வியாழன், 22 டிசம்பர், 2016

ஈர்ப்பலைகள் கண்டுபிடிப்பால் நமக்கு என்ன பயன்?

நம்மைச் சுற்றிலும் நடக்கும் அரசியல் அசிங் கங்கள் மனிதர்களின் மோசமான பக்கத்தைக் காட்டு கின்றன என்றால் தற்போதைய ஈர்ப்பலைகளின் கண்டுபிடிப்போ மனிதர்களின் மகத்துவத்தைக் காட்டுகிறது.

கிட்டத்தட்ட திறப்பதற்கே வாய்ப்பில்லாத பிரபஞ்சத்தின் ஜன்னல் கதவுகளை விஞ்ஞானிகள் திறந்திருக்கிறார்கள். வரலாறு நெடுக இந்தப் பிரபஞ்சத்தை உற்றுநோக்குவதற்கான விழிகளை நாம் புதிதாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். அப் போதெல்லாம் நம்மைப் பற்றியும், நாம் வாழும் இவ்வுலகைப் பற்றியும் நாம் கொண்டிருக்கும் எண் ணங்கள் அடியோடு மாறிக்கொண்டேவருகின்றன.

வியாழன் கோளை நோக்கி 1609இல் கலிலியோ தனது தொலைநோக்கியைத் திருப்பியபோது அந்த ராட்சதக் கோளை அதன் நிலவுகள் சுற்றிக் கொண்டிருப்பதை அவர் கண்டார். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பூமியைச் சுற்றியே சுழல்கின்றன என்பதுதான் அப்போது வரை இருந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அடித்து நொறுக்கியது கலிலியோவின் கண்டுபிடிப்பு. அதேபோல், விண் பொருட்களிலிருந்து வெளிப்பட்ட மின்காந்த அலை களை 1964இல் அர்னோ பென்ஸியாஸும் ராபர்ட் வில்சனும் கண்டறிந்தபோது இந்தப் பிரபஞ்சமே ஒரு பெருவெடிப்பில் தோன்றியது என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆல்பெர்ட் அய்ன்ஸ்டைன் பொதுச் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கினார். ஒரு நிறையானது அது இருக்கும் இடத்தை (அண்டவெளி) வளைக்கிறது என்பது அந்தக் கோட்பாட்டின் மய்யம். ஒவ்வொரு தடவை நாம் கையை அசைக்கும்போதும் நம்மைச் சுற்றிலும் இருக்கும் அண்டவெளிக் கம்பளத்தில் அசைவுகள் உருவாகி ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றன. அதாவது, ஒரு குளத்தில் கல்லை எறிந்தால் அலைகள் உருவாகிக் கரையை நோக்கிச் செல்லுமல்லவா, அதுபோல.

தனது பொதுச் சார்பியல் கோட்பாட்டைக் கொண்டு ஐன்ஸ்டைன் விளக்கியது இதைத்தான். ஈர்ப்பலைகள் அண்டவெளியில் பரவிச் செல்லும் போது பொருட்களுக்கிடையேயுள்ள தொலைவுகளை குறுக்கவோ அதிகரிக்கவே செய்கின்றன. தொலை விலுள்ள இரண்டு கருந்துகளைகள் ஒன்றையொன்று சுற்றிக்கொண்டு பின், பிணைந்ததால் வெளிப்பட்ட ஈர்ப்பலைகளை, அவற்றின் மேற்கண்ட இயல்பை வைத்து லிகோ ஆய்வகத்தில் கண்டறிந்தார்கள்.

மோதிப் பிணைந்துகொண்ட இந்த இரு கருந்துளைகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு கருந்துளை சூரியனை விட 36 மடங்கு நிறை கொண்டது; இன்னொன்று 29 மடங்கு நிறை கொண்டது. இரண்டும் மோதிப் பிணைந்தபோது உருவான கருந்துளையின் நிறை, சூரியனை விட 62 மடங்கு அதிகம். கணக்கு ஏதோ உதைப்பதுபோல் இருக்கிறதா? உங்கள் ஊகம் சரிதான். மீதமுள்ள மூன்று மடங்கு சூரிய நிறை எங்கே போனது? ஈர்ப்பலைகள் வடிவில் பரிசுத்தமான ஆற்றலாக மாறிவிட்டது அந்த நிறை.

