சனி, 11 பிப்ரவரி, 2017

அழிந்து போன உயிரினங்களை மீண்டும் உருவாக்க

அழிந்து போன உயிரினங்களை
மீண்டும் உருவாக்க 80 லட்சம் ஆண்டுகள் ஆகும்!


பூமியில் அழிந்து போன உயிரினங்களை மீண்டும் உருவாக்க வேண்டுமானால் அதற்கு குறைந்தபட்சம் 80 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. வவ்வால் உள்ளிட்ட பாலூட்டி இனங்களை அந்த விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர்.
வட அமெரிக்க கண்டத்தையொட்டி அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கரீபியன் தீவுகளில் காணப்பட்ட வௌவால் இனங்கள் பல முற்றிலும் அழிந்துவிட்டன. இவை அழிவதற்கான குறிப்பான காரணம் என்ன என்பது குறித்து முழுமையான, விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கா விட்டாலும் கூட, மனிதர்களின் குடியேற்றம் தொடங்கிய வுடன் அங்கிருந்த பல உயிரினங்கள் அழியத் தொடங் கின என்று தெரிய வருகிறது.
இதில் மிக அதிகமான அழிவை நேரிட்டது வவ்வால் இனங்கள்தான். மனிதர்களின் வருகைக்குப் பிறகு, அங்கு பிற விலங்கு களின் வாழ்விடங்கள் சுருங்கத் தொடங்கின். பல்வேறு உயிரினங்களின் அழிவுக்கு இதுதான் முக்கியக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அழிந்து போன வவ்வால் இனங்களுக்கு மிக நெருக்கமான பிற வவ்வால் இனங்களை வைத்து ஒப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கணினி மூலம் மாதிரி இன உருவாக்கம் செய்யப்பட்டது. அந்தப் பாலூட்டி இனங்கள் மீண்டும் உருவாக 80 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பூமியில் பல உயிரினங்களின் அழிவுக்கு மனிதர் களின் குடியேற்றமே காரணம் என்பது ஏற்கெனவே நடைபெற்ற பல ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு அழிந்து போன ஓர் இனம் மீண்டும் பூமியில் உருவாக 80 லட்சம் ஆண்டுகள் தேவைப்படும் என்பதை நினைக்கவே மலைப்பாகவும் வேதனை அளிப்பதாகவும் இருக்கிறது என்று அந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் குழுவைச் சேர்ந்த லிலியானா டேவலாஸ் கூறினார்.
புதிய உயிரின உருவாக்கத்துக்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று நாம் அறியும் அதே வேளையில், பிற உயிரினங்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் மனிதர்கள் குறுக்கீட்டால் உயிரின அழிப்பு மிக வேகமாக நடைபெறுகிறது என்பது கவனிக்கத் தக்கது.
உயிரின அழிப்பு, உருவாக்கம் குறித்த அந்த ஆய்வின் முடிவுகளை “நேச்சர் இகாலஜி அண்ட் எவல்யூஷன்’ ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-விடுதலை,19.1.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக