவர் செல்லுலோஸால் உருவானது.
ஆனால், பூஞ்சைகளின் உயிரணு சுவர் கைட்டின் எனப்படும் மூலப்பொருளால் உருவானது. இந்த கைட்டின் மிருகங்களின் கொம்பு, முடி, மேல் ஓடு போன்றவற்றில் காணப்படும். பூஞ்சைகளின் உயிரணுக்களும் மரபணுக்களும் தாவரங்களைவிட மிருகங்களுடன் ஒத்துப் போகின்றன. பூஞ்சைகளின் உயிருள்ள உடலின் பெயர் மைசீலியம் எனப்படும். பூசண வலை ஆகும் இந்த வலையானது மரம், உணவுப் பொருள் என்று எதற்குள் வேண்டுமானாலும் புதைந்திருக்கும்.
ஒரு மைசீலியம் ஒரு எலும்பின் அளவில் இருந்து பல ஏக்கர் பரப்பளவு வரை இருக்குமாம். மைசீலியம் என்பது ஹைஃபே () இழைகள். ஒரே நாளில் இவை ஒரு கி.மீ. அளவு கூட வளருமாம்.
பூமியில் 15 லட்சம் முதல் 50 லட்சம் வரை பூஞ்சை வகைகள் வாழ்கின்றன. கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய அளவிலிருந்து பல மைல் அளவு வரை பூஞ்சைகள் காணப்படுகின்றன.
பூஞ்சைகள், கண்ணுக்குப் புலப்படாமல் ஒரு நூற்றாண்டு வரைகூட செயலற்று இருந்துவிட்டு, பின் வளரும் திறனு டையவை. பூசணம் (அ) காளான்களாக விருத்தியடையும் போதுதான் அது நம் கண்ணுக்குப் புலப்படும். பூஞ்சைகள் உணவுக்காக மற்றவற்றைச் சார்ந்தே இருக்கும். சில பூஞ்சைகள், மண்ணிலிருந்து உணவை எடுத்துக்கொள்ளும். சிலவகை பூஞ்சைகள் பிற உயிரினங்களையோ, உயிரற்ற பொருளையோ உணவுக்காக சார்ந்திருக்கும்.
ஒட்டுண்ணி களும் சிதை மாற்றம் செய்யும்  உயிரினங்களும் ஒன்றிய வாழிகளும் பூஞ்சை ராஜ்ஜியத்தில் இடம் வகிக்கின்றன.
பூஞ்சை இனம் மட்டும் இல்லையென்றால் பூமியில் பல அடி உயரத்திற்கு கழிவுகள் நிரம்பியிருக்கும். குப்பைகள், வாடிய தாவர பாகங்கள், இறந்த மிருகங்கள் போன்றவை பூஞ்சைகளின் தாக்கத்தால் மறுசுழற்சி பெற்று வளமான மண்ணாக மாறிவிடும். நீர் நிலைகளில் வாழும் பூஞ்சைகள், அங்கு சேரும் குப்பைகள், கழிவு, எண்ணெய் போன்றவற்றை நொதித்து, நீர்நிலையை மற்ற உயிரினங்கள் வாழத் தகுதியுடையதாய் மாற்றும். இந்த வகையில் அனைத்து உயிரினங்களும் பூஞ்சைகளுக்கு கடன்பட்டிருக்கின்றன.
எனவே, பூஞ்சைகளை பூமியின் சுற்றுச்சூழலின் முதுகெலும்பு என்று கூறலாம். எனப்படும் வித்துகள் மூலம் பூஞ்சைகள் இனப்பெருக்கம் செய்யும். காளான், பூசணம், ஈஸ்ட் ஆகியவை பூஞ்சைகளின் சில வகைகள். உலகின் மிகப்பெரிய உயிரினமான தேன் பூஞ்சை, அமெரிக்காவின் ஓரிகான் பகுதியில் காணப்படுகிறது.
2200 ஏக்கர் பரப்பளவில் படர்ந்துள்ள இந்த காளான் காலனி, 2400 ஆண்டுகள் பழமையானதாகும். இந்தக் காலனியை ஒற்றை உயிரினமாகக் கணக்கிட்டால் இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினமாகும். இதன் மொத்த எடை 605 டன்களாகும். உலகின் மிகப்பெரிய காளான், ஹைனன் தீவில் கண்டறியப்பட்டது.
இதன் எடை 500 கிலோ. காளான்கள் மனிதர்களுக்கு ஆரோக்கியமான சுவையான உணவாகும். பிரெட், கேக் ஆகிய உணவுத் தயாரிப்பில் ஈஸ்ட் பயன்படுகிறது. மதுபானங்கள், அமிலங்கள், சாஸ் வகைகள், சீஸ் ஆகிய தயாரிப்புகளிலும் பூஞ்சைகள் உபயோகப் படுத்தப்படுகின்றன.
சில பூஞ்சைகள், பெனிசிலின் போன்ற உயிர்காக்கும் மருந்துத் தயாரிப்பில் உதவுகின்றன. பூஞ்சை களில் தீமையும் உண்டு. தீய பூஞ்சைகள் உணவைப் பாழாக் குகின்றன. மனிதர்களிலும் தாவரங்களிலும் நோய்களை உண்டாக்குகின்றன. சில காளான்கள் மனிதனையே கொல்லக் கூடிய விஷம் கொண்டவை.

புதிய ஆக்டோபஸ் கண்டுபிடிப்பு
ஒளிபுகும் வடிவிலான தோற்றத்தை கொண்ட ஆக் டோபஸ் ஒன்று ஹவாயில் கடலின் அடியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினம் கிட்டத்தட்ட ஒரு புதிய வகையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேக்கர் தீவிலிருந்து கிட்டத்தட்ட 2.5 மைல்கள் தொலைவில் வைத்து, நீரின் அடியில் பயணிக்கும் நீர்மூழ்கி வாகனம் ஒன்று இதனை கண்டுபிடித்துள்ளது. கரங்கள் இல்லாத ஆக்டோபஸ் கடலின் ஆழத்தில் உள்ளது மிகவும் அரிது என என்.ஓ.ஏ.ஏ எனப்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டலவியல் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-விடுதலை,10.3.16