மக்கள் வழக்கமாக ஒரு கேள்வி கேட்பார்கள்: இதுபோன்ற அறிவியலால் என்ன பயன்? வேகமாகச் செல்லும் கார்களையோ அதிநவீனச் சமயலறைக் கருவிகளையோ இதன் மூலம் கண்டுபிடிக்க முடியுமா? பிக்காஸோவின் ஓவியத்தையோ பீத்தோ வனின் இசையையோ பற்றி நாம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை.

மனிதப் படைப்பாற்றலின் இதுபோன்ற உச்சங்களால் இந்தப் பிரபஞ்சத்தில் நமது இடத்தைப் பற்றிய நமது பார்வைக் கோணம் மாறக் கூடும். ஓவியம், இசை, இலக்கியம் போன்றவற்றைப் போல அறிவியலுக்கும் நம்மை பரவசப்படுத்தும், வியப் பூட்டும், அதிசயிக்க வைக்கும் சக்தி உண்டு. அறிவி யலின் இந்தத் தன்மைதான் அதாவது அதன் கலாச்சாரப் பங்களிப்புதான் அதன் மிக முக்கியமான அம்சம்.

இதுபோன்ற இயற்கையின் அதிசயங்களை உற்றுநோக்கிச் செய்யும் இதுபோன்ற வியப்பூட்டும் பரிசோதனைகள் மூலமாக இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி மேலும் என்னென்ன நாம் அறிய முயலும்? இந்த ஈர்ப்பலைகளைக் கண்டறிவதற்காக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் ஆய்வகங்களால் கருந்துளைகளின் விசித்திர இயல்புகளையெல்லாம் கண்டறியக் கூடும். விண்மீன் மண்டலங்கள், விண்மீன்கள், ஈர்ப்பு விசை போன்றவற்றின் பரிணாமத்தைப் பற்றிக் கண்டறிவது அவற்றுக்கு சாத்தியமாகலாம்.

இப்படியாக, பெருவெடிப்பின்போது வெளிப்பட்ட ஈர்ப்பு அலைகளையும் நாம் கண்டறியக் கூடும். அப்படிக் கண்டறியும்போது, இயற்பியலில் தற்போது நமக்கிருக்கும் அறிவின் எல்லை மேலும் விரிவடையும்.

கருந்துளைகள் என்பவை இந்தப் பிரபஞ்சத்தின் புறவாசல் கதவைப் போன்றவை. சுற்றியுள்ள பிரபஞ்சத்திலிருந்து கருந்துளைகளுக்குள் செல்லக் கூடிய எதுவும் திரும்பி வர முடியாது. அந்தக் கருந்துளைகளின் விளிம்பில் நிகழ்வு எல்லை என்ற ஒரு பகுதி இருக்கிறது. அதன் அருகிலிருந்து ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன. அந்தப் பகுதிக்கு அருகே காலம் மிகவும் மெதுவான வேகம் கொண்டதாக ஆகிறது.

சமீபத்தில் வெளியான இண்டெர்ஸ்டெல்லார் என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்தவர்களுக்கு இது புரிந்திருக்கும். இந்த நிகழ்வு எல்லைக்கு அருகே நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டறிவதன் மூலம், அல்லது தொடக்க காலப் பிரபஞ்சத்திலிருந்து வெளிப்பட்ட ஈர்ப்பு அலைகளை உற்றுநோக்குவதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் பற்றியும், ஒருவேளை இன்னும் பல பிரபஞ்சங்கள் இருக்கக் கூடுமென்றால் அவற்றைப் பற்றியும் அறிந்துகொள்வது நமக்கு சாத்தியமாகலாம்.

நாம் எங்கிருந்து வந்தோம்? இங்கு எப்படி வந்தோம்? என்ற கேள்விகள் எழாத குழந்தைகளே இல்லை எனலாம். இந்தப் பிரபஞ்சத்தைத் துழாவிப் பார்க்க லிகோ போன்ற விண்ணோக்க ஆய்வகங்களை உருவாக்குவதன் மூலம் மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல நாம் முயலலாம் என்பது மனித குலத்தின் இடையறாத ஆர்வத்துக்கும் அறிவுக்கூர்மைக்கும் ஒரு சான்று. நமது மனித குலத்தைப் பற்றி நாம் பெருமிதத்துடன் கொண்டாட அடிப்படையே இந்த ஆர்வமும் அறிவுக் கூர்மையும்தானே!

வீட்டிலிருந்தே பார்க்கலாம்!

சர்வதேச விண்வெளி மய்யத்துக்கு நாம் எல் லோராலும் போக முடியாதுதான். ஆனால், இங் கிருந்து வானத்தை இரவு நேரத்தில் அண்ணாந்து பார்த்தால் வெறுங்கண்களால்கூட அதைப் பார்க்க முடியும்; நாம் பார்க்கும் நேரத்தில் அந்தப் பகுதியின் வானத்தில் சர்வதேச விண்வெளி மய்யம் உலவிக் கொண்டிருந்தால் நம்மால் பார்க்க முடியும். தொலை நோக்கியோ, இருநோக்கியோ இருந்தால் இன்னும் பெரிதாகப் பார்க்கலாம்.

நம் பகுதிக்கு மேல் விண்வெளி மய்யம் எப்போது வருகிறது என்று தெரிந்துகொண்டால் அதைப் பார்ப்பதற்கு எளிதாக இருக்கும் அல்லவா! அதற்கும் வழி இருக்கிறது. நாசாவின் இணைய தளத்தில் இந்த இணைப்பில் (https://spotthestation.nasa.gov/) 
சென்று, நம் வீட்டுக்கு மேலே சர்வதேச விண்வெளி மய்யம் எப்போது பறக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்!

டேவிட் நிக்ஸன் என்பவர் வெளியிட்ட இன்டர் நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்: ஆர்க்கிடெக்சர் பியாண்ட் எர்த் என்ற புத்தகத்தில் சர்வதேச விண் வெளி மய்யத்தின் வரலாற்றைப் பற்றி எளிமையாகவும் விரிவாகவும் விவரிக்கப்பட்டிருக்கிறது.
-விடுதலை,22.12.16

செவ்வாய் கிரகத்தில்  உயிரினங்கள் சாத்தியமா?


செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்குமா என்ற கேள்விக்கு பூமி யில் உள்ள அடகாமா பாலைவனம் விடையளிக்கிறது.

செவ்வாய் கிரகத்திலுள்ள நிலப்பரப்புக்கு ஈடாக உலகிலேயே வறண்ட பகுதி என்று கருதப்படும் இடத்தில் செவ் வாய் கிரக ஆய்வகம் ஒன்றை உருவாக்கி நாசா வைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். எப்படியான உயிரினங்கள் வாழ முடியும் என்பதற்கான ஆய்வுகளையும் அங்கே நடத்தியுள்ளனர்.

குறைந்தபட்ச அளவே நீர்வளமும், அதிகபட்ச புற ஊதாக் கதிர்வீச்சும் கொண்ட நிலப்பரப்பாக சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனம் கருதப்படுகிறது. இந்த நிலப்பரப்பிலுள்ள பாறைகளின் அடிப்பகுதி மற்றும் மடிப்புகளுக்குள் நுண்ணுயிர் கூட்டங்கள் தவிர வேறு எந்த உயிர்களும் இல்லை.

செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்பு இருக்குமானால் இதே மாதிரியான நுண்ணுயிர்கள் மட்டுமே அங்கு வாழ சாத்தியம் உள்ளது என்கிறார்கள் நாஸா விஞ்ஞானிகள். ஒரு மாத காலம் கள ஆய்வுப் பணிகளுக்குப் பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள். அடகாமா பாலைவனத்தில் நிலவும் அதிகபட்ச வறண்ட தன்மை செவ்வாய் கிரகத்தையொத்த பண்புகளைக் கொண்டது.

-விடுதலை,22.12.16

தூங்கும்போது மூளை என்ன செய்கிறது?


நாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும்? ஏன் தூங்காவிட்டால் என்ன ஆகும்? தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா?  இப்படி நிறைய கேள்விகள் சிறு வயசிலிருந்தே நம் மனதுக்குள் அடிக்கடி எட்டி பார்த்திருக்கும், இல்லையா?

மூளை செல்களை அதிகப்படியாகத் தூண்டுவது, நரம்புமண்டலத்தின் இயல்பான செயல்பாட்டையும், நரம்புத் திசுக்களையும் பாதிக்கும் நரம்புநச்சுகளை வெளியிடுவதற்குக் காரணமாக அமையலாம் என்கிறார்கள் மூளை பற்றி ஆராய்ந்த நிபுணர்கள். இது தொடர்ந்து நிகழ்வது ஆபத்தானது.

இதைத் தடுப்பதுதான் தூக்கம். மூளையில் சேர்ந்த நச்சை அகற்றும் செயல்பாட்டுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தூங்குவது, நரம்பு தூண்டல்களைக் குறைக்கும் என்றொரு கொள்கை சொல்கிறது. ஒரு வகையில் இந்தக் கொள்கை ஓய்வு கொடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது.

கற்றலுக்கு உதவும் தூக்கம்

மற்றொரு பக்கம், உறக்கம் என்பது மூளையின் கற்றல் திறனையும் அதிகரிக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். புதிதாகக் கற்றுக்கொள்ளும் திறனை நிலைப்படுத்தும் உடலியல் செயல்பாடு, மற்ற நேரங்களிலும் நடைபெறத்தான் செய்கிறது. ஆனால், இந்தச் செயல்பாட்டுக்குத் தூக்கம் முக்கிய உதவி புரிகிறது.

இது எப்படி நடக்கிறது என்றால், ஒரு செயல்திறனைப் புதிதாகக் கற்றுக் கொண்டோ அல்லது திரும்பச் செய்தோ பார்த்த பிறகு நல்லதொரு தூக்கத்தைப் பெறுவது மிகவும் முக்கியம். இப்படிச் செய்யும்போது புதிய நினைவுகளின் காரணமாக உருவான புதிய நரம்பு இணைப்புகளை நம்முடைய மூளை வலுவூட்டிக்கொள்கிறது. எனவே, நடு ராத்திரியில் விழித்து வாட்ஸ்அப், டிவி பார்க்கும் பழக்கத்தைக் குறைத்துக்கொண்டு ஒழுங்காகத் தூங்கினால்தான், புதிதாகக் கற்ற எதுவும் மனதில் தங்கும்
-விடுதலை,22.12.16

செவ்வாய், 20 டிசம்பர், 2016

இனி தோல் முழுவதுமே காதுதான்


வெப்பம், ஈரப்பதம், பொருள்களின் தன்மைகள் பற்றிய தொடுஉணர்வுகளையும் தந்து ஓசைகளையும் கேட்கும் சக்தி படைத்த செயற்கைத்தோலை விஞ்ஞானி ஹ்யுன்ஹ்யுப் கோவும்  அவரது கூட்டாளிகளும் உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர்.

கேட்கும் தோல்

இந்தச் செயற்கைத் தோலுக்குப் பொதுவாகத் தோலுக்கு இருக்கிற தொடுஉணர்வு மட்டுமல்ல, காதுகள் போல ஓசைகளைக் கேட்கும் ஆற்றலும் உண்டு.

மனிதத் தோலின் கட்டமைப்பைப் பயன்படுத்தி அதைக் காப்பியடிப்பதுபோலத்தான் சோதனைச் சாலையில் இந்த மின்னணு செயற்கைத் தோல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தயாரிக்கப் பட்ட செயற்கைத் தோல் தொடு உணர்வில் ஒரு சில திறன்களைத்தான் பெற்றிருந்தது. ஆனால், இந்தச் செயற்கைத் தோலால் ஒரு செயற்கை விரலைச் செய்தால் அதனால் நாடிபிடித்துப் பார்க்க முடியும். ரவை போன்ற பொருள்களின் மிருது நயத்தையும் உணர முடியும். பொருள்களின் கடினத் தன்மை, மிருதுத் தன்மை மட்டுமல்ல,அது குளிர்ச்சியாக இருக்கிறதா, வெப்பமாக இருக்கிறதா, உலர்ந்துஇருக்கிறதா, ஈரப்பதம் அதிகமாக இருக்கிறதா என்றும் அதனால் உணர முடியும்.

தென்கொரியாவின் உல்சன் தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில்பணியாற்றுகிறார் விஞ்ஞானி கோ. அவர் பொருளறிவியலில் நிபுணர். இவர்தான் இந்தப் பலவகையான தொடு உணர்வுகளைக் கொண்டசெயற்கைத் தோலைக் கண்டுபிடித்துள்ளார்.

தமிழில் கரி என்றும் ஆங்கிலத்தில் கார்பன் என்றும் சொல்லப்படும்பொருளின் வேறுபட்ட பல வடிவங்களில் ஒன்று கிராபீன் இது.

உலகிலேயே மிகவும் மெல்லிய பொருள். அதே நேரத்தில் உலகிலேயே மிகவும் உறுதியானது. எஃகை விட நூறு மடங்கு உறுதியானது. மூன்று மில்லியன் கிராபீன் அடுக்குகளை ஒன்றன் மீது ஒன்று வைத்தாலும்அதன் தடிமன் வெறும் ஒரு மில்லிமீட்டர்தான் இருக்கும். அவ்வளவு மெல்லியது. இது தாமிர உலோகத்தைப் போல மின்சாரத்தைக் கடத்தும். இப்படிப்பட்டதன்மைகள் கொண்ட கிராபீன் எனும் பொருளை வைத்துத்தான் தனது ஆய்வைச்செய்தார் விஞ்ஞானி கோ.

மேடுகளின் உணர்வுகள்

நமது விரல் நுனிகள் கூர்மையான தொடு உணர்ச்சி கொண்டவை. விரல் நுனியின் தோல் அமைப்பைப் போலவே செயற்கைத் தோலை கோ உருவாக்கினார். விரலின் நுனியில் உள்ள தோலில் கைரேகை உள்ளது. இந்தக் கைரேகை மேடுபள்ளம் கொண்ட மடிப்புச் சுருக்க அமைப்பு. எனவே, செயற்கைத் தோலின் மேலடுக்கை இதே போன்று கிராபீன் அடுக்குக்கு மேல் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வரி மேடு மடிப்பு அமைப்பை வைத்து இந்தச் செயற்கைத் தோலை அவர் வடிவமைத்துள்ளார்.

பல கிராபீன் மென்படலங்களை ஒன்றின்மீது ஒன்று வைத்து அடுக்கப்பட்ட நுணுக்கமான அடுக்குகள்தான் விஞ்ஞானி கோ உருவாக்கிய மின்னணுச் செயற்கைத் தோல். இரண்டு கிராபீன் அடுக்குகளுக்கு இடையே வலைப்பின்னலால் ஆன சக்தி வாய்ந்த உணர்விகளைப் பொதிந்துவைத்தார். இத்தகைய அமைப்பைக் கொண்டுதான் வெப்பம், தொடு உணர்ச்சி அழுத்தம், பொருளின் நயத்தன்மை போன்ற பல்வேறு உணர்வுகளை அறிய முயன்றார்.

அதிர்வின் கணக்குகள்

குளிர் நிலையில் விறைப்பாக இருக்கும் இந்த மின்னணு தோல் வெப்பமானநிலையில் நெகிழும். விறைப்புத் தன்மைக்கும் நெகிழும் தன்மைக்கும் ஏற்ற மாதிரி செயற்கைத் தோலில் உருவாகும் மின்னோட்டம் வேறுபடும். இதனை அளந்துதான் அனுமானங்கள் செய்யப்படுகின்றன. இந்த மின்னணுத் தோலைத் தொட்டால் மடிப்புச் சுருக்கத்துக்கு உள்ளே இருக்கும் எலெக்டிரோட் அழுத்தம் பெற்று அதில் மின்சாரச் சுற்று ஏற்படும். எவ்வளவு வலிமையாக அழுந்துகிறதோ அவ்வளவு கூடுதல் மின்சாரச் சுற்று இருக்கும். அதிலிருந்து வெளிப்படும் மின்னோட்டத்தை மின்சாரம் அளக்கும் கருவியில் அளந்து அழுத்தத்தின் அளவை அறிகிறார்கள்.

மின்னணுத் தோலின் விளிம்பில் பொருள்களின் படுவதால் ஏற்படும் அதிர்வுகளின் பாங்கு அந் தந்தப் பொருள்களின் நயத்தைப் பற்றிய வித்தியாசங்களைக் காட்டும். மின்னணுத் தோலில் பொதிந்துவைக்கப்பட்டுள்ள அதிர்வு உணர்விகள் அதிர்வை அளக்கும். அவை தரும் அளவுகள் தொடப்படுகிற பொருள்களின் நயங்கள் குறித்து ஊகம் செய்யும் வாய்ப்புகளைத் தந்துள்ளன.

மூளைக்குள் போக வைத்த அலெக்ஸ்

அதேபோல ஒலியும் இந்தச் செயற்கைத் தோலை அதிரச் செய்தது. எனவே ஒலியையும் இந்தத் தோலால் உணர முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

செயற்கைத் தோலால் தொடு உணர்ச்சியையும் கேட்கும் ஓசையையும் சமிக்ஞைகளாகத் தர முடியும். ஆனால், அவை மூளைக்குள் செல்லவேண்டுமே? மின்னணு அளக்கும் கருவிகளுக்குள்ளே தானே பயணிக்கின்றன? அதனால் நடைமுறைப் பயன்பாடு எதுவுமில்லையே என்று ஆரம்பத்தில் திகைத்தார்கள்.

நமது உணர்வுகளை நம் உடலின் தோலில் உள்ள செல்கள் நேரடியாக நரம்பு மண்டலம் வழியாக மூளைக்குள் செலுத்துகின்றன. அவற்றைப் போலச் செயற்கைத்தோலின் உணர்வுகள் நரம்பு செல்கள் வழியாக மூளைக்குச் செல்ல வேண்டும்.அப்படிச் சென்றால்தானே நடைமுறையில் நமக்குப் பயன்படும்?

அப்டோஜெனெடிக்ஸ் எனும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திச் செயற்கைத் தோலின் உணர்வுகளை மூளைக்கு அனுப்ப வேண்டும் என்பது அடுத்த கட்டத்தின் சவாலாக எழுந்தது. செயற்கைத் தோல் தரும் உணர்வுகளை உடலின் செல்கள் வழியாக மூளைக்குச் செலுத்தும் ஆய்வைச் செய்து இந்தச் சவாலில் வெற்றிபெற்றார் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில்ஆய்வாளராக இருக்கும் அலெக்ஸ் சொற்டோஸ்.

தோலால் காது கேட்கும் கருவி

விஞ்ஞானிகள் கோ மற்றும் சொற்டோஸ் ஆகிய இருவரின் கண்டுபிடிப்புகளையும் இணைத்துச் செயற்கை மின்னணுத் தோலைச்செய்துவிடலாம். தற்போது உள்ள தொழில்நுட்ப அறிவில் கோ கண்டு பிடித்த செயற்கைத் தோலால் பல்வேறு உணர் வுகளை எல்லா நிலையிலும் பெற முடியாது.

குறிப்பிட்ட சூழலில்தான் பன்முகத் தன்மையுள்ள உணர்வுகளை ஒரே நேரத்தில் அது பெறும். எனவே உயிரியல் தோலுக்கும் செயற்கைத் தோலுக்கும் இடையே திறனில் வித்தியாசம் உண்டு. ஆனாலும் மருத்துவத் துறையில் இதற்கான பயன் உண்டு.

செயற்கைக் கை அல்லது கால்களின் மேலே இவ்வாறு செயற்கைத் தோலினைப் பொருத்தி அந்த மின்னணுத் தோல் பெறுகிற தொடு உணர்ச்சிகளை நேரடியாக நரம்பு மண்டலம் வழியாக மூளைக்கு அனுப்பலாம் என் கிறார்கள். அது மட்டும் நடந்தால் செயற்கைத் தோல் பொருத்திய கை-கால் ஊனமுற்றவர்கள் மற்றவர்களைப் போலவே தொடு உணர்ச்சிகளைப் பெற இது வழி செய்யும்.

ஆராய்ச்சி நிலையத்துக்கு வெளியே இதுவரை இந்த மின்னணுத் தோல் சாத்தியப்படவில்லை. ஆனா லும் எதிர்கால மருத்துவப் பயனுக்கு இது பெரிய அளவில் உதவும். இந்தச் செயற்கைத் தோலால் எளிதில் அணியும் வகையிலான காது கேட்கும் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கருவிகளைத் தயாரிக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
.விடுதலை,15.12.16

மனிதன் எப்போது பேச ஆரம்பித்தான்?


நம்முடைய மூதாதையர்களான நியாண்டர்தால் காலத்திலேயே மனிதர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்களா? உலக வரலாற்றின் எந்தக் காலத்தில் மனிதர்கள் பேச ஆரம்பித்தார்கள்?

நியாண்டர்தால் மனிதர்களால் பேச முடியாது என்று 40 ஆண்டுகளுக்கு முன் நம்பப்பட்டு வந்தது. நியாண்டர்தால் மனிதர்கள் குகை ஓவியங்களை வரையவில்லை; சிக்கிமுக்கிக் கல்லை அம்பு முனைகளில் பொருத்தக் கற்றிருக்கவில்லை; மனிதக் குரல்கள் உருவாக்கக்கூடிய அத்தனை ஒலிகளையும் எழுப்பும் வகையில் நியாண்டர்தால் மனிதர்களின் குரல்வளை தாழ்வாக அமைந்திருக்கவில்லை என்றெல்லாம் அப்போது நம்பப்பட்டது.

ஆனால், சமீபகாலக் கண்டறிதல்களின்படி நியாண்டர்தால் மனிதர்களுக்கு ஹயாய்டு எலும்பு எனப்படும் வளையக்கூடிய எலும்பு இருந்தது; நாக்கில் நரம்புகள் இருந்தன; மனிதர்களைப் போன்ற கேட்கும் திறனும் இருந்தது என்று தெரியவந்துள்ளது. இந்த அம்சங்கள் மற்ற பாலூட்டிகளிடமிருந்து வேறுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

FOXP2  என்ற மரபணு நமக்கும் நியாண்டர்தால் மனிதர்களுக்கும் பொதுவாக இடம்பெற்றுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. பேச்சு, மொழித்திறன்கள் வளர்ச்சி பெறுவதற்கு இந்த மரபணுவே காரணம் என்று கருதப்படுகிறது. இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, நியாண்டர்தால் மனிதர்கள் பேசியி ருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

அப்படிப் பேசினார்கள் என்றால், அவர்கள் பயன்படுத்திய மொழி என்ன? பேச்சுக்கும் இசைக்கும் இடைப்பட்ட முன்னோடி மொழியை அவர்கள் பேசியிருக்கலாம் என்று பிரிட்டனைச் சேர்ந்த ரீடிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவன் மிதென் கூறுகிறார். நம் பழங்குடி மொழிகளின் தாத்தாவாக இருந்திருக்குமோ!

விண்வெளி வீரர்களுக்குப் புதிய உணவு

அப்பல்லோ விண்கலக் காலத்திலிருந்து விண்வெளி வீரர்களுக்குக் கொடுக்கப்படும் உணவுகள் அளவில் சிறியவையாகவும் சத்துமிக்கவையாகவும் இருப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நிலவைத் தாண்டி ஆராய்ச்சி செய்யும் ஓரியன் விண்கலத்தில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களுக்காகக் காலை உணவு பார்களை நாசா விண்வெளி நிலையத்தில் உருவாக்க முயன்று வருகின்றனர்.

விண்வெளி வீரர்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க இந்த காலை உணவு  பார்கள் செய்யப்படவுள்ளன. அத்துடன் தொடர்ந்து சாப்பிட்டாலும் ருசியிலும் சலிக்காத வண்ணம் இந்தப் புதிய பார்கள் இருக்கும்.

1998இல் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில்  மாட்டிறைச்சித் துண்டங்கள், ஹாம்பர்கர்கள், பழங்கள், எஸ்பரசோ காபி உட்பட 200 உணவுப் பொருட்களை வைத்துக்கொள்ள இடமிருந்தது.

ஆனால் ஓரியன் போன்ற நவீன விண்கலங்கள் மிகவும் சிறியவை என்பதால் ஒரேயொரு உணவு அலமாரி யும் உணவு பண்டங்களைச் சூடாக்கும் ஒரு  அவன்-ம் வைப்பதற்கு மட்டுமே இடம் இருக்கிறது. நிலவையும் தாண்டி ஆழமான வெளியில் ஆய்வுகளை நடத்துவதால் எடை மிகவும் குறைவாக இருக்க வேண்டியது அவசியம். தொலைதூர ஆய்வுப் பயணம் என்பதால் உணவுகளைத் திரும்பப் பூமியிலிருந்து வழங்குவதற்கும், அதிகமாகக் குப்பைகளைச் சேமித்து வைப்பதற்கும் வாய்ப்பு கிடையாது.

அதனால்தான் நாசாவில் காலை உணவுக்காக உணவு பார்களை விண்வெளிப் பயணிகளுக்கு வழங்குகிறார்கள். சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட பிரத்யேகமான முறையில் பாதுகாக்க வேண்டியிராத, அதிகம் பொதியப்பட (பேக்கேஜிங்) வேண்டியிராத உணவுகளுக்கான தொடர்ந்த ஆய்வின் விளைவு இது.
-விடுதலை,15.12.16

புதிய தகவல்: உலகில் 18,000 பறவை இனங்கள்!

வாஷிங்டன், டிச.14 உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந் துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கன் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி விஞ்ஞானி ஜோயல் கிராகிராஃப்ட் கூறியதாவது:

உலகில் உள்ள உயிரினங்கள் குறித்து பல ஆய்வுகள் நடந்துள் ளன. அதில் பறவைகள் குறித்து மிக விரிவான ஆய்வுகள் நடை பெற்றுள்ளன. அனைத்துப் பறவைகளைக் குறித்தும் பறவை இனங்களைக் குறித்தும் நமக்கு ஏறக்குறைய அனைத்து விவரங் களுமே தெரியும் என்று எண்ணியிருந்தோம். பறவை குறித்து ஆய்வு செய்து வந்தவர்கள் பூமியில் ஒன்பதாயிரம் முதல் பத்தாயிரம் பறவை இனங்கள் இருப்பதாகக் கருதி வந்தனர். ஆனால் அண்மையில் நடை பெற்ற ஆய்வில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுவரை ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று கருதியிருந்த பல பறவைகளும் தனி இனங் களைச் சேர்ந்தவை என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரே தோற்றமுடைய பல பற வைகள் குறிப்பிட்ட இனத்தின் உள் பிரிவைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அவற்றில் பலவும் தனி இனத் தைச் சேர்ந்தவையாகும் என்று தெரிய வந்துள்ளது. அந்த வகை யில் தற்போது உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் உள்ளன என்று தெரிகிறது.

தனி இனங்களையும், ஒரு இனத்தின் உள் பிரிவுகளையும் எவ்வாறு தரம் பிரித்து அறிய வேண்டும்; அந்தந்த இனங் களைப் பாதுகாக்க என்ன நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்றவற் றில் புதிய ஆய்வு முறைகளைப் பயன்படுத்த வேண்டிய அவ சியம் இப்போது எழுந்துள்ளது. உருவம், சிறகுகளின் நிறம் ஆகியவற்றைப் பகுப்பாய்வதில் மாற்று முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று புதிய ஆய்வில் தெரிகிறது. இருநூறு இனங்களைச் சேர்ந்த பறவைகளைக் குறித்துப் புதிய முறையில் ஆராய்ச்சி செய்த போது, ஒவ்வொரு இனத் தைப் போலவே மேலும் இரண்டு வெவ்வேறு இனங்கள் இருக்கும் சாத்தியக்கூறு தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அந்த ஆய்வு விரிவுபடுத்தப்பட்டது. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இருப்பதாகத் தெரிய வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கலப்பினங்களைக் குறித்த ஆய்வில் புதிய முறைகளை மேற் கொள்ள வேண்டும். கலப்பினங் கள் தொடர்ந்து சாத்தியமாகும் வகையில் நமது இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டும். மேலும் அனைத்து இனங்களுமே பெருகும் வகையில், இயற்கைக் சூழலை நாம் பாதுகாக்க வேண் டும் என்றார் அவர்.
-விடுதலை,14.12.16