வியாழன், 23 பிப்ரவரி, 2017

விண்வெளியில் எப்படித் தூங்குவார்கள்?எப்படி சிந்திப்பார்கள்?

விண்வெளியில் புவியீர்ப்பு விசை சுத்தமாக இருக்காது. இதனால் விண்வெளி வீரர்-வீராங்கனைகளால் நிற்கவோ, நடக்கவோ முடியாது.  சர்வதேச விண்வெளி நிலையத்திலும் விண்கலங்களிலும் ஈர்ப்பு விசை சுத்தமாக இருக்காது. இதனால் அங்கே வாழும் விண்வெளி வீரர்-வீராங்கனைகள் தினசரி தூங்க வேண்டுமென நினைத்தால் உறங்கும் பைகளில்  உள்ளே நுழைந்து, தங்களைத் தாங்களே கட்டிப் போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தூக்கத்திலும் அவர்கள் அலைபாய்ந்துகொண்டே இருப்பார்கள். அது மட்டுமில்லாமல் பூமியில் உறங்குவதைப் போல, விண்வெளியில் இடைத் தொந்தரவு இல்லாமல் தொடர்ச்சியாக உறங்குவது சாத்திய மில்லை.

இதற்கு ஈர்ப்பு விசை இல்லாமல் இருப்பது முதன்மைக் காரணமாக இருக்கலாம். அல்லது எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் இயந் திரங்களின் ஓசை, மனம் கிளர்ச்சியடைந்த நிலை, மன அழுத்தம், காலக் குழப்பம் போன்றவை காரணமாக இருக்கலாம். ஏனென்றால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 15 சூரிய உதயம், 15 சூரிய மறைவு நிகழும். விண்ணில் அதிகபட்சமாக ஆறு மணி நேரம்தான் ஒருவரால் தூங்க முடிந்திருக்கிறது. அதேநேரம் இந்தத் தூக்கமே ஒருவருடைய உடல்நிலைக்குப் போதும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏனென்றால், ஈர்ப்பு விசை இல்லாமல் இருப்பதால் உடல் அதிகக் களைப்பை உணராது.
எப்படி சிந்திப்பார்கள்?

விண்வெளிப் பயணம் என்பது நிச்சயமாகக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான். ஏனென்றால், பூமியில் நிலவும் புவியீர்ப்பு விசை விண்வெளியில் இருக்காது. நம்முடைய உள்காதில் உள்ள புலனுணர்வு அமைப்பு, புவியீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய உடலைச் சமநிலையில் வைத்திருக்கிறது. இந்த அமைப்பு விண்வெளியில் செயல்படாது. அதன் காரணமாக விண் கலங்களுக்குள் எது நேராக இருக்கிறது, எது தலைகீழாக இருக்கிறது என்பதை மூளையால் உணர்ந்துகொள்ள முடியாமல் போகும். தனக்கும் ஒரு பொருளுக்கும் இடையே உள்ள தொலைவைக் கணிக்கும் திறன் விண்வெளி வீரர்களுக்குப் பாதிக்கப்படும். ஒரு பொருளின் பருண்மையை மூளை உணர்ந்து கொள்ளும் திறனும் பாதிக்கப்படும். விசித்திரமான புலனுணர்வு அனுபவங்கள் ஏற்படும்.

எப்படியென்றால், தன்னைச் சுற்றியுள்ள எல்லாமே திடீரென்று தலைகீழாகக் கவிழ்ந்து விட்டதைப் போன்ற பிரமை ஏற்படும். சில நேரம், தாங்களே தலைகீழாகத் தொங்குவது போன்ற எண்ணமும் எட்டி பார்க்கும்.

இதனால்  நம்மைப்போல் இயல்பாகச் சிந்திப்பது, நிச்சயம் அவர்களுக்குக் கடினமாகவே இருக்கும். அதன் காரணமாகவே, விண்வெளி வீரர்-வீராங்கனைகள் விண்வெளிப் பித்து அல்லது விண்வெளி மந்தநிலையால் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

விண்வெளியில் சதம் அடித்த இஸ்ரோ!

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி பொங்க கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, இஸ்ரோவும் சதம் அடிக்கும் என அறிவித்தார். அதற்கு ஏற்ப பி.எஸ்.எல்.வி.யின் எக்ஸ் எல் மாடல் 37 ராக்கெட்டில் இந்தியாவின் மூன்று செயற்கைக்கோள் மற்றும் 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ் ரோ கடந்த வாரம் விண்ணில் ஏவியது. இதன் மூலம் இதுவரை ஒரே ராக்கெட்டில் 37 விண்கலங்களை விண் ணில் செலுத்திய ரஷ்யாவின் சாதனையை முறியடித்துப் புதிய உலக சாதனை படைத்துள்ளது இந்தியா.

இஸ்ரோவின் இந்த முயற்சியின் முக்கியத்துவம் 104 விண்கலங்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது மட்டுமல்ல. அத்தனை செயற்கைக்கோள்களைக் கிட்டத் தட்ட ஒரே உயரத்தில் ஒரே சமயத்தில் ஒன்றோடொன்று மோதிவிடாமல் விண்ணில் செலுத்தப் புது யுக்தியை வடிவமைத்ததுதான்.

மோதாமல் ஓடு!

செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விடாமல் 104 செயற்கைக்கோள்களையும், ஒவ்வொன்றாக 510 முதல் 524 கி.மீ. உயரத்தில் வெறும் 12 நிமிடக் கால அளவில் விண்ணில் ஏவ வேண்டும் என்பதுதான் இஸ்ரோ முன் இருந்த சவால்.

அடுத்தடுத்த சவால்கள்!

அய்க்கிய அரபு எமிரேட்ஸ், சுவிஸ், அமெரிக்கா எனப் பல நாடுகளின் செயற்கைக்கோள்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்துப் பொதியாகக் கட்டுவது ஒரு சவால். கிட்டத்தட்ட ஒரே உயரத்தில் அவ்வளவு செயற்கைக் கோள்களையும் செலுத்துவது மற்றொரு சவால். இரண்டு பக்கமும் இரு வேறு எடையுடைய பையைக் கட்டி செல்லும்போது அதிலிருந்து ஒரு பை கழன்று கீழே விழுந்துவிட்டால் பேலன்ஸ் செய்வது எப்படிச் சிரமமோ, அவ்வாறு பல்வேறு எடைகளுடைய செயற்கைக் கோள்களை ஓன்றாக ராக்கெட்டிலிருந்து விடுவிப்பது மூன்றாவது சவால். வெறும் பத்து நிமிடத்தில் எல்லாச் செயற்கைக்கோள்களும் விடுபட்டு விண்ணில் செல்லும் பாதைகளைக் கண்காணித்து, அதனைப் பூமியில் உள்ள கட்டுப்பட்டு அறைக்குத் தெரிவித்து அந்தச் செயற்கைக் கோள்களைச் சரியான பாதைக்கு இயக்குவது பெரும் சவால்.

இந்தச் சாதனையைப் படிப்பினையாகக் கொண்டு மேலும் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் எட்டு வீடியோ கேமராக்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டன. இவை ராக்கெட் விண்ணில் செல்வது, பொதிகள் அவிழ்ந்து முறையாக விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்படுகிறதா என்பதையெல்லாம் செல்ஃபி எடுத்துக் கண்காணித்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகளுக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தன. இந்தத் தரவுகளை வைத்து மேலும் நுட்பமாக அடுத்த முறை செயல்படுத்தப் பாடம் கற்கலாம்.

நூற்றுக்கும் அதிகமான செயற்கைக் கோள்களை விண்ணில் முறையாக ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் முதலில், மூன்றிலிருந்து நான்கு நானோசெயற்கைக் கோள்களைப் பொதிந்து குவாட்ராபேக் பொதியாகச் செய்தனர். இவ்வாறு 101 நானோசெயற்கைக்கோள்கள் 25 குவாட்ராபேக் பொதியாகப் பொதியப்பட்டன. முதலில் இந்திய விண்கலங்கள் மூன்றையும் விண்ணில் செலுத்திய பிறகு, இந்த 25 குவாட்ராபேக் பொதிகள் ஒவ்வொன்றாக விண்ணில் செலுத்தப்பட்டன.

விண்வெளியில் ஒரு குவாட்ராபேக் செலுத்தியதும், அந்தப் பொதியில் உள்ள ஒரு கதவு திறந்து அதில் உள்ள பொறி உள்ளே பொதியப்பட்ட நானோசெயற்கைக் கோள்களை விண்ணில் வெவ்வேறு கோணத்தில் தள்ளிவிடும். மொத்தம் 12 நிமிடக் கால இடைவெளியில் பதினான்கு கிலோமீட்டர் ராக்கெட் பயணத்துக்குள் அனைத்துக் குவாட்ராபேக் பொதிகளும் விண்ணில் செலுத்துவது கத்தி மீது நடப்பது போன்ற சவால்.

2013இல் அமெரிக்கா ஒரே ராக்கெட்டில் 29 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. இந்தச் சாதனையை முறியடிக்க 2014இல் ரஷ்யா 37 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. அணுகுண்டு ஒப்பந்தத்தின் காரணமாக வீணாகிப்போன பழைய ஏவுகணைகளைப் புதுப்பித்து அமெரிக்காவும் ரஷ் யாவும் இந்தச் சாதனைகளைப் புரிந்தன. 2014-ல் 34 கியூப்சாட் செயற்கைக்கோள்களைச் சர்வதேச விண் வெளிக்குடில் பூமியைச் சுற்றிவரும்போது ஒவ்வொன் றாக விண்ணில் செலுத்தியது. ஆனால், ஒரே ராக்கெட் தனது ஒரே பயணத்தில் செலுத்தவில்லை என்பதால், இது சாதனையாகக் கருதப்படுவதில்லை.

இதற்கு முன்னர் இஸ்ரோ 2008இல் 10 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. அதன் பின்னர் 2016இல் 20 செயற்கைக்கோள்களைச் செலுத்திச் சாதனை படைத்தது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல இப்போது ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவிப் புதிய உலக சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.

பயன்கள் பல: புவியியல் ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், சுற்றுச்சூழலைக் கண்காணித்து விபத்து ஏற்படும்போது அவசரத் தகவல்தொடர்பு தருவது உள்ளிட்ட பயன்கள் இந்தச் செயற்கைக்கோள்கள் மூலம் உண்டு.

-விடுதலை,23.2.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக