ஞாயிறு, 6 நவம்பர், 2016

ராஜஸ்தானில் 15 கோடி ஆண்டு பழமை வாய்ந்த டைனோசர் காலடி கண்டுபிடிப்பு


ராஜஸ்தான் மாநிலத்தில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் காலடித்தடம் ஆய்வு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்த மிகப்பெரிய உயிரினம் டைனோசர்.

இயற்கைப் பேரழிவு மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட  காரணங்களால் டைனோசர் இனம் உலகில் அழிந்து விட்டது. ஆனால் அவை வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்னும் மறைந்துவிடவில்லை. உலகில்  வாழ்ந்து மடிந்த டைனோசரசின் படிமங்கள் பல நாடுகளிலும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் 15 கோடி  ஆண்டு பழமைவாய்ந்த டைனோசரின் காலடி தடத்தை ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வியாஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை குழுவினர் ஜெய்சல்மார்  மாவட்டத்தில் கடற்கரை சூழலில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது டைனோசரின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன.  இவை டைனோசரின்  கால் தடங்களாக இருக்கலாம் என  ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இவை சுமார் 15 கோடி ஆண்டுகள் பழமையானது. இந்த டைனோசர்கள் ஒன்று  முதல் மூன்று மீட்டர் உயரம் கொண்டவையாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. டைனோசரின் படிமங்கள் ஏற்கெனவே பிரான்ஸ், போலந்து, சுலோவாகியா, இத்தாலி, ஸ்பெயின், சுவீடன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் தற்போதுதான் முதல் முறையாக டைனோசரின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த படிமம் அடிப்படையில் டைனோசரின் கால்தடம் 30 செமீ நீளம் கொண்டவையாக உள்ளது. இதன் மூலம் அவை வலிமையான  கால்களை பெற்றிருந்து இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது . இதன் உடல் சுமார் 1 முதல் 3 மீ உயரம்  மற்றும் 5 முதல் 7 மீட்டர் நீளம் கொண்டதாகவும்  இருந்திருக்கலாம் எனவும் ஆய்வு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
-விடுதலை ஞா.ம.,18.6.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக