செவ்வாய், 16 ஜூன், 2026

24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த ‘ஸாம்பி’ புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள் அடுத்து நடந்த ஆச்சரியம்

 


மாஸ்கோ, ஏப். 27- வடகிழக்கு சைபீரியாவில் உள்ள அலாசியா ஆற்றின் கரையில், ஒரு நுண்ணிய புழுவின் உறைந்த படிமத்தை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். ‘யெடோமா’(Yedoma) எனப்படும் நிரந்தர பனிப்படலம், அந்த புழுவை சுமார் -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் திடமாக உறைந்த நிலையில் வைத் திருந்தது.

ஆய்வாளர்கள் அதை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று, அந்த புழுவை சுற்றியிருந்த பனிப்படலத்தை உருக் கினர். அப்போது அந்த புழு மீண்டும் உயிர்ப்பித்து எழுந்தது விஞ்ஞானி களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அது நகரவும், உணவு உட்கொள்ளவும் ஆரம்பித்தது.

ஆனால், அதன் பிறகு மற்றொரு ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்த புழு துணை இல்லாமல் இனப்பெருக்கம்(Asexual Repriduction) செய்யத் தொடங்கியது. மேலும், குட்டிப் புழுக்களும் அதன் தாயைப் போலவே எந்தவித குறைபாடுகளும் இல்லாத உடல் அமைப்பைக் கொண்டிருந்தன. இது விஞ்ஞான உலகில் இதுவரை கண்டிராத அரிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

ரேடியோ கார்பன் முறைப்படி ஆய்வு செய்ததில், இந்த புழு சுமார் 23 முதல் 24 ஆயிரம் ஆண்டுகள் வரை உறைந்த நிலையில் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறி யுள்ளனர். சில உயிரி னங்கள் பொதுவாக குளிர் காலத்தை சமாளிக்க ‘கிரிப்டோபயாசிஸ்’ (Cryptobiosis) என்ற நிலைக்குச் செல்கின்றன.

அந்த சமயத்தில், அந்த உயிரி னங்களின் உடல் செயல்பாடுகள் கிட்டத்தட்ட நின்று போய்விடும். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பனியில் உறைந்திருந் தாலும், ஒரு உயிரினம் மீண்டும் உயிர்ப்பித்து எழுந்து இனப் பெருக்கம் செய்ய முடியும் என்பதற்கு முதன் முறையாக பதிவு செய்யப்பட்ட ஆதாரம் கிடைத்துள்ளது என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை ‘ஸாம்பி’ புழு என்று சிலர் அழைத் தாலும், அறிவியல் ரீதியாக இந்த புழு உயிரிழக்கவில்லை என்றும், அதன் உடலியல் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

- விடுதலை நாளேடு,24.04.26

ஓர் அறிவியல் தகவல்! 1.3 கி.மீ ஆழத்தில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய வினோத உயிரினம் அறிவியல் விதிகளை மாற்றியமைக்கும் டெவில் வா

 


பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான எல்லை எது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவுகிறது.

தென்னாப்பிரிக்காவின் ஆழமான தங்கச் சுரங்கங்களில், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1.3 கிலோமீட்டர் கீழே கண்டறியப்பட்டுள்ள விந்தையான உயிரினம் அறிவியல் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அறிவியலாளர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில், பல மில்லியன் ஆண்டுகள் பழைமையான பாறை இடுக்குகளில் தேங்கியிருந்த தண்ணீரில் இந்த உயிரினத்தைக் கண்டறிந்துள்ளனர்.

ஹேலிசபலோபஸ் மெபிஸ்டோ (Halicephalobus mephisto) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினம், அரிசி தானியத்தை விட சிறியது மற்றும் இதற்கு கண்கள் கிடையாது.

2011-ஆம் ஆண்டில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த உயிரினத்தை ஆராய்ச்சி யாளர்கள் ‘டெவில் வார்ம்’ (Devil Worm) என்று அழைக்கின்றனர்.

பொதுவாக இவ்வளவு ஆழமான பகுதிகளில் பாக்டீரியா போன்ற ஒரு செல் உயிரினங்கள் மட்டுமே வாழ முடியும் என்று கருதப்பட்டது.

ஆனால், வெளிச்சம் இல்லாத, மிகக் குறைந்த ஆக்சிஜன் கொண்ட, அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் நிறைந்த இந்த ஆழமான பகுதியில் ஒரு பல செல் உயிரினம் (Multicellular organism) வாழ்வது அறிவியல் விதிகளைத் தகர்த்துள்ளது. இந்த உயிரினம் அங்குள்ள பாக்டீரியாக்களை உணவாகக் உட்கொண்டு உயிர்வாழ்கிறது.

2019-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்த புழுவின் உடலில் அதிகப்படியான வெப்பம் மற்றும் மன அழுத்தத்தைத் தாங்கி உயிர்வாழ உதவும் சிறப்பு மரபணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், இதன் உடலில் உள்ள ‘சைட்டோக்ரோம் சி ஆக்ஸிடேஸ்’ (Cytochrome c oxidase) என்ற புரதம், ஒரு உயிரியல் சென்சார் போல செயல்பட்டு, சுற்றுச்சூழலில் ஏற்படும் திடீர் வெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப இந்த உயிரினம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள உதவுகிறது.

பூமியில் உயிரினங்கள் வாழ் வதற்கான எல்லை எது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவுகிறது.

பூமியின் ஆழத்தில் இத்தகைய சிக்கலான உயிரினங்கள் வாழ முடியும் என்றால், இதே போன்ற கடினமான சூழல் கொண்ட மற்ற கோள்கள் அல்லது நிலவுகளிலும் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

-விடுதலை நாளேடு, 09.05.26