சனி, 30 மார்ச், 2019

உலகின் மிக நீள உப்புப் படிம குகை: இஸ்ரேலில் கண்டுபிடிப்புடெல்அவில், மார்ச் 30 உலகின் மிக நீளமானதாக கணக்கிடப்பட்டுள்ள உப்புப் படிம குகை, இஸ்ரேலில் கண்டறியப் பட்டுள்ளது. மால்ஹாம் என பெயிரிடப் பட்டுள்ள அந்த குகை, 10 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட தாகும்.

இதற்கு முன்பாக, ஈரானின் தெற்குப் பகுதியில் காசெம் தீவில் உள்ள 3என் என்ற குகையே உலகின் மிக நீளமான உப்புப் படிம குகையாக அறியப்பட்டிருந்தது. மொத்தம் 6 கி.மீ. நீளம் கொண்ட அந்த குகையின் சாதனையை தற்போது மால்காம் குகை முறியடித்துள்ளது.

இஸ்ரேலின் மிகப் பெரிய மலையான மவுண்ட் சோடோமில் உள்ள இந்த மால்ஹாம் குகையை முதன் முதலாக, ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் குகைகள் ஆராய்ச்சி மய்யத்துக்கான நிறுவனர் மற்றும் இயக் குநரான அமோஸ் ஃப்ரம்கின் 1980-களில் கண்டறிந்தார். அப்போது இந்தக் குகையை அவர் சுமார் 5 கி.மீ. அளவுக்கு அளந்திருந்தார்.

இதனிடையே, 2006-ஆம் ஆண்டில் ஈரானில் 6 கி.மீ. நீளம் கொண்ட 3என் குகை கண்டறியப்பட்டதை அடுத்து, அதுவே உலகின் மிக நீளமான உப்புப் படிம குகை யாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமோஸ் ஃப்ரம்கின் தொடங்கிய மால்ஹாம் குகையை அளவிடும் பணியை மீண்டும் தொடர்வதென இஸ் ரேலைச் சேர்ந்த குகைகள் ஆராய்ச்சியாளர் யாவ் நெகேவ் இரு ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தார்.

மற்றொரு குகை ஆராய்ச்சியாளரான போஸ் லேங்ஃபோர்டு, பல்கேரிய குகை ஆராய்ச்சியாளர்கள் சிலர், உள்ளூர் மக்கள் ஆகியோரின் பங்களிப்புடன் மால்காம் குகை ஆராய்ச்சியை நெகேவ் தொடங்கினார்.

முதல் கட்டமாக கடந்த ஆண்டில் 10 நாள்களும், இரண்டாவது கட்டமாக இந்த ஆண்டில் 10 நாள்களும் குகையை அளவிடும் பணிகளை அவர்கள் மேற்கொண்டனர்.

லேசர் தொழில்நுட்பத்துடன் மால்காம் குகையை அளவிட்ட அந்தக் குழுவினர், அதன் நீளம் 10 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 30.3.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக