ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

நாம் பேசும் பேச்சு, இசை போன்றவற்றை மின்காந்த அலைகளாக மாற்றி, அவற்றை வான்வெளியில் செலுத்தும் பணியை வானொலி நிலையம் மேற்கொள்கிறது. அப்படி வான்வெளியில் செலுத்தப்படும் மின்காந்த அலைகள், ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் உடையதாக இருக்கும்.
வானொலிப் பெட்டியில் உள்ள டயலை இந்தக் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் வைத்தால், வானில் வரும் அந்தக் குறிப்பிட்ட மின்காந்த அலைகளைப் பெற்று, அவற்றை மீண்டும் ஒலி அலைகளாக மாற்றித் தருகிறது வானொலிப்பெட்டி. வானொலி மின்காந்த அலைகள், எஃப்.எம். மற்றும் ஏ.எம். என்ற இரண்டு முறைகளில் ஒலிபரப்பப்படுகின்றன. இன்று பெரு நகரங்கள் பலவற்றில் புதிதாக முளைத்திருக்கும் தனியார் வானொலிகள் அனைத்துமே எஃப்.எம். என்ற வகையில் அடங்கும். இதைப் `பண்பலை வானொலி' என்று அழைப்பர். இது சில கிலோ மீட்டர்களுக்குள் மட்டுமே இயங்கக் கூடியது. ஒரு நகரத்தை ஒட்டிய பகுதிக்குள் மட்டும்தான் ஒலிபரப்ப முடியும்.
ஏ.எம். வகை வானொலி யில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, மீடியம் வேவ். இது மாநிலத்தின் எல்லைகள் வரை செல்லக்கூடியது. மற்றொன்று, ஷார்ட் வேவ். இது பல நாடுகளையும் தாண்டிச்சென்று ஒலிபரப்பக் கூடியது. இன்று செயற்கைக்கோள்களின் உதவியுடன் டிஜிட்டல் வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. இவை துல்லியமான ஒலியுடையவை. செயற்கைக்கோளின் உதவியால் இயங்குவதால், உலகத்தின் எந்த மூலையிலும் இவற்றைக் கேட்டு மகிழலாம்.
-விடுதலை,1.1.11

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக