விலங்குகள் மனிதரைப் போலப் பேச இயலாமல் இருக்கின்றன, விலங்குகளில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக மாறிய மனித விலங்கு மட்டும் பேச முடிந்தது எப்படி?
சரி, மற்ற விலங்குகளுக்கு இருப்பதுபோல் இல்லாமல், மனிதனுக்கு மட்டும் கழுத்துக்கு மேலே U வடிவத்தில் இருப்பதைக் கண்டறிந்தார்கள். இந்த எலும்பு, மனித உடலின் வேறு எந்த எலும்போடும் இணையாத தனி எலும்பு. இந்த எலும்புக்குப் பெயர் ஹைபோய்டு எலும்பு. இந்த எலும்புதான் மனிதனின் நாக்கையும் குரல் வளையையும் தாங்குகிறது. இந்தத் தனித்தன்மையான எலும்புதான் மனிதர்கள் தனித்தன்மையோடு பேசுவதற்கு உதவி புரியும் எலும்பு.
டி.என்.ஏ.ஆராய்ச்சி மனித உடல் குறித்த புதிர்களை எல்லாம் ஒவ்வொன்றாக விடுவித்துக் கொண்டு வருகிறது. மரபணு என்பது ஒரு டி.என்.ஏ.வின் ஒரு பகுதியாகும். FOXP2 என்னும் மரபணு மொழியின் வளர்ச்சியோடு தொடர்புடையது.இந்த மரபணு ஹோமோசேப்பியன்ஸ் எனப்படும் நம்மிடத்திலும் இருக்கிறது. 10000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது முன்னோர்களிடமும் இருந்திருக்கிறது. 1,50,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நியாண்டர்தால் இனம் எனப்படும் நமக்கு முந்தைய மனித இனத்திடமும் இருந்திருக்கிறது என்று அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய டி.என்.ஏ.க்களை ஆய்வு செய்வது நமக்கு எப்படிப் பேச்சு வந்தது என்பது குறித்துக் கூடுதல் செய்திகளைத் தருகிறது என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த ஹைபோய்டு என்னும் எலும்பை மட்டும் நம்முடைய உடலில் இருந்து தனியாக எடுத்துவிட்டால், நம்மால் உயிர் வாழ முடியும். ஆனால், நம்மால் பேச இயலாது. அதைப் போல இந்த FOXP2 என்னும் மரபணு இல்லையென்றாலும் நம்மால் பேச இயலாது. ஒரு மரபணு, அந்த மரபணுக்கு ஏற்றவாறு நமது உடலில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி மாறுதல், இந்த இரண்டும் இணைந்துதான் நம்மை, விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்துகிறது. மனிதராக நம்மை இந்த மண்ணில் நடமாட வைக்கிறது. பேச வைக்கிறது, பாட வைக்கிறது.
காடுகளில் விலங்குகளோடு விலங்குகளாகத்தான் மனிதன் வாழ்ந்திருக்கிறான். ஆடைகள் இல்லாமல், விலங்குகள் போல இருந்த காலத்தில் மற்ற கொடிய விலங்குகளைப் பார்த்துப் பயந்து பயந்து வாழ்ந்திருக்கிறான். அப்படி வாழ்ந்த காலத்தில், தனக்குத் திடீரென ஏற்படும் அச்சுறுத்தலையும், பயத்தையும் அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்த ஓசையை எழுப்பியிருக்கிறான்.அந்த ஓசை எழுப்புதல்,பயத்தின் காரணமாக ஓர் ஓசையாகவும், இனப்பெருக்க இச்சையின்போது வேறு ஓர் ஒலியாகவும் ஒலிக்க ஆரம்பித்து மெல்ல மெல்ல ஓசையும்,ஒலியும் மொழியாக மாறியிருக்கிறது. 1,50,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நியாண்டர்தால் மனித இனத்திற்கு இந்த ஹைபோய்டு எலும்பு வெறும் ஓசையும், ஒலியும் எழுப்ப மட்டும் பயன்பட்டிருக்கலாம். ஆனால், மனித இன வளர்ச்சியில், உலகம் முழுவதும் இன்று புழங்கும் 7000 மொழிகளுக்கு மேற்பட்ட மொழிகளின் தோற்றத்தில்,வளர்ச்சியில் ஹைபோய்டு எலும்பும் FOXP2 என்னும் மரபணுவும் இணைந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன…
அறிவியல் அறிஞர்கள் விலங்குகளில் இருக்கும் மரபணுக்களை மாற்றி இருக்கிறார்கள். நீக்கியிருக்கிறார்கள். அதற்கான சோதனைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன ஒரு கழுதையிடம் அல்லது எருமை மாட்டில் இருக்கும் மரபணுவுக்குப் பதிலாக FOXP2 மரபணு சேர்க்கப்பட்டு, அவற்றின் கழுத்தில் ஹைபோய்டு எலும்பிலும் மாற்றம் செய்யப்பட்டால், மனிதர்களைப் போல எருமை மாடுகளும் பேச ஆரம்பிக்கலாம். இன்னும் தீவிரமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டால் ஒவ்வொரு மொழிக்கும் இருக்கும் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு உரிய மரபணு இது, ஆங்கில மொழிக்கு உரிய மரபணு இது என்றுகூடத் தெரிவிக்கப்படலாம்.அப்போது ஹிந்தி மொழி பேசும் எருமை மாடு, சமஸ்கிருத மொழி பேசும் கழுதை என்று கூட விலங்குகள் பேச ஆரம்பிக்கலாம். அப்போது மரபணுக்களை மாற்றிப் புதிய மொழிகளை எளிதாகக் கற்றுக்கொள்ளும் வழிமுறைகளும் கூட மனிதர்களுக்கு ஏற்படலாம். ஆனால் அதிலும் ஓர் ஆபத்து இருக்கிறது.
நெருக்கடி நிலை காலத்தில் மேனாள் பிரதமர் இந்திராகாந்தியின் மகன் சஞ்சய்காந்தி, நிறையப் பேருக்கு அவர்கள் விரும்பாமலேயே கட்டாயக் கருத்தடை செய்துவிட்டதுபோல், மரபணு மாற்றத்தின் மூலம் நம்மிடையே நாம் விரும்பாத மொழிகள் அறிவியல் மூலமாகத் திணிக்கப்படலாம்.
காது கேட்க முடியாதவர்களைக் கேட்க வைப்பதற்கு, வாய் பேச முடியாதவர்களைப் பேச வைப்பதற்கான ஆராய்ச்சி என்பது அறிவியல் அறிஞர்களால் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறும் ஒரு முயற்சியாகும். தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், தன் வீட்டில் காது கேட்காமல் இருந்த உறவுகளுக்குக் காது கேட்கும் கருவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியின்போதுதான் தொலைபேசியைக் கண்டுபிடித்தார் என்பது வரலாறு. இன்றைக்குக் காது கேட்பதற்கான பல்வேறு கருவிகள் வந்துவிட்டன.அதுபோலவே பிறவியிலேயே பேச முடியாத குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் முழுமையாகப் பேச வைப்பதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. வாய் பேச முடியாமல் பிறக்கும் பல குழந்தைகள் இப்போதெல்லாம் அறுவை சிகிச்சையின் மூலம் பேசும் வாய்ப்பினைப் பெறுகின்றார்கள்.
மாற்றுத் திறனாளிகள் பற்றி அக்கறை கொண்ட ஒருவர், பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சைகை மொழியை அவர்கள் மட்டும்தான் படிக்கின்றார்கள், பயன்படுத்துகிறார்கள். இயல்பாக இருக்கும் மனிதர்களும் அந்தச் சைகை மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும் என்றார். அவர்களுக்கு ஓர் ஆபத்து என்று சைகை மொழி மூலம் சொன்னால், அதனைப் புரிந்து கொண்டு இயல்பான உடலமைப்பு உள்ளவர்கள் உதவ முடியும் என்றார். பேசக்கூடிய நாம், எத்தனையோ மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புகிறோம், ஆனால் சைகை மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று என்றாவது விரும்பினோமா என்னும் கேள்வி எனக்குள் எழுந்தது.
மொழி என்பது ஒரு கருவி என்றார் தந்தை பெரியார். எப்படிக் கருவியின் தன்மை கால வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறதோ, அதுபோல மனிதன் தொடர்பு கொள்வதற்குப் பயன்படக்கூடிய மொழியும் மேம்பாடு அடைந்துகொண்டே இருக்க வேண்டும், அதற்கான வழிமுறைகள் இருக்க வேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார்.அறிவியலும் அதைத்தான், எப்படி மொழி பிறந்தது, வளர்ந்தது என்பதை மரபணு வழியாக விளக்குகிறது.விளக்குவது மட்டுமல்ல,அதற்கான மனித உடலில் இருக்கும் வசதிகள் என்ன? அது எப்படி ஏற்பட்டது என்பதற்கான பெரும் விளக்கங்களை அறிவியல் கொடுக்கிறது.வரும்காலத்தில் இன்னும் பல புதிர்களை அறிவியல் அவிழ்க்கும்.அதன் மூலம் இன்னும் மனித இனம் சிறக்கும்.
-உண்மை இதழ்,1-16.11.25
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக