புதன், 26 ஏப்ரல், 2017

அபூர்வ புதைப்படிவம்



எரிமலைக் குழம்பு ஏரியில் 48 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டு போன பாம்பின் புதை படிவத்தை கண்டெடுத்ததே வியப்பின் உச்சம். அதிலும் அப்படிப் புதைபடிவமாகிப்போன பாம்பின் உடலுக்குள் ஒரு பல்லியும், அந்தப் பல்லியின் வயிற்றில் ஒரு வண்டும் காணப் பட்டால்! வண்டை விழுங்கிய பல்லியை ஒரு பாம்பு விழுங்கிய ஓரிரு தினங்களில் எரிமலை ஏரியில் சிக்கி புதையுண்டு மரித்துப்போயிருக்கிறது. அதே நிலையில் புதைபடிவமாகிப்போனதால் இத்தனை கோடி ஆண்டுகளாக அது சிதையாமல் ஒரு அபூர்வமான உணவுச் சங்கிலியையும் அப்படியே தக்கவைத்திருக்கிறது.

தனித்துவ பதனப்படுத்துதல்

இந்த அதிசயப் புதைபடிவத்தை ஜெர்மனியின் ஃபிராங்கஃபர்ட் நகரின் அருகில் உள்ள மெஸ்ஸல் பிட் பகுதியிலிருந்து ஆய்வாளர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். பொதுவாக விலங்குப் புதைபடிவங்களுக்குள் உணவைக் காண்பது அரிது. ஆனால் மெஸ்ஸல் பகுதியில் காணப்படும் தனித்துவமான பதனப்படுத்தும் தன்மை யால், ஏற்கெனவே இதுபோன்று ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. காலத்தைக் கணிக்க முடியாத அளவுக்கு எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டுபோன குதிரையின் வயிற்றில் திராட்சையும் இலைகளும், பறவையின் குடலில் மகரந்தம், புதைபடிவமாகிப்போன மீனின் வயிற்றுக்குள் பூச்சிகள் இப்படிப் பலவற்றை ஃபிராங்ஃபர்ட் நகரில் உள்ள செங்கர்பெர்க் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

கோடி ஆண்டுகளுக்கு முன்

மூன்று அடுக்கில் புதை படிவமாகிப் போன உணவு சங்கிலியைக் கண்டு பிடித்திருப்பது இதுவே முதல் முறை. 3.4 அடி நீளமான பாம்பின் உடம்புக்குள் 20 சென்டிமீட்டர் நீளமுள்ள பல்லி காணப்படுகிறது. அதுவும் அந்தப் பாம்பின் எலும்புக் கூட்டுக்குள்ளேயே இந்தப் பல்லி படிவமாகிக் கிடப்பதால், அதை நிச்சயமாகப் பாம்புதான் விழுங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

மேம்படுத்தப்பட்ட கணினித் திரை மூலமாக டாக்டர் ஸ்மித்தும் அவருடன் இணைந்து பணியாற்றும் அகஸ்டின் ஸ்கான்ஃபர்லாவும்தான் பாம்புக்குள் இருக்கும் பல்லியின் படத்தை முதன் முதலில் கண்டெடுத்தார்கள். அதிலும் பல்லியின் வயிற்றில் வண்டைக் கண்டதன் மூலம் ஒரு புதிய நிலைப்பாட்டை எட்டியிருக்கிறார்கள். இதற்கு முன்னால் கிடைத்த பல்லியின் புதை படிவங்களுக்குள் தாவரங்களின் மிச்சம் மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் இப்போது இந்தப் பல்லியின் வயிற்றில் வண்டு இருப்பதால், கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல்லிகள் தாவரங்களை மட்டுமல்லாமல் பூச்சிகளையும் உண்டு வந்திருப்பது இதன் மூலமாகத் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்படிப் பல வர லாற்று புரியாத முடிச்சுகளை அவிழ்த்துள்ளது இந்த

அபூர்வமான புதைபடிவம். கருந்துளைகளை படம்பிடிக்க முடியுமா? 

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் அது அண்மையில் முடிந்திருக்கிறது.

ஒரு மாபெரும் கருந்துளை, ஈர்ப்பு அலைகளால் உந்தித் தள்ளப்பட்டு, ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து அதி வேகமாக வெளியேறும் அந்தக் காட்சியை ஹப்பிள் பதிவு செய்ததை, அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’ உறுதி செய்திருக்கிறது.

சாலையில் வாகனங்கள் பிரேக் போடும்போது ஏற்படும் உராய்வால், தாமிரம், இரும்பு, மாங்கனீசு போன்ற உலோகங்களின் நுண்துகள்களும், சக்கர ரப்பர் துகள்களும் காற்றில் கலக்கின்றன. அப்படி கலக்கும்போது ஏற்கனவே நகரக் காற்றிலிருக்கும் நச்சு வேதிப் பொருட்களுடன் வினை புரிந்து, மேலும் நச்சுத் தன்மையை கூட்டுகின்றன.

இவற்றை சுவாசிப்பவர்களுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல சுவாச நோய்கள் வர வாய்ப் பிருப்பதாக, ‘என்விரோன்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.
-விடுதலை,20.4.17



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக