ஞாயிறு, 1 ஜனவரி, 2017

பெண்ணின் இதயம் ஆணுக்கு பொருத்தப்பட்டது


என்னே விஞ்ஞானத்தின் வீச்சு! பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் விமானத்தில் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது

சென்னை, செப்.4- பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இங்குள்ள நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

கருநாடக மாநில எல்லையில் வசித்த தமிழகத் தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் கடந்த ஒன்றாம் தேதி ஓசூர் சாலையில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் கெங்கேரியில் உள்ள பி.ஜி.எஸ். குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் அவரது உடல்நிலை மோசமாகி மூளைச்சாவு அடைந்தார்.
இந்தத் தகவல் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட அவர்கள் கதறி அழுதனர்.

ஆனால் பெண்ணின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயல் இழக்கவில்லை. அதை பெண்ணின் குடும்பத்தாரிடம் தெரிவித்த மருத்துவர்கள் அந்த உறுப்புகளை பிறருக்குக் கொடையளிக்கலாம் என்றும் கூறினார்கள்.

அதைக் கேட்ட அந்த பெண்ணின் குடும்பத்தார் தாங்கள் மிகுந்த சோகத்தில் இருந்தபோதிலும், பிறருக்கு வாழ்வு கிடைக்குமே என்று கருதி அந்தப் பெண்ணின் உறுப்புகளைக் கொடையளிக்க ஒப்புக் கொண்டனர்.

உடனடியாக, அவரது உடலில் உள்ள உறுப்புகளை கொடை பெறுவதற்கான நோயாளிகளை மருத்துவர்கள் தேர்வு செய்தனர். இதில் அவரது 2 கண்கள், 2 சிறு நீரகங்களை பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப் பட்டது.

ஆனால், இதயத்தைக் கொடை பெறும் நோயாளிகள் பெங்களூருவில் இல்லாததால், தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் இதய நோயாளியை தேர்வு செய்ய முடிவு செய்தனர்.

சென்னை அடையாறில் உள்ள போர்டீஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மும் பையைச் சேர்ந்த 40 வயது ஆணுக்கு இதயத்தை பொருத்துவதாக முடிவு செய்யப்பட்டு, மருத்துவ மனை நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயத்தை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். பெண்ணின் உடலில் இருந்த இதயத்தை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.

இதயம் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட பிறகு 6 மணி நேரம்வரை மட்டுமே அதன் செயல்பாடு இருக்கும் என்பதால், அதை நேற்று மதியம் 3.30 மணி விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி பாதுகாப்பான பெட்டியில் வைக்கப்பட்ட இதயம், குளோபல் மருத்துவமனை ஆம்புலன்சு வேனில் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்னொரு ஆம்புலன்சு வேனில் போர்டிஸ் மலர் மருத்துவமனை மருத்து வர்கள் சென்றனர்.

மாநகர போக்குவரத்துக் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன், இதயம் எடுத்து செல்லப்பட்ட ஆம்புலன்சு வேன் சிக்னல்களில் நிற்காமல் விமான நிலையத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னால் போக்குவரத்து காவல்துறையினர் வழியில் எங்கும் பச்சை சிக்னல் ஏற்படுத்தும்படி வயர்லஸ் மூலம் கூறியபடியே செல்ல, அதைப் பின்தொடர்ந்து 2 ஆம்புலன்சு வேன்களும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் நோக்கி விரைந்தன.

சுமார் 62 நிமிடத்தில் 45 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து அந்த ஆம்புலன்சு வேன்கள் விமான நிலை யத்தை அடைந்தன. பின்னர் விமானத்தில் மதியம் 3.22 மணிக்கு இதயம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

வழக்கமாக பெங்களூருவில் இருந்து ஏர்-இந்திய விமானம் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேரும். ஆனால் இதயம் கொண்டு வரவேண்டியது இருந்த தால் 8 நிமிடங்கள் முன்னதாக மாலை 3.22 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டது. இந்த விமா னத்தை விமானி பிரேம்சங்கர் இயக்கினார். இதில் 85 பயணிகளும் பயணம் செய்தனர். மாலை 4.22 மணிக்கு சென்னை வரவேண்டிய விமானம், 6 நிமிடங்களுக்கு முன்னதாக மாலை 4.16 மணிக்கு தரை இறங்கியது.

ஓடுபாதையில் வந்து நின்று கதவுகள் திறக்க குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் ஆகும். ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு 4 நிமிடங்களில் அதாவது 4.20 மணிக்கு விமானத்தை நிறுத்தி கதவை திறக்கச் செய்தார். மருத்துவர்கள் பாவுலின் கிருஷ்ண முரளி, ராஜீ, சவுத்திரி ஆகியோர் பாதுகாப்புடன் இதயத்தை கொண்டு வந்தனர். முதலில் இதயத்துடன் இவர்கள் விமானத்தில் இருந்து கீழே இறங்கினார்கள்.

இதயத்தைக் கொண்டு செல்ல வேண்டிய ஆம் புலன்ஸ், விமான நிலையத்தின் உள்ளே ஓடுபாதைக்கு அருகில் அனுமதிக்கப்பட்ட விவரம் தெரியாமல் இதயத்துடன் வெளியே செல்ல முற்பட்டனர். விமான நிலையத்தின் உள்ளே ஆம்புலன்சு நிறுத்தப்பட்டு இருக்கும் தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் இருக்கும் பகுதிக்கே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு இந்த ஆம்புலன்ஸ் அங்கு இருந்து புறப்பட்டு அடையார் மலர் மருத்துவமனையை நோக்கி புறப்பட்டது. அங்கு இருந்து மலர் மருத்துவமனை 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தூரத்தை 7 நிமிடத்தில் கடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இதயத்தை 4.37 மணிக்கு கொண்டு வந்தார்.

உடனடியாக,  நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் தமிழ்நாட்டு இளம் பெண்ணின் இதயம் மும்பை ஆணின் உடலில் பொருத்தப்பட்டு தனது இயக்கத்தை இடைவிடாமல் தொடர்ந்தது.

போர்டீஸ் மலர் மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர் மருத்துவர் சுரேஷ் ராவ் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர்.

-விடுதலை,4.9.14

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக