சனி, 3 டிசம்பர், 2016

எத்தனை கோடி விண்மீன்கள்


அப்படி ஒரு கணக்கைப் போட்டுப் பார்த்து, பிரபஞ்சத்தில் எவ்வளவு விண்மீன் மண்டலங்கள் இருக்கும், எவ்வளவு விண்மீன்கள் இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். பத்து லட்சம் கோடி விண்மீன் மண்டலங்களும் (10,00,000,00,00,000) 10 கோடி கோடி கோடி விண்மீன்களும் (1,000,00,00,000,00,00,000,00,00,000) இருப்பதாக உத்தேசமான கணிப்புக்கு வந்திருக்கிறார்கள். உலகில் உள்ள மணல் துகள்களின் எண்ணிக்கை விண்மீன்களின் எண்ணிக்கைக்கு அருகே வர முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பூமியை ஒரு மணல் துகள் அளவுக்குக் கற்பனை செய்து கொண்டோமென்றால் நெப்டியூன் வரையிலான சூரியக் குடும்பம் ஒரு தேவாலயம் அளவுக்கு இருக்கும். சூரியக் குடும்பத்தை ஒரு மணல் துகள் அளவுக்குக் கற்பனை செய்துகொண்டால் நமது பால்வீதி மண்டலம் ஒரு தேவாலயத்தை விட ஆயிரமாயிரம் மடங்கு பெரிதாக இருக்கும். இப்போது பால்வீதி மண்டலத்தை ஒரு மணல் துகள் அளவுக்குக் கற்பனை செய்துகொண்டோம் என்றால் புலனாகக்கூடியவரையிலான பிரபஞ்சம் என்பது ஒரு தேவாலயத்தை விடப் பெரிதாக இருக்கும். இதுபோன்ற சுவாரசியமான ஒப்புமைகள் தி கார்டியன் தயாரித்த அறிவியல் காணொலியில் காணக் கிடைக்கின்றன (சுட்டி:https://goo.gl/hO34nM)

சர்க்கரை நோயாளிகளுக்கு 3டி காலணி!
சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு காலணிகளை ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு பாதங்களில் போதிய அளவுக்கு உணர்ச்சி இருக்காது. இதனால் காலணி கச்சிதமாக பொருந்தாதபோது, காயம் ஏற்பட்டு, அது முற்றி, பாதத்தையே அகற்றவேண்டி வரலாம்.
ஜெர்மனியை சேர்ந்த, ‘பிரான்ஹோபர்’ என்ற நிறுவனம் இத்தகைய நீரிழிவு நோயாளிகளுக்கு, ‘3டி பிரின்டிங்’ எனப்படும் முப்பரிமாண அச்சு முறையில் காலணிகளின் அடிப்பகுதியை உருவாக்கி தருகிறது.நீரிழிவு உள்ளவரின் கால்களை ஒரு, ‘ஸ்கேனர்’ மூலம் துல்லியமாக அளவெடுத்து, அதை முப்பரிமாண அச்சியந்திரத்தில் கொடுத்து காலணியின் பாதப்பகுதியை உருவாக்குகிறது பிரான்ஹோபர்.பின், துகள்களாக இருக்கும், ‘தெர்மோ பிளாஸ்டிக் பாலியூரிதேன்’ என்ற பொருளில், அந்த பாதத்தின் வடிவத்திற்கேற்ப காலணியின் உட்பகுதியை லேசர் மூலம் ஒரு சிற்பம் போல, படலம் படலமாக பிரான்ஹோபர் உருவாக்கித் தருகிறது.இந்த முறையில் தயாரான காலணியின் உட்பகுதி, நோயாளியின் பாதத்திற்கு ஏற்ப, கன கச்சிதமாக இருப்பதால் உராய்வு மற்றும் அழுத்தம் மூலம் பாதங்களில் புண் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.தற்போது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலணிகளை தேர்ந்த நபர்களைக் கொண்டு வடிவமைக்கின்றனர். அதைவிட முப்பரிமாண அச்சு முறையில், துல்லியமாகவும், விரைவாகவும் பாதணிகளை தயாரிக்க முடியும் என்கிறது பிரான்ஹோபர்.

எவ்வளவு பெரியது இந்த உலகம்!
இந்த உலகத்தையே ஒரு வரைபடத்தில் கொண்டு வருவதாக ஒரு கற்பனை செய்துகொள்வோம். அந்த வரைபடத்தில் நம் சூரியக் குடும்பம் ஒரு புள்ளி அளவு கூட இருக்காது. ஆனால், நம் பூமியின் அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும் சூரியக் குடும்பம் எவ்வளவு பெரியது என்று.
சூரியக் குடும்பத்தின் வரைபடத்தை நம் பாடநூல்களில் பார்த்திருப்போம். நடுவே, சூரியன் இருக்க, அடுக்கடுக்காக இருக்கும் நீள்வட்டப் பாதையில் ஒன்றன் பின் ஒன்றாக புதனில் ஆரம்பித்து, தனது கோள் தகுதியை இழந்த புளூட்டோ வரை அந்தப் படங்களில் வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கும். சூரியக் குடும்ப உறுப்பினர்களின் உண்மையான அளவைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்த்தால் அவற்றை ஒரு வரைபடத்துக்குள் கொண்டு வருவது இயலாத காரியம். அவற்றின் அளவுகளை வைத்து விகிதாச்சாரப்படி ஒரு வரைபடத்தை எழுத்தாளர் பில் பிரைசன் தனது எ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் நியர்லி எவரிதிங் நூலில் கற்பனை செய்துபார்த்திருக்கிறார்.
உண்மையான தொலைவு?
பூமியை ஒரு பட்டாணி அளவுக்கு வரைந்தால் விகிதாச்சாரப்படி வியாழன் கோளை ஆயிரம் அடிகள் தள்ளிதான் வரும். புளூட்டோ ஒன்றரை மைல் தூரம் தள்ளிதான் வரும். இந்த விகிதாச்சாரத்தில் அது பாக்டீரியா அளவில்தான் இருக்கும். வரைபடமே இவ்வளவு பெரிதாக இருக்குமென்றால் உண்மையான தொலைவு எவ்வளவு நீண்டதாக இருக்கும்!
பிரம்மாண்டமான விளிம்பு
பெரும்பாலான சூரியக் குடும்பத்தின் வரைபடத்தைப் பார்த்தால் ஏதோ புளூட்டோவுடன் சூரியக் குடும்பமே முடிந்துவிடுவதுபோல்தான் வரைந்திருப்பார்கள். உண் மையில் புளூட்டோவுக்கு அப்பால்தான் சூரியக் குடும்பத்தின் பெரும்பான்மைப் பரப்பு விரிந்திருக்கிறது. புளூட்டோ அமைந்திருக்கும் பிராந்தியத்தை கைப்பர் பட்டை என்பார்கள். அதையும் தாண்டிப் போய்க் கொண்டே இருந்தால் சூரியக் குடும்பத்தில் விளிம்பாக ஓர்ட் திரள் இருக்கும். விளிம்பு என்று ஒரு பேச்சுக்குத்தான் சொல்ல முடியுமே தவிர அந்த விளிம்பே அவ்வளவு பிரம்மாண்டமானது.
ஓர்ட் திரளின் உள்விளிம்பு சூரியனிலிருந்து 50,000 வா.அ. (காண்க பெட்டி) தொலைவிலும் வெளிவிளிம்பு 2,00,000 வா.அ. தொலைவிலும் அமைந்திருக்கும். சுருக்க மாகச் சொல்லப் போனால் சூரியனிலிருந்து புளூட்டோ வரையிலான தொலைவு என்பது சூரியனிலிருந்து ஓர்ட் திரள் வரையிலான தொலைவில் அய்ம்பதாயிரத்தில் ஒரு பங்குதான்.
சூரியன், கோள்கள், குறுங்கோள்கள், நிலவுகள், விண்கற்கள் உள்ளிட்ட சூரியக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை கோடிக் கணக்கில் இருக்கும். ஆனால், சூரியக் குடும்பத்தில் இந்த விண்பொருட்கள் ஆக்கிரமித் திருக்கும் இடம் என்பது ஒரு லட்சம் கோடியில் ஒரு பங்குதான். இவ்வளவு பரந்து விரிந்த நம் சூரியக் குடும்பத்தில் மனிதர்கள் பயணித்ததிலேயே அதிகபட்சத் தொலைவு 4,00,171 கி.மீ.தான். 1970-ல் நாசாவின் அப்பல்லோ 13 மிஷன் விண்கலத்தில் பயணித்த விண்வெளி வீரர்கள் நிலவின் மறு பக்கத்தைச் சுற்றியபோது படைத்த அந்த சாதனை இன்னமும் முற.
மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிக அதிக தொலைவு பயணித்த பொருள் என்றால் அது வாயேஜர்-1 விண்கலம்தான். 1977, செப்டம்பர் 5 அன்று செலுத்தப்பட்ட அந்த விண்கலம் 2,020 கோடி கி.மீ. தொலைவைத் தாண்டி இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் உருவாக்கிய கலங்களின் உச்சபட்ச வேகங்களுள் வாயேஜரின் வேகமும் ஒன்று. மணிக்கு 62,140 கி.மீ. வேகம்! இந்த வேகத்தில் பயணித்தாலும் ஓர்ட் திரளை அது சென்றடைவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் என்றும் அதைக் கடப்பதற்கு 30,000 ஆண்டுகள் ஆகும் என்றும் நாஸாவின் கணக்கு சொல்கிறது.
நம் குடும்பம் எவ்வளவு பெரியது என்று இப்போது தெரிகிறதா? என்ன, குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் இடையே அவ்வளவு தூரம்! ஓர்ட் திரளிலிருந்து சூரியனை நம்மால் பார்க்க முயன்றால் மிகவும் பலவீனமான, நுண்ணிய ஒளிப்புள்ளியாய் அது தெரியும். ஆனால், அந்த ஒளிப்புள்ளியின் சக்தி ஓர்ட் திரள்வரை இழுத்துப்பிடித்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய வியப்பு!
எவ்வளவு தூரம்?
வானியலைப் பொறுத்தவரை தூரங்களை அளவிட ஒளியாண்டு (9,46,073,04,72,580.8 கி.மீ.), வானியல் அலகு ( ) ஆகியவற்றையே பயன்படுத்துகிறார்கள். சூரியனின் மையத்துக்கும் பூமியின் மையத்துக்கும் இடைப்பட்ட தொலைவான 14.96 கோடி கிலோ மீட்டர்தான் ஒரு வானியல் அலகு (தமிழில் சுருக்கமாக வா.அ. என்று குறிப்பிடுவோம்). சூரியனுக்கும் சூரிய குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கும்
இடையிலான தொலைவின் சிறு பட்டியல்:
சூரியனிலிருந்து புதன் 0.39 = வா.அ. (5,79,10,000 கி.மீ.)
வெள்ளி = 0.723 வா.அ. (10,82,00,000 கி.மீ.)
செவ்வாய் = 1.524 வா.அ. (22,79,40,000 கி.மீ.)
வியாழன் = 5.203 வா.அ. (77,83,30,000 கி.மீ.)
சனி = 9.523 வா.அ. (142,46,00,000 கி.மீ.)
யுரேனஸ் = 19.208 வா.அ. (287,35,50,000 கி.மீ.)
நெப்டியூன் = 30.087 வா.அ. (450,10,00,000 கி.மீ.)
புளூட்டோ = 39.746 வா.அ. (594,59,00,000 கி.மீ.)
கைப்பர் பட்டை = 30 வா.அ. 50 வா.அ.
ஓர்ட் திரள் = 50,000 வா.அ. 2,00,000 வா.அ.

பிரபஞ்சம் அணுக்களால் நிறைந்ததா?
பிரபஞ்சம் தோன்றி 1,380 கோடி ஆண்டுகள் ஆகின் றன. அப்படியென்றால் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த பெருவெடிப்பின் போது வெளிப்பட்ட ஒளி 1,380 கோடி ஆண்டுகள் பயணித்திருக்கிறது. நமது பால்வீதியின் விட்டம் ஒரு லட்சம் ஒளியாண்டுகளிலிருந்து ஒன்றரை லட்சம் ஒளியாண்டுகள் வரை இருக்கலாம் என்று உத்தேசித்திருக்கிறார்கள். அதாவது பால்வெளியின் ஒரு துருவத்திலிருந்து புறப்படும் ஒளி இன்னொரு துரு வத்தைச் சென்றடைய ஒன்று அல்லது ஒன்றரை லட்சம் ஆண்டுகள் ஆகும்.
(ஒரு நினைவூட்டல்: ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் தொலைவுக்கு ஒளியாண்டு என்று பெயர். 9,46,073,04,72,580.8 கி.மீ.தான் ஒரு ஒளியாண்டு.) பிரபஞ்சத்தின் விட்டமோ 9,300 கோடி ஒளியாண்டுகள். பிரபஞ்சம் இப்போது இருப்பதுபோல் விரிவடையாமல் அப்படியே நின்றுவிடுவதாகக் கற்பனை செய்துகொள்வோம். இந்த நொடியில் பிரபஞ்சத்தின் ஒரு முனையிலிருந்து ஒளிக்கதிர் ஒன்று புறப்பட்டால் அது பிரபஞ்சத்தின் இன்னொரு முனையைச் சென்றடைவதற்கு 9,300 கோடி ஆண்டுகள் ஆகும். பிரபஞ்சம் இவ்வளவு பெரியதென்றால் அதில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? அதையும் உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். 10 78 அணுக்களிலிருந்து 1082 அணுக்கள் வரைக்கும் இருக் கலாம் என்பது கணக்கு. ஒன்று என்ற எண்ணுக்குப் பிறகு கிட்டத்தட்ட 80 பூஜ்ஜியங்களைப் போட்டுப் பாருங்கள். அவ்வளவு அணுக்கள். அப்படியென்றால் பிரபஞ்சம் முழு வதும் அணுக்களால் நிரம்பியது என்றுதானே எண்ணத் தோன்றும் நமக்கு. உண்மை அதுவல்ல!
பிரபஞ்சத்தின் மொத்த நிறையில் அணுக்களின் நிறை வெறும் 4.5 சதவீதம்தான்! மீதமுள்ள 95 சதவீதத்தை ஆக்கிரமித்திருப்பது என்ன? கரும்பொருள், கரும்சக்தி என்று அழைக்கப்படும் விஷயங்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பெரும்பாலான நிறையை ஆக்கிரமித்திருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள்.  பிரபஞ்சத்தின் மொத்த நிறையில் கரும் ஆற்றல் 71.4 சதவீதமும் கரும்பொருள் 24 சதவீதமும் ஆக்கிரமித்திருக்கின்றன. ஒரு கணக் கீட்டின்படி 4 கனமீட்டர்களுக்கு ஒரு நேர்மின்னணு என்ற விகிதத்தில்தான் அணுக்கள் நிறைந்திருக்கின்றன.

-விடுதலை,1.12.16


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக