வியாழன், 22 டிசம்பர், 2016

தூங்கும்போது மூளை என்ன செய்கிறது?


நாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும்? ஏன் தூங்காவிட்டால் என்ன ஆகும்? தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா?  இப்படி நிறைய கேள்விகள் சிறு வயசிலிருந்தே நம் மனதுக்குள் அடிக்கடி எட்டி பார்த்திருக்கும், இல்லையா?

மூளை செல்களை அதிகப்படியாகத் தூண்டுவது, நரம்புமண்டலத்தின் இயல்பான செயல்பாட்டையும், நரம்புத் திசுக்களையும் பாதிக்கும் நரம்புநச்சுகளை வெளியிடுவதற்குக் காரணமாக அமையலாம் என்கிறார்கள் மூளை பற்றி ஆராய்ந்த நிபுணர்கள். இது தொடர்ந்து நிகழ்வது ஆபத்தானது.

இதைத் தடுப்பதுதான் தூக்கம். மூளையில் சேர்ந்த நச்சை அகற்றும் செயல்பாட்டுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தூங்குவது, நரம்பு தூண்டல்களைக் குறைக்கும் என்றொரு கொள்கை சொல்கிறது. ஒரு வகையில் இந்தக் கொள்கை ஓய்வு கொடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது.

கற்றலுக்கு உதவும் தூக்கம்

மற்றொரு பக்கம், உறக்கம் என்பது மூளையின் கற்றல் திறனையும் அதிகரிக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். புதிதாகக் கற்றுக்கொள்ளும் திறனை நிலைப்படுத்தும் உடலியல் செயல்பாடு, மற்ற நேரங்களிலும் நடைபெறத்தான் செய்கிறது. ஆனால், இந்தச் செயல்பாட்டுக்குத் தூக்கம் முக்கிய உதவி புரிகிறது.

இது எப்படி நடக்கிறது என்றால், ஒரு செயல்திறனைப் புதிதாகக் கற்றுக் கொண்டோ அல்லது திரும்பச் செய்தோ பார்த்த பிறகு நல்லதொரு தூக்கத்தைப் பெறுவது மிகவும் முக்கியம். இப்படிச் செய்யும்போது புதிய நினைவுகளின் காரணமாக உருவான புதிய நரம்பு இணைப்புகளை நம்முடைய மூளை வலுவூட்டிக்கொள்கிறது. எனவே, நடு ராத்திரியில் விழித்து வாட்ஸ்அப், டிவி பார்க்கும் பழக்கத்தைக் குறைத்துக்கொண்டு ஒழுங்காகத் தூங்கினால்தான், புதிதாகக் கற்ற எதுவும் மனதில் தங்கும்
-விடுதலை,22.12.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக