செவ்வாய், 5 மார்ச், 2019

செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

புதுடில்லி, மார்ச் 5 செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் ஏரியாக இருந்தவை காலப் போக்கில் நிலத்தடி நீராக மாறியுள்ளதாகவும், அவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான கனிமங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் மிகப்பெரிய ஏரி இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்ய ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு தெரிவித்தனர்.

நெதர்லாந்தில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, செவ்வாய் கிரகம் வறண்ட தன்மை கொண்டது. எனினும் நீர் ஆதாரங்கள் இருந்ததற்கான தடங்கள் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், இப்போது வெளியாகியுள்ள புதிய ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக நெதர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில்  ஏரி, குளம் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் இருந்திருக்கின்றன. அந்த கிரகத்தின் காலநிலை மாற்றத்தால் அவை நிலத்தடி நீராக மாறியுள்ளன. எங்களது ஆய்வில், நிலத்தடி நீர் இருப்பதற்கான தடயம் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. அதன் அளவு மற்றும் தன்மை குறித்து இப்போது கூற இயலாது. எனினும் செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளது என்றார்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து  4000- - 4500 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் நீர் இருப்பதற்கான அறிகுறி கிடைத்துள்ளது. அதில் கார்பனேட்ஸ், சிலிக்கேட்ஸ் உள்ளிட்ட கனிம வளங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகை யில், செவ்வாய் கிரகத்தின் வரலாறு இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. அங்கு மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதா? என இதுவரை புரிந்துகொள்ள முடியவில்லை.  3-4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பெருங்கடல் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த பெருங்கடல் கிரகம் முழுவதும் உள்ள ஏரிகளுடன் இணைந்திருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பயனுள்ளவை. இவை செவ்வாய் கிரகம் குறித்து மேலும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்றனர்.

- விடுதலை நாளேடு, 5.3.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக