ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

கலிலியோவின் முக்கியக் கண்டுபிடிப்பு!


கலிலியோ தலைசிறந்த இத்தாலிய விஞ்ஞானி தனது காலத்தில் வேறெந்த விஞ்ஞானியையும் விட மிகச் சிறந்த அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்ததற்காக இவர் உலகப் புகழ் பெற்றார். இவர் பைசா நகரில் 1564-இல் பிறந்தார். இளமையில் பைசா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார்.
ஆனால், வறுமையால் பாதியிலேயே படிப்பை விடடார். எனினும் அதே பல்கலைக் கழகத்தில் 1589இல் இவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் படுவர் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்து 1610 வரையில் அங்கு பணிபுரிந்தார். இந்தக் காலத்தின்போது தான் இவர் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடித்தார்.
இவருடைய முக்கியக் கண்டுபிடிப்புகளில் முதலாவது, எந்திரவியல் தொடர்புடையதாகும். லேசான பொருள்களைவிடக் கனமான பொருள்கள் வேகமாக கீழே விழும் என அரிஸ்டாட்டில் கூறியிருந்தார். அந்தக் கிரேக்கத் தத்துவஞானியின் இக்கூற்றை தலைமுறை தலைமுறையாக அறிஞர்கள் நம்பிவந்தார்கள். ஆனால், கலிலியோ இந்தக் கூற்றைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார்.
பல தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் அரிஸ்டாட்டிலின் இந்தக் கூற்று தவறானது என்பதை கலிலியோ விரைவிலேயே கண்டுபிடித்தார். காற்றின் உராய்வினால் வேகம் சற்று குறையலாம் என்பதைத் தவிர, கனமான பொருள்கள், லேசான பொருள்கள் இரண்டுமே ஒரே வேக வீதத்தில்தான் கீழே விழுகின்றன என்று  அவர் கூறினார்.
இதைக் கண்டுபிடித்த பின்னர் கலிலியோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். ஒரு குறிப்பிட்ட கால அளவின்போது பொருள்கள் எவ்வளவு தூரம் விழுகின்றன என்பதை மிகக் கவனமாக அளவீடு செய்த இவர். கீழே விழும் ஒரு பொருள் செல்லும் தொலைவானது, அது கீழே விழுகின்ற வினாடிகளின் எண்ணிக்கையில் இருபடி வர்க்கத்துக்குச் சரிசம வீத அளவில் இருக்கும் என்பதைக் கண்டுபிடித்தார். இது வேக வளர்ச்சி வீதம் ஒரே சீராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
கலிலியோவின் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. இவர் தமது பரிசோதனைகளின் முடிவுகளைக் காண, கணிதச் சூத்திரங்களையும், கணித முறைகளையும் விரிவாகப் பயன்படுத்தியது நவீன அறிவியலின் முக்கிய அம்சமாகும்.
-விடுதலை ஞா.ம.,6.9.14

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக