வியாழன், 26 ஜனவரி, 2017

இதயத் துடிப்பே கடவுச் சொல்!  புதிய தொழில்நுட்பம்




இணையவழி மருத்துவத்தின்போது தனிநபரின் உடல்நலம் பற்றிய மின்னணுத் தகவல்களைப் பாதுகாப்பதற்காக, அவரது இதயத் துடிப் பையே கடவுச் சொல்லாக (பாஸ்வேர்ட்) பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பிங்கம்டன் பல்கலைக்கழகப் பேராசியர் ஷன்பெங் ஜின் கூறியதாவது:

தற்போது தகவல்களைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் “என்க்ரிப்ட்’ தொழில்நுட்பங்கள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாகவும், செலவு பிடிப்பவையாகவும் உள்ளன.

அதனால், இந்தத் தொழில்நுட்பங்களை இணையவழி மருத்துவம், செல்லிடப் பேசி மூலமான மருத்துவம் போன்ற வசதிகளைப் பயன்படுத்தும்போது, ரகசியத் தகவல்களைப் பாதுகாக்க அத்தகைய பாரம்பரியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, “என்க்ரிப்ட்’ தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, எளிமையான, மலிவான, மருத்துவத் துறைக்கென்று பிரத்யேகமான தகவல் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

அதன்படி, நோயாளியின் “இசிஜி’ பரிசோனை வரைபடத்தை கடவுச் சொல்லாகப் பயன்படுத்தி அவரது உடல்நிலை குறித்த விவரங்களைப் பாதுகாக்கும் முறையை உருவாக்கி வருகிறோம்.

பொதுவாக, நோயாளிகளின் உடல்நிலையை அறிந்துகொள்ள “இசிஜி’ பரிசோதனைதான் மிக அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, அந்தப் பரிசோதனை வரைபடத்தை கடவுச் சொல்லாகப் பயன்படுத்தத் தீர்மானித்தோம்.

இதன்மூலம், நோயாளிகளின் உடல்நலம் குறித்த மின்னணு தகவல்களை சுலபமாகவும், மலிவாகவும் பாதுகாக்க வழி ஏற்படும் என்றார் பேராசிரியர் ஷன்பெங் ஜின்.
-விடுதலை,27.1.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக