சனி, 11 பிப்ரவரி, 2017

தேனீக்கள் ஏன் கொட்டியவுடன் இறந்து போகின்றன?



தேனீக்கள் தற்காப்புக்காகவும் தேனடையைப் பாது காக்கவும் தங்கள் கொடுக்கால் கொட்டுகின்றன. தேனீக்கள் கொடுக்கால் கொட்டியவுடன், கொட்டப்பட்ட உயிரி னத்துக்குக் காயம் ஏற்படுகிறது. கூர்முனை கொண்ட பல்சட்டம் போன்று அதன் கொடுக்கின் அமைப்பு இருப்பது சில வகைத் தேனீக்களுக்கும் சேர்த்தே காயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
அதேநேரம் இதில் தற்கொலை செயல்பாடு எதுவும் இல்லை. ஒரு தேனீ மற்றொரு பூச்சியைக் கொட்டினால், தன் கொடுக்கை திரும்ப இழுத்துக்கொள்ள முடியும். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அதேநேரம் தேனீயின் கொடுக்கு ஆழமாகப் பாய்ந்தால், சம்பந்தப்பட்ட தேனீ உயிர் பிழைப்பது சந்தேகம்தான். பாலூட்டிகளின் தோலின் மீது தேனீ கொட்டும்போது, அதன் கொடுக்கு விடுபட முடியாத வகையில் தசையில் சிக்கிக் கொள்கிறது.
இதில் கொடுக்கை விடுவித்துக்கொண்டு தேனீ தப்பிக்க முயற்சி எடுக்கும்போது, அதன் அடி வயிறு கிழிந்துபோகிறது. சம்பந்தப்பட்ட தேனீ இறந்து போகிறது.
கொடுக்கால் கொட்டும் பூச்சிகளில் தேனீ மட்டுமே இப்படி செத்துப் போகிறது. அதேநேரம் ஒரு தேனடையைப் பாதுகாக்க இதுபோல சில வேலைக்காரத் தேனீக்களை இழப்பது தேனடையைப் பாதுகாக்கவே செய்கிறது.
தேனடையை எடுக்க வரும் யாரானாலும், தேனீயின் கொட்டுதலுக்குப் பயந்து அடுத்த முறை தேனடையைத் தொந்தரவு செய்ய யோசிப்பார்கள் இல்லையா, அதுவே ஒரு தேனடைக்குக் கிடைத்த வெற்றி.
-விடுதலை,19.1.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக