ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

லெமூரியா கண்டத்திட்டுகள் கண்டுபிடிப்பு


மொரீசியஸ் நாட்டின் அருகே ஆழ்கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் லெமூரியா கண்டத்திட்டுகள் கண்டுபிடிப்பு
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. லெமூரியா கண்டம். உலகிலேயே முதன் முறையாக இந்த கண்டத்தில்தான் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ் என்ற நம்பிக்கை நெடுங்காலமாக உயிர்ப்புடன் இருந்து வருகிறது. எனினும் அறிவியல் ஆய்வுகள் வாயிலாக உறுதிப்படுத்தப் படவில்லை.
சங்க இலக்கியங்களில் குமரிக்கண்டம் கடல் கோளால் விழுங்கப்பட்டது என்பது தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. பரந்து விரிந்திருந்த தமிழர்களின் நிலப்பரப்பு கால மாற்றத்தால் படிப்படியாக அருகி விட்டது.
இப்போது உலகில் முழுக்க முழுக்க தமிழர்களுக்கென ஒரு நாடு கூட இல்லாமல் போய்விட்டது. ஆனால் பன்னெடுங் காலத்திற்கு முன்பு 49 நாடுகளில் தமிழர்கள் செம்மையாகவும், செழுமையாகவும் வாழ்ந்து வந்தனர் என்பதை இலக்கியப் பதிவுகள் உணர்த்துகின்றன. இல்லாத சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதைப் போல குமரிக்கண்டம் குறித்தும் கடல் பகுதியில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஒலித்து வருகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் உள்ளவிட்வாட்டர்ஸ் ராண்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லூயிஸ் ஆஷ்வால் மொரீசியஸ் நாட்டின் அருகே உள்ள ஆழ்கடல் பகுதியில் ஆய்வு நடத்தினார். ஆய்வாளர்கள் சிலர் அவருக்கு உறுதுணையாக செயல்பட்டனர். இந்த ஆய்வின் வாயிலாக, ஆழ்கடல் பகுதியில் கோண்டுவானா கண்டத் திட்டுகள் மூழ்கிக்கிடக்கின்றன என்பது கண்டறியப் பட்டுள்ளது. கோண்டுவானா, லெமூரியா, குமரிக்கண்டம் ஆகிய யாவும் ஒன்றே,
இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. மொரீசியஸ் நாட்டின் பாறைப் பகுதியில் சிலிகான் படிவுகள் காணப்பட்டன. இப்படிவுகள் 300 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. இதை மய்யப் புள்ளியாக வைத்து ஆழ்கடலில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பயனுள்ள தகவல்கள் பெறப்பட்டுள்ளன. ஆய்வை மேலும் விரிவாகவும், ஆழமாகவும் நடத்தினால் லெமூரியா கண்டம் பற்றி இன்னும் பல முக்கிய தகவல்களை சேகரிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- நன்றி: “முகம்”, மார்ச் - 2017
-விடுதலை ஞா.ம.,1.4.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக