திங்கள், 30 மே, 2016

மூளையில் சின்ன சின்ன மடிப்புகள் இருப்பது ஏன்?

மனித மூளையின் மேல் பகுதியில், ஏன் அத்தனை மடிப்புகள் இருக்கின்றன? இந்தக் கேள்வி, மூளை ஆராய்ச்சி யாளர்களுக்கு பல ஆண்டு புதிராக இருந்தது. ஏன்? குழந்தை பிறக்கும்போது, மூளை மொழுக்கென்று, அதன் கன்னத்தைப் போல தான் இருக்கும்.
20ஆவது வாரத்தில் தான், மெல்ல மெல்ல மடிப்புகள் விழ ஆரம்பிக்கும். இந்த மடிப்புகள் விழுவது ஒன்றரை ஆண்டு வரை நீடிக்கும். சிறிய மண்டை ஓட்டுக்குள், அதிகளவு திறனுள்ள மூளையை வளர்க்க, இயற்கை செய்த ஏற்பாடு இது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மூளையின் மேல் பரப்பளவு அதிகமாக இருந்தால், அதில் நியூரான்கள் என்ற தகவல் பதிவு அணுக்கள் அதிகமாக இருக்கும். இவை அதிகமாக இருந்தால், அறிவுத்திறனும், தகவல்களை அலசும் திறனும் அதிகமாக இருக்கும் என்று, விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தனர்.
கடந்த சில மாதங்களாக, ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களும், பிரான்ஸ் மற்றும் பின்லாந்து ஆய்வாளர் களும், மூளை மடிப்பு விழும் விதத்தை, முப்பரிமாணத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
அதற்கு, பிறந்த குழந்தையின் மூளையை சி.டி., ஸ்கேன் செய்து, பின் அந்த ஸ்கேனை, முப்பரிமாண அச்சு இயந் திரத்தில் கொடுத்து, குழந்தையின் மூளையை, முப்பரிமாண பிரதியாய் வார்த்து எடுத்தனர். இப்படியே வாரக்கணக்கில் செய்தபோது, மடிப்புகள் படிப்படியாக அதிகரிப்பதை, அவர்களால் பதிவு செய்ய முடிந்தது.
பின் அந்த, 3டி மாடலின் மேல், ‘ஜெல்’ போன்ற ஒரு பொருளை பூசி, அதை ஒரு திரவத்தில் போட்டபோது, மேலும் சில மடிப்புகள் உருவாகின.
‘மிக எளிய இயற்பியல் விதிமுறை மூலம் தான், மூளையின் மேற்பரப்பில் மடிப்புகள் விழுகின்றன என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்‘ என்கிறார், இந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரான லட்சுமிநாராயணன் மகாதேவன். இவர்களது ஆய்வு, மூளை சார்ந்த நோய்கள் உள்ளவர்களுக்கு பயன்படும்.
-விடுதலை,18.2.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக