செவ்வாய், 20 டிசம்பர், 2016

மனிதன் எப்போது பேச ஆரம்பித்தான்?


நம்முடைய மூதாதையர்களான நியாண்டர்தால் காலத்திலேயே மனிதர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்களா? உலக வரலாற்றின் எந்தக் காலத்தில் மனிதர்கள் பேச ஆரம்பித்தார்கள்?

நியாண்டர்தால் மனிதர்களால் பேச முடியாது என்று 40 ஆண்டுகளுக்கு முன் நம்பப்பட்டு வந்தது. நியாண்டர்தால் மனிதர்கள் குகை ஓவியங்களை வரையவில்லை; சிக்கிமுக்கிக் கல்லை அம்பு முனைகளில் பொருத்தக் கற்றிருக்கவில்லை; மனிதக் குரல்கள் உருவாக்கக்கூடிய அத்தனை ஒலிகளையும் எழுப்பும் வகையில் நியாண்டர்தால் மனிதர்களின் குரல்வளை தாழ்வாக அமைந்திருக்கவில்லை என்றெல்லாம் அப்போது நம்பப்பட்டது.

ஆனால், சமீபகாலக் கண்டறிதல்களின்படி நியாண்டர்தால் மனிதர்களுக்கு ஹயாய்டு எலும்பு எனப்படும் வளையக்கூடிய எலும்பு இருந்தது; நாக்கில் நரம்புகள் இருந்தன; மனிதர்களைப் போன்ற கேட்கும் திறனும் இருந்தது என்று தெரியவந்துள்ளது. இந்த அம்சங்கள் மற்ற பாலூட்டிகளிடமிருந்து வேறுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

FOXP2  என்ற மரபணு நமக்கும் நியாண்டர்தால் மனிதர்களுக்கும் பொதுவாக இடம்பெற்றுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. பேச்சு, மொழித்திறன்கள் வளர்ச்சி பெறுவதற்கு இந்த மரபணுவே காரணம் என்று கருதப்படுகிறது. இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, நியாண்டர்தால் மனிதர்கள் பேசியி ருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

அப்படிப் பேசினார்கள் என்றால், அவர்கள் பயன்படுத்திய மொழி என்ன? பேச்சுக்கும் இசைக்கும் இடைப்பட்ட முன்னோடி மொழியை அவர்கள் பேசியிருக்கலாம் என்று பிரிட்டனைச் சேர்ந்த ரீடிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவன் மிதென் கூறுகிறார். நம் பழங்குடி மொழிகளின் தாத்தாவாக இருந்திருக்குமோ!

விண்வெளி வீரர்களுக்குப் புதிய உணவு

அப்பல்லோ விண்கலக் காலத்திலிருந்து விண்வெளி வீரர்களுக்குக் கொடுக்கப்படும் உணவுகள் அளவில் சிறியவையாகவும் சத்துமிக்கவையாகவும் இருப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நிலவைத் தாண்டி ஆராய்ச்சி செய்யும் ஓரியன் விண்கலத்தில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களுக்காகக் காலை உணவு பார்களை நாசா விண்வெளி நிலையத்தில் உருவாக்க முயன்று வருகின்றனர்.

விண்வெளி வீரர்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க இந்த காலை உணவு  பார்கள் செய்யப்படவுள்ளன. அத்துடன் தொடர்ந்து சாப்பிட்டாலும் ருசியிலும் சலிக்காத வண்ணம் இந்தப் புதிய பார்கள் இருக்கும்.

1998இல் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில்  மாட்டிறைச்சித் துண்டங்கள், ஹாம்பர்கர்கள், பழங்கள், எஸ்பரசோ காபி உட்பட 200 உணவுப் பொருட்களை வைத்துக்கொள்ள இடமிருந்தது.

ஆனால் ஓரியன் போன்ற நவீன விண்கலங்கள் மிகவும் சிறியவை என்பதால் ஒரேயொரு உணவு அலமாரி யும் உணவு பண்டங்களைச் சூடாக்கும் ஒரு  அவன்-ம் வைப்பதற்கு மட்டுமே இடம் இருக்கிறது. நிலவையும் தாண்டி ஆழமான வெளியில் ஆய்வுகளை நடத்துவதால் எடை மிகவும் குறைவாக இருக்க வேண்டியது அவசியம். தொலைதூர ஆய்வுப் பயணம் என்பதால் உணவுகளைத் திரும்பப் பூமியிலிருந்து வழங்குவதற்கும், அதிகமாகக் குப்பைகளைச் சேமித்து வைப்பதற்கும் வாய்ப்பு கிடையாது.

அதனால்தான் நாசாவில் காலை உணவுக்காக உணவு பார்களை விண்வெளிப் பயணிகளுக்கு வழங்குகிறார்கள். சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட பிரத்யேகமான முறையில் பாதுகாக்க வேண்டியிராத, அதிகம் பொதியப்பட (பேக்கேஜிங்) வேண்டியிராத உணவுகளுக்கான தொடர்ந்த ஆய்வின் விளைவு இது.
-விடுதலை,15.12.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